articles

img

சவால்கள் சங்கடங்கள் அல்ல... சாதனைக்கான வாய்ப்புகள்! - எம்.ஜே.பிரபாகர்

சவால்கள் சங்கடங்கள் அல்ல... சாதனைக்கான வாய்ப்புகள்!

வாழ்க்கைப் பயணத்தை ஒரு பலவீனமான ஏழைக் குழந்தையாகத் தொடங்கி, சுயமரியாதை, தன்னம்பிக்கை, தைரியம், நேர்மை, ஒழுக்கம், தாய்மொழி நேசம், தேசப்பற்று, ஆர்வத்துடன் தொடர்ந்து கல்வி கற்றல் போன்ற பண்புகளை வளர்த்துக்கொண்டு, சுய மேம்பாட்டின் மூலம் ஐஏஎஸ் அதிகாரியாக உயர்ந்த மருத்துவர் வி. ராம் பிரசாத் மனோகர் ஐஏஎஸ் அவர்களின் எளிய வரலாற்று நூல் இது.

அதிகாரம் என்பது மக்களை அடக்கி ஆளும் கத்தி அல்ல; பொதுமக்களின் வாழ்க்கையை முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டிய உத்தி, ஏழை எளியவர்களைப் பாதுகாக்க உதவும் சக்தி என்பதை இவர் மக்கள் சேவையின் மூலம் நிரூபித்துக் காட்டியவர். கல்வி, சுகாதாரம், பெண்கள் வாழ்வியல் முன்னேற்றம், குழந்தை வளர்ச்சி, விவசாயிகளின் நலன் காப்பு, வீட்டு வசதி, சுற்றுலா வளர்ச்சி எனப் பல்வேறு திட்டங்களைத் தன்னுடைய பணிக்காலத்தில் வெற்றிகரமாகச் செயல்படுத்தியதை இந்த நூல் மிக அருமையாகச் சுட்டிக் காட்டுகிறது.

பொதுப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ப வர்களே மக்களுக்கான பணிகளைத் திறம்பட செய்ய முடியும் என்பதை ராம் பிரசாத் மனோகர் நிரூபித்திருக்கிறார். இந்நூலைப் படிப்பவர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள உதவும்.

நூலாசிரியர் தனது சிறு வயதில் தீக்குச்சி அடுக்கும் வேலையைப் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளதோடு, இன்றைக்குப் பல ஏழை மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்கும் பணியினைச் செய்து வருகிறார். கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றபோது, அங்குள்ள பத்திரிகையாளரிடம், “சவால்கள் சங்கடங்கள் அல்ல. சந்தர்ப்பங்கள் சாதனைக்கான வாய்ப்புகள்” என்று அவர் அளித்த பதில், இலட்சிய மன உறுதியை வெளிப்படுத்துகிறது.

வெற்றி என்பது யாருக்கும் தனிச் சொத்து அல்ல. நம்பிக்கையோடு உழைக்கும் எல்லோருக்கும் இயற்கை வெற்றி வாய்ப்பை வழங்கக் காத்திருக்கிறது.

“என்னால் முடியுமா? எனக்கு ஆங்கிலம் தெரியாதே என்னால் முடியுமா? எப்போதும் தோல்வியை மட்டுமே தழுவிக்கொண்டிருக்கிறேனே என்னால் முடியுமா?” என்பன போன்ற கேள்விகளை நூலாசிரியர் அடுக்கி, அத்தனையும் சாத்தியம், நம்மால் முடியும் என்பதை இந்த நூல் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள், தாங்கள் சாதிக்க விரும்பும் துறையில் நல்ல அனுபவ அறிவு பெற்றவர்களை அணுகி, அறிவை உள்வாங்கி இலட்சியப் பயணத்திற்கான வழிகாட்டுதலைப் பெற வேண்டும் என்று ஆசிரியர் வலியுறுத்துகிறார். கர்ப்பிணியான தனது மனைவியின் ஐஏஎஸ் கனவை நனவாக்குவதற்குப் போராடிய சம்பவங்களையும் சுட்டிக்காட்டி, ஒவ்வொரு கனவுப் பயணத்திற்குப்  பின்னாலும் ஒரு வலியும் தியாகமும் இருக்கும் என்பதைப் பதிவு செய்துள்ளார்.

தோல்விகளும் அவமானங்களும் உங்களை பலவீனப்படுத்தாமல், மனதை வார்ப்பில் இட்ட எஃகு போல் உறுதிப்படுத்த வேண்டும் என்று போட்டித் தேர்வு மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறார். இந்த நூல் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், போட்டித் தேர்வு எழுதுவோருக்கும், மேலாண்மை தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும். வாசியுங்கள்.... வானத்தை வசப்படுத்துங்கள்....