மரிச்ஜாப்பி: பொய்களைக் குத்திக் கிழிக்கும் உண்மைகள்
‘தலித் மக்களை கம்யூனிஸ்ட்டுகள் கொத்துக்கொத்தாகக் கொன்றனர்’ என்று ‘தலித் முரசு’ உள்ளிட்ட கம்யூனிச விரோத அரைவேக்காட்டு அறிவுஜீவிகளாலும், சில முக்கியப் புள்ளி களாலும் கட்டமைக்கப்பட்ட கட்டுக்கதைகளை அடித்து நொறுக்கும் நூல் ‘மரிச்ஜாப்பி – ஒரு தலித் அகதியின் சாட்சியம்’. சுநீல் ஹல்தார் எழுதிய இந்நூல், வாசகர்களுக்குப் புதிய தகவல்களை அளிப்பதோடு, மரிச்ஜாப்பியின் பின்னணி குறித்துச் சில கேள்விகளையும் எழுப்புகிறது.
அகதிகள் சட்டமும் பின்னணியும்
தேசப் பிரிவினையிலிருந்து 1971 வரை, தற்போதைய வங்கதேசப் பகுதியிலிருந்து (கிழக்கு பாகிஸ்தான்) அகதிகள் ஐந்து கட்டங்களாக இந்தியா வந்தனர். அகதிகளுக்கு வாழ்வாதாரம் உத்தரவாதம் செய்வது குறித்த 1951 மற்றும் 1967-ல் உருவான சர்வதேசத் தீர்மானங்களை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை. அன்றைய சூழலில் சொந்த நாட்டு மக்களுக்கே வாழ்வாதாரம் வழங்க முடியாத நிலை இந்தியாவில் இருந்தது. இருப்பினும், இன்றுவரை அகதிகள் குறித்த தேசிய சட்டம் எதையும் இந்தியா இயற்றவில்லை. ஒன்றிய அரசு, வந்த அகதிகளுக்கு வாழ்வாதாரத்தை வழங்கினாலும், ஒரே இடத்தில் குடியமர்த்தினால் பிரிவினைக்கோ, தேசப் பாதுகாப்புக்கு ஆபத்தாகவோ அமைந்துவிடும் என்ற நினைப்பில் அவர்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் துண்டு துண்டாக அசமத்துவத்தோடு குடியமர்த்தியது.
அந்த வகையில், கிழக்கு பாகிஸ்தானிலி ருந்து வந்த ஒடுக்கப்பட்ட மக்களில் ஒரு பகுதியினர் தண்டகாரண்யம் பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். அவர்களில் இன்னொரு பகுதியினர், இடதுசாரிகள் ஆட்சிக் காலத்தில் மேற்கு வங்கத்தின் தீவுப்பகுதியான மரிச்ஜாப்பிக்குப் புலம் பெயர்ந்தனர். அதையொட்டி நிகழ்ந்ததாகக் கூறப்படும் கதைகளே, கம்யூனிஸ்ட்டுகள் தலித்துகளைக் கொன்றனர் என்ற பொய்களாகச் சுற்றவிடப் பட்டன.
ஆசிரியரின் சாட்சியம்
இந்நூலின் ஆசிரியர் சுநீல் ஹல்தார், 1957-ல் தனது ஆறு வயதில் அகதியாக மேற்கு வங்கம் வந்தவர். இவர்களை காங்கிரஸ் அரசு தண்டகாரண்யத்தில் குடியமர்த்தியது. இவர், ‘தண்டகாரண்யத்திலிருந்து மரிச்ஜாப்பிக்குள் முதலாவதாகச் சென்று, கடைசி ஆளாக அங்கிருந்து வெளியேறியவர்’ ஆவார். மரிச்ஜாப்பியின் வாழும் சாட்சியாக உள்ள ஹல்தாரின் பதிவு பல உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளது.
ஹல்தார், “மரிச்ஜாப்பி தொடர்பாக எழுதி யுள்ள அனைவரின் பதிவுகளும் பெரும்பா லும் கற்பனையும் அரசியல் சாயமும் கலந்தவை” என்கிறார். வருங்காலத் தலைமுறையினர் உண்மைச் சம்பவங்களைத் தெரிந்துகொள்ளவே இந்நூலை எழுதியதாகவும் அவர் தெரிவிக்கிறார். தண்டகாரண்ய அகதி களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, முகாம் அதிகாரியின் ஆலோசனைப்படி ‘உத்பாஸ்து உன்னயன்சீல் சமிதி’ என்ற சங்கம் 1964 வாக்கில் உருவாக்கப்பட்டது. இது பொறுப்பற்றவர்களின் கைக்குச் சென்றதன் தொடர்ச்சியாகவே, மரிச்ஜாப்பியை நோக்கிய பயணம் தொடங்கியது என்றும், ‘மரிச்ஜாப்பி இயக்கம் ஒரு பொறுப்பற்ற தலைமையால் உருவானது’ என்றும் ஹல்தார் குறிப்பிடுகிறார்
ஜோதிபாசுவின் நிலைப்பாடு
மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சிக்கு வந்த பிறகு, நூல் ஆசிரியர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், முதலமைச்சர் ஜோதிபாசுவைச் சந்தித்துள்ளனர். அப்போது ஜோதிபாசு, அகதிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், நீங்கள் உடனே வங்கத்திற்கு வந்தால் மேற்கு வங்க அரசால் எந்தவிதத்திலும் உதவ முடியாது என்றும் தெளிவுபடுத்தினார். இருப்பினும், காங்கிரஸ் அரசைப் போல் தடியடி நடத்தித் துரத்த மாட்டோம் என்றும் மனிதாபிமானத்துடன் கூறினார்.
இதையும் மீறி, ‘நாங்கள் வங்காள மக்கள், வங்காளத்திற்கே செல்வோம்’ என்ற உணர்வுப்பூர்வமான வார்த்தைகளை வைத்துக்கொண்டு, அம்மக்களை மரிச்ஜாப்பிக்குள் அழைத்துவந்தனர். ஆனால், மரிச்ஜாப்பி ஒரு நடவுக்காடு, அங்கு எவ்வித வாழ்வாதாரத் தேவைகளையும் ஈடேற்ற வழியில்லை. ஆயிரக்கணக்கானோரை இந்த நரக வாழ்விற்குள் இழுத்துவிட்ட சங்கத் தலைவர்கள் யாரும் அங்கு வரவில்லை. மேலும், பாரத சேவாஸ்ரமம் மற்றும் சுவாமிஜி ஆனந்த பாரதி போன்றோரின் ஆதிக்கம், இது ஆர்.எஸ்.எஸ். வகைப்பட்ட செயல்திட்டம்போல் உள்ளதை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். அகதிகள் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் ஜோதிபாசு விடுத்த அழைப்பை அவர்கள் ஏற்கவில்லை. மேற்குவங்க அரசு, மரிச்ஜாப்பியில் சில அமைப்பினர் தனி அரசாங்கம் நடத்துவதாக கூறியது; அரசின் கருத்தை மறுக்க முடியாத நிலை இருந்தது. லால்பாபா ஆசிரமம் தான் இந்த மோசமான நிர்வாகிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது என்ற தகவலையும் ஹல்தார் வெளிப்படுத்துகிறார். இது இடதுசாரி அரசாங்கத்திற்கு எதிராகக் காவிக் கூட்டம் செய்த சதியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.
பொய்களுக்கு எதிரான பேருண்மை
1978 ஏப்ரல் 24 அன்று சாமியாரால் தேதி குறிக்கப்பட்டு மக்கள் மரிச்ஜாப்பிக்குள் குவிந்தனர். இது, ஒன்றிய அரசால் ஒதுக்கப்பட்ட தண்டகாரண்யம் பகுதியைவிட்டுத் தன்னிச்சையாக ஒரு தீவை ஆக்கிரமிக்கும் செயலாகப் பார்க்கப்பட்டது. ஓராண்டிற்குப் பிறகு, காவல்துறை கைது மற்றும் தலையீட்டின் விளைவாக 1979 மே 16 அன்று அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
கம்யூனிச விரோதிகள் பரப்பியதைப் போல, ஹல்தாரின் பதிவின்படி அங்கு எவ்விதக் கூட்டுக் கொலையும் நடைபெறவில்லை. இந்த நிகழ்விற்குப் பிறகு, “தண்டகாரண்யத்தில் விட்டுவிட்டு வந்த வீடு மற்றும் நிலங்களை மீண்டும் எவ்விதப் பிரச்சினையுமின்றிப் பெற்றதற்கு, மேற்கு வங்க இடது முன்னணி அரசு இந்திய அரசிடம் மிகுந்த பொறுப்புணர்வுடன் தொடர்ந்து பேசியதே காரணம்” என்று ஹல்தார் பதிவு செய்துள்ளதே, கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக வீசப்பட்ட பொய்களுக்கு எதிரான பேருண்மையாகும்.
