articles

img

ஸ்டான் சுவாமியின் மரணத்துக்கு யார் பொறுப்பு?

எது நடக்கக் கூடாது எனப் பலரும்பயந்தனரோ அது நடந்தேவிட்டது. பாசிச வெறி காரணமாகச் சிறையில்உள்ள சில மனித உரிமை செயற்பாட்டாளர் களின் உயிருக்கு ஆபத்து உருவாகலாம் எனும்அச்சம் பலருக்கும் இருந்தது. குறிப்பாக வயதுமுதிர்வு மற்றும் பல நோய்கள் உள்ள வரவரராவ்/பேராசிரியர் சாய்பாபா/சுதா பரத்வாஜ்/ அருட் தந்தை ஸ்டான் சுவாமி ஆகியோருக்குச் சிக்கல்கள் எழலாம் எனும் கவலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்படப் பலரும் தெரிவித்தனர். இப்பொழுது அருட்தந்தை ஸ்டான் சுவாமியின் உயிர் பறிக்கப்பட்டுவிட்டது. அவரது மரணம் தேசம் முழுவதும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. தேசம் தாண்டியும் கண்டனக் குரல்கள் எழுந்துள் ளன. ஸ்டான் சுவாமியின் மரணம் இயற்கையானது என ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கச் சங் பரிவாரத்தினர் முயன்று வருகின்றனர். இந்த மரணத்தின் காரணம் எங்குப் போய் நிற்கும் என அவர்களுக்குத் தெரியும். எனவே தான் இந்த முயற்சி.

காவிரி டெல்டாவிலிருந்து ஜார்க்கண்ட் வனத்துக்கு...

1937ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் கொள்ளிடக் கரையோரக் கிராமமான வீரகலூரில் பிறந்த ஸ்டான் சுவாமி, கல்லூரி கல்வியைச் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் முடித்தார். மேல் படிப்பைப் பிலிப்பைன்ஸ் மற்றும் பெல்ஜியம் தேசங்களில் பயின்றார். பெங்களூருவில் இந்தியச் சமூகப் பயிலகம்எனும் அமைப்பை உருவாக்கிப் பல சமூகச்செயற்பாட்டாளர்களை உருவாக்கினார். சிறுவயதிலேயே இயேசு அருட்சபையில் இணைந்த அவர் மேல்நாட்டில் பயின்று கொண்டிருந்த பொழுது பிரேசிலின் அருட் தந்தை ஹெல்டர் கெமராவின் கருத்துகளினால் ஈர்க்கப்பட்டார். ஹெல்டர் தீவிர இடதுசாரிக் கருத்துகளைக் கொண்டவர். தேவாலயங்களின் சொத்துக்களை ஏழை மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் எனக் கூறியவர். ஸ்டான் சுவாமி கம்யூனிஸ்ட் இயக்கங்களுடன் நட்பு பாராட்டினார். தனது பயிலகத்தில் பல கம்யூனிஸ்ட் தலைவர்களை உரை நிகழ்த்த அழைப்பது வழக்கம். தாமாகவே முன்வந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஆதிவாசி மக்களிடையே பணியாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். காவிரி டெல்டாவிலிருந்து ஜார்க்கண்ட் வனத்துக்கு அவரது வாழ்க்கைப்பயணம் அமைந்தது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆதிவாசி மக்களின் கல்வி மற்றும் முன்னேற்றத்துக்காக ராஞ்சி நகரில் “ஆதிவாசி மக்கள் ஆராய்ச்சி மையம்” எனும் அமைப்பை ஏழு ஏக்கர் பரப்பளவில் உருவாக்கினார். அந்த மக்களின் கலாச்சாரம் பாதுகாக்கப்படப் பல முயற்சிகளை எடுத்தார். எவ்வித விசாரணையும் இன்றிச் சிறைகளில் வாடிய 3000 ஆதிவாசி இளைஞர்களின் விடுதலைக்காக ஓயாமல் உழைத்தார். தேவாலயங்கள் வறுமை அகற்றுவது குறித்துத் தீவிர முயற்சிகளில் ஈடுபடவேண்டும் எனக் கருதிய அவரின் சிந்தனை யில் சமூக மாற்றம் குறித்த கருத்து தீப்பிழம்பாகக் கனன்று கொண்டே இருந்தது.

ஒருபுறம் ஆதிவாசி/தலித் மக்களைச் சமூகச் சிந்தனைகளை ஊட்டி திரட்டியதன் மூலம் சங்பரிவாரம் உயர்த்திப்பிடிக்கும் வர்ணாசிரமக் கொள்கைகளுக்கு அவர் சவால்விட்டார். மறுபுறத்தில் ஆதிவாசி மக்களின் வனங்களைக் கார்ப்பரேட்டுகள் கனிமவளத்துக்காகக் கொள்ளை அடிப்பதை எதிர்க்க மக்களைத் திரட்டினார். இன்றைய மோடி அரசின் இரண்டு முக்கியக் கொள்கைகளான காவிமயம் கார்ப்பரேட் கொள்ளை இரண்டுக்குமே அவர் சவாலாக இருந்தார். எனவே பாசிசச் சங்பரிவார அரசுக்கு ஸ்டான் சுவாமி, ஒரு உறுத்தலாக இருந்ததில் ஆச்சரியம் இல்லை. அவரை சிக்கவைக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர்.2018ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று பீமா கொரேகானில் நடந்த நிகழ்வுகள் காரணமாக அன்றைய பா.ஜ.க. மகாராஷ்டிரா மாநிலஅரசாங்கம் தேசத் துரோக வழக்கைத் தாக்கல் செய்தது. பின்னர் ஆள்தூக்கிச் சட்டமான “உபா”வும் (UAPA)வும் இணைக்கப்பட்டது. ஆனந்த் டெல்டும்டே/ நவாலாகா/அருண் பெரைரா/ரோனா வில்சன் போன்ற பல முக்கிய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் ஒரு பகுதியாக ஸ்டான் சுவாமியின் ராஞ்சி வீட்டில் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. எனவேதான் நவம்பர் 2018 மற்றும் பிப்ரவரி 2019ல் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கைகளில் ஸ்டான் சுவாமியின் பெயர் இணைக்கப்படவில்லை. எனினும் திருப்தி அடையாத பா.ஜ.க. காவல்துறையினர் மீண்டும் 2019 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் ரெய்டு நடத்தினர். அப்பொழுதும் எவ்விதச் சாட்சியமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஏனெனில் இல்லாத ஒன்றைக் காவல்துறையினர் தேடிக்கொண்டிருந்தனர். 

ஜனவரி 2020ல் பீமா கொரேகான் வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.  இதே ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஸ்டான் சுவாமியிடம் 15 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அக்டோபர் 5 ஆம் தேதி ஸ்டான் சுவாமி மும்பையில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை அலுவல கத்துக்கு வரவேண்டும் எனப் பணிக்கப் பட்டார். தான் 83 வயதுடைய மூத்த குடிமகன் எனவும் பெருந்தொற்று காலம் என்பதாலும் தன்னால் வர இயலாது எனவும் ஸ்டான் சுவாமி தெரிவித்தார். ஆனால் சிறிதும் சளைக்காத இரக்கமற்ற தேசியப் புலனாய்வு முகமையினர் ராஞ்சி வந்து அவரை கைது செய்து மும்பை அழைத்துச் சென்று தலோஜா சிறையில் அடைத்தனர். அங்கு அவர் மீது ஆள்தூக்கிஉபா சட்டம் திணிக்கப்பட்டது.

அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ன?

$    பிரதமரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினார்.

$    அரசுக்கு எதிராகக் கலகம் செய்யத் தூண்டினார்.

$   மாவோயிஸ்ட் இயக்கத்தினருக்கு ஆதரவாகச் செயல்பட்டார்.

$   பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

84 வயதுடைய ஒரு முதியவர் இத்தகைய பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட முடியுமா எனும் கேள்வி அவர்களுக்குத் தோன்றவில்லை.  ஏனெனில் இந்த இரக்கமற்ற செயலின் முக்கிய நோக்கம் குற்றம் நடந்ததா இல்லையா என நிரூபிப்பது அல்ல; பாசிச அரசுக்கு வேறு நோக்கம் இருந்தது என்பது  அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரியும்.

மனிதத்தன்மையற்ற நடவடிக்கைகள்
விசாரணைக் கைதிகளால் நிரம்பி வழிந்ததலோஜா சிறையில் கோவிட் வைரசும் பரவியவண்ணம் இருந்தது.  எனவே குறைந்தபட்சம் வீட்டுச் சிறையில் வையுங்கள் எனும் ஸ்டான்சுவாமியின் கோரிக்கையைக் கூடத் தேசியப்புலனாய்வு நீதிமன்றம் ஏற்க மறுத்தது. ஸ்டான் சுவாமி பாரிச வாயுவால் பாதிக்கப்பட்டதால், தம்ளரில் நீர் அருந்த முடியவில்லை. எனவே ஸ்ட்ரா கேட்டார். ஆனால் சிறை அதிகாரிகளின் கல்நெஞ்சம் ஏற்கவில்லை. ஸ்ட்ராவும் போர்வையும் வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்க வேண்டியதேவை அவருக்கு எழுந்தது. ஸ்ட்ராவும் போர்வையும் தரலாமா வேண்டாமா என்பதைப் பரிசீலனை செய்யத் தங்களுக்கு20 நாட்கள் தேவை எனத் தேசியப் புலனாய்வு அமைப்பு கோரியது. நீதிமன்றமும் அனுமதித்தது. இத்தகைய கொடுமை ஒரு பாசிச ஆட்சியில்தான் அரங்கேறும்.2020 நவம்பர் மாதத்தில் தனக்குப் பிணை வேண்டும் எனத் தேசியப் புலனாய்வு நீதிமன்றத்தில் ஸ்டான் சுவாமி மனு தாக்கல் செய்தார். 4 மாதங்கள் இழுத்தடித்த நீதிமன்றம் 2021 மார்ச் மாதத்தில் பிணை கோரிக்கையை நிராகரித்தது. பிணை குறித்து விசாரணை நான்கு மாதம் நடப்பதும் பாசிச ஆட்சியில்தான் சாத்தியம். பின்னர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மே மாதம்தான் இந்த மனு விசாரணைக்கு வந்தது. இதற்கிடையே அவரது உடல் நிலைகடுமையாகப் பாதிக்கப்பட்டது. எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டது என்பதைக் காணொளி வாயிலாக உயர்நீதிமன்ற விசாரணையின் பொழுது அவரே கூறினார்.

“நான் சிறைக்கு வந்த பொழுது எனது அனைத்து உறுப்புகளும் ஓரளவுக்காவது நன்றாகச் செயல்பட்டன. என்னால் நடக்கவும் படிக்கவும் முடிந்தது. குளிப்பது உட்பட எனதுதேவைகளை நானே பூர்த்தி செய்துகொள்ள முடிந்தது. ஆனால் இன்று ஒவ்வொரு உறுப்பாகச் செயலிழந்து வருகிறது. எவ்வளவு நாட்கள் உயிருடன் இருப்பேன் எனத் தெரியவில்லை. எனவே எனது கடைசி காலத்தில் ராஞ்சியில் எனது சகாக்களுடன் இருக்க அனுமதிக்க வேண்டும்” என வேண்டுகோள் வைத்தார். இந்தச் சமயத்தில் கூடத் தேசியப் புலனாய்வு முகமை ஸ்டான் சுவாமிக்கு எந்த மருத்துவக் கோளாறும் இல்லை என இரக்கமற்ற முறையில் வாதிட்டது.

அருட்தந்தையின் மரணம் வீண்போகக் கூடாது
அவருக்குப் பிணை தரவேண்டும் என இடதுசாரிக் கட்சிகளும் பல சிவில் உரிமைஅமைப்புகளும் தொடர்ந்து கோரி வந்தன. அவரது நிலையைக் கண்ட உயர்நீதி மன்றம் அவரை ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் சிகிச்சை தர ஆணை பிறப்பித்தது. முதலில் அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்தார். இறுதியில் ஏற்றுக்கொண்டார். மருத்துவமனையில் அவருக்குக் கோவிட் இருப்பது தெரிந்தது. அதிலிருந்து குணம் அடைந்தாலும் பின்னர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வெண்டிலேட்டர் மூலம் சுவாசம்தரப்பட்டது. 05.07.2021 மதியம் அவரது பிணை குறித்து விசாரணை தொடங்கியது. ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல் சரியாக அதே நேரத்தில் அவர் உயிர் பிரிந்துவிட்டது.ஸ்டான் சுவாமியின் மரணம் கடும் கண்டனங்களைத் தொடுத்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன்/ தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின்/ ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்/ ராகுல் காந்தி/ மெகபூபா முப்தி உட்படப் பலர் கண்டனம் தெரிவித்த னர். தில்லி எல்லைப் பகுதிகளில் போராடும்விவசாயிகள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இந்தக் கொலைக்கு யார் பொறுப்பு என்பதை நிலைநாட்ட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இது அப்பட்டமான காவல் படுகொலை எனச் சி.பி.ஐ.(எம்.எல். லிபரேஷன்) கட்சியின் கவிதா கிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமை காப்பு ஆணையமும் ஐ.நா.சபையின் மனிதஉரிமைகள் அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் வடகிழக்கு தில்லி கலவரத்துக்குத் தனது வன்முறை பேச்சுகள் மூலம் வித்திட்ட பா.ஜ.க. தலைவர் கபில் மிஸ்ரா இதனை இயற்கையான மரணம் எனவும் ஸ்டான் சுவாமி கொடூரமான குற்றங்களைச் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த மரணத்தை இயற்கையானது என நிலைநாட்டும் கடினமான சூழலில் சங்பரிவாரம் உள்ளது. ஏனெனில் இது மரணம் அல்ல;கொடூர  அரசு இயந்திரத்தின் இரக்கமற்ற கொலை என்பதும் இதன் காரணி யார் என ஆராய்ந்தால் அதன் முடிவு எங்கே போகும் என்பதும் கபில் மிஸ்ரா போன்ற வன்முறை வாதிகளுக்கு தெரியும்.  

ஸ்டான் சுவாமி மரணத்துக்கு தேசிய புலனாய்வு முகமை/மகாராஷ்ட்ரா காவல்துறை/ நீதிமன்றங்கள்/ சிறை நிர்வாகம் என அரசு இயந்திரத்தின் அனைத்து உறுப்புகளுமே காரணம். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த அமைப்புகளை இயக்கும் முக்கிய சூத்திரதாரிகளும் பொறுப்பு. இது ஒரு ஸ்டான் சுவாமியின் தனிப்பட்ட மரணம் அல்ல; பாசிசம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தால் அரசு இயந்திரம் எப்படி பேயாட்டம் போடும் என்பதற்கும் ஜனநாயகம் எப்படி சிதைக்கப்படும் என்பதற்கும்ஒரு முன்னோட்டம்.  ஸ்டான் சுவாமிக்குநிகழ்ந்தது நாளை யாருக்கு வேண்டுமானா லும் நிகழலாம். கேரளம்/தமிழகம்/மே.வங்கம் தேர்தல் முடிவுகள் இந்த சக்திகள்வெல்ல முடியாதவை அல்ல என்பதை நிலைநாட்டியுள்ளன. பாசிச சக்திகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டிய தருணம் இது. ஸ்டான் சுவாமிஅவர்களின் மரணம் வீண்போகாமல் இருக்க வேண்டும் எனில் பாசிச சக்திகள் தோல்வி அடைவது என்பது மிக மிக முக்கியம்.

கட்டுரையாளர் : அ. அன்வர் உசேன்