மார்க்சிய அறிஞர், போராட்டக்கலைஞர், ஆசிரிய இயக்கத்தின் மகத்தான வழிகாட்டி!
ஒரு சிறந்த மார்க்சிய அறிஞராக வும், களத்தில் நின்று போராட்டங் களை முன்னெடுக்கும் ஒரு சிறந்த அமைப்பாளராகவும் திகழ்வது என்பது அரிதான ஒன்று. அந்த அரிதான ஆளுமையைக் கொண்டிருந்த டாக்டர் கிஷோர் குமார் தெக்கடத், டிசம்பர் 20, 2025 அன்று தனது 89-வது வயதில் மும்பையில் காலமானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மகாராஷ்டிரா மாநில முன்னாள் செயற்குழு உறுப்பினரான அவர், மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் கல்லூரி ஆசிரியர் இயக்கத்தின் முன்னோடியாகவும், நெருக்கடி நிலை காலத்தில் (1975-77) 15 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த வீரராகவும் அறியப்பட்டவர்.
உழைக்கும் வர்க்க வேர்களும் கல்விப்புலமும்
கிஷோர் தெக்கடத்தின் குடும்பம் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தது என்றாலும், அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில்தான். அவரது தந்தை மும்பை தன்ராஜ் மில்லில் ஜவுளித் தொழிலாளியாகப் பணியாற்றியவர். கிஷோர் 1936 நவம்பர் 8 அன்று பிறந்தார். இயற்பியல் மற்றும் கணிதத்தில் இளங்கலை பயின்ற அவர், முழு மற்றும் பயன்பாட்டுக் கணிதத்தில் (Pure and Applied Mathematics) முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். பின்னர் 1987-ல், ‘இயக்கவியல் பொருள்முதல்வாதமும் நவீன அறிவியலும் - சார்பியல் மற்றும் குவாண்டம் இயக்கவியல் கோட்பாடுகளைக் குறித்த சிறப்புப் பார்வை’ என்ற தலைப்பில் தனது முனைவர் பட்டத்தை நிறைவு செய்தார்.
அசாத்தியமான அறிவுப்புலமை கொண்டிருந்தபோதிலும், கிஷோர் எப்போதும் தனது உழைக்கும் வர்க்க வேர்களைப் பற்றிப் பெருமிதம் கொண்டவராகவே திகழ்ந்தார்.
கிஷோர் தனது வாழ்க்கையை ஒரு அரசு எழுத்தராகத் தொடங்கினார். பின்னர் மும்பையின் புகழ்பெற்ற வில்சன் கல்லூரியில் 30 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றி, 1994-இல் விருப்ப ஓய்வு பெற்றார். அவர் எப்போதும் மாணவர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு ஆசிரியராக இருந்தார்.
ஆசிரியர் இயக்கத்தின் போர்வாள்
1966-இல் மும்பை பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தை (BUCTU) நிறுவியவர்களில் கிஷோர் மிக முக்கியமானவர். அக்காலத்தில் ஆசிரியர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளைத் தீர்க்கவும், அவர்களை ஓரணியில் திரட்டவும் அவர் ஒவ்வொரு கல்லூரிக்கும் நேரடியாகச் சென்று ஆசிரியர்களைச் சந்தித்து உரையாடுவார். 1966 முதல் 2016 வரை அரை நூற்றாண்டு காலம் தொடர்ந்து அந்தச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது தலைமைத்துவம் மும்பையைத் தாண்டி மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பரவியது. மகாராஷ்டிரா பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் (MFUCTO) நிறுவனப் பொதுச்செயலாளராகவும், பின்னர் அதன் தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார். 1987-இல் அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் (AIFUCTO) தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய மற்றும் மாநில அரசுகளின் கல்விச் சீரழிப்புக் கொள்கைகளுக்கு எதிராகப் பல வெற்றிகரமான போராட்டங்களை அவர் முன்னின்று நடத்தினார். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-வின் வகுப்புவாதக் கொள்கைகளை அவர் தனது எழுத்துக்கள் மற்றும் உரைகள் மூலம் தீவிரமாக எதிர்த்தார்.
மார்க்சியத்தின் மீதான ஈடுபாடும் கட்சிப் பணியும்
புகழ்பெற்ற விஞ்ஞானியான ஜே.பி.எஸ். ஹால்டேன் (J.B.S. Haldane) ஒரு மார்க்சியவாதியாக இருந்ததைக் கண்டு, அவர் மூலமாகவே கிஷோர் மார்க்சியக் கருத்தியலின் பால் ஈர்க்கப்பட்டார். பி.பி. ரங்கனேகர் மற்றும் எம்.வி. கோபாலன் போன்ற மூத்த தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு 1966-இல் சிபிஐ(எம்) கட்சியில் இணைந்தார். மகாராஷ்டிராவின் முதல் மாநிலச் செயலாளரான எஸ்.ஒய். கொல்கட்கர் அவருக்கு வழிகாட்டியாக இருந்தார்.
1977-இல் மும்பை மாவட்டக் குழுவிற்கும், 1982-இல் மாநிலக் குழுவிற்கும், 2012-இல் மாநிலச் செயற்குழுவிற்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாராஷ்டிராவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே இடதுசாரி இயக்கத்தைக் கட்டியெழுப்புவதில் அவரது பங்களிப்பு அளப்பரியது. அவர் ஒரு மார்க்சிய ஆசிரியராக மட்டுமன்றி, சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.
அவரது முக்கியமான நூல்கள் சில...
*மார்க்சியப் பொருளாதாரக் கோட்பாடு: ஒரு தொடக்கப் பாடம்
(A First Course in Marxist Economic Theory)
*இயக்கவியல், சார்பியல் மற்றும் குவாண்டம் (Dialectics, Relativity and Quantum)
*ஃபிரடெரிக் ஏங்கெல்ஸும் நவீன அறிவியலும் (Frederick Engels and Modern Science)
அவரது கட்டுரைகள் ‘தி மார்க்சிஸ்ட்’ மற்றும் ‘சோஷியல் சயின்டிஸ்ட்’ போன்ற ஆய்விதழ்களில் தொடர்ந்து வெளியாகி வந்தன.
நெருக்கமான உறவும் இறுதிப் பயணமும்
1978-இல் நான் கட்சியில் இணைந்தது முதல் கடந்த 47 ஆண்டுகளாக கிஷோருடன் எனக்கு மிக நெருக்கமான அரசியல் மற்றும் தனிப்பட்ட உறவு இருந்தது. நான் கட்சிக்கு வந்தபோது அவர் மும்பை மாணவர் கிளைக்குப் பொறுப்பாளராக இருந்தார். நான் மாநிலச் செயலாளராக இருந்த காலத்தில் அவர் மாநிலச் செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
டிசம்பர் 21 அன்று மும்பை போரிவிலியில் கிஷோரின் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மூத்த ஆசிரியர் சங்கத் தலைவர்கள் தபதி முகோபாத்யாய் உள்ளிட்ட ஏராளமான கட்சித் தோழர்களும், ஆசிரிய இயக்கத் தலைவர்களும் பங்கேற்று செவ்வணக்கம் செலுத்தினர்.
அகில இந்திய அளவில் ஆசிரியர் இயக்கத் தோழர்களிடையே கே.கே. தெக்கடத் என அறியப்பட்ட டாக்டர் கிஷோர் குமார் தெக்கடத் ஒரு சிறந்த அறிவுஜீவி மட்டுமல்ல; அவர் உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்காகத் தனது வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு போராளி. சிக்கலான அறிவியல் கோட்பாடுகளை மார்க்சிய இயக்கவியல் கண்ணோட்டத்துடன் விளக்கிய அவரது அறிவுத்திறன், வரும் தலைமுறை மார்க்சியவாதிகளுக்கு ஒரு பெரும் வழிகாட்டியாகும். ஒரு நேர்மையான கம்யூனிஸ்ட்டாகவும், ஆசிரியர்களின் உரிமைக் குரலாகவும் திகழ்ந்த தோழர் கிஷோருக்கு செங்கொடி இயக்கம் தனது செவ்வணக்கத்தைச் செலுத்துகிறது.
பீப்பிள்ஸ் டெமாக்ரசி (டிச. 28 )
