மதுரை மண்ணின் அமைதியைக் குலைத்து, திருப்பரங்குன்றத்தை ஒரு மதவெறிப் பிரதேசமாக மாற்றத் துடிக்கும் ஆர்எஸ்எஸ் - பாஜக கூட்டணியின் சதித் திட்டங்களை முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். பசியல்ல, பட்டினி யல்ல, கொள்கைக்காக உயிரே போகிற நிலை வந்தா லும் களத்தில் நிற்கத் தயாராக இருக்கும் தொண்டர் களைக் கொண்ட இயக்கம் தான் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கப்படும்போது, திட்டமிட்டு வன் முறை உருவாக்கப்படும்போது, தீயணைப்புப் படையை விட வேகமாக ஓடிவந்து அந்தத் தீயை அணைக்கிற படையாக மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் இருக்கிறார்கள். திருப்பரங்குன்றத்தை ஒரு வன்முறை கூடமாக மாற்ற ஆர்எஸ்எஸ் - பாஜக சதி செய்கிறபோது, அந்த வர்க்க எதிரிகளை நேரடியாகக் களத்தில் சந்திக்க நாங்கள் தயார். மதுரை மண்ணின் சோதனையைப் போக்க, ஒரு நாள் ஊதியத்தை இழந்தும், ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் திரண்டு வந்து இந்த உண்ணாவிரதத்தில் பங்கெடுப்பது பாராட்டுக்குரியது.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: எழும் கேள்விகள்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை யாராவது தடுத்தார்களா? இல்லை. காலங்காலமாக எங்கே ஏற்றப்படுகிறதோ, அங்கேயே ஏற்றச் சொல்கிறோம். ஆனால், ஒரு குறிப்பிட்ட தனிநபர் வழக்குப் போட்டு, புதிய இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது ஏன்? இதுவரை இருந்த இடத்தை மாற்றுவதற்கான வரலாற்று ஆவணம் அல்லது தொல்லியல் சான்று ஏதாவது இருக்கிறதா? பாஜக-வைப் பொறுத்தவரை வரலாற்றைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை; ‘பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என்பதுதான் அவர்களின் வாதம். அயோத்தியில் மசூதியை இடித்துவிட்டு கோவில் கட்டியபோது எந்த வரலாற்றுச் சான்று இருந்தது? இன்று இந்தியா முழுவதும் 3000-க்கும் மேற்பட்ட மசூதிகளையும், தேவாலயங்களையும் குறிவைத்து அவர்கள் காய் நகர்த்துகிறார்கள். மதச்சார்பற்ற கொள்கையுடைய எல்லா கட்சிகளுமே இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தினருக்குமான கட்சிகள்தான். ஆனால், பாஜக மட்டுமே தங்களை இந்துக்களின் பிரதிநிதியாகக் காட்டிக்கொண்டு, திருப்பரங்குன்றத்தைத் தேசம் தழுவிய அளவில் ஒரு பிரச்சனையாக மாற்றி, மதக் கலவரத்தை உண்டாக்கத் துடிக்கிறது.
நீதித்துறையின் போக்கு : பாரபட்சமான உத்தரவுகள்
நீதி தேவதை கண்ணைக் கட்டிக்கொண்டு தராசு ஏந்தியிருப்பது, நீதிபதிகள் பாரபட்சமின்றி இருக்க வேண்டும் என்பதற்குத்தான். ஆனால், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களின் செயல்பாடுகள் அரசியல் சாசனத்திற்கு விசுவாசமாக இருக்கிறதா? அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்திற்குத் தடை விதிப்பது, எச்சில் இலையில் புரளும் மூடப் பழக்கத்தைத் தடுத்த தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை போடுவது என அவர் வரிசை கட்டிச் செயல்படுகிறார். குறிப்பாக, 13 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனத்தைச் சிக்கலாக்கி, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் வகையில் அவர் போட்ட தடை உத்தரவு கண்டிக்கத்தக்கது. ஆர்எஸ்எஸ் தொண்டரைப் போலச் செயல்படும் இவரைத் தமிழகத்தை விட்டு வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியைக் கேட்டுக்கொள்கிறோம். தவறான நீதி வழங்கப்பட்டால் மதுரை தீக்கிரையாகும் என்பது சிலப்பதிகாரம் நமக்குச் சொன்ன பாடம்.
பாஜக-வின் கார்ப்பரேட் சேவையும் மக்கள் விரோதப் போக்கும்
கடந்த 12 ஆண்டு கால பாஜக ஆட்சியில் சாமானிய மக்களுக்கான ஒரே ஒரு நல்ல திட்டத்தை யாவது நயினார் நாகேந்திரனாலோ அல்லது எச்.ராஜாவாலோ சுட்டிக்காட்ட முடியுமா? இடதுசாரி களின் ஆதரவோடு கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலைத் திட்டத்தை இன்று பாஜக அரசு மெல்ல மெல்லக் கழுத்தை நெரித்துக் கொன்று வருகிறது. பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் வீதியில் நிற்கிறார்கள். தங்கம் வாங்குவது என்பது சாமானியர்களுக்கு எட்டாக் கனியாகிவிட்டது. நாட்டின் மொத்தச் சொத்தையும் அம்பானிக்கும் அதானிக்கும் அடமானம் வைப்பதுதான் மோடி அரசின் ஒரே சாதனை. தேர்தல் பத்திரங்கள் மூலம் 6,100 கோடி ரூபாயைக் கொள்ளையடித்த ஊழல் பேர்வழிகள் இவர்கள். தில்லி மாநகரத்தில் நேரு வின் பெயர் தாங்கிய மியூசியத்தின் பெயரை மாற்றுவது, காந்தியின் வரலாற்றை மறைப்பது என விடுதலைப் போராட்டத் தலைவர்களைக் கூட இவர்கள் மதிப்பதில்லை. இந்த உண்மையான பிரச்ச னைகளை மக்கள் பேசிவிடக்கூடாது என்பதற்காகவே திருப்பரங்குன்றம் போன்ற போலிப் பிரச்சனைகளை இவர்கள் கையில் எடுக்கிறார்கள்.
எடப்பாடியின் சந்தர்ப்பவாதமும் அதிமுக-வின் வீழ்ச்சியும்
இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் போக்கு மிகவும் வேடிக்கையானது. 2017-இல் அவரே முதலமைச்சராக இருந்தபோது, பாரம்பரிய மான தீபம் ஏற்றும் முறையை மாற்ற வேண்டிய அவசிய மில்லை என்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தார். ஆனால் இன்று பாஜக-வுக்கு அடிமை யாகி, அண்ணா திமுக-வை அடமானம் வைத்து விட்டு, ஆர்எஸ்எஸ்-சின் ஜால்ராவாக மாறிவிட்டார். ஜெயலலிதா காலத்து நிலைப்பாட்டைக் கூட அவர் குழிதோண்டிப் புதைத்துவிட்டார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் ‘விதைகள் சட்டம்’ கொண்டுவரப்பட்டபோது, ஒரு விவ சாயி என்று சொல்லிக்கொள்ளும் எடப்பாடி ஏன் மவுன மாக இருந்தார்? அதிமுக-வை பாஜக-வின் ஒரு கிளை அமைப்பாக மாற்றத் துடிக்கும் எடப்பாடியின் அரசியலுக்கு 2026 சட்டமன்றத் தேர்தல் முற்றுப் புள்ளி வைக்கும். செல்லூர் ராஜூ அடிக்கடி சவால் விடுகிறாரே, அவரால் மோடிக்கு ஒரு சவால் விட முடியுமா?
மதுரை ஒரு வளர்ச்சிப் பாதையில்…
மதுரை அமைதியாக இருந்தால்தான் தொழில் வளமும், வாழ்வாதாரமும் பெருகும். டங்ஸ்டன் சுரங்கத்திற்காக அழகர் மலையையும், அரிட்டா பட்டியையும் காவு கொடுக்க மோடி அரசு முயன்ற போது, அதை எதிர்த்துப் போராடி வெற்றிகண்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அந்தப் போராட்ட த்திற்குத் தலைமை தாங்கிய தோழர் சு. வெங்கடேச னைப் பார்த்து மிரட்டல் விடுத்தால், அந்த எச்சரிக்கைக்கு எதிரெச்சரிக்கை விட மார்க்சிஸ்ட் கட்சி தயங்காது. மதுரை விமான நிலைய விரிவாக்கம், எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கம் போன்ற ஆக்கப்பூர்வ மான பணிகளில் கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில், மக்களை மத அடிப்படையில் பிரிக்கும் சூழ்ச்சியை பாஜக கையாள்கிறது. தமிழகத்தில் பாஜக காலூன்ற வழியில்லாததால், இத்தகைய குறுக்கு வழிகளைத் தேடுகிறது. ஆனால், மத நல்லிணக்கத் திற்குப் பெயர் பெற்ற மதுரை மக்கள் இவர்களின் சதிக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள். தமிழ கத்தின் அமைதியைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கும் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மதவெறி சக்தியை வீழ்த்தி, மக்கள் ஒற்றுமையை நிலைநாட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றும் முன்னிற்கும்.
டிசம்பர் 30 அன்று மதுரையில் நடைபெற்ற உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஆற்றிய உரையின் பகுதிகள்.
