articles

img

இடர்பாடுகளில் இந்தியா.. எங்கே இருக்கிறது ஆர்.எஸ்.எஸ்?

“தேசம் நெருக்கடிக்கு உள்ளானால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மூன்றே நாட்களில் இராணுவத்தைவிட வேகமாக தயாராகிவிடும் இந்திய ராணுவம் தயாராவதற்கு 6,7 மாதங்கள் ஆகும்.” மோகன் பகவத்.(2018 பிப்ரவரி 12. டைம்ஸ் ஆப் இந்தியா)இந்தியா இன்று பேரழிவில் சிக்கித்தவிக்கிறது. சிக்க வைத்தது மோடி தலைமையிலான ஒன்றியஅரசாங்கம் என்றாலும், சிக்கி சீரழிந்து மாண்டுபோவது மக்கள்தான். இந்த அரசை வழிநடத்துவது ஆர்.எஸ்.எஸ் என்ற தாய்  அமைப்பு. ஆர்எஸ்எஸ் உருவாகிய காலத்திலிருந்து இருந்த தலைவர்களைவிட, தில்லி அரசியலிலும், குடிமைச்சமூகத்திலும் அதிக அதிகாரத்துடன் இருப்பவர் அதன் தலைவர் மோகன் பகவத் ஆவார். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில்கூட ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே. எஸ். சுதர்சனம்இந்த அளவிற்கு அதிகாரம் பெற்றிருக்கவில்லை.

கடந்த மே மாதம் 15-ஆம் தேதி மோகன் பகவத் பேசுகின்ற பொழுது கொரோனாவின்  முதல் அலையை அரசாங்கம், நிர்வாகம், மக்கள் ஆகியோர் எதிர்கொண்டு அதன் வேகத்தைவடியச் செய்தார்கள் என்று கருத்தை தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சில் மோடியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

வாயைத் திறக்காத மோகன் பகவத் 
அதே நேரத்தில் இரண்டாவது அலையின் மிகக் கொடூரமான தாக்குதல்களை பற்றி அவர் வாய் திறக்கவில்லை. முதல் அலையின் போது தப்லீக் ஜமாத் முஸ்லிம் மூலமாகத்தான் பெரும்தொற்று பரவியது என்று ஆர்.எஸ்.எஸ்-சும் பாஜகவும் தாக்குதலை நடத்தியதை நாடேஅறியும். இரண்டாவது அலைபரவியதற்கு உத்தராஞ்சல், உத்தரப்பிரதேச அரசுகளின் ஆதரவுடன் நடத்தப்பட்ட கும்பமேளா ஒரு முக்கிய காரணமாகும். இதற்கு ஆர்.எஸ்.எஸ் பொறுப்பு இல்லை என்று கூறமுடியுமா? இதன் விளைவால் கங்கைநதி வெள்ளத்தின் போர்வையாக மனிதப் பிணங்கள்  மாறியது. இரண்டாவது  அலைபரவிட மற்றொரு காரணம், தேர்தல் கூட்டங்கள் ஆகும். குறிப்பாக அதிக கூட்டங்களை லட்சக்கணக்கான மக்களை திரட்டியது மோடி அமித்ஷா வகையறாக்கள். 
இந்த கூட்டங்களுக்கு ஆள் திரட்டுவதற்கு கிராமம் கிராமமாக, நகரங்களில் வீடு வீடாக ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் சென்று ஆள் திரட்டினார்கள். இவர்கள் மூலமாக வைரஸ் பரவவில்லை என்று கூறமுடியுமா? மற்றவர்கள் மீது பழி போடுவதற்கான வாய்ப்பு கிடைக்காத பொழுது வாயே திறக்காதவர்களாக மோகன் பகவத்துக்கள்  மாறிவிடுகிறார்கள்.காந்தியின் படுகொலைக்குப் பிறகு சேவை செய்வது மட்டும்தான் ஆர்.எஸ்.எஸின் பணி என்று எழுதிக்கொடுத்து தடை செய்யப் பட்டதிலிருந்து விலக்கு பெற்று வந்தவர்கள்தான் இவர்கள். தொடர்ந்து சேவை செய்வதை மட்டுமேநாங்கள் அமல்படுத்துவோம் என்று அன்றைய தலைவர் கோல்வால்கர் வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதிகளுக்கு பின்னால் வஞ்சகமும் வகுப்புவாத அரசியலும் உள்ளது என்பதை நாடறியும்.

எங்கே போனது?
இன்று நாடே பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசிலும் குடிமைச்சமூகத்திலும் அதிக அதிகாரம் படைத்த மோகன்பகவத்தும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் எங்கே போனது?

தேசம் நெருக்கடிக்கு உள்ளானால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மூன்றே நாட்களில் இராணுவத்தைவிட வேகமாக தயாராகிவிடும். இந்திய ராணுவம் தயாராவதற்கு 6,7 மாதங்கள் ஆகும். அந்த அளவிற்கு ஆர்எஸ்எஸ் சக்திபடைத்தது. நாட்டில் ஆபத்து வந்தால் ஆர்எஸ்எஸ் முன்னணிப் படையாக இருக்கும் என்று மோகன் பாகவத்ராணுவத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசினார்.

தேசம், சேவை என்று பிம்பத்தை கட்டியமைத்தவர்கள் நிஜம் என்று வந்தவுடன் எங்கே சென்றார்கள்? 

# சடலங்களைப் புதைக்க, எரிக்க, எடுத்துச் செல்ல,

# மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தவித்தவர்கள், 

# ஆக்சிஜன் கிடைக்காமல் வரிசையில் நின்றவர்களுக்கு

# படுக்கை வசதி இல்லாமல் நிர்கதியாய் நின்றவர்களுக்கு, உணவின்றி தவித்து மடிந்தவர்களுக்கு,

# தடுப்பூசி தட்டுப்பாட்டில் தவித்தவர்களுக்கு, 

என எத்தனை எத்தனையோ இன்னல்களை  மக்கள் அனுபவித்து வந்தார்கள். மற்றவர்கள் சாத்தியமான அளவு களத்தில் நின்றபோது இராணுவத்தைவிட வேகமானவர்கள் வலிமை யானவர்கள் என்று பறைசாற்றியவர்கள் எங்கே போனார்கள்?ஆர்.எஸ்.எஸ். சேவைசெய்யாது,செய்ததில்லை என்று யாரும் கூறமுடியாது. அவர்களின் சேவை குறுகிய நோக்கம் கொண்டது. வெறுப்பு அரசியலை விதைக்கக்கூடியது. குடிமைச் சமுதாயத்தின் அதிகாரத்தை கைப்பற்றுவதும், தக்கவைப்பதும் ஆகும். கடந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் நடந்து கொண்டிருப்பது  இதுதான்.

தன்னலமற்ற சேவகர்கள் யார்?
இரண்டாவது அலை தலைதூக்கிய பொழுது மோடி அரசு உருக்குலைந்து எதுவும்செய்யமுடியாமல் மக்களை கைவிட்டுவிட்டது. இந்தப் பின்னணியில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வது, குடிமைச் சமூகக் குழுக்கள், மதக் குழுக்கள், கார்ப்பரேட் அமைப்புகள், சமூக வலைதளக் குழுக்கள், அரசியல் கட்சிகளின் அமைப்புகள் மற்றும் பிரபலமானவர்கள், பிரமுகர்கள்  போன்றவர்கள் மக்களுக்காக பணியாற்றுவதில் முன்னணியில் நின்றார்கள்.நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் என்றஅமைப்பின் பிம்பத்தை உடைத்து களப் பணியாற்றியவர்கள் ஏராளம். கேரளாவில் மாணவர் அமைப்புகளும், வாலிபர் அமைப்புகளும், உள்ளாட்சி அளவில் குழுக்களை அமைத்து பெரும்பாலானவர்களுக்கு ஏ டூ இசட் என்ற வகையில் உதவிகளை செய்தனர். மேற்கு வங்காளத்தில் தேர்தல்கள் முடிந்து இருந்தாலும் உடனடியாக மாணவர் அமைப்புகளும் வாலிபர்அமைப்புகளும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  ஆக்சிஜன் கொடுப்பது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டார்கள். தமிழகத்தில் மாணவர், வாலிபர் அமைப்புகள் மருத்துவமனை சேவைசெய்வது உட்பட பல்வேறு தளங்களில் களமாடிவருகின்றன. ஆந்திரா, பீகார், ஒரிசா, தெலுங்கானா இன்னும் எண்ணற்ற இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதனுடைய வர்க்க வெகுஜன அமைப்புகள் அலுவலகங்களை சிகிச்சைமையங்களாக மாற்றி செயல்பட்டு வருகிறார்கள்.

தில்லியில் இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய தலைவர் தலைமையில் செய்த பணிகள் நாடு கடந்தும் பேசப்படுகிறது. இதே போன்று ஏராளமான இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் பணிகளை சாதி மதம் பார்க்காமல் களத்தில் நின்று செய்து வருகிறார்கள். இவை தவிர சமூக வலைதள குழுக்கள், யூடியூப் நடத்துகிறவர்கள் மற்றும்பிரபலங்கள் சோனு சூட், விராட் கோலி போன்றவர்கள் நிதி ஆதாரங்களை திரட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருவது நாடுமுழுவதும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இங்கேகுறிப்பிடப்படாத இன்னும் ஏராளமான அமைப்புகள், தனி நபர்கள் தன்னார்வத் தொண்டர்களாக உயிரைப் பணயம் வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் சேவையின் சாயம் வெளுக்கிறது
சேவையின் சிகரம் என்று தம்பட்டம் அடித்து பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்ட ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பிற்கு இந்தப் பணிகள் புதியநெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. பல்வேறு அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் செய்யக்கூடிய இந்த உதவிகள்  மோடியின் தோல்வியை அம்பலப்படுத்தியது. உதவியை உதவி  என்று பார்க்காமல் கிரிமினல் குற்றமாக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளார்கள். இதற்கான காரணம் என்ன?

தில்லியில் இளைஞர் காங்கிரசின் தலைவர் பி.வி.சீனிவாசன் ஆயிரம் இளைஞர்களுடன் நிவாரணக் குழுவை அமைத்து ஆக்சிஜன் ஏற்பாடு, உணவு கொடுப்பது நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, என பல்வேறு விதமான உதவிகளை செய்தது தில்லியில் பாஜக,ஆர்எஸ்எஸ்  அமைப்பிற்கு  பீதியை கிளப்பியது. அதுமட்டுமல்ல தில்லியில்உள்ள வெளிநாட்டு நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ்நாட்டு தூதரகங்கள் ஊழியர்கள் பாதிக்கப்பட்ட போது அவர்களுக்கு ஆக்சிஜன் கொடுத்து உதவியது நாடு கடந்த செய்தியாக மாறியது. இதை மோடியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பி.வி. சீனிவாசனின் அலுவலகத்தை சோதனை செய்து மிரட்டி  கிரிமினல் குற்றம் என்ற முறையில் நடத்தி இருக்கிறார்கள். அவருடைய சேவையை தடுக்கக்கூடிய முகமாக இது நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஆக்சிஜன் கொடுப்பதும் மருத்துவமனை கொண்டு செல்வதும் மோடி ஆட்சியில் கிரிமினல் குற்றமாக பாவிக்கப்படுகிறது என்று அறிக்கை கொடுத்து இருக்கிறது.

இதேபோன்று ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திலீப் பாண்டே தில்லி மக்களுக்கு உதவி செய்து வந்தார். அவரது வீட்டிலும்சோதனை செய்து அவருடைய உதவிகளையும் நிறுத்துவதற்கான கிரிமினல் வழக்குகளை தொடுப்போம் என்று மிரட்டி இருக்கிறார்கள். அலுவலகத்தை சோதனை செய்து இருக்கிறார்கள். அவர் மோடியும் அமித்ஷாவும் என்னை தூக்கி போட்டாலும் நான் எனது உதவியை நிறுத்த மாட்டேன் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.குஜராத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ தலித் மக்களுடைய உரிமைகளுக்காக போராடக்கூடிய ஜிக்னேஷ் மேவானி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் வாங்கிக் கொடுப்பதற்காக நிதி திரட்டினார். அவரது பணிகளை தடுத்து நிதிக்கான கணக்கை அரசு முடக்கி வைத்துள்ளது.உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்று சொன்னாலும் உதவி செய்தாலும் தாக்குதல் தொடுக்கும் நிலை உள்ளது.பீகார் அரசியலில் நல்ல பெயர் எடுக்காத பப்புயாதவ், அவருடைய கட்சியின் மூலமாக மக்களுக்கு உதவி செய்வதற்கு ஆம்புலன்ஸ் சேவையை செய்துள்ளார். இவற்றை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக  துணை முதல்வராக இருக்கக்கூடிய ராஜீவ் மோடி அவருடைய அலுவலகத்தில் சோதனை செய்து பயன்படுத்தாத ஆம்புலன்சை எடுத்துக் கொண்டதுடன் கைதும் செய்துள்ளார்கள். மேற்கண்ட சேவைகள் வேறுபாடுகளையும் மறந்து மக்களுக்கு உதவி செய்வது, உயிர்களை காப்பாற்றுவது மட்டுமே நோக்கமாக இருந்தது.

சேவையின் இருவேறு நோக்கங்கள்
விடுதலைப் போராட்டக் காலத்தில் இந்தியாவில் மக்களை திரட்டுவதற்கு மக்கள் சேவை என்பது ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டது. பிரிட்டிஷாரின் அடக்குமுறைகளை எதிர்த்தும்,ஜனநாயக உரிமைப் பறிப்பை தடுத்திடவும், காலனித்துவ எதிர்ப்புணர்வை உருவாக்கிடவும் மகாத்மா காந்தி மக்கள் மத்தியில் சேவைசெய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட்கள் கிராமப்புறங்களில் இரவுப் பள்ளிகள் கல்விக்கூடங்கள் சிறிய மருத்துவ குழுக்கள், வாசகசாலைகள், மராமத்துப் பணிகள் போன்றவற்றின்மூலமாக மக்களுக்கு சேவை செய்து அணிதிரட்டினார்கள். இந்த சேவை என்பது சாதி, மத, இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட மக்களின் நல்ல்வாழ்வை மையமாகக் கொண்டது. இந்த சேவைகள்  மூலமாக மக்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக திரண்டனர். ஏகாதிபத்திய எதிர்ப்பில் இந்தியதேசியம் கட்டியமைக்கப்பட்டது. அதனால்தான் அதன் சேவையின் நோக்கமும் வேறுவிதமாக இருந்தது, இருக்கிறது.1947-ஆம் ஆண்டு இந்த நாடு பிரிவினைக்கு ஆட்பட்ட பொழுது அன்றைய அரசாங்கமும் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளும் அகதிகள் அனைவருக்கும் சேவை செய்தார்கள். ஆர்.எஸ்.எஸ் இந்து  அகதிகள் என்று தரம் பிரித்து அவர்களுக்கான சேவையை மட்டும் செய்தது. ஆனால் பிரிவினையின் போது தாங்கள்தான் பெரும் சேவை செய்ததாக ஊடகங்களையும் அதிகாரத்தையும் வைத்து பிம்பத்தை கட்டி அமைத்தார்கள்.

இந்துத்துவா திட்டம் திணறுகிறது:
ஆர்.எஸ்.எஸ். தற்போது இரண்டு வகையில் வேலைப் பிரிவினையுடன் இந்துத்துவா திட்டத்தை அமலாக்கிவருகிறது. ஒன்று மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு நாடு தழுவிய இந்துத்துவா திட்டத்தை அதாவது, அரசியல் சட்டதகர்ப்பு, இராமர் கோயில் கட்டுவது, நீதித்துறை மற்றும் இராணுவம் போன்றவற்றை இந்துத்துவாமயமாக்க முயற்சிப்பது என பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வது.

இரண்டாவது, ஆர்எஸ்எஸ் அமைப்பு தங்களது ஷாகாக்கள் மூலமாக குடிமைச்சமுதாயத்தில் இந்துத்துவா கட்டமைப்பை உருவாக்குவது. இதற்காக ஒரு சார்பான இந்துத்துவா சேவைகளை முன்னெடுப்பது. சேவாபிரகல்ப் (SEVA PRAKALP) என்ற பெயரில் பலதிட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. குடிமைச் சமூகத்தை சங்பரிவார விருப்பத்திற்கு நடத்தலாம் என்ற நிலைமையை உருவாக்க முடிகிறது.இந்தப் பின்னணியில்தான் பெருந்தொற்றின் இரண்டாவது  அலையில் எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள், தனிநபர்கள், பிரமுகர்களின் சேவைகள், உதவிகள் இவர்களின் இந்துத்துவா திட்டத்திற்கு எதிராக உள்ளது. எதிர்க்கட்சிகளின் செல்வாக்கை உயர்த்தியது. இவர்களின் இந்துத்துவா திட்டங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியது. எனவே தடுப்பதில், வழக்குப் போடுவதில் இறங்கினர்.  ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்த நோக்கத்தின் மற்றொரு நடவடிக்கை தான் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெறுவதை தடை செய்து ஆர்எஸ்எஸ்-ன்  இணைக்கப்பட்ட  சேவா இண்டர்நேஷனல் அமைப்பு அந்நிய நாடுகளிடமிருந்து தாராளமாக நிதி உதவி பெறும் சலுகை அளித்து வருகின்றனர். ஆகவே மற்றவர்கள் செய்யக்கூடிய சமூக சேவையை அடக்கி ஆர்எஸ்எஸின் இந்துத்துவா நோக்கமுடைய சமூக சேவையை நீடிக்க முயற்சி செய்கிறார்கள். எனவே இந்த அரசியல் சமூக மேலாதிக்கத்தை தகர்ப்பது  உடனடிக் கடமையாகிறது.

கட்டுரையாளர் : அ.பாக்கியம்