சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சென்னையில் நடத்திய வன்முறை எதிர்ப்பு கருத்தரங்கில் கேரள மாநில முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான ஷைலஜா டீச்சர் ஆற்றிய உரை - தமிழில் : அ.விஜயகுமார்
ஆண்டான் அடிமை காலத்தில் இருந்தே பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை களும் பாலினப் பாகுபாடுகளும் தொடங்கிவிட்டன. இது ஏன் நடக்கிறது என்பது மிக முக்கியமான கேள்வி. காலம் காலமாக பெண்கள் அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கான காரணத்தை கண்டறிந்தது கம்யூனிஸ்ட்டுகள்தான். மாமேதை ஏங்கெல்ஸ், தனது புகழ்பெற்ற நூலான “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற புத்தகத்தில் தனிச்சொத்து, குடும்பம் என்று வரும்போது பெண்களுக்கு எதிரான ஒடுக்கு முறையும் சேர்ந்தே வந்து விடுகிறது என்று கூறினார். அதன் தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான சுரண்ட லும் வந்துவிடுகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெண்கள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதித்து அவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடுவதற்கான அணுகுமுறையை உருவாக்கியது.
நிலவுடைமை சமூகம்
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு இந்தியச் சமூகம் முற்றிலும் நிலவுடைமை சமூகமாக இருந்தது. சுதந்திரம் அடைந்த பின்னர் நாட்டில் என்ன நடந்தது? முதலாளித்துவம் மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது. சுதந்திரத்திற்கு பின்னர் அமைந்த முதல் அரசாங்கத்தில் பெரும் பணக்காரர்கள் இடம்பெற்றிருந்தனர். இதனால் நிலவுடைமை காலத்தில் இருந்த பாகுபாடுகள், சுரண்டல், பொருளாதார அடிமைத்தனம் உள்ளிட்டவை மறைய வில்லை, வேறு வடிவில் தொடர்ந்தன. முதலாளித்துவ வளர்ச்சி நிலைமை ஏற்பட்ட பிறகும் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளையோ அவர்கள் சுரண்டப் படுவதையோ அது தடுக்கவில்லை. ஒருபக்கம் மூலதன வளர்ச்சி, நுகர்வு கலாச்சாரம் வளர்ந்து கொண்டே இருக்கும்போதுதான் மறுபக்கம் பெண்கள் ஒடுக்கப் படுவதும் பாகுபாடாக நடத்தப்படுவதும் தொடர்கிறது. இந்தியாவிற்குள் அந்நிய மூலதனம் வந்தபின்னரும் அந்த மூலதனத்துடன் கூட்டாக இந்திய முத லாளித்துவம் தொழில் தொடங்கிய போதிலும் பெண்கள் ஒடுக்கப்படுவதும் சுரண்டப்படுவதும் குறையவில்லை; மாறாக அதிகரித்துள்ளது.
பெண்களை இந்த சமூகம் ஒரு நுகர்வுப் பண்ட மாக மாற்றிவிட்டது. எனவே இத்தகைய கொள்கை களை ஒழித்துக்கட்டாமல் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ சமூகஅமைப்பு முறைக்கு முடிவு கட்டாமல் ஒடுக்குமுறைகளில் இருந்து பெண்களை நம்மால் முழுமையாக விடுவிக்கமுடியாது. எனவே நாம் நிலவுடைமை காலத்து அணுகுமுறைகளை எதிர்த்தும் முதலாளித்துவ அமைப்பு முறையில் உள்ள நுகர்வுக் கலாச்சாரத்தை எதிர்த்தும் தொடர்ந்து வலுவாக போராடவேண்டியுள்ளது. பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் பாலின பாகுபாட்டிற்கு எதிராகவும் தந்தை பெரியார் போராடினார். அறிவியல் பூர்வமாக அவர் நடத்திய போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. கேரளா வில் நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்திற்கு எதிராகவும் பெண்கள் சுரண்டப்படுவதற்கு எதிராகவும் ஏராள மான சமூக சீர்த்திருத்த வாதிகள் அன்றைய கால கட்டத்தில் போராடினார்கள்.
மலபாரில் நிலபிரபுக்கள் அட்டகாசம்
கேரளாவில் 1930- 40களில் நிலப்பிரத்துவ அமைப்பு முறையால் பெண்கள் பெரிதும் பாதிக்கப் பட்டனர். பல்வேறு வகைகளில் அவர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டனர். “பெண்கள் : கடந்தகாலம், நிகழ்காலம். எதிர்காலம்’’ என்ற பிரபல புத்தகத்தில் இதுகுறித்த ஏராளமான தகவல்களை காணலாம். மலபார் பகுதியில் நிலபிரபுத்துவம் உச்சத்தில் இருந்தபோது ஏழை விவசாயி மற்றும் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் அடிமைகள்போல் நடத்தப்பட்டனர். பல மோசமான நடைமுறைகளும் வழக்கங்களும் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்தன. பெண்கள் தங்களது மேல்பகுதியை ஆடையால் மூடக்கூடாது. விவசாயிகளின் விவசாயத் தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் திருமணமானால் அவள் நேரடியாக கணவர் வீட்டிற்கு செல்லமுடியாது. முதலிரவை நிலப்பிரபுவுடன் தான் கழிக்க வேண்டும். இதன் பின்னர்தான் அந்த பெண் தனது கணவர் வீட்டிற்கு செல்ல முடியும். இதை நிலப்பிரபுக் கள் தங்களுக்கான உரிமையாகவேவைத்திருந்தனர்.
அந்த காலகட்டத்தில் இதயத்தை பிழியக்கூடிய பல கொடுமையான சம்பவங்களும் கேரளாவில் நடந்தன. ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி மகள் சேரியா என்பவர் விவசாயத் தொழிலாளியான ராமன் என்பவரை மணந்தார். திருமணம் முடிந்தவுடன் அந்த பெண் நிலப்பிரபுவின் வீட்டிற்கு செல்ல மறுத்தார். அந்த பெண்ணை நிலப்பிரபுவிடமிருந்து காப்பாற்ற மறைவான ஒரு இடத்தில் கணவரான ராமன் தங்கவைத்தார். இருந்தாலும் அந்த இடத்தை கண்டுபிடித்த நிலப்பிரபுவும் அவனது அடியாட்களும் அந்தபெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினர். “எனது உடல்நிலை சரியில்லை, கண்களில் பிரச்சனை உள்ளது. என்னை இப்போது தொந்தரவு செய்யாதீர்கள்.விட்டுவிடுங்கள் எங்கேயா வது போய்விடுகிறேன்’’ என்று கண்ணீருடன் அந்த பெண் அவர்களிடம் கெஞ்சிப்பார்த்தார். ஆனால் கயவர்கள் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினார்கள்.
போராடிய வீரப்பெண் சேரியா
பணி முடிந்து அந்த இடத்திற்கு வந்த ராமன் தனது மனைவி ரத்த வெள்ளத்தில் கீழே கிடப்பதை பார்த்து அதிர்ந்துபோனான். அந்த பெண்ணின் இரண்டு கண்களிலும் ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. இந்த சம்பவத்தால் அந்தப்பெண் இரண்டு கண்களி லும் பார்வையை இழந்திருந்தார். சேரியா மிகவும் தைரியமான பெண் என்பதால் இந்த கொடுமைக்கு முடிவுகட்ட விவசாயி சங்கம் நடத்தும் கூட்டத்திற்கு சென்றார். தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை விளக்கியதோடு மற்ற பெண்களுக்கு இதுபோன்ற கொடுமை நடக்கக்கூடாது என்பதற்காக சங்கத்துடன் இணைந்து நிலப்பிரபுவத்தை எதிர்த்து போராடினார்.
மக்கள் ஜனநாயக புரட்சி
கேரளாவில் இதுபோன்ற ஏராளமான சேரியாக்கள் நிலப்பிரபுக்களின் கொடுமைக்கு ஆளானார்கள். அவர்களும் விவசாயிகள் சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்து நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக போராடினார்கள். அன்றைய கால சமூக அமைப்பு முறையில் பெண் கள் ஒடுக்கப்படுவதும் சுரண்டப்படுவதும் அதிகமாக இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இதுபோன்ற மோசமான நிலையில் இருந்து பெண்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று அனை வரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதுபோன்ற எதுவும் நடக்கவில்லை. பழைய நிலை அப்படியே நீடித்தது. நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து பல ஆண்டுகள் ஆகியும் பெண்கள் அடிமைகள் போல் நடத்தும் நிலை தொடர்ந்தது, எனவேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இத்தகைய நிலை மாறவேண்டும் என்றால் நாட்டில் மக்கள் தலைமையில் மக்கள் ஜனநாயக புரட்சி ஏற்படவேண்டும் என்று கூறுகிறது. புரட்சியின் இலக்கு என்ன? புரட்சி ஏற்பட்ட பின்னர் பெண்கள் நிலை என்னவாக இருக்கும்? அவர்களை அதிகாரம் பெற்றவர்களாக்குவது எப்படி? அதற்கான கட்சித் திட்டம் என்ன? இவை அனைத்திற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவான செயல் திட்டத்தை வைத்துள்ளது.
நம்பிக்கையை ஏற்படுத்திய இடதுசாரி அரசு
கேரளாவில் 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி அரசு ஆட்சிக்கு வந்தது. இஎம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் இடதுஜனநாயக முன்னணி அரசு அமைந்தது. மற்ற அரசுகளுக்கும் இடதுசாரி அரசுக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் கண்டனர். இடது ஜனநாயக முன்னணி அரசு மேற்கொண்ட புரட்சிகரமான நடவடிக்கைகளால் கேரளாவில் பெண்களின் நிலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. பெண்கள் கல்வி கற்க வழிசெய்யப்பட்டது. இதனால் மாநி லத்தில் எழுத்தறிவு விகிதம் அதிகரித்தது. நாட்டிலேயே பெண்கள் அதிகமாக படித்த மாநிலம் கேரளாதான். ஒட்டுமொத்த எழுத்தறிவிலும் கேரளாவே முன்னிலை வகிக்கிறது.
பெண்களின் பங்கேற்பை அதிகரித்த கேரளம்
மனிதவளக் குறியீட்டிலும் கேரளா மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முன்னணியில் உள்ளது. நாட்டிலேயே கேரளாவில்தான் அரசுக்கான வருவாய் மிகவும் குறைவு. ஆனால் இடது ஜனநாயக முன்னணி அரசு எடுத்த நடவடிக்கைகளால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதிகமான வருவாய் ஈட்டப்பட்டது. சமூகத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகமானது. அதே நேரத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அதிகளவில் வேலை வாய்ப்பை பெறுவதில் உள்ள இடைவெளியை போக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 1957 ஆம் ஆண்டு கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசு பொறுப்பேற்றவுடன் பெண்கள் நலன் சார்ந்த; விவசாயிகள் நலன் சார்ந்த; மக்கள் நலன் சார்ந்த சட்டங்கள் இயற்றப்பட்டன. இடது முன்னணி அரசு பதவியேற்று 16 நாட்களில் நிலப்பிரபுக் களின் நிலத்தில் இருந்து விவசாயிகள் அவர்களது குடும்பங்கள் வெளியேற்றப்படுவதைத் தடுக்க வகை செய்யும் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கை
இடதுசாரி அரசில் முதலாவது கல்வி அமைச்ச ராக இருந்த ஜோசப் முன்டசேரி வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வி மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார். கிராமங்களிலும் அரசுப்பள்ளிகள் ஏற்படுத்தி அனை வருக்கும் இலவசமாக கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பள்ளிகள் கட்டப்பட்டு ஏழை விவசாயிகளுக்கும் அவர்களது குழ ந்தைகளுக்கும் கல்வியறிவு உறுதி செய்யப்பட்டது.
சுகாதாரத்துறையில் முன்னேற்றம்
அரசாங்கமே அனைவருக்கும் இலவசமாக சுகாதார வசதிகளை செய்துதர வகை செய்யும் சட்டத்தை அப்போதைய அரசாங்கத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த மேனன் தாக்கல் செய்தார். இதனால் மக்களுக்கு தரமான சுகாதார வசதிகள் கிடைத்தன. அரசு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. இதனால் மக்களின் ஆரோக்கியம் மேம்பட்டது. அதன் பின்னர் பலமுறை கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தது. ஒவ்வொரு முறை இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் புரட்சிகரமான சட்டங்கள் இயற்றப்பட்டன. பெண்களுக்கு சமவாய்ப்பும் சமூகத்தில் சமமான குடியுரிமையும் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
நிலச் சீர்த்திருத்தம் ஒரு மைல் கல்
கேரள வரலாற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுஜனநாயக முன்னணி அரசு மேற்கொண்ட நிலச்சீர்த்திருத்தம் ஒரு மைல்கல் ஆகும். இதனால் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலம் கிடைத்தது. வீடில்லாதவர்களுக்கு வீட்டு மனைப் பட்டாக்களும் வழங்கப்பட்டன.இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்கள் இன்று வரை கேரளாவில் தொடர்கிறது. முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமை யிலான தற்போதைய அரசு இரண்டாவதுமுறையாக பதவியேற்ற பின்னர், வீடுகள் கட்டும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அவரது தலைமை யிலான முதலாவது அரசு கல்வி, சுகாதாரம், நீர்வளம் ஆகிய துறைகளில் புரட்சிகரமான மாற்றங் களை மேற்கொண்டு வந்தது. இதுவரை வீடு இல்லா தவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு வீடு கட்டித்தர ‘லைப் மிஷன்’ என்ற திட்டம் அமலாக்கப் பட்டுள்ளது. முதலாவது பினராயி விஜயன் அரசு 5 ஆண்டுகளில் 3 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளை கட்டியது. இதில் விதவைகள், தனியாக இருக்கக் கூடிய பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பெண்களின் பங்கேற்பு இல்லாமல் எந்த திட்டமும் வெற்றிப்பெறாது.
இறப்புவிகிதத்தை குறைத்த இடதுசாரி அரசு
கேரளாவில் குழந்தை இறப்பு விகிதம் தேசிய அளவில் மிகவும் குறைவாக உள்ளது. இதற்கு அடுத்தடுத்து வந்த இடது ஜனநாயக முன்னணி அரசு சுகாதாரத்துறைக்கு அளித்த முக்கியத்துவத்தாலும் வளரிளம் பெண்களுக்கு அளிக்கப்பட்ட ஊட்டச்சத்து மிக்க உணவும்தான் காரணம். 2016 ஆம் ஆண்டு முதலாவது பினராயி விஜயன் அரசு பொறுப்பேற்ற போது, கேரளாவில் பிரசவத்தின் போது குழந்தை இறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 12 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கையை ஒற்றை இலக்கிற்கு கொண்டு வர முடிவெடுத்தோம். இதற்காக கடுமையாக போராடி னோம். இதற்காக சுகாதாரத்துறையில் 2030க்குள் அடைய நீடித்த இலக்குகள் அறிவிக்கப்பட்டன. இதன்பின்னர் கர்ப்பிணிப் பெண்கள், பிறந்த குழந்தை ஆகியோரின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தினோம். அதன் காரணமாக மிகப்பெரிய சாதனையை படைக்க முடிந்தது. இத்தகைய முயற்சிகளால் 2020-ல் குழந்தை இறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 6ஆக குறைக்கப்பட்டது. நிதி ஆயோக் அறிக்கை வந்த பின்னர் இது ஆயிரத்திற்கு 5.4 ஆக இருந்தது. இது மிகப்பெரிய சாதனையாகும். பிரசவத்தின்போது ஏழைப்பெண்கள் இறப்பதை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிலும் கேரளா நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதிலும் மகப்பேறு மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட்டன.
தாய்மார்கள் இறப்புவிகிதம் குறைப்பு
கர்ப்பிணிப் பெண்களை அவ்வப்போது பரிசோதிப்பதும் அதிகரிக்கப்பட்டது. அவர்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? அவர்களது உடல் நிலை ஆரோக்கியமாக உள்ளதா? இல்லையா என பரிசோதிக்கப்பட்டது. 2016ல் பிர சவத்தின்போது தாய்மார்கள் இறக்கும் விகிதம் 1லட்சத்திற்கு 67 என்ற அளவில் இருந்தது. ஒரு லட்சத்திற்கு 70 ஆக குறைக்கவேண்டும் என்று ஐ.நா. சபையின் இலக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கேரளா இப்போதே அதை அடைந்துவிட்டது. மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. மாநில அரசு நிர்ணயித்துள்ள இலக்கை அடைய மருத்துவர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள், நிபுணர்கள் 24 மணிநேரமும் கடுமையாக உழைத்தனர். இதன் விளைவு 2017ல் பிரவசத்தின் போது இறக்கும் தாய்மார்கள் விகிதம் ஒரு லட்சத்திற்கு 43ஆக குறைக்கப்பட்டது. இதற்காக ஒன்றிய அரசிடமிருந்து அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த நான் கேரள மாநில அரசின் சார்பில் விருதினை பெற்றுக் கொண்டேன். கேரளவுக்கு 2 விருதுகள் வழங்கப் பட்டன. ஒன்று தேசிய அளவில் குறைவான இறப்பு விகி தத்தை அடைந்ததற்கும் மற்றொன்று இறப்பு விகி தத்தை 70க்குள் கட்டுப்படுத்தியதற்காகவும் வழங்கப் பட்டது. இவை அனைத்தும் இடதுசாரி அரசின் செயல் பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் கிடைத்த வெற்றியாகும்.
தொழில்முனைவோராக சுய உதவிக்குழு பெண்கள்
சுய உதவிக்குழுக்களை ஏற்படுத்தி அவர்களை உற்பத்தியில் ஈடுபடுத்துவதோடு தொழில்முனை வோராகவும் மாற்றி வருகிறோம். குடும்பஸ்ரீ திட்டம் பெண்களை ஊக்குப்படுத்துகிறது. பெண்கள் தங்களது சொந்த காலில் நின்று வருவாய் ஈட்டு வதை ஊக்குவிக்கிறோம். இதற்காக அவர்களை சமையலறையில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சித்து வருகிறோம். குடும்பஸ்ரீ உறுப்பினர்களை சிறுதொழில்முனைவோராக மாற்றுவதோடு மட்டு மல்லாமல் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர் களுக்கு தகவல் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு நவீன துறைகளில் பணியாற்றுவதற்கான தகுதியை ஏற்படுத்தி தருகிறோம். இதனால் ஏராளமான பெண்கள் சமையலறையில் இருந்து ஐடி அலு வலகத்திற்கு மாறியுள்ளனர். கேரளாவில் அனைத்து அரசுத்துறைகளிலும் நிதி ஒதுக்கீடு செய்யும்போது அதில் பாலினபாகுபாடு இல்லாமல் நியாயமான முறை யில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறதா என்பதை நாங்கள் சமூக தணிக்கை செய்கிறோம். அந்த திட்டங் களை ஆய்வு செய்கிறோம், கேரளாவில் இப்படி ஆக்கப்பூர்வமான செயல்பாடு கள் ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மிக தைரியமான பெண்கள், பெண் தலைவர்கள் சமூகத்தில் இருந்தா லும் பொதுவாக பெண்கள் குறித்த சமூகப்பார்வை இன்னும் முழுமையாக மாறவில்லை.
குடும்ப வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம்
வீடுகளுக்குள் நடைபெறும் வன்முறையை தடுத்து நிறுத்த கவனம் செலுத்துவதோடு பெண்கள் குறித்து ஆண்களின் அணுகுமுறையை மாற்ற கருத்தரங்கு கள், பயிலரங்கம் போன்றவற்றை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது குடும்ப வன்முறை என்பது கேரளாவில் குறை வாக உள்ளது. ஆனால் 30 விழுக்காட்டிற்கும் அதிக மான பெண்கள் கேரளாவில் குடும்ப வன்முறைக்கு இலக்காகிறார்கள். இந்த வன்முறைக்கு எதிராகவும் அரசு தீட்டியுள்ள சட்டங்கள் குறித்தும் ஊடகம், திரைப் படம், குறும்படம், சமூக ஊடகம் வாயிலாக விழிப் புணர்வு பிரச்சாரம் அரசு சார்பில் செய்யப்படுகிறது.
“இனிவேண்டாம் வீட்டு வன்முறை’’
கேரளாவில் “இனிவேண்டாம் வீட்டு வன்முறை’’ என்ற மிகப்பெரிய பிரச்சாரம் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது. அரசியல் சார்பில்லாமல் பெண்களை திரட்டி இரவு நடைபயணம் ஒன்றை நடத்தினோம். இதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. எந்த நேரத்திலும்பெண்கள் அச்சம் இல்லாமல் சென்று வரமுடியும் என்ற நம்பிக்கையை விதைக்க இந்த முன்முயற்சியை மேற்கொண்டோம். பெண்களுக்கு சட்ட உதவி அளிக்க மாநிலம் முழுவதும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கு அனைத்து உதவிகளும் ஒரே இடத்தில் கிடைக்க வகைசெய்யும் ஒன் ஸ்டாப் சென்டர் எல்லா மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவிட் காலத்தில் குடும்ப வன்முறை அதிகரித்து காணப்பட்டது. இதுகுறித்து புகார் செய்ய சிறப்பு செயலி ஒன்றை நாங்கள் உருவாக்கினோம். பாதிக்கப் பட்ட பெண்கள் தகவல்களை அனுப்பினார்கள். அவர் களை தாக்குதல்களில் இருந்து காப்பாற்றினோம். இதனால் பல பெண்கள் தற்கொலை செய்யும் எண்ணத்தை கைவிட்டனர். பெண்களை கொல்ல இருந்தவர்கள் மாறினர். இவை அனைத்தும் அரசு சார்பில் செய்யப்பட்டாலும் பொதுவாக பெண்கள் மீதான சமூகப்பார்வையை மாற்றுவதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம்.
பெண்களை பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும் இந்த சட்டங்களை எப்படி பயன்படுத்தவேண்டும் என்ற விழிப்புணர்வு பெண்களிடம் ஏற்படாமல் அவர்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. எனவே இதுகுறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் இடது ஜனநாயக முன்னணி அரசு பெண்களிடத்தில் கொண்டு சென்றுள்ளது. பெண்களை அதிகாரப்படுத்தவும் அவர்களுக் கான நியாயமான உரிமைகள் கிடைப்பதை உறுதிப் படுத்தவும் நிலப்புரபுத்துவ கலாச்சாரத்தையும் முத லாளித்துவ நுகர்வு கலாச்சாரத்தையும் எதிர்த்து தொடர்ந்து போராடவேண்டியுள்ளது. சமூகத்தில் இடது சாரி சிந்தனையும் சோசலிச சிந்தனையும் அதிகரிக்கும் போதுதான் பெண்களுக்கு எதிரான வன்முறை குறையும். இந்தியா ஜனநாயக சோசலிச மதச்சார் பற்ற குடியரசு என்று நமது அரசியல் சாசனத்தின் முக வரையில் எழுதப்பட்டுள்ளது. ஜனநாயகம் என்றால் எல்லோருக்கும் சமவாய்ப்பை அளிப்பது. சோசலிசம் என்பது உண்மையான ஜனநாயகத்தை குறிக்கிறது. இந்த சமூகம் சோசலிச சமூகமாக மாறாத வரை பெண்களுக்கு முழுச்சுதந்திரம் என்பது கனவாகவே இருக்கும். இவை அனைத்தையும் புரட்டிப்போடக் கூடிய புரட்சி நாட்டில் நடக்கத்தான் போகிறது.