articles

img

மிக மோசமடைந்திருக்கும் பொருளாதார மந்த நிலைமை

அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அளிக்கப்பட்டிருக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தொடர்பான புள்ளி விவரங்கள் சந்தேகத்திற்குரியனவாகும். ஏனெனில், இந்தக் கணக்கீடு நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண்(CPI)ணிலிருந்து வெளி வரும் பணவீக்க விகிதத்தில் நான்கில் ஒரு பங்குகூட இல்லாத மறைமுக பணவீக்க விகிதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆயினும் இந்த தவறாக வடிவமைக்கப்பட்ட புள்ளி விவரத்தால் கூட நாட்டிலுள்ள பொருளாதார மந்த நிலைமையை மறைக்க முடியவில்லை. 2024-25க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளும் இதனை வெளிப் படுத்தியுள்ளன. 

திவால் நிலையின் அறிகுறிகள்

2025 நிதியாண்டிற்கான முன்கூட்டிய மதிப்பீடுகள், இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை 6.4 விழுக்காடாகக் கணித்துள்ளது. முந்தைய ஆண்டு இது 8.2 விழுக்காடாக இருந்ததுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். முன்னதாக, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டுக்கான வளர்ச்சி விகிதம் 5.4 விழுக்காடாக இருந்தது. இந்தியா உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடு என்றும், 2027ஆம் ஆண்டுக்குள் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளா தாரம் உள்ள நாடாக மாறும் என்று பேசப்பட்டாலும், களத்தில் உள்ள எதார்த்த நிலைமைகள் முற்றிலும் வேறுபட்டவையாகும். வேலையின்மை, அதிக உணவுப் பணவீக்கம், குறைந்த தனியார் முதலீடு, தேக்கமடைந்த நுகர்வோர் செலவு, அதிகரித்து வரும் சிறு சில்லரைக் கடன் தவணைகள் மற்றும் உற்பத்தி வீழ்ச்சி ஆகியவை அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளின் திவால் நிலையின் அறிகுறிகளாகும்.

வாங்கும் சக்தி இல்லாததே

பொருளாதார மந்தநிலை தொடர்வதற்கு முக்கியக் காரணம், பொரு ளாதாரத்தில் தேவை இல்லாததுதான். மிகக் குறைந்த வருவாய் காரணமாக மக்களுக்கு போதுமான வாங்கும் சக்தி இல்லாததே இதற்குக் காரணம். சமீபத்தில் வெளியிடப்பட்ட 2023-24ஆம் ஆண்டிற்கான வீட்டு நுகர்வோர் செலவினத் தரவு, நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் சராசரி மாதச் செலவு கிராமப்புறங்களில் ரூ.8,079ஆகவும், நகர்ப்புறங்களில் ரூ.14,528 ஆகவும் இருக்கும் என்பதைக் காட்டுகிறது. அதிகரித்து வரும் வேலை யின்மை மற்றும் பண வீக்கத்தால் இது அதிகரிக்கிறது. இவை இரண்டும் வருவாயை மேலும் அரிக்கின்றன. பலவீனமான தேவை உற்பத்தியைப் பாதிக்கிறது. புதிய முதலீடுகள் மூலம் உற்பத்தித் திறன்களை விரிவு படுத்துவதில் ஆர்வம் இல்லாமல் செய்துவிடுகிறது.

ரூபாய் மதிப்பு சரிவும் அதிகரிக்கும் சிக்கலும்

மறுபுறம், இந்த நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தில் நாட்டிற்குள் நிகர அந்நிய நேரடி முதலீடு (FDI) 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. வெளியேறும் நிதியைப் பொறுத்தவரை, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டிலிருந்து வெளியே எடுக்கும் நிதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்திய நிறுவனங்கள் வெளிநாடுக ளில் முதலீடு செய்யத் தொடங்கியிருப்பதன் காரணத்தால் அதிகரித்தி ருக்கிறது. இந்திய நிறுவனங்கள் உள்நாட்டை விட வெளிநாட்டில் முதலீடு செய்வதையே மிகவும் கவர்ச்சிகரமானதாகக் கருதுகின்றன. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 86 ரூபாயாக சரிந்திருப்ப தும், இறக்குமதிகளை அதிகப்படுத்துவதும் பணவீக்கத்தை அதிகரித்து, ஏற்கனவே உள்ள சிக்கல்களை மேலும் அதிகரிக்கப் போகிறது.

ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு

பெரு வர்த்தக நிறுவனங்களுக்கு சாதகமான ஆட்சியாளர்களின் கொள்கைகள் மக்கள் மத்தியிலான ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்தி ருக்கின்றன. இது தனியார் துறை முதலீட்டையும் வளர்ச்சியையும் பாதித்துக்கொண்டிருக்கிறது. நாட்டில் 2023ஆம் ஆண்டில் 157 பில்லி யனர்கள் இருந்த நிலையில் 2024ஆம் ஆண்டில் அவர்களின் எண்ணிக்கை 201ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் ஒருங்கிணைந்த செல்வத்தின் மதிப்பு முதன்முறையாக 1 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியிருக்கிறது. மக்கள் மத்தியில் குறைந்த வருமானம், அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் வேலையின்மை அதிகரித்துக் கொண்டிருப்பது என மக்கள் மத்தி யில் சுமைகள் தொடர்ந்து அதிகரித்து, இவ்வாறு பொருளாதார நெருக்கடி விரிவடைந்துகொண்டிருக்கக்கூடிய நிலையில் அதனை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் ஆட்சியாளர்கள் தத்தளித்துக் கொண்டி ருக்கிறார்கள்.

மங்கலான வாய்ப்புகள்

மோடி அரசாங்கத்தின் கடந்த கால வரலாற்றைக் கருத்தில் கொண்டு பார்த்தோமானால், வரவிருக்கும் 2025-26ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டிலும் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வரும் அதே பரிந்துரை கள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.  பெருநிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் மீது வரிகளை உயர்த்தவும், உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத்தில் பொது முதலீட்டை விரிவுபடுத்தவும், நுண்ணிய சிறு நடுத்தரத் தொழில்களை (MSMEகளை) ஊக்குவிக்கவும், தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ள சமூகத் துறைக்கான அரசு செலவினங்களை அதிகரிக்கவும் அரசாங்கம் தயாராக இல்லாவிட்டால், பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மங்கலாகவே இருந்திடும். ஜனவரி 15, 2025  தமிழில் : ச.வீரமணி