புதிய நாடாளுமன்ற கட்டடம் மே 28 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளது. ஒரு மரியாதைக்கு கூட இந்த விழாவில், நாட்டின் முதல் குடிமகளான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் முன்னிறுத்தப்படவில்லை. நானே ராஜா, நானே மந்திரி என்ற எதேச்சதிகாரப் போக்குடன் புதிய நாடாளுமன்றத்தை மோடியே திறந்து வைக்கிறார். நாடாளுமன்றத்தின் தலைவர் குடியரசுத் தலைவர்தான் என்று இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 76 உறுதி செய்திருக்கிறது. ஆனால் குடியரசுத் தலைவரின் மாண்புமிக்க பதவியினை ஒன்றிய பாஜக அரசு இந்த விவகாரத்தில் இழிவுபடுத்தியுள்ளது. இதற்கு எதிராக 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக நாடாளுமன்ற திறப்புவிழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
மன்னராட்சியின் மிச்சசொச்சம்
இது ஒருபுறமிருக்க, மன்னராட்சி காலத்து மிச்சசொச்சங்களையெல்லாம் இந்த விழாவின் மூலம் முன்னிறுத்தி, மக்களாட்சியின் மாண்புகளை மன்னராட்சிக் காலத்தை நோக்கி வளைப்பதற்கு ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான், புதிய நாடாளு மன்றத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே செங்கோல் நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி. சோழர்கள் கால மரபின் அடிப்படையில், நாடு விடுதலையடைந்த போது தமிழ்நாட்டின் திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். எண்ணற்ற மக்கள் பிரச்சனைகள் எரிந்து கொண்டிருக்கும் நிலையில், அவற்றை திசைதிருப்பும் நோக்கத்துடன் இந்த செங்கோல் விவகாரத்தை அமித்ஷாவும் பாஜகவினரும் முன்னிறுத்தியிருக்கிறார்கள். உண்மையில், பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியர்கள் வசம் ஆட்சி மாற்றம் நடந்ததற்கான அடையாளமாக இந்த செங்கோல் பிரதமர் நேருவிடம் வழங்கப்பட்டது என்றும், இந்திய மரபில் ஒரு மன்னரிடமிருந்து இன்னொரு மன்னருக்கு ஆட்சி மாற்றித்தரப்படும் போது அதை அடையாளப்படுத்தும் விதமாக இப்படி செங்கோல் வழங்கப்படுவது வழக்கம் என்றும், சோழர் கால மரபின்படி திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்டது என்றும், அந்த செங்கோல் பாதுகாக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நாடாளு மன்றத்தில் வைக்கப்படுகிறது என்றும் பாஜகவினர் கதைகளை அவிழ்த்து விட்டுள்ளனர். அந்தக் கதைகள் ஊடகங்கள் வாயிலாக தீவிரமாக பரப்பப் பட்டுள்ளன.
அவர்களது வாதப்படியே பார்த்தாலும் கூட இப்போது மன்னராட்சி எதுவும் நடக்கவில்லை; ஒரு மன்னரிடமிருந்து இன்னொரு மன்னருக்கு ஆட்சி மாற்றப்பட்டு முடிசூடப்படவும் இல்லை. அதுமட்டுமல்ல, ஜவஹர்லால் நேருவிடம், ஆட்சி மாற்றத்தின் அடையாளமாகத்தான் செங்கோல் வழங்கப்பட்டது என்று வைத்துக் கொண்டாலும் கூட, அது பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திட மிருந்து மாபெரும் போராட்டங்களின் விளைவாக இந்திய மக்களின் கைகளுக்கு நடந்த ஆட்சி மாற்றம். ஆனால் இப்போது அந்த மாபெரும் இந்தியக் குடியரசு ஆட்சி தானே நடந்து கொண்டிருக்கிறது; வேறு வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரலாம்; அதன் பொருள் இங்கே ஆட்சி புரியும் கட்சிகள் மாறுகின்றன என்பதுதானே தவிர, இந்திய குடியரசின் ஆட்சி மாறவில்லை. எனவே இப்போது செங்கோல் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. இதுஒருபுறமிருக்க, நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ளதாக கூறப்படும் செங்கோலைப் பற்றி பாஜக ஆட்சியாளர்கள் அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகள் முற்றிலும் உண்மைக்கு மாறானவையாக உள்ளன.
ஆளுநர் எழுதிக் கொடுத்த கதையா?
இந்தியாவின் 75ஆம் ஆண்டு சுதந்திரத் தினத்தையொட்டி 2022 ஆகஸ்டில் திருவாவடுதுறை ஆதீனம், “துறைசைச் செங்கோலும் இந்திய சுதந்திரமும்” என்ற சிறுநூலை வெளியிட்டுள்ளது. அந்த நூல், 1947ல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் செங்கோல் வழங்கப்பட்ட விபரத்தை இவ்வாறு விவரிக்கிறது: “இந்தியாவின் கடைசி ஆளுநராக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபு, நேருவை அழைத்து, இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம், அதை எப்படி அடையாளப்படுத்துவது என்று கேட்க, குழப்பமடைந்த நேரு, உடனடியாக பதில் கூறவில்லை.
அடுத்து மூதறிஞர் ராஜாஜியை அணுகி, இதற்கு நீங்கள்தான் தீர்வு சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். உடனே ராஜாஜி, ‘கவலை வேண்டாம், தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சி மாற்றம் செய்யும் போது ராஜகுருவாக இருப்பவர் செங்கோலை புதிய மன்னருக்கு கொடுத்து ஆசீர்வதிப்பார்; அதுபோல நாமும் மகான் ஒருவர் மூலம் செங்கோல் பெற்று ஆட்சி மாற்றம் அடையலாம்’ என்று கூறியுள்ளார். அப்போது இந்தியாவின் சைவ மடங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீன மடத்தின் 20வது குருமகா சன்னிதான மாக அருளாட்சி புரிந்த ஸ்ரீஅம்பலவாண தேசிக மூர்த்திகளை (1937-1951) தொடர்புகொண்ட ராஜாஜி, ஆட்சி மாற்றத்திற்கான புண்ணிய சடங்குகளை செய்துதர பணிவுடன் கேட்டுக்கொண்டார்”. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் பிரபலமாக விளங்கிய உம்மிடி பங்காரு செட்டியார் நகைக்கடையில் சைவச் சின்னமாகிய ரிஷபம் (நந்தி) அமர்ந்த நிலையில் தங்கச் செங்கோல் தயாரிக்கப்பட்டு, ராஜாஜியின் ஏற்பாட்டில் தனி விமானத்தில் ஒரு குழுவினர் சென்று, சுதந்திரம் பெறும் சமயத்தில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் முன்னிலையில் ராஜாஜி, பண்டிட் ஜவஹர்லால் நேரு, தியாகி கள் மற்றும் உயர் அதிகாரிகள் யாவரும் புடைசூழ, 1947 ஆகஸ்ட் 14 இரவு 11.45 மணிக்கு, மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் தங்கச்செங்கோலை கொடுத்து வாங்கி அதன் மீது புனித நீர் தெளித்து, இறைவனின் திருப்பெயரை உச்சரித்து ஆட்சிப் பொறுப்பினை ஏற்கவுள்ள பண்டிட் ஜவஹர்லால்நேருவிடம் ஒப்படைத்தார்கள் என்றும் அந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது முற்றிலும் கட்டுக்கதை. இந்தக் கட்டுக்கதையே ஆர்எஸ்எஸ் - பாஜகவினரால்தான் உருவாக்கப் பட்டது தான் என்ற சந்தேகம் எழுகிறது.
ஏனென்றால் இதே நூலின் ஏழாம் பக்கத்தில், “2022 ஏப்ரல் 19 அன்று திருவாவடுதுறை ஆதீனம் தலைமை மடத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வந்திருந்து, ஸ்ரீலஸ்ரீ 24வது குருமகா சன்னிதானம் அவர்களைச் சந்தித்து சுதந்திரச் செங்கோல் சிறப்பினைப் பற்றி கேட்டறிந்து சென்றார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநர் ரவி வந்து, செங்கோலைப் பற்றி என்ன சொல்ல வேண்டும் என சொல்லிச் சென்றாரோ அதை அப்படியே நூலாக வெளியிட்டிருக்கிறார்கள் என்று கருத இடமுள்ளது. ஏனெனில், அதைத்தான் இப்போது அமித்ஷாவும், ஆர்எஸ்எஸ் பாஜக ஊதுகுழல்களும் பரப்பி வருகிறார்கள்.
மவுண்ட்பேட்டன் எங்கு இருந்தார்?
இவர்களது கூற்றுப்படி, உண்மையில் 1947 ஆகஸ்ட் 14 அன்று இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்ததாக வரலாற்றுப் பதிவுகள் எதுவும் இல்லை. திருவாவடுதுறை ஆதீனமே வெளியிட்டுள்ள அந்த நூலிலும் கூட மேற்கண்ட காட்சிகள் வருவதுபோல எந்தப் புகைப்படமும் இடம்பெறவில்லை. அதிகா ரப்பூர்வ செய்திகளோ, பத்திரிகைச் செய்திகளோ இடம்பெறவில்லை. அப்படி நடந்திருந்தால், அதுவே, பிரதானச் செய்தியாக காட்சியாக மாறியிருக்கும். மாறாக, வரலாற்று ஆவணங்களில், ஆதீ னத்தைச் சேர்ந்தவர்கள் நேருவிடம் செங்கோல் அளிக்கும் புகைப்படங்கள் உள்ளனவே தவிர, மவுண்ட்பேட்டனிடம் செங்கோலை அளித்து, திரும்பப் பெறுவது போன்ற புகைப்படங்கள் இல்லை. அன்றைய தினம் உண்மையில் மவுண்ட்பேட்டன் எங்கு இருந்தார் என்ற தகவல் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக வி.பி.மேனனின் “The Transfer of Power in India” என்ற நூல், அதிகார மாற்றம் நடந்த தருணங்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறது.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சுதந்திரம் வழங்கப்பட இருந்த ஆகஸ்ட் 14-15 தேதிகளில் வைஸ்ராய் மவுண்ட்பேட்டனின் நிகழ்ச்சி நிரல் என்ன என்பது 1947 ஜூலை 10 அன்றே முடிவு செய்யப்பட்டுவிட்டது. பிரிட்டனின் சதாப்டன் பல்கலைக் கழகத்தில் வைக்கப்பட்டுள்ள இதுதொடர்பான மவுண்ட்பேட்டன் பிரபு ஆவணங்களின்படி, ஆகஸ்ட் 14 காலை 8 மணிக்கு தில்லியிலிருந்து புறப்பட்டு, 11.30க்கு கராச்சியை அடைந்தார்; பாகிஸ்தானின் முதல் சுதந்திர தினத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.00 மணிக்குத்தான் தில்லி வந்தடைந்துள்ளார். அதன்பிறகு ஆகஸ்ட் 15 காலை 10 மணிக்குத்தான் இந்திய சுதந்திர தினத்திற்கான அவரது நிகழ்ச்சிநிரல் இடம்பெறுகிறது. இடையில் இரவு 11.45 மணிக்கு செங்கோலைப் பெற்று புனிதநீர் தெளித்து நேருவிடம் கொடுத்ததாக வரலாற்றுத் தகவலே இல்லை. அதிகாரம் பிரிட்டனிடமிருந்து இந்தியர்களிடம் கைமாறும் நிகழ்வின் உண்மையான அடையாளம், நள்ளிரவில் பிரிட்டனின் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு, இந்தி யாவின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டதும், நாடெங்கி லும் விடிய விடிய மக்களின் பேரெழுச்சியும் பெரும் உற்சாகத்துடனும் கூடிய கொண்டாட்டங்களும் மட்டுமே.
‘டைம்’ ஏடு வர்ணனை
ஆதீன மடத்தைச் சேர்ந்தவர்கள் நேருவைச் சந்தித்து மரியாதை நிமித்தமாக செங்கோலை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் என்பது அரசின் அதிகாரப்பூர்வ ஆட்சி மாற்ற நிகழ்ச்சி நிரல் அல்ல; ஆட்சி மாற்றத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முற்றிலும் நேருவின் வீட்டில் நடந்த மரியாதை நிமித்தமான ஒரு நிகழ்வு மட்டுமே. இதுதொடர்பாக 1947 ஆகஸ்ட் 25ஆம் தேதியிட்ட - நியூயார்க்கில் இருந்து வெளியாகிற டைம் இதழ் பின்வருமாறு விவரிக்கிறது: “தென்னிந்தியாவின் தஞ்சாவூரில் இருந்த ஒரு மடத்தின் தலைவரான ஸ்ரீஅம்பலவாண தேசிகரின் இரண்டு தூதர்கள் வந்திருந்தார்கள். இந்தியர்க ளின் உண்மையான அரசின் முதல் தலைவரான ஜவஹர்லால் நேரு, பழங்கால இந்திய அரசர்களைப் போல இந்து புனித துறவிகளிடமிருந்து அதிகாரத்தின் சின்னத்தைப் பெற வேண்டுமென அம்பலவாண தேசிகர் கருதினார். அந்தத் தூதர்களுடன் நாதஸ்வர வித்வான் ஒருவரும்(டி.கே.இராஜரத்தினம்பிள்ளை)வந்திருந்தார். ஒரு பழைய போர்டு காரில் ஆகஸ்ட் 14 அன்று மாலை நேருவின் வீட்டை நோக்கி அவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டனர். அப்படிச் செல்லும் போது ஒவ்வொரு 100 அடிக்கும் இடையில் நின்று சுமார் 15 நிமிடங்கள் நாதஸ்வரத்தை வாசித்தார். மற்றொருவர் ஒரு பெரிய வெள்ளித் தட்டை தாங்கி வந்தார். அந்த வெள்ளித் தட்டில் ஜரிகையுடன் கூடிய பீதாம்பரம் இருந்தது.
இறுதியில் நேருவின் வீட்டை அடைந்தவுடன் நாதஸ்வர வித்வான் நாதஸ்வரத்தை வாசிக்க ஆரம்பித்தார். மற்றவர்கள் நேருவின் அழைப்பிற்காக காத்திருந்தார்கள். பிறகு அவர்கள் அந்த வீட்டினுள் நுழைந்தார்கள். அப்போது அவர்களுக்கு மானின் ரோமத்தால் செய்யப்பட்ட விசிறியைக் கொண்டு வீசினார்கள். ஒரு சன்னியாசியிடம் 5அடி உயரமுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட 2 அங்குலம் கனமான செங்கோல் இருந்தது. தஞ்சாவூரில் இருந்து எடுத்து வந்த புனிதநீரை நேருவின் தலையில் ஒருவர் தெளித்தார். நேருவின் நெற்றியில் விபூதி பூசப்பட்டது. நேரு வுக்கு பீதாம்பரத்தை போர்த்தி, செங்கோலை அவர்கள் வழங்கினார்கள். அன்று காலையில் நடராஜ ருக்கு படைக்கப்பட்டு, விமானத்தில் கொண்டு வரப்பட்ட பிரசாதமும் அவருக்கு வழங்கப்பட்டது” என விவரிக்கிறது டைம் ஏடு. இதுதான் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது தொடர்பான மிகத்துல்லியமான நிகழ்வுகளை விவரித்துள்ள வரலாற்றுச் செய்தி. மாறாக, இப்போது ஆர்எஸ்எஸ் - பாஜகவினரால் அவிழ்த்து விடப்பட்டிருப்பது அப்பட்டமான கட்டுக்கதையே ஆகும்.
அரசியல் சாசனமே அதிகாரம் வாய்ந்தது
இந்தியாவில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு; காலனி ஆதிக்க ஆட்சியும் மக்களின் எழுச்சியால் தூக்கியெறியப்பட்டு, குடியாட்சியே 75 ஆண்டுகாலமாக கோலோச்சி வருகிறது. இந்தியக் குடிகளின் ஆட்சி யில் எந்தவொரு தனிநபரின் செங்கோலுக்கும் இட மில்லை. குடியரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் சாச னமே நாடாளுமன்றத்தின் மையத்தில் வீற்றிருக்க வேண்டுமே தவிர, மன்னர்களையும் மத குருக்களையும் புனிதப்படுத்தும் ‘செங்கோல்’ அல்ல.