articles

img

ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பு அபாய கட்டத்தில் புதுச்சேரி - வெ.பெருமாள்

யூனியன் பிரதேசங்களாக இருந்த  பல மாநிலங்கள் மாநில அந்தஸ்து பெற்றுவிட்டன. சட்டப்பேரவை அமைந்து 59 ஆண்டுகளாகியும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை. ஒன்றிய ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அடிமைப் பிரதேசமாக புதுச்சேரியை பார்ப்பதாக தோன்றுகிறது. 

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் -பாஜக கூட்டணி அரசு 26.08.2021ல் தனது முதல் வரவு - செலவு திட்டத்தை தாக்கல் செய்தது. ரூ.9924.41 கோடி வரவு செலவு திடத்தில் 1684.41 கோடி (16%க்கும் மேல்) பற்றாக்குறை. இதை வெளிச் சந்தையில் கடன் பெற்று ஈடு செய்யவும் முன்மொழி யப்பட்டுள்ளது. மாநிலத்தில் என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால் தாராளமாக நிதி உதவி கிடைக்கும், வளர்ச்சி திட்டங்களை செயல் படுத்த முடியும் என்ற தேர்தல் வாக்குறுதி பட்ஜெட்டில் பிரதிபலிக்கவில்லை. மாநில அரசு கோரிய 11000 கோடி வரவு செலவு திட்ட அறிக்கைக்கு ஒன்றிய அரசு அனுமதிக்கவில்லை. மாறாக வழக்கமான 10% உயர்வு டன் கூடுதலாக 24 கோடி (1.25%) வழங்கி ஒப்புதல் வழங்கி யுள்ளது. ஒன்றிய பாஜக அரசு திட்டம் மற்றும் திட்டம் சாராத செலவினத்தை நீக்கி நடைமுறை செலவு மற்றும் மூலதன செலவாக பட்ஜெட் உள்ளடக்கத்தை 01.04.2008 முதல் மாற்றியமைத்தது. நடப்பு (2021-22) பட்ஜெட் தொகை ரூ.9924.4 கோடி யில் அரசு ஊழியர்கள் சம்பளம் 2140 கோடி (21.58%), ஓய்வூதியம் 1050 கோடி (10.58%), மின்சார கொள்முதல் 1591 கோடி (16.03%), கடன் மற்றும் வட்டி திரும்ப செலுத்து தல் 1715 கோடி (17.25%), முதியோர் ஓய்வூதியம் மற்றும் பிற நலத்திட்டங்கள் ரூ.1290 கோடி (12.52%), பொ துத்துறை, தன்னாட்சி, கூட்டுறவு நிறுவனங்களுக்கு 1243 கோடி (12.52%) என 9029 கோடி நடைமுறை மற்றும் ஒப்புக் கொள்ளப்பட்ட செலவீனங்கள். மீதமுள்ள ரூ. 895 கோடி தான் இதர திட்டங்களுக் கானது. 

மாநில வருவாய் மதிப்பீடு அதீதமானது

மாநிலத்தின் சொந்த நிதி வருவாய் ரூ.6190 கோடி என இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் வருவாய் மதிப்பீடு அதீதமானதும், அடிப்படை யற்றதுமாகும். முந்தைய அரசின் நிதி வருவாய் 2019-2020இல் ரூ.5435 கோடி ஆகவும், 2020-2021இல் ரூ.5267 கோடியாகவும் இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்தது. 2019-2020 சொந்த நிதி வருவாய் இலக்கு கொரோனா பேரிடருக்கு முந்தையதாகும். அரசின் புள்ளி விவரப்படி கோவிட் 19க்கு முந்தைய ஜிஎஸ்டி வருவாய் 2019 மார்ச்-ஆகஸ்ட் வரை ரூ.154.6 கோடியாகவும், 2020 மார்ச் - ஆகஸ்ட் வரையிலான கோவிட் காலத்தில் ரூ.106 கோடியாகவும் உள்ளன. தற்போதும் சமூக பொருளாதார நிலைகளில் பெரிய முன்னேற்றம் இல்லை. கூடுதலாக சுமார் ரூ.1000 கோடி மாநில வருவாய் திரட்ட முடியும் என்பது கற்ப னைக்கும் அப்பாற்பட்டது.

இதன் விளைவாக புதிய சிக்கலை மாநிலம் சந்திக்கும் ஆபத்து உள்ளது. ஒன்றிய அரசு வழங்கி வரும் 30% மானியம் நிபந்த னைக்குட்பட்டதாகும். அதாவது புதுச்சேரி அரசின் கூடுதல் நிதி ஆதாரத் திரட்டலைப் பொறுத்தே ஒன்றிய அரசின் மானியம் வழங்கப்படும். மாநில அரசின் சொந்த நிதி ஆதாரத்தை திரட்டும் திறன் குறைந்தால் அதற்கு இணங்க ஒன்றிய அரசின் 30 விழுக்காடு மானிய உதவி நிதியில் குறைவு ஏற்படும். ஒன்றிய அரசின் மானியம் 30% என மாற்றியமைக்கப்பட்ட பின் 30 விழுக்காடு முழு மானியம் கடந்த காலங்க ளில் பெறப்படவில்லை. நடப்பு பட்ஜெட்டில் மாநில பேரிடர் நிவாரண நிதி ரூ.5 கோடி நீங்கலாக, ஒன்றிய அரசின் நிதி உதவி ரூ.17245.77 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்படு கிறது. மாநிலத்தின் சொந்த நிதி திரட்டல் ரூ.6190 கோடியில் குறைவு ஏற்பட்டால், ஒன்றிய அரசின் மானியத் தொகையும் குறையும். இதன் விளைவு வரவு-செலவுக்குமான இடைவெளி அதிகரித்து, அறிவிக்கப்பட்ட சில திட்டங்கள் கைவிடப்படும் நிலை உருவாகும். பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக மாநில வளர்ச்சி, மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படும்.

கடன் வலையில் புதுச்சேரி

இந்திய அரசு புதுச்சேரி உள்ளிட்ட பிரதேசங்க ளுக்கு திட்ட செலவீனத்தில் 90% மானியம், 10% கடனாக வழங்கி வந்தது. 1980களில் ஏற்பட்ட பொரு ளாதார நெருக்கடி, நவீன தாராளமயக் கொள்கை அமலாக்கத்தை தொடர்ந்து நிதி கொள்கையை மாற்றியமைத்தது. இந்திய அரசின் மானியம் 70% கடன் 30% ஆக மாற்றியமைக்கப்பட்டது. 1990களில் திட்டச் செலவில் 50% இந்திய அரசின் மானியமாக வழங் கப்பட்டது. (அட்டவணையில் உள்ளபடி) இதைத் தொடர்ந்து மானிய உதவி 30% ஆகவும், கடன் உதவி 70% எனவும் மாற்றியமைத்தது. குதிரை கீழே தள்ளியதோடு குழி பறித்த கதையாக 12வது நிதிக்குழு (2007-2008) பரிந்துரையின்படி மாநி லங்களுக்கு கடன் வழங்கும் முறையை ஒன்றிய அரசு கைவிட்டது. இதில் யூனியன் பிரதேசங்களும் தப்பவில்லை. பொதுக்கணக்கு தொடங்கி வெளிச் சந்தையில் கடன் வாங்கிக் கொள்ள அறிவுறுத்தியது. இந்தப் பின்னணியில் 17.12.2007இல் புதுச்சேரிக்கு தனிப் பொதுக்கணக்கு துவங்கியபோதும் நில கடன் ரூ.2177 கோடிகளாகும். ஒன்றிய அரசு யூனியன் பிரதே சங்களுக்கு கடன் தள்ளுபடி செய்ய முன்வரவில்லை.  யூனியன் பிரதேசங்கள் சட்டம் 1963 பிரிவு 48-A இன் கீழ் வெளிக்கடன் பெற அனுமதிக்கப்பட்டன. இதனால் கூடுதல் வட்டிக்கு வெளிக்கடன் பெற வேண்டிய நிலைக்கு புதுச்சேரி தள்ளப்பட்டது. 2007-ல் ரூ.2177 கோடி ஆக இருந்த கடன் 14 ஆண்டுகளில் (31.03.2021 வரையில்) ரூ.9334.78 கோடியாக  வளர்ந்துள்ளது

மாநிலத்தின் வரவு-செலவு திட்ட மதிப்பீட்டை விஞ்சு மளவிற்கு மாநில கடன் தொகை அதிகரித்து வரு கிறது. ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையும், மாற்று வழிமுறைகளை கையாள மாநில  அரசுகள் தவறியதும் நிதி நெருக்கடிக்கு காரண மாகும்.  1991-ஆம் ஆண்டின் புதுச்சேரி மக்கள் தொகை 8,07,785 பேர். அன்றைய தேவையின் அடிப்படையில் மாநிலத்தின் வரவு-செலவு திட்ட மதிப்பீடு. ரூ.329.76 கோடியாக இருந்தது. இதில் ஒன்றிய அரசின் கொடை மற்றும் கடன் உதவி 50% ஆக இருந்தது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி வடிவத்தில் கூட்டாட்சியாக இருந்தபோதும் தன்மையில் இது பெரு மளவில் மையப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. நவீன தாராளமய அமலாக்கத்தில் ஒன்றிய அரசின் தலையீடுகள், மாநில அரசின் அதிகார வரம்புக்குள் அத்துமீறும் புதிய பரிமாணத்தை ஈட்டியுள்ளது.  இந்திய கூட்டாட்சி முறை சிதைப்பும், மாநில உரிமைகள் பறிப்பும் பாஜக ஆட்சியில் வேகம் எடுத்துள்ளன. ஜன நாயகத்தை உச்சரித்துக் கொண்டே சர்வாதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆடுகிறது ஒன்றிய அரசு. இது ஒற்றை தலைமை நோக்கிய நகர்வாகவே தென்படுகிறது 

ஒருபுறம் பொருளாதார மற்றும் மூலதன நட வடிக்கைகளில் இருந்து ஒன்றிய அரசு தன்னை விடு வித்துக் கொள்கிறது. மறுபுறத்தில் ஒன்றிய அரசிடமி ருந்து நிதி ஆதாரங்களைப் பெறுவதற்கு மாநிலங்க ளுக்கு நிபந்தனைகளை விதிக்கிறது. இதன் மூலம் ஊரை அடித்து உலையில் போடும் நவீன தாராளமய கொள்கைகளை நிறைவேற்ற முயல்கிறது. சமீபத்திய உதாரணம் கடந்தாண்டு ஒன்றிய நிதியமைச்சரின் கடன் நிபந்தனை அறிவிப்பாகும்.  கோவிட் 19 பேரிடரின் போது ஒன்றிய அரசு தேவையான நிதியை மாநிலங்களுக்கு வழங்க வில்லை. மாறாக மாநிலங்கள் 3.5 சதமானம் வரையில் நிபந்தனையின்றி கடன் பெறலாம். அதற்கு மேல் 5% வரையில் கடன் பெற 4 நிபந்தனைகளில் 3ஐ நிறைவேற்ற வேண்டும் என கட்டாயப்படுத்தியது. 1) ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு திட்டம், 2) மின்  விநியோகம் தனியாருக்கு அளிப்பது, விவசாயிக ளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்து மானியம் அளிப்பது, 3) வீடு உள்ளிட்ட சொத்துக்கள் மீது வரி உயர்த்துவது 4) குடிநீர், கழிவுநீர் உள்ளிட்ட சேவைக ளுக்கு வரி உயர்த்துவது போன்ற நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன. ஒன்றிய அரசின் நோக்கம் தெளிவானது. மாநில அதிகாரத்திற்குள் நுழைந்து அனைத்து சேவைகளையும் தனியாருக்கு மடைமாற்றம் செய்வது, நிதி வருவாய் பெருக்குவது என்ற நுண்ணிய செயல்திட்டம் கொண்டது. மாநிலங்கள் நிர்வாகம், சட்டம்- ஒழுங்கு, நீராதார மேம்பாடு, சுகாதாரம், கல்வி, அடிப்படை கூட்ட மைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட மிகப்பெரும் செலவீனங்களை சுமக்கின்றன. நிதிக்குழுவின் நிபந்தனைகள் மாநிலங்களை நிதிநெருக்கடிக்கு தள்ளி யுள்ளது. குறிப்பாக நிதிப்பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மை சட்டத்தின் மூலம் பட்ஜெட் பற்றாக்குறை மீது கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இது வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கவும் தடையாக உள்ளது. சிக்கனம் என்ற பெயரால் சமூகநலத் திட்டங்களை வெட்டி சுருக்க நிர்ப்பந்திக்கிறது.

நிதி நெருக்கடிக்கான காரணங்கள்...

நிதிக்குழுவின் வரம்புக்குள் புதுச்சேரி சேர்க்கப்பட வில்லை. இதனால் ஒன்றிய அரசின் வருவாயில் உரிய பங்கை பெற இயலவில்லை. 01.07.2017 முதல் பொருள் மற்றும் சேவை வரி (GST) அமலாக்கப்பட்டதால் எஞ்சியிருந்த மாநிலத்தின் நிதி ஆதாரங்கள் பறிக்கப்பட்டு விட்டன. மேலும் பொருள் உற்பத்தி மற்றும் சேவை தயாரிக்கிற இடத்திற்கு பதில் அது நுகரப்படும் இடத்தில் வரிவிதிக்கப்படு கிறது. இதனால் புதுச்சேரிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது ஜிஎஸ்டி வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்க ளுக்கு 2017 முதல் 2022 வரையில் 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. இக்காலத்தில் வருவாய்க்கு மாற்று ஏற்பாடுகளை செய்யத் தவறியதால் புதுச்சேரி நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும். மாநிலங்களுக்கு பிரித்து அளிக்கப்படும் வருவாய் தொகையில் ஒன்றிய அரசின் சர்சார்ஜ், கலால் விதிகள் அடங்குவதில்லை. இதனால் ஒட்டுமொத்த வரிவருவாயில் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்குகள் கிடைப்பதில்லை. 

புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் உள்ளாட்சி அமைப்பிற்கு ஒன்றிய அரசின் நிதியுதவி கிடைக்கப் பெறவில்லை.  ஒன்றிய அரசின் பங்களிப்பு திட்டங்களில், மாநிலங்களின் பங்களிப்புடன் கூடிய திட்டங்களாக அதாவது 60:40 விகிதத்தில் மாற்றப் பட்டுள்ளன. இவ்வாறாக புதுச்சேரி மாநிலம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் புதிய வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த இயலவில்லை. மக்களின் வருவாய் ஆதரவு திட்டங்களான பொது விநியோகத் திட்டம், அனைவருக்கும் தரமான இலவச மருத்துவம்; உள்ளிட்டவற்றை செயல்படுத்த இயலவில்லை. நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் (FMRB) வரவுக்கு ஏற்ப செலவிடு என்கிறது. ஏழ்மையும், ஏற்றத் தாழ்வுகளும் நீடிக்கிற போது வரவு – செலவுக்கு ஏற்ப திட்டம் என்பது சமூக அநீதியாகும். ஆகவே, இந்திய கூட்டாட்சி முறையை வலுப்படுத்துவதும், மாநிலங்க ளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்குவதுமே தீர்வாகும். 

யூனியன் பிரதேசங்களாக இருந்த பல மாநி லங்கள் மாநில அந்தஸ்து பெற்றுவிட்டன. சட்டப் பேரவை அமைந்து 59 ஆண்டுகளாகியும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை. ஒன்றிய ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அடிமைப் பிரதேசமாக புதுச்சேரியை பார்ப்பதாக தோன்றுகிறது. மாநிலத்தின் வரவு-செலவு திட்டம், சட்டம்-திட்டம், பணி நியமனம் என அனைத்திற்கும் ஒன்றிய அரசின் அனுமதிக்காக காத்துக் கிடக்க வேண்டி யுள்ளது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்கள் வாழ்நிலை மிகக் கடுமையாக பாதித்துள்ளன.  புதுச்சேரி மாநிலம் நிதி நெருக்கடி மற்றும் சமூக பொருளாதார பின்னடைவில் இருந்து மீள வேண்டுமெனில் ஒன்றிய அரசின் கொள்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கு ஒன்றிய பாஜக அரசு அதிகாரத்தில் இருந்து வெளியேறுவதும், மாற்றுப் பொ ருளாதார கொள்கை கொண்ட அரசு அமைவதுமே தீர்வாகும். இதன் வழியாக ஒன்றிய, மாநில உறவுகள் மறுசீரமைப்பதும், மாநிலங்களுக்கு கூடுதல் அதி காரங்கள் வழங்குவதும் சாத்தியமாகும்.  புதுச்சேரி மாநில மக்கள் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பொருளாதார கொள்கைக்கு எதிராக போராட முன்வர வேண்டும். மேலும் மக்கள் வாழ்க்கைத் தரம் மேம்படவும், சமூக, பொருளாதார, ஏற்றத் தாழ்வு களை மட்டுப்படுத்தவுமான மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த முடியும்.

கட்டுரையாளர்: தமிழ் மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
 

 

;