articles

img

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆவணக் காப்பகம்

என்.ஆர். என்று தோழர்களால் அன்புடன் அழைக்கப்படும் மார்க்சிஸ்ட் எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் 1942ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் தேதியன்று பொறியாளர் எஸ். நரசிம்மன்-ராமானுஜம் தம்பதியரின் புதல்வனாகப் பிறந்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்த அவர் அவருடைய தாயாராலும், மூத்த சகோதர, சகோதரி களாலும் வளர்க்கப்பட்டார். அவருடைய மூத்த சகோதரர்களில் ஒருவர் தோழர் என்.சங்கரய்யா. எஸ்எஸ்எல்சி வகுப்பில் தேறியபின் என்.சி.பி.எச்- நிறுவனத்தில் சுமார் 6மாத காலம் விற்பனை யாளராகப் பணியாற்றினார். பின்னர் ‘ஜனசக்தி’ நாளிதழின் உதவி நிருபராக செயல்பட்டார். இச் சமயத்தில் தான்என்.ஆருக்கு ஜனசக்தி ஆசிரியர் தோழர் ஜீவாவுடன் நல்ல  பழக்கம் ஏற்பட்டது. அவர் மதுரைக்கு வந்தால்அவருடைய நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைத்துப் போவது, அவர் பேச்சைக் குறித்து அனுப்புவது, அவர் மதுரையிலிருந்து செல்லும் வரை உடனிருந்து அனுப்பி வைப்பது போன்றவற்றை என்.ஆர். செய்தார். 

1961ஆம் ஆண்டில் என்.ஆர். சென்னையில் ஜனசக்தி நாளிதழில் எழுத்தராகச் சேர்ந்தார். பின்னர் காசாளராக்கப்பட்டார்.  1962ஆம் ஆண்டில் என்.ஆர்.ஜனசக்தியின் `செய்திக் களஞ்சிய’ பொறுப்பாளராக்கப்பட்டார். ஜனசக்தி ஆசிரியர் ஜீவா, பொறுப்பாசிரியர் கே. முத்தையா ஆகியோர். ஆசிரியர் குழுவில் இலங்கை கே. ராமநாதன், வி.ராதாகிருஷ்ணன், ஐ.மாயாண்டி பாரதி, மாஜினி, சோலை, நாவலாசிரியர் டி.செல்வராஜ் போன்ற ஜாம்பவான்கள் இருந்தனர். அவர்களின் வார பரிசீலனை கூட்டத்தில் என்.ஆரும் பங்கேற்பார். அங்கு நடத்தப்படும் விவாதங்களை அவர் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்வார். 

தில்லியில் 15 ஆண்டுகள்

1968 ஆம் ஆண்டின் இறுதியில் தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற அலுவலகக் குழுவின் முழு நேர ஊழியர்களாயிருந்த தோழர் ஹரிசிங்கும், எஸ்.குமாரும் களப்பணிக்குச் செல்ல விரும்பியதால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர் 1969ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி இப்பணியில் சேர்ந்தார். அச்சமயத்தில் அவருக்கு ஆங்கிலம் நன்றாகப் புரியும். ஆனால் எழுதவோ, பேசவோ தெரியாது. அவர் சுயமுயற்சியால் அடுத்த 6 மாதத்திற்குள் ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும், பேசவும் கற்றுக்கொண்டார். தினமும் ஏராளமான பக்கங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய வேண்டும்.  அச்சமயத்தில் கட்சியின் மத்தியக்குழு அலுவல கம் கல்கத்தாவில் இருந்தது. தில்லி நாடாளுமன்ற கட்சி அலுவலகம் அதன் கிளை அலுவலகமாக இருந்தது. ஏ.கே.கோபாலன் (ஏகேஜி), சுர்ஜித் மற்றும் பி.ஆர். ஆகிய மூன்று தலைமைக்குழு உறுப்பினர்கள் தில்லியி லிருந்து செயல்பட்டனர். நாடாளுமன்றம் நடக்கும் போது ஒவ்வொரு சனிக்கிழமையும் எம்.பிக்களின் பேரவை நடக்கும். அதில் வரவிருக்கும் வாரத்தில் என்னென்ன விசயங்களில் விவாதம் நடக்கப்போகி றது, யார் யார் எதில் பேசுவது என்பதையும் இந்த கூட்டம் தான் தீர்மானிக்கும். இந்த கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் முழுவதையும் குறித்து வைத்துக் கொண்டு அந்த  விவாதம் வரும் நாளில் அவர்களுக்கு நினைவுப்படுத்தி அவர்களை பங்கேற்கச் செய்வது, என்.ஆரின் வேலை யில் ஒன்றாகும். அவர்கள் பலருக்குத் தேவைப்படும் விவரங்களையும் அவர் சேகரித்துத் தருவதுண்டு.

தினமும் நாடு முழுவதிலிருந்து ஏ.கே.ஜிக்கு ஏராள மான மனுக்கள், கடிதங்கள் வரும். அவற்றை படித்து ஏ.கே.ஜி பெயரில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்க ளுக்கோ அல்லது பிரதமருக்கோ ஏராளமான கடிதங்கள் தினமும் போய் கொண்டேயிருக்கும். அவற்றிற்கு வரும் பதில்கள் உடனுக்குடன் மனுதாரருக்கு அனுப்பி வைக்கப்படும். இது நீங்கலாக, நாடு முழுவதிலிருந்து பல தூதுக் குழுக்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வருவார்கள். அவர்களை வரவேற்று அவர்கள் மனுக்களைப் படித்து அன்று தில்லியில் உள்ள கட்சி நாடாளுமன்ற உறுப்பி னர்கள் சிலர் மூலம் அந்த தூதுகுழுக்களை சம்பந்தப் பட்ட அமைச்சர்களிடம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யும் பணியையும் என்.ஆர். செய்ய வேண்டியிருந்தது.  கட்சியின் அரசியல் தலைமைக்குழு மற்றும் மத்தி யக்குழுவின் கூட்டம் பெரும்பாலும் தில்லியில் தான் நடைபெறுவதுண்டு. அரசியல்  தலைமைக் குழுவில் 9 பேரும் மத்தியக்குழுவில் 35 உறுப்பினர்களும் இருந்தனர். அவர்களுக்கு தங்குமிடம், உணவு ஏற்பாடு போன்ற எல்லாவற்றையும் என்.ஆர் தான் செய்ய வேண்டியிருந்தது. 

1971ஆம் ஆண்டில் தோழர் பிரகாஷ் காரத் சென்னையிலிருந்து தில்லிக்கு வந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார். ‘மலபாரில் விவசாய உறவுகள்’ என்ற தலைப்பில் அவர் பதிவு செய்திருந்தார். ஒருநாள் கட்சி அலுவலகத்திற்கு தோழர் வி.பி.சிந்தன் கொடுத்த கடிதத்துடன் வந்து என்.ஆருக்கு வி.பி.சி எழுதிய கடிதத்தை கொடுத்தார். அதில் பிரகாஷ் நல்ல தோழர் என்றும் ஆராய்ச்சிக் காக அங்கே வருவதால் அவரை தில்லி மாநில கட்சிச் செயலாளரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி ஜேஎன்யுவில் மாணவர் சங்கத்தை உருவாக்க அவரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் கூறும்படி அந்த கடிதத்தில் வி.பி.சி.எழுதியிருந்தார்.

அவரை என்.ஆர். தில்லி மாநில செயலாளர் தோழர் சந்திரசேகரரிடம் அழைத்துச் சென்று பிரகாஷை அறிமுகப்படுத்தி வி.பி.சி எழுதிய கடிதத்தையும் கொடுத்தார். அவரை பயன்படுத்திக் கொள்ளுமாறு என்.ஆர் அறிமுகம் செய்தார்.  1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி யன்று இந்திராகாந்தி நாட்டில் அவசர நிலைப் பிரகடனம் செய்தார். 1977ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திராகாந்தி மக்களவை தேர்தல் நடத்தினார். அவ ருடைய அரைப்பாசிச ஆட்சிக்கு எதிராக அனைத்து கட்சி களும் ஒன்று திரண்டன. ஜனதா கட்சி உருவானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்  ஜனதா கட்சியும் தொகுதி உடன்பாடு செய்து கொண்டன. இத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்து ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது.  மாநிலங்களவையில் கட்சி உறுப்பினர்கள் பணியை மேம்படுத்த வேண்டுமென்று விஜயவாடாவில் நடை பெற்ற கட்சி காங்கிரஸ் அமைப்பு அறிக்கை குறிப்பிட் டது. அதைத் தொடர்ந்து 1981ஆம் ஆண்டில் மாநிலங்க ளவை உறுப்பினர்களின் பணியை மேம்படுத்தும் பொருட்டு என்.ஆருக்கு அதை தனிப்பொறுப்பாக கட்சித் தலைமை தந்தது. ஓராண்டிற்குப் பின் 1982ஆம் ஆண்டில் நாடாளுமன்ற அலுவலகப் பணியில் இருந்து விடுபட்டு கட்சியின் மத்தியக்குழு அலுவலகப்பணிக்கு வரும்படி கட்சித் தலைமை கூறியதால் அந்தப் பணியை அவர் செய்தார். அவர் பணி பிரதானமாக கட்சி அலுவல கத்தை சீரமைக்கும் பணியாக இருந்தது. 

தீக்கதிர் வளர்ச்சிப் பணிகளில்...

என்.ஆருக்கு பல வருடங்களாகவே தமிழ்நாட்டி ற்குச் சென்று கட்சி வரலாறு, தலைவர்கள் வரலாறு மற்றும் இயக்க வரலாற்று நூல்களை எழுத வேண்டு மென்று பெரும் விருப்பம் இருந்தது. அதை அரசியல் தலைமைக்குழுவிற்கு ஒரு கடிதமாக எழுதி தன்னை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கும்படி அவர்களை கேட்டுக் கொண்டார். அவர்களும் அதை பரிசீலித்து அதே 83ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவரை பொறுப்பிலிருந்து விடுவித்தனர். கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் இஎம்எஸ், என்.ஆருடைய 15 ஆண்டு காலப் பணியைப் பாராட்டி மீண்டும் அவரது சேவை மத்தியக்குழுவுக்கு கிடைக்கும் என்று நம்புவ தாக நம்பிக்கை தெரிவித்து கடிதம் கொடுத்தார். 

மீண்டும் மதுரைக்கு வந்த என்.ஆர்., குடும்பத்தை பராமரிப்பதற்காக கீழக்கரை தோழர் என்.பி.கே. முத்து  மதுரையில் நடத்தி வந்த மொசைக் லேண்ட் நிறுவ னத்தில் பகுதி நேர மேலாளராகப் பணியாற்றினார். காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை அங்கு இருப்பார். பின் தீக்கதிர் அலுவலகம் வந்து ஆங்கில கட்சிப் பிரசுரங்கள் தமிழாக்கம் செய்து கொடுப்பார். மத்தியக்குழு வெளியிட்ட `தொழிற்சங்க அரங்கில் நமது கடமைகள்’, பி.ஆர் அவர்கள் ஆங்கிலத்தில் ‘சீமென்ஸ்’ ஒப்பந்தத்தை குறித்து எழுதிய நூலை ‘சீமென்ஸ் ஒப்பந்தம் சீரழிவுப் பாதைக்கு’ என்ற தலைப்பில் சுருக்கி கொடுத்தார். அதேபோன்று பி.டி.ரணதிவே யின் உரைகளைச் சுருக்கி ‘ஒருபுரட்சியாளரின் சிந்த னைகள்’ என்ற பிரசுரம், மோசடி மன்னன் ‘ராம்ஸ்வரூப் செய்ததென்ன?’ என்றபிரசுரம் `மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்தில் 112வது பாரா குறித்து எம்.பசவ புன்னையா எழுதிய பிரசுரம் போன்ற பல பிரசு ரங்களை தமிழாக்கம் செய்து கொடுத்தார். `நான் எவ்வாறு கம்யூனிஸ்ட் ஆனேன்’ என்ற இ.எம்.எஸ். அவர்களின் சுய சரிதையையும் தமிழாக்கம் செய்து கொடுத்தார். தீக்கதிர் வெளியீடாக வந்த 10க்கும் மேற்பட்ட இத்தகைய பிரசுரங்கள் ஒவ்வொன்றும் 5ஆயிரம் பிரதிகள் விற்பனையாகின. இதே சமயத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்திற்காக தோழர் அப்துல்லா ரசூல் எழுதிய `இந்தியாவில் விவசாயிகள் சங்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’ எனும் நூலின்  ுதல் பகுதியையும், இஎம்எஸ் எழுதிய ‘காரல்மார்க் சின் நிலவாரம் லாபமாக உருமாற்றம்’ என்னும் பிர சுரத்தையும்  தமிழாக்கம் செய்து கொடுத்தார். `கங்கை கரையில் உழவர்களின் போர் முழக்கம்’ என்ற பிரசுரத்தை எழுதிக் கொடுத்தார். 1986ஆம் ஆண்டில்  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பொன் விழா சிறப்பு மலரை வெளியிட முடிவெடுத்தபோது அவர்கள் அதைத்  தயாரித்து தரும்படி என்.ஆரை கேட்டுக் கொண்டனர். அதன்படி அவர் செய்து கொடுத்தார். இதில் அவருக்கு விஜய் சங்கரும் உதவி செய்தார். 

1985ஆம் ஆண்டில் கட்சித்தலைவர் என். வரத ராஜன்.  என்.ஆரைச் சந்தித்து அவருக்கு ஒரு வேண்டு கோள் விடுத்தார். என்.ஆர். மொசைக் பணியிலிருந்து விடுபட்டு, ஏற்கனவே செய்து வரும் தமிழாக்க வேலை யுடன் தீக்கதிர் விளம்பர பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அவர் கூறியதை என்.ஆர். ஏற்றுக்கொண்டார். என்.ஆர். யோசனை யின்படி பல மாநாடுகளையொட்டி சிறப்பு மலர்கள் வெளியிடப்பட்டன. அவ்வாறு முதலில் வெளியிடப் பட்டது தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடாகும். ஏற்கனவே தீக்கதிருக்காக `உலகத் தமிழ் மாநாட்டு மலரை’த் தயாரித்து தந்திருந்த என்.ஆர்.இப்பொழுது `தீக்கதிர் மருத்துவ மலர்கள்’ இருமுறை வெளியிடச் செய்தார். இதற்கு விளம்பரங்கள் மட்டுமல்ல, பல மருத்துவர்களிடமிருந்து கட்டுரைகளும் வாங்கினார். பல்வேறு குறிப்புகளை அவரே தயாரித்தார். அதே போன்று `தமிழகத் தொழில் மலர்’, `தமிழக விவசாய மலர்’, `1997ஆம் ஆண்டில் சுதந்திர பொன் விழா மலர்’, `பி.ராமமூர்த்தி நினைவு மலர்’ மற்றும் `கே.ரமணி நினைவு மலர்’ போன்றவற்றையும் தயாரித்துக் கொடுத்தார்.  அத்துடன் நான்காண்டு காலத்திற்குள் தமிழகத்தில் சுமார் 500 நிறுவனங்களுடன் தீக்கதி ருக்கு வர்த்தகத் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தார். பின்னர் என்.ஆரும் தனது புத்தகப் பணியைத் துவக்கிவிட்டார். 

இறுதி வரை மார்க்சிய தொண்டு

என்.ராமகிருஷ்ணன் எழுதிய முதல் புத்தகமான முசாபர் அகமது வாழ்க்கை வரலாறு 1988ஆம் ஆண்டில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து சவுத் விஷன் பாலாஜி அவர்கள் என்.ஆரின் 22 புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்டு அவரை ஒரு எழுத்தாள ராக்கினார். 1988லிருந்து 2020 வரை என்.ஆர். 68 புத்த கங்களை எழுதியுள்ளார். ‘அயர்லாந்து 800 ஆண்டு விடுதலைப்போர்’, ‘மகத்தான பிரெஞ்சு புரட்சி’, ‘நீதிக்குப் போராடும் பாலஸ்தீன மக்கள்’, ‘உலகின் முதல் கம்யூனிஸ்ட் சதி வழக்கு’, ‘இங்கிலாந்தை உலுக்கிய சாசன இயக்கம்’, ‘ரஷ்யப் புரட்சி புதிய பார்வை’, ‘தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (1917-1964)’, ‘தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சிும் (1964-2014)’, ‘தமிழக சுதந்திர போரில் கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்கு’ போன்ற நூல்களையும் காரல்மார்க்ஸ், ஜென்னி மார்க்ஸ், ஏங்கெல்ஸ், மாவோ, ஹோ-சி மின், ஆங்சான் சூகி, மார்ட்டின் லூதர் கிங், டாக்டர் அம்பேத்கர், ஈவேரா பெரியார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தி ங்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட தமிழக  மார்க்சிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் என்.ஆர்.எழுதியுள்ளார். 

‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தி னங்கள்’, பி.டி.ரணதிவே, பி.ராமமூர்த்தி, சமர்முகர்ஜி, எம்.கே.பாந்தே, எம்.ஆதிநாராயணா மற்றும் கே.ரமணி ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை அவர் ஆங்கி லத்தில் எழுதியுள்ளார். பி.டி.ரணதிவேயின் ஆங்கில வரலாறு மலையாள தேசாபிமானியில் தொடராக வெளியிடப்பட்டது. என்.ஆர். எழுதிய கே.ரமணி மற்றும் லீலாவதி வரலாறுகளை தெலுங்கு மொழியில் பிரஜா  சக்தி வெளியிட்டுள்ளது. பி.ராமமூர்த்தியின் ஆங்கில வரலாறு கன்னட மொழியில் வெளி வந்துள்ளது. சமர்முகர்ஜியின் வாழ்க்கை வரலாறு வங்காள மொழியில் வெளிவந்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் நவரத்தினங்கள் தற்பொழுது மராட்டிய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது. 25 புத்த கங்கள் மற்றும் பிரசுரங்களை அவர் தமிழாக்கம் செய்துள்ளார்.   

புதுவை கருத்தரங்கில் `தொழிலாளி வர்க்கமும் கம்யூனிஸ்ட் கட்சியும்’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய  உரையும் சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்  பிரிவில் சிங்கார வேலர் குறித்து அவர் ஆற்றிய உரையும், மதுரையில் மறைந்த தோழர் ஐ.மாயாண்டி பாரதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரையும் தனித்தனிப் பிரசுரங்களாக வந்துள்ளது. எஸ்.கே.நம்பியார் பெயரில் வெளிவந்த `தென் னிந்திய ரயில்வே தொழிலாளர் இயக்க போராட்ட வரலாறு’ நூலும், `மின் ஊழியர் மத்தியமைப்பு வரலாறு நூலும், `எஸ்.சி.கிருஷ்ணன் வாழ்க்கை வரலாறும்’ என். ஆரால் எழுதப்பட்டது. ஆனால் அவர் பெயர் போட விரும்பவில்லை. என்.ஆர்.தன் எழுத்துப்பணிக்கி டையிலும் பல்வேறு தோழர்களை எழுத வைத்துள் ளார்.  

கோவையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் அகில இந்திய கட்சிக் காங்கிரஸ் மாநாட்டில் வைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு கண்காட்சி  என்.ஆரின் கருத்தாக்கத்தாலும் பிரபல ஓவியர் தோழ்  ஸ்ரீரசா அவர்களின் ஓவியங்களாலும் தயாரிக்கப் பட்டது. கண்காட்சிக்கு வந்த தலைவர்களும், பல்லாயி ரக்கணக்கான தோழர்களும் அதைப் பெரிதும் பாராட்டினர். அதே போன்று கடலூரில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டில் வைக்கப்பட்ட கண்காட்சியும் இவ்விருவரால் உரு வாக்கப்பட்டது. பி.ராமமூர்த்தி, கே.முத்தையா மற்றும் எஸ்ஏ.பெருமாள் ஆகிய தலைவர்களின் கட்டுரைகளைச் சேகரித்து, முறைப்படுத்தி, பெரிய அளவில் அவர்க ளின் தொகுப்பு நூல்களாக என்.ஆர். வெளி யிட்டுள்ளார். தற்பொழுது உலக கம்யூனிஸ்ட் இயக்கத் தின் சுருக்கமான வரலாறு (1844 - 1917) என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். 600 முதல் 700 பக்க அளவில் வெளிவர உள்ள அந்த நூல் அதன் முதல் பகுதியாகும். 

பல்கலைக்கழக மானியக்குழு (UGC) கல்லூரி மாணவர்களுக்கான குறும் படங்களையும் தயாரித்து வருகிறது. மதுரை காமராசர் பல் கலைக்கழகம் அத்தகைய மையங்களில் ஒன்றாகும். அவர்களுக்காக ‘நாடு நினைவு கூர்கிறது’ (country cherishes) என்ற தலைப்பில் மகாத்மா காந்தியைக் குறித்து ஆங்கிலத்தில் என்.ஆர் எழுதிய கதை வடிவு முனைவர் சு.ரவிக்குமார் அவர்களால் படமாக்கப் பட்டுள்ளது. அதேபோன்று `இந்திய சுதந்திரப் போராட்ட காட்சிகள்’ (Glimpses of Indian freedom movement) என்ற தலைப்பில் 4 பாகங்கள் கொண்ட என்.ஆரின் ஆங்கில கதை வடிவு படமாக்கப் பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று தூர்தர்சன் தொலைக்காட்சி அதை ஒளிபரப்புவ துண்டு. அதேபோன்று மகத்தான `இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனைகள்’ என்று அவர் எழுதியதும் படமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் மறைந்த மருத்து வர் `த.ச.இராசாமணியின் வாழ்வும் பணியும்’ என்ற குறும்படத்தையும் தோழர் சோழ. நாகராஜன் ஒளிப் பதிவில் என்.ஆர் தயாரித்துள்ளார். 

எளிமையையும், பணிவையும் பெரிதும் மதிக்கும் என்.ஆர். தன் கடைசி விருப்பமாக தொடர்ந்து மதுரை தீக்கதிர் தோழர்களிடம் கூறி வருவது ‘சாகும் வரை மார்க்சியத் தொண்டு’.


 

;