articles

img

ஆயுதங்களோடு வந்து அட்டூழியம் செய்த கூலிப்படை! ​​​​​​​-  சி.முருகேசன்

காக்கை குருவிகள் எங்கள் சாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று உயிர்களிடத்தும் இயற்கையின்பாலும் அன்பு காட்டியவர் பாரதியார். அன்பைப் போதித்த பாரதியின் மண்ணுக்கு சாதி வெறி சக்திகளால் களங்கம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு துணை போனதன் மூலம் தமிழக அரசுக்கு களங்கம் கற்பித்திருக்கிறது நெல்லை காவல் துறையில் உள்ள சில கறுப்பாடுகள்.   

திருநெல்வேலி மாநகரின் மையப் பகுதியாக உள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர்கள் ராமு - சேர்மக்காள் தம்பதியினர். அருந்ததியர் சமூத்தைச் சேர்ந்த இவர்களுக்கு 26க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதுகளில் 3 மகன்கள். மூத்த மகன் அய்யனாருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கடைசி மகன் மணிமாறன் தனியார் பேருந்து ஓட்டுநர். மதன் குமார் (28) ஐடிஐ ஆட்டோமொபைல் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். கண்ணுக்கெட்டும் தொலைவில் உள்ள வாடகை வீட்டில் தாயாருடனும் பாட்டியுடனும் குடியிருந்தவர் உதயா என்கிற தாட்சாயணி (23). எம்.காம் பட்டதாரியான இவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர். கல்லூரியில் படிக்கிறபோது மதன்குமாருடன் நட்பு ஏற்பட்டு ஐந்தாண்டு காலத்தில் காதலாகி இருக்கிறது.

சாதி வித்யாசம் பார்த்துப் பழகல

இதுகுறித்து சேர்மக்காள் கூறுகையில், அந்த புள்ளய உதயான்னுதான் கூப்பிடுவாங்க. அவங்க வீட்டுல நடந்த வரலட்சுமி பூஜைக்கு போயிருந்தேன். மதன் முயற்சியால நாங்க கட்டுன வீட்டுக்கு மார்ச் மாசம் பால் காய்ச்சினோம். அப்போது உதயா வீட்டுக்கு வந்து போனதா சொன்னாங்க. யாரும் சாதி வித்தியாசம் பார்த்து பழகல. பிள்ளைங்க ஒருத்தர ஒருத்தர் விரும்புறாங்கன்னு தெரிஞ்சதும், இது ஒத்துவராதுன்னு இரண்டு பேர் கிட்டயும் தனித்தனியா சொன்னேன். ஜுன் 11 ஆம் தேதி முதல் மதன் வீட்டுக்கு வரல. அந்த நேரத்திலதான் உதயாவையும் காணலைன்னு எங்க வீட்டுக்குள்ள புகுந்து போலீஸ்காரரும் சொந்தக்காரங்களும் தேடினாங்க என்று தெரிவித்தார்.

காயல்பட்டணத்தில் போலீஸ் படைமிரட்டல்

அய்யனாரை காவல்துறையைச் சேர்ந்த நவராஜ் என்பவர் தொடர்பு கொண்டு எங்க சொந்தக்காரங்களப்பத்தி எல்லாம் விசாரிச்சு அவங்க நம்பர் எல்லாம் வாங்கினாரு. காயல்பட்டணத்தில எங்க சித்தி வீட்டுல நின்னுதான் மதன் ஐடிஐ படிச்சான். ஒரு போலீஸ் படையோட நள்ளிரவு ஒரு மணிக்கு மேல அங்க போய் ஊரையே மிரள வச்சிருக்காங்க. பிபின் என்கிற போலீஸ்காரரும் நவராஜும் தொடர்ந்து போன்லயே டார்ச்சர் பண்ணி மதனயும் உதயாவையும் ஒப்படைக்க கேட்டாங்க. நான் 100க்கு போன் பண்ணி புகார் செய்வேன்னு சொன்ன பிறகு அமைதியானாங்க. 13 ஆம் தேதி  பதிவுத் திருமணம் செய்யப்போறாங்கன்னு தெரிஞ்சு மேலப்பாளையம் போய் பார்த்தேன். பதிவாளர் அலுவலகம் முன்னால் பந்தல்ராஜாவோட ஆட்கள் அதிகமாக நிக்கறதப் பார்த்து பயத்தோட வீட்டுக்கு வந்தேன். அதுக்கு பிறகுதான் கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில நடந்த சம்பவம் தெரியவந்தது என்றார்.  

கூலிப் படை கண்காணிப்பில் பதிவாளர் அலுவலகம்

திருமண வயதை எட்டிய ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ விரும்பினால் அவர்களுக்கு சட்டப்படி திருமணம் செய்து வைக்கலாம். அப்படித்தான் மதன்குமாரும் தாட்சாயணியும் எங்களை அணுகினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருநெல்வேலி மாவட்டக்குழு அலுவலகத்தில் வைத்து தோழர்கள் முன்னிலையில் திருமணம் செய்து வைத்தோம் என்றார் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினரும் பெண் வழக்கறிஞருமான கு.பழனி.  சாதி மறுப்பு திருமணம் என்பதால் இருவரது பெற்றோர்களும் கலந்து கொள்ளவில்லை. 13 ஆம் தேதி 2 மணிக்கு திருமணத்தை பதிவு செய்வதற்காக டோக்கன் பெறப்பட்டிருந்தது. கூலிப்படையைச் சேர்ந்தவர்களின் கண்காணிப்பில் மேலப்பாளையம் பதிவாளர் அலுவலகம் இருப்பதை அறிந்து அங்கு செல்வதைத் தவிர்த்தோம்.

வெள்ளாளர் முன்னேற்றக் கழக இளைஞர் அணி மாநில செயலாளர் பந்தல்ராஜா என்பவர் என்னை செல்பேசியில் அழைத்து மிரட்டினார். காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து கட்சி அலுவலகத்துக்கு பாதுகாப்பு கோரினோம். தகவல் தெரிந்த பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த கதிரவன், சு.கா.சங்கர், சுந்தர்ராஜன், மதுபாலன் ,முத்து சுப்ரமணியன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுடலை ராஜ், முருகன் போன்றவர்கள் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். காவல் ஆய்வாளர்கள் காசிப்பாண்டியன், பிரம்மநாயகம் தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வந்திருந்தனர்.

பந்தல் ராஜா தலைமையில் 3 வாகனங்களில் ஆட்கள்...

4.15 மணியளவில், பந்தல்ராஜா தலைமையில் 3 வாகனங்களில் வந்தவர்கள், சக்கிலி பையனுக்கு எங்க சாதிப் பெண்ணு கேக்குதா? என்று சாதிவெறிக் கூச்சலுடன் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்தனர். தடுக்க முயன்ற நான் உட்பட தாக்குதலுக்கு உள்ளானோம். அலுவலகத்தின் கண்ணாடிகளையும் இருக்கைகளையும் உடைத்தனர். தீக்கதிர் அலுவலகமும் தாக்குதலுக்கு உள்ளானது. சமையலறைக்குச் சென்று கேஸ் சிலிண்டரை திறந்து விட்டனர். காவல் துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சேரா தலைமையில் காவல்துறையினர் வருவதை அறிந்ததும் கூலிப்படையினர் தப்பிச் சென்று விட்டனர்.

திடீரென மாறிய காட்சி

மீதமிருந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திடீரென தரையில் படுத்து புரள்வதும், என் காலில் விழுவதுமாக புதிய காட்சியை அரங்கேற்றி வீடியோ எடுத்துக் கொண்டனர். அதை சமூக ஊடகங்களில் பரப்பி அனுதாபம் தேட முயற்சிக்கிறார்கள். சாதிய தீண்டாமை உணர்வுடனும் கொலை வெறியுடனும் வந்தவர்களிடம் வாழ வேண்டிய இளம் குருத்துகளை ஒப்படைத்திருந்தால் என்ன நடந்திருக்கும். நினைத்தாலே குலைநடுக்கம் ஏற்படுகிறது என்றார்.

கூலிப்படையினரை கைது செய்ய வேண்டும்

தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் பெண்ணின் குடும்பத்தினர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். கூலிப்படையைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் அவருடன் வந்த அனைவரும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். தற்போது பெண்ணின் குடும்பத்திற்கும் கட்சிக்குமான பிரச்சனையாக திசை திருப்ப முயற்சிக்கப்படுகிறது. சாதிய வன்முறையில் ஈடுபட்ட அனைத்து நபர்களும் கைது செய்யப்பட வேண்டும்.

சாதிய வன்முறையைத் தூண்டுபவர்கள்

இவர்களுக்கு ஆதரவாக வாட்சப், சமூக வலைதளங்களில் சாதிய வன்முறையை தூண்டி வரும் இந்து முன்னணி உட்பட சாதிய தலைவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம்.

மக்கள் ஒற்றுமையின் முக்கியத்துவம் குறித்து வஉசி தெரிவித்த கருத்துகள் நினைவு கூரத்தக்கவை, ‘‘சுய அரசாட்சிக்கு முதல் வழி நமது தேசத்தினர்கள் எல்லாம் ஒற்றுமைப்படுதல். உண்மை அவ்வாறிருக்க, சுய அரசாட்சி வந்து விட்டால் நமது தேசத்தினர்களுள் ஒற்றுமை உண்டாய்விடும் என்று சொல்வது நீந்தக் கற்றுக் கொண்டால் நீரில் இறங்கலாம் என்பது போலாம். ஒருவன் நீரில் இறங்காமல் நீந்தக் கற்றுக் கொள்ளப் போவதில்லை. அது போல நம் தேசத்தார்களெல்லாம் ஒற்றுமைப்படாமல் நாம் சுய அரசாட்சி அடையப் பேவதில்லை”. 

இப்படி அனைவரையும் ஒன்றிணைக்கப் போராடிய தலைவரை சாதித் தலைவராக்கி ஆதாயம் அடைவோர் இதுபோன்ற தங்கள் செயல்களால் தனிமைப்படுவார்கள். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு சமூக நல்லிணக்கம் விரும்பும் இயக்கங்களுக்கு மட்டுமல்ல, அரசுக்கும் உள்ளது. அதன் முதல்படியாக காவல்துறையில் உள்ள கறுப்பாடுகளை அடையாளம் கண்டு அகற்ற வேண்டும்.

-  சி.முருகேசன்,
படங்கள் : நெல்லை விஜயகுமார் 

 


 

;