articles

img

வெண்மணித் தியாகிகளுக்கு வீரவணக்கம்....

நஞ்சை சூழ்ந்த கொஞ்சு தமிழ் தரணி தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம். நெளிந்துஓடிய காவிரி விளைந்த செந்நெல் காடு. இந்தியாவில் விவசாயி இயக்க வரலாற்றை எழுதுபவர்கள் தஞ்சையையும் வெண்மணியையும் புறக்கணித்து விட முடியாது. நிலஉடைமை என்பது சில தனி நபர்கள், மடங்கள், கோவில்கள் ஆகியவைகளுக்குத்தான் அதிகம். ஆயிரம் ஏக்கர்களுக்கு மேல் நிலம் வைத்திருந்தவர்கள் தருமபுரம் ஆதினத்திற்கு 2ஆயிரம் ஏக்கர் நிலம். அதன் கீழ் உள்ள  கோயில்களுக்கு 24,179 ஏக்கர். இதைப்போல் திருவாடுதுறை, திருப்பனந்தாள் மடங்களுக்கும் குடந்தை சங்கரமடத்திற்கும் இருந்தன. இந்த மடங்களுக்கு வெளிமாவட்டங்களிலும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உண்டு. வடபாதிமங்கலம் முதலியார்  குடும்பத்திற்கு 8004 ஏக்கர் நிலமும் கபிஸ்தலம் மூப்பனார், பூண்டி வாண்டையார், உக்கடை தேவர் குடும்பங்களுக்கு தலா 6000 ஏக்கர் நிலங்களும் உண்டு. தெற்கு தஞ்சையில் பட்டுக்கோட்டை நாடிமுத்துப் பிள்ளை மற்றும் சிலருக்கும் இப்படி எஸ்டேட்டுகள் உண்டு.  

தஞ்சை மாவட்டத்தை அரசு அன்று ஒரே மாவட்டமாக வைத்திருந்தாலும், இயக்க வரலாற்று ரீதியாக கீழத்தஞ்சை மேலத்தஞ்சை என்ற வகையில்தான் இருந்தன. பாசனமும் விவசாயமும் அதிகம் இருப்பதால் மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் கீழத்தஞ்சை மாவட்டத்தில் தலித் விவசாய கூலித் தொழிலாளிகள் அதிகமாக இருந்தனர். இவர்கள் மிகக் கொடுமையான ஏழ்மையில் இருந்தனர். சேற்றில் இறங்கி சாகுபடி வேலை செய்த இவர்கள் சாதிய ரீதியாகவும் ஒடுக்கப்பட்டார்கள். மேலத்தஞ்சையில் விவசாய வேலைகளை பிற்படுத்தப்பட்டவர்களும் உயர் ஜாதியினரும்  கலந்தே செய்து வந்தனர். ஒப்பீட்டளவில் மேலத் தஞ்சையில் தலித் விவசாயத் தொழிலாளர்கள் குறைவே. தனியார்பண்ணைகளுக்கும் கோயில் மடங்களுக்கும் சொந்தமான எஸ்டேட்டுகள் கீழத் தஞ்சையிலேயே அதிகம். விவசாயிகளின் வாழ்வாதாரம் கீழத் தஞ்சையில் மிகக் குறைவு.இக்காரணங்களால்  வர்க்க முரண்பாடுகள் மேலத்தஞ்சையைக் காட்டிலும் கீழத்தஞ்சையில் கூர்மையடைந்தன. 

விவசாயிகள் எழுச்சி
தஞ்சை மாவட்டத்தில் விவசாய போராட்டங்கள் நிலஉடைமையாளர்களுக்கும் மடங்களுக்கும் எதிராக குத்தகை விவசாயிகளும் கூலித்தொழிலாளிகளும் நடத்துவதாக இருந்தன. இதர மாவட்டங்களில் சராசரி நிலஉடைமையாளர்கள் என்பதால் அரசாங்கத்தை எதிர்த்தும் கடன் ரத்து விளைபொருள்களுக்கு கூடுதல் விலை கேட்டும் கந்துவட்டிக்கு  எதிராகவும் போராட்டங்கள் நடத்தி வந்தனர் என்பதை காணமுடியும்.கீழத்தஞ்சையில் குத்தகை விவசாயிகள் நிலப்பிரபுக்களிடமும் தலித் விவசாய தொழிலாளர்கள் பண்ணையார்களிடமும் பட்ட கொடுமைகள் சொல்லி மாளாது. கடன்வாங்கும்  விவசாயக்கூலியின் குடும்பம் முழுவதும் பண்ணையார் வயலிலும் களத்திலும் வீட்டிலும் மாட்டுத் தொழுவத்திலும் அதிகாலை முதல் முன்னிரவு வரை உழைத்தாக வேண்டும். கொடுமைகள் தாளாமல் தப்பி ஓடினால் போலீஸ் பிடித்து வந்து நிலப்பிரபுவிடம் ஒப்புவிக்கும். காலதாமதமாக சென்றாலோ பண்ணையார் மனம் கோணும்படி நடந்து கொண்டாலோ சாட்டையடியும் சாணிப்பாலும் கொடுப்பார்கள். தினக்கூலியாக ஆண்களுக்கு 3லிட்டர் நெல்லும் ஒருஅணா காசும் பெண்களுக்கு கூலி 2 லிட்டர் நெல் மட்டும். நாள் முழுவதும் மாட்டுத் தொழுவத்தில் வேலை செய்தால் அரை லிட்டர் நெல்  கூலியாக கொடுக்கப்படும். 

சாதிய ரீதியாகவும் இந்த அடித்தட்டு வர்க்கம் கீழான நிலையில் இருந்ததால் கொடுமைகள் இரட்டிப்பாகின. மேல் சாதியினரின் தெருவில் கூலி அடிமை வண்டியில் அமர்ந்து ஓட்டிச் செல்லக் கூடாது. இறங்கி வண்டியை இழுத்துச் செல்ல வேண்டும். செருப்பு அணியக்கூடாது. வேட்டி கட்டக்கூடாது. கோவணம் தான் கட்டலாம்.பெண்கள் ரவிக்கை அணியக்கூடாது. சேலையை முழங்காலுக்கு மேல் உயர்த்திதான் கட்ட வேண்டும். மகனுக்கு சாணிப்பால் புகட்ட தந்தையே சாணம் கரைக்க வேண்டும். கணவனை சாட்டையால் அடிக்கும்போது மனைவி எட்ட நின்று கண் கலங்கலாம். கிட்டே போய் தடுக்கக்கூடாது. தீபாவளிக்கு எடுத்துக் கொடுக்கும் ஆடையைதான் ஆண்டுமுழுவதும் உடுத்த வேண்டும். திருமணம் கூட பண்ணையார் அனுமதி பெற்றுதான் நடத்திக் கொள்ள வேண்டும். ஆண்களின் காம விகாரங்களுக்கும் அடிமைப் பெண்கள் பயன்படுத்தப்படுவர். 1938 வரை இக்கொடுமைகள் நீடித்தன. 

விடுதலைப் போராட்ட வீரர் மகத்தான தோழர் பி.சீனிவாசராவ் அவர்களை கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சைக்கு அனுப்பி வைத்து விவசாயிகளை, விவசாயத் தொழிலாளர் அமைப்பு ரீதியாக திரட்டி  இக்கொடுமைகளுக்கு எதிராக போராடப் பணித்தது. 1938-ல் செங்கொடி இயக்கத்தின் சார்பாக விவசாயத் தொழிலாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு அதில் விவசாயத் தொழிலாளர்களை அமைப்பு ரீதியாக திரட்டவும் பண்ணை அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடவும் திட்டமிடப்பட்டது. 
இதேபோல் 1943-ல் மன்னார்குடி அருகில் உள்ளதென்பரை கிராமத்தில் உத்திராபதி மடத்திற்கு சொந்தமான பண்ணையின் குத்தகை சாகுபடியாளர்கள் சங்கம் ஏற்படுத்தப்பட்டது. செங்கொடி இயக்கம் தனது சீரிய முயற்சியால் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு, விவசாயத் தொழிலாளர்கள் அடிமை விலங்கொடிப்பு, வாழ்வுரிமைப் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து பல வெற்றிகளையும் கண்டது. கூலி உயர்வு ஒப்பந்தங்கள், சாணிப்பால் - சவுக்கடிகொடுப்பது நிறுத்தம், பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் இவைகளை கொண்டுவந்து  சங்கம் விவசாயிகளுக்கும் விவசாயதொழிலாளர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. பசுமைப் புரட்சியின் விளைவாக உருவான புதிய சூழலும்மாற்றங்களும் ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்தன.

கூலி உயர்வுக்கான போராட்டமும் சாதி ஆதிக்கத்திற்கான போராட்டங்களும் வீறுகொண்டன. குத்தகை விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் திரட்டி உரிமைக்கான போராட்டங்களை நடத்தியது. கம்னியூஸ்ட் இயக்கமும்  கிராமம் கிராமமாக கட்டுக் கோப்புடன் வளர்ந்தது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்த நிலப்பிரபுத்துவக் கொடுமைகள் 1967-க்கு பின் ஆட்சிக்கு வந்ததிராவிட முன்னேற்றக்கழக ஆட்சியிலும் தொடர்ந்தன. வேலைப்பளுவை குறைக்கணும் 8 மணிநேரம் வேலையை நிர்ணயிக்கணும் என்ற கோரிக்கை வலுப்பெற்று அதிகாலை 5 மணிக்கு வேலை துவங்கி இருட்டிய பிறகே கரையேற முடியும் என்பது மாற்றப்பட்டது. காலை 8 மணி முதல் 1 மணி வரையிலும் பிறகு மாலை 2 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் வேலை செய்து முடிக்க வேண்டும் என்பதை அமல்படுத்துவதற்கு சங்கத்தின் ஆட்கள் மரத்தில் ஏறி நின்று தப்பு அடிப்பதும் சில ஊர்களில் கொம்பு ஊதுவதுமாக செய்து நிறைவேற்றினர். 

பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறை
விவசாய வேலைகள் காரியக்காரர், அடியாட்கள் சகிதமாக அவர்களின் கட்டுப்பாட்டில் தான் நடக்கும். இதில் ஆண்பெண் என்ற வித்தியாசமும் இல்லைஎன்றாலும் பெண்கள் நடவு வேலைக்கு வரும்போது கைக்குழந்தைகளை கருவேல மரத்தில் தொட்டில் கட்டுப்போட்டுவிட்டு வரவேண்டும். குனிந்தபடியே நடவு வேலையில் ஈடுபட வேண்டும். நிமிரக்கூடாது. குழந்தை அழுதாலும் காரியக்காரர் அனுமதிபெற்றுதான் கரையேறி பால் கொடுக்க வேண்டும். நடவுவேலை நடக்கும் போது காரியக்காரர்கள் பின்னாலேயேநிற்பார்கள். பின்னால் நிற்கக்கூடாது முன்னாடி கரையில்நின்றுதான் வேலையை கவனிக்க வேண்டும் என்பதற்கும் குழந்தை அழுதால் கரையேறி அனுமதியின்றி போவதற்கும் கூட போராட வேண்டியிருந்தது. மனிதாபிமானமற்ற முறையில் பெண்களை இழிவுபடுத்துவதும் ஈனமானப்படுத்துவதும் சர்வசாதாரணமாக இருந்தது. இதற்கெல்லாம்மரண அடி கொடுத்து விவசாயத் தொழிலாளர் இயக்கம் எழுச்சி பெற்றது.

கொடியவனின் கோர நர்த்தனம்
விவசாயத் தொழிலாளர்களின் எழுச்சியையும் வீரம்செறிந்த போராட்டங்களையும் சகிக்க முடியாத நிலப்பிரபுக்கள் அடியாட்களைக் கொண்டும் காவல்துறை துணையுடனும் கிராமங்களில் புகுந்து கொலைவெறி தாக்குதல்நடத்தி வந்தனர்.இத்தாக்குதலை எதிர்த்து தற்காப்பு நிலையில் விவசாயத் தொழிலாளர்களும் போராடினார். நிலப் பிரபுக்கள் சாதிய சிந்தனையுடன் விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் பிரித்தாளும் சூழ்ச்சியுடன் நெற் உற்பத்தியாளர்கள் சங்கம் அமைத்து செங்கொடிஇயக்கத்தை அழிக்க முயற்சித்தனர். நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தை துவக்கிய ஆய்மலை மைனர் ராமநாதத்தேவர், தனது முயற்சியில் பின்னடைவு கண்டு பின்வாங்கிய பிறகு நெல்உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராகஇரிஞ்சூர் கோபாலகிருஷ்ணன் நாயுடு வருகிறான். நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைகளில்  தேர்ந்த கொடுங்கோலன், திருமணமாகாதவன். ஜாதிக்கட்டு பலத்துடன் விவசாயத் தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குவதற்கு வருகிறான்.ஏங்கெல்லாம் விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்நடக்கிறதோ அங்கெல்லாம் டிராக்டர்களில் அடியாட்களோடு ஜீப்பில் துப்பாக்கியுடன் வருவது, நேரடியான தாக்குதல் தொடுப்பது ஆகியவற்றில் ஈடுபட்டான். அதனை செங்கொடி இயக்கம் முறியடித்தது. 

அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டு விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம் எங்கும் நடைபெற்றன. வேலை நிறுத்தம் செய்தால் பண்ணையார் வெளியூர் ஆட்களை அழைத்து வந்து அறுவடை செய்தனர். அதனை தடுத்து உள்ளூர் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலைகொடு என்று நடக்கும் போராட்டம் வெற்றியும் பெற்றது. வெண்மணியைச் சுற்றியும் பல கிராமங்களில் நடைபெற்ற போராட்டங்களை ஒடுக்க முயற்சித்த கோபாலகிருஷ்ண நாயுடு தோல்வியை தழுவினான்.  தனது சொந்த கிராமமான கீழவெண்மணியில் செங்கொடியை இறக்கிவிட்டு நெல் உற்பத்தியாளர் சங்க கொடியை ஏற்ற தொடர்ந்து மக்களை நிர்ப்பந்தித்து வந்தான். இறக்க மறுத்து செங்கொடியின் இயக்கத்தின் பின்னால் மக்கள் உறுதியாக நின்றனர். நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற பெயரில் போலீஸ்பாதுகாப்புடன் நில உடைமையாளர்கள் விவசாய இயக்கத்தின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி வந்தனர். தொடர்ந்து 1967 அக்டோபர் 6-ல் கீழத்தஞ்சை பூந்தாழங்குடியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது விவசாயிகள் மீது தமிழக அரசின் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பூந்தாழங்குடி பக்கிரி மாண்டார். அதைத் தொடர்ந்து விவசாயத் தொழிலாளர்கள் போராட்டங்கள் வீரியமாக வெடித்தன. 

1968 வெண்மணிச் சம்பவம் வரை செங்கொடியின் புதல்வர்கள் தியாகிகள் சிக்கல் பக்கிரிசாமி, கேக்கரை ராமச்சந்திரன், இரிஞ்சூர் சின்னப்பிள்ளை போன்ற தோழர்கள் நெல் உற்பத்தியாளர் சங்க கொடியவர்களால் வெட்டிக் கொல்லப்பட்டனர். இவர்களின் கொலைவெறியை கட்டுப்படுத்தவோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கவோ ஆட்சி நிர்வாகமும் காவல்துறையும் தயாராக இல்லை. இதனால்தான் நிலப்பிரபுத்துவ ஆதிக்க வெறிபிடித்த கொடியவன் கோபாலகிருஷ்ணன் நாயுடு கிழவெண்மணி கிராமத்தை குறிவைத்தான். 

வரலாற்றில் இடம்பெற்று விட்ட கீழ வெண்மணியில் டீக்கடை வைத்திருந்த முத்துசாமி என்ற விவசாய இயக்கத் தோழரை நாயுடுவின் ஆட்கள் டிசம்பர் 25 அன்று கடத்திச் சென்றனர். வேலைக்குச் சென்று திரும்பி வந்த நமது தோழர்கள் ஆவேசத்துடன் ஆண்களும் பெண்களுமாக மேல வெண்மணியில் ஒரு வீட்டில் தோழர் முத்துசாமியை அடைத்து வைத்திருந்தது தெரிந்து அங்கே சென்றனர். மக்கள் குழுமியவுடன் வீட்டில் இருந்த பெண்கள் கதவை திறந்துவிட, அவரை மீட்டு வந்தனர்.இந்த தகவல் தெரிந்த கொடியவன் கோபாலகிருஷ்ணன் நாயுடு அன்றிரவே அந்த கிராமத்தை தாக்கதிட்டமிட்டான். இரவு 11 மணிக்கு போலீஸ் லாரி ஒன்று குண்டர்களை ஏற்றிக்கொண்டு   கிராமத்திற்குள் நுழைந்து துப்பாக்கியால் பலமுறை சுட்டு மக்களை மரண பீதியில் உறைய வைத்தது. உரிய பாதுகாப்பும் கையில் ஆயுதங்களும் இல்லாத நிராயுதபாணியான தொழிலாளர்கள் இருளில்கலந்து மறைந்தனர். கொடிய குண்டர்கள் ஆயுதங்களுடன் சேரிக்குள் புகுந்து துவம்சம் செய்தனர். விவசாயத் தொழிலாளர்கள் பலர் காயமுற்று வீழ்ந்தனர். குண்டர்களில் ஒருவனான பக்கிரி என்பவனும் வீழ்ந்தான். லாரியில் இருந்த பெட்ரோல் டின்களை எடுத்து வீட்டுக்கூரைகளில் ஊற்றினர். 

தப்பமுயன்ற நிராயுதபாணிகளான பெண்கள், குழந்தைகள் தோழர் ராமய்யாவின் குடிசைக்குள் தஞ்சம் புகுந்தனர். குடிசையை இழுத்து மூடி தீ வைத்தான் கொடியவன் கோபாலகிருஷ்ணன். 20 பெண்கள், 19 சிறார்கள்,5 ஆண்கள் ஆக 44 உயிர்கள் அக்னி பிழம்பில் வெந்துமடிந்தனர். தப்பிக்க முயன்றவர்கள் அரிவாளால் வெட்டி, எரியும் குடிசைக்குள் வீசப்பட்டார்கள். இக்கோரச் சம்பவம்வெளி உலகத்திற்கு மறுநாள் காலையில்தான் தெரியவந்தது. நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்கொடுமைக்கும் ஆளும் வர்க்க போலீஸ் அராஜகத்திற்கும் பலியானர்கள் 44 வெண்மணியின் கண்மணிகள். வர்க்கப் போராட்டத்தின்ரத்த சாட்சியாய் விளங்குகிறார்கள் அந்தவெண்மணித் தியாகிகள். செங்கொடியைதனது குலக்கொடியாய் ஆக்கிக்கொண்ட ஒன்றுபட்ட போராட்டமே அவர்களின் திசை வழியை மாற்றியது. காலம் மாறுவதை உணர்ந்துகொண்ட பண்ணையார்கள். தமது வர்க்கக் குணத்தைக் காட்டினார்கள். ஆளும் அரசும் அதிகார வர்க்கமும் யார் பக்கம் என்பதை வெண்மணிக்கு  வெளிச்சம் போட்டுக் காட்டியது. வர்க்கப் போராட்டக் களமாய் திகழ்ந்த விவசாயிகளின் எழுச்சியும் வெண்மணித்தீயும்  வர்க்க ஒற்றுமைக்கு சான்றாகும் பாடமாகும். வர்க்கப் போரில் உயிர் நீத்த வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம்.

கட்டுரையாளர் : ஆர்.மனோகரன், சிபிஎம் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர்

                        *********************************

வெண்மணிச் சாம்பலில்... கவிதை 

          (பல்லவி)

விசித்திர   மானது  இக்கதை…

வெண்மணி  பூமியின் கொடுஞ்சிதை…

திசையெங்கும் ஓடி, செங்கொடி ஏந்தி,

தியாகப் புரட்சியை விதை,விதை !


            (சரணங்கள்)

கூரிய சரித்திரம் தெளியுங்கள்…

கூலியின் போராட்டம் இதுவல்ல;

சேரிகள்,மக்களின் கைகளில்

செங்கொடி பறந்ததே காரணம் !...
                
        
செருப்பறி யாத கால்களும்

துண்டணி யாத தோள்களும்

செருக்கர் சாணிப்பால் ஊட்டலும்

சாட்டையில் வாட்டும் இழிநிலை…

       
செங்கொடி இயக்கத் தலைவர்கள்

சேரியில் நடத்திய எழுச்சியால்

எங்களின் மக்கள் விழித்தனர்;

இழிவினை  ஒழிக்கத்  திரண்டனர்!...  

                        
குடிசைகள் மீதும் செங்கொடி!

குழந்தைகள் கையிலும் செங்கொடி!

இடியென எழுந்தது புரட்சியே!

இழிமிகு ஆண்டைகள் கொதித்தனர்!

              

‘கொடிகளை  இறக்கி வாருங்கள்;

கூலிநெல் நிறைய  தருகிறேன்;

அடங்குங்கள்!’  என்றான் ஆண்டைதான்…

‘அடங்கிடோம்’ என்றனர் உழைப்பவர்…

                          
‘மானத்தைத் தந்தது செங்கொடி!

மனிதராய்ச் செய்தது எம்கொடி!

ஈனத்தை  ஒழித்தஎம்  கொடிதனை

இறக்கிட மாட்டோம்!’ என்றனர்…


அறுபத்து எட்டாம் ஆண்டது

அவனியில் யேசு  உதயநாள்… 

எரித்தனர்  ‘ராமையா குடி’லொடு

எரிந்தனர் நாற்பத்து நான்குபேர்…

                        
கதறிய குழந்தைகள், மக்களும்

கருகிய சாம்பலாய் ஆயினர்…

சிதறிய வெண்மணிச் சாம்பலில்

எழுந்திடும் பீனிக்ஸ் பறவைகள் 

- (விசித்திரமானது...)

கவிதையாளர்  : ந.காவியன்

;