கோபம்
“நாங்கள் துக்கம் அனுசரிப்பது முடிய வில்லை எங்கள் கண்ணீர் இன்னும் காயவில்லை எங்கள் காயங்கள் இன்னும் ஆறவில்லை.. மகிழ்ச்சியோடு எப்படி நடனமாட முடியும்..??” மணிப்பூரின் குக்கி-ஜோ பழங்குடியினரின் அமைப்புகள்தான் இப்படிக் குமுறியுள்ளன. அம்மாநிலத்தையே உலுக்கி எடுத்த பெரும் வன்முறைச் சம்பவங்களை இரண்டு ஆண்டுகளுக்குக் கண்டு கொள்ளாமல் இருந்து பிரதமர் மோடி மேற்கொள்ளும் பயணத்தின்போது நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பதைக் கேள்விப்பட்ட இந்த அமைப்புகள் கொந்தளித்து விட்டன. வரவேற்புப் பதாகைகள் கிழித் தெறியப்பட்டுள்ளன. ‘பருத்தி மூடை குடோனிலேயே இருந்திருக்கலாம்’ போன்று தில்லித் தலைமையகப் பாஜகவினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
வியப்பு
“நான் இந்துவோ, கிறித்தவரோ, இஸ்லாமியரோ அல்ல” என்று ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் தவர்சந்த் தமோர் சொன்னவுடன், அம்மாநில சட்டமன்றத்தில் மற்ற உறுப்பினர்களின் புருவங்கள் வியப்பால் உயர்ந்தன. கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான மசோதா குறித்துப் பேசிய அவர், “நான் ஒரு ஆதிவாசி மட்டும்தான். இந்த பூமிக்கு எங்கள் மூதாதையர் வந்ததில் இருந்தே அவர்கள் ஆதிவாசிகள்தான். ஆர வல்லி மலைத்தொடரின் ஆதார விதைகளில் ஒன்று நான். கிறித்துவராக மாறியுள்ள பழங்குடியினர், இந்து மதத்தில் இருந்து மாறவில்லை. அவர்கள் பழங்குடியினர்தான். எங்கள் மரபணு அந்நியமல்ல” என்றார். அவ்வளவு நேரமாக கத்திக் கொண்டிருந்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ‘இதை எப்படி எதிர்கொள்வது’ என்று ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
மகிழ்ச்சி
“தகரக் கொட்டகைகளில் பள்ளிக்கூட ங்களா..?” என்று தில்லி உயர்நீதிமன்றம் சாட்டையைச் சொடுக்கியுள்ளது. ஏதோ, கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடங்களைப் பற்றி உயர்நீதிமன்றம் பேசவில்லை. நாட்டின் தலைநகர் தில்லியில் உள்ள மூன்று பள்ளிக்கூடங்களில் பயிலும் 1,400 மாணவர்கள் தகரக் கொட்டகைகளில் அமர்ந்து கற்கிறார்கள். அது மட்டுமல்ல, அப்பள்ளிகளில் சுற்றுச்சுவர். நாற்காலிகள், கரும்பலகைகள் என்று எதுவுமே இல்லை. பெரும்பாலான மாணவர்கள் தரையில் அமர்ந்துள்ளனர். இதைக்கேட்டவுடன் நீதிபதி கெடெலா, “நாம் 2025ல்தானே வாழ்கிறோம்” என்றிருக்கிறார். மூன்று பள்ளிகளில் ஒன்று தனியார் பள்ளிக்கூடமாகும். உடனே பதிலளிக்குமாறு தில்லி அரசை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளதால், பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
துயரம்
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று ஒரு டாலருக்கு 88 ரூபாயைத் தாண்டியது. ‘இந்தியாவுடன் மீண்டும் பேசுகிறோம்’ என்று டிரம்ப் சொன்னவுடன், மீண்டும் மதிப்பு அதிகரித்துவிடும் என்றார்கள். ஆனால் 88 ரூபாய்க்கு மேல் நின்றதோடு, கடந்த இரண்டு நாட்களாக மேலும் அதிகரித்துள்ளது. ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு டாலர் 40 ரூபாய்’ என்று ஆளுங்கட்சியினர் பேசியதெல்லாம் மக்கள் மனதில் வந்துபோகவே செய்கிறது. ஏற்றுமதியைவிட அதிகமாக இறக்குமதி செய்யும் நிலையில், இதைப் பற்றிய கவலையே இல்லாமல் “லெப்ட்ல இன்டி கேட்டர் போட்டு, ரைட்டுல கை காட்டி, நேர போய்ட்டே இருப்பான்” என்ற திரைப்பட வசனத்தை ஆட்சியாளர் கள் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.