பாலர் பூங்கா - க சண்முகசிதம்பரம்
தமிழில் பேசு!
தமிழில் பேசு பாப்பா - தூய தமிழில் பேசு பாப்பா! அமிழ்தாய் இனிக்கும் தமிழில் - என்றும் அழகாய்ப் பேசு பாப்பா! விழியாய் விளங்கும் தமிழை - நீ விரும்பிப் படிப்பாய்ப் பாப்பா! செழித்தே வளர்ந்த தமிழின் - தொன்மைச் சிறப்பை அறிவாய்ப் பாப்பா! உயிராம் மெய்யாம் ஒலிகள் - சேர்ந்தே உயிர்மெய் யாகும் பாப்பா! வயிற்றில் கழுத்தில் மூக்கில் - பிறந்து வனப்பாய் ஒலிக்கும் பாப்பா! வல்மெல் இடையாய் விளங்கும் - மெய்யின் வளத்தை அறிவாய்ப் பாப்பா! சொல்ல இனிக்கும் தமிழைக் - கற்றுச் சுவைத்து மகிழ்வாய்ப் பாப்பா! குறிலாய் நெடிலாய் விளங்கும் -ஒலியின் குணத்தை அறிவாய்ப் பாப்பா! சிறிய அகவை முதலே - நீயும் சிறக்கப் படிப்பாய்ப் பாப்பா!
