தோழமை மிக்க இளைய தலைமுறையே!
கோட்சேயையும் காந்தியையும் ஒரே தராசில் வைக்கும் கொடுங்கோலர் ஆட்சியில் வாழ்கிறோம். இப்போது காந்தியை நினைவு கூர்வது என்பது சாதி, மத வெறிக்கு எதிராய் விழித்தெழுவது மட்டுமே! ஆம். சாதி மத வெறிக்கு எதிராக விழி! எழு! செயல்படு! என் இளைய தலைமுறையே! கரூரில் உயிர் இழந்தோருக்கு மாநிலம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அஞ்சலி செலுத்தியிருக்கிறது. நல்ல முன்னெடுப்பு. நம் சக இளைஞர்களின் துயரில் பங்கேற்பது சமூகப் பொறுப்புள்ள இளைஞர்களின் கடமை அல்லவா? உணர்ச்சிகளால் உந்தப்பட்டு... பதின் பருவ இளைஞர்கள் உளவியலாய் கொதிநிலை யிலும் கொண்டாட்ட நிலையிலும் இருப்பார்கள். பயம் அறிய மாட்டார்கள். எதையும் ஆழ யோசித்தோ தெரிந்து கொண்டோ செய்வதைவிட உணர்ச்சிகளால் அதிகம் உந்தப்படுவார்கள். விடுதலைப் போராட்ட காலந்தொட்டு தீவிரவாத இயக்கத்தில் முன்நின்றவர்கள் இளைஞர்களே! ஆனால் இன்று நடப்பது என்ன? சமூகத்தில் நிலவும் எல்லாவித அரசியல் போக்குகளும் இளைஞர்களிடமும் வெளிப்படும். சமூகம் எந்த அளவு பொறுப்பாக இருக்கிறதோ அந்த அளவு இளைஞர்களும் பொறுப்பாக இருப்பார்கள். தாராளமயம் உச்சத்தை நோக்கி போகிற இன்றைய சமூ கத்தை நுகர்வெனும் பெரும்பசி ஆட்டுவித்துக் கொண்டிருக் கிறது. மக்களின் தேவை, சந்தையின் ஏற்ற இறக்கம் இவற்றை அனுசரித்தே பொருட்களை உற்பத்தி செய்கிற பழைய சந்தை காலாவதி ஆகிவிட்டது. கார்ப்பரேட் உற்பத்தி செய்கிற பண்டங்களை பெரும் பசியோடு நுகர்கிறவர்களாக மக்களை மாற்றி வடிவமைப்பது தான் இன்றைய பொருளாதாரம். குழந்தைகள், பதின் பருவத்தினரை குறிவைத்தே விளம்பர உத்திகளைத் தீர்மானித்து தங்கள் பண்டங்களை விற்றுக்கொண்டிருக் கிறார்கள். ஆக மக்களுக்கான சந்தையில்லை. சந்தைக் கான நுகர்வோராக மக்களை மாற்றுவதே புதிய பொருளாதார யுக்தி. பொறி வைத்துப் பிடிக்கும் சூழல் இந்த பொருளாதாரத்தின் நீட்சியாக அரசியலை வடிவமைக்க , பண்பாட்டை வடிவமைக்க கார்ப்ப ரேட்டுகள் கடுமையாக உழைக்கின்றனர். ஆம். மக்க ளுக்கான அரசியல் அல்ல; கார்ப்பரேட்டுகளுக் கான அரசியலை நோக்கி இளைஞர்களை பொறிவைத்துப் பிடிப்பதே இன்றைய சூழல். ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு’ என்பது ‘ஒரே சந்தை, கார்ப்பரேட்டுக்கு லாபம்’ என்பதன் பொருளும் நடைமுறையும் ஆகிப்போகிறது. மதவாதம், சாதிய வாதம், பழமை வாதம், போலி அறிவியல் தனிநபர் பிம்ப அரசியல் எல்லாம் அதற்கு சேவகம் செய்யவே! திசைதிருப்பும் வேலை பதின் பருவத்தினர் கோபம் மடை மாற்றப்படவில்லை எனில் அது புரட்சிகரப் பாதைக்கு திரும்பிவிடும் என்பதை அறிவார்கள். உலகெங்கும் ஏகாதிபத்தியத்தின் ஒரே கவலை இதுதான். அவர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போதைக் கலாச்சாரம் ஒரு மடை மாற்றமே. இதில் ஒரு பகுதியினரை மட்டுமே ஈர்க்க முடியும். பல்வேறு டிஜிட்டல் ஆப்புகள் மூலம் செக்ஸ், ரேஸ், வெறி போன்றவற்றை விளையாட்டோடு சேர்த்து ஊட்டுவது.இதுவும் நடக்கிறது. அதுவும் திசை திருப்பலே! ஏடிஎம்மில் கார்டு சொருகினால் பணம் வருவது போல், கைபேசியில் நொடியில் பண பரிவர்த்தனை நடப்பது போல், தாம் விரும்பியது எல்லாம் நொடியில் நடந்துவிட கனவு காணும் இளைஞர்கள். அவர்களை கொம்பு சீவி ஜென் இசட் (Gen Z) தலைமுறை அரசியல் உலகின் பலநாடுகளிலும் நடக்கிறது. அண்மையில் நேபாளத்தில் நடந்தது. குபீர் போராளியாக்கும் முயற்சி இதற்கு பின்னால் இருந்து இயக்குவது கார்ப்பரேட் கரங்களே. இளைஞர்களை ‘குபீர் போராளி’ ஆக்குவதும் அதன் பின் தான் விரும்பும் பொம்மைகளை வைத்து ஆட்சி நடத்துவதும் அதன் திட்டம். தொலை நோக்கில், உணர்ச்சி வசப்பட்ட இளைஞர்கள் விரைவில் நம்பிக்கை இழந்து ஓய்ந்துவிடு வார்கள். சுயநலமான சிறுபகுதி இளைஞர்கள் அவர்கள் கைக்கருவி ஆகிவிடுவார்கள். அதன் மூலம் தீவிர சமூக மாற்றத்தை முடிந்தவரை தள்ளிப்போடலாம். ஆதவ் அர்ஜுனா இந்த ஜென் இசட் ஆசையை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்திவிட்டு, வழக்குக்குப் பயந்து நொடியில் பின்வாங்கிவிட்டார். எல்லா தனிநபர் கவர்ச்சியையும் முதலீடாக்கிச் செய்யும் பிம்ப அரசியலின் உள்ளுறை அது தான். அதாவது பதின்பருவத்தினரை இலக்கோ செயல் திட்டமோ இல்லாமல் வேகமாக அரசியலுக்கு ஈர்ப்பதும்; விரைவில் மனச் சோர்வடைந்து விரக்தி அடைந்து ஒதுங்கு வதும் நடக்கவே அது உதவும். இந்த திடீர்ப் புரட்சி எல்லாம் விரைவில் வற்றி வறண்டு போவதையும், நிலைமை முன்னிலும் கொடுமை ஆவதையும் உக்ரைன் முதல் உலகின் பலநாடுகளில் காண்கிறோம். எனினும் இடதுசாரி முற்போக்கு அரசியல் பக்கம் போகாமல் கணிசமான இளைஞர்களை தள்ளிவிடவே இது முயலும். கார்ப்பரேட்டின் நோக்கம் அதுதான். ‘நீ பாசிஸ்ட் பக்கம் போ அல்லது தனிநபர் பிம்பத்தின் பின்னால் போய் பாழாய்ப் போ! சமூக மாற்றம் பக்கம் போய்விடாதே’ என்பதே! உன்னால் முடியும்... இதனை சரியாகப் புரிந்து சமூக மாற்றத்துக்கான போரில் முன்நிற்கும் இளைஞர்களின் பாசறையே ‘இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்’. அதன் மாநில மாநாடு அக்டோபர் 12, 13, 14 தேதிகளில் ஓசூரில் நடைபெறுகிறது! இளையதலைமுறையே பதின்பருவ இளைஞர்களை முற்போக்கான சமூகமாற்றப் போராளியாக – பகத்சிங் வாரிசுகளாக வார்த்தெடுக்க பிரச்சார ஆயுதங்களை நவீனமாக்கு! உரையாடலை இன்றே தொடங்கு! இதயத்தோடு பேசு! தோளில் கை போட்டுப் பேசு! முடியாததல்ல! நிச்சயம் முடியும்! சவாலான பணியைத் தோள் மீது சுமப்பவர்கள் தானே இளைஞர்களாக முடியும்! டிஒய்எப்ஐ செய்யாமல் வேறு யார் செய்வார்கள்? இப்படிக்கு, முன்னாள் வாலிபன் : சு.பொ.அ.
