articles

தவெகவின் மோசமான அரசியலை ஆதரிப்பதா? அதிமுகவுக்கு அமைச்சர் கண்டனம்

தவெகவின் மோசமான அரசியலை ஆதரிப்பதா? அதிமுகவுக்கு அமைச்சர் கண்டனம்

சென்னை, செப்.28- தவெகவின் மோசமான அரசியலை அதிமுக ஆதரிப்பதாக மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கரூர் சம்பவத்தில் தமிழ்நாடே துயரத்தில் இருக்க, பொறுப்புள்ள எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிலும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அரசியல் பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. காவல்துறை நிபந்தனைகள் எதனையும் தவெக பிரச்சாரத்தில் கடைப்பிடிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், அவர்கள் எல்லை மீறி நடக்க எதிர்க் கட்சித் தலைவரின் செயல்பாடுகளும் காரணமாக அமைந்துவிட்டது. காவல்துறையால் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதனை தவெக தலைவர் விஜய்யே பிரசாரத்தில் ஒப்புக்கொண்டு பேசும் காட்சியை எல்லாம், வழக்கம் போலவே டிவியில் பார்க்கும் எடப்பாடி பழனிசாமி பார்க்கவில்லையா?  ஆளுங்கட்சியின் மீது பழி போடவும், அரசியல் செய்யவும் எந்தக் காரணமும் இல்லை என்றால் மக்களுடன் நின்று மக்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுத்து நல்ல அரசியலைச் செய்யுங்கள். அதை விடுத்து இதுபோன்ற மோசமான நாடகங்களை அரங்கேற்றி அவற்றுக்கு ஆளுங்கட்சியின் மீது பழி போட்டு அரசியல் செய்வது மனசாட்சியே கிஞ்சித்தும் இல்லாதவர்கள் செய்யும் செயல். மக்களின் மனங்களின் மீது அரசியல் செய்யுங்கள். பிணங்களின் மீது அல்ல. அரசியல் லாபத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் வதந்தியைப் பரப்பும் நோக்கோடு பேசுவது தமிழ்நாடு அரசு இதுவரை கண்டிராதது. எடப்பாடி பழனிசாமி பொறுப்பற்ற முறையில் மக்கள் மத்தியில் வதந்திகளையும், கற்பனைக் கதைகளையும் பரப்பி, தனது சுய அரசியல் ஆதாயம் தேடுவது அரசியல் அநாகரிகம்” என்று குறிப்பிட்டுள்ளார்.