நாடு விடுதலையடைந்து ஜனநாயக, மதச்சார்பற்ற குடியரசு என்ற கருத்தோட்டம் இந்தியாவில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் அரசியல் சாசனம் 1950ல் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயினும், அதன் முழுமையான அமலாக்கத்திற்கு நிலப்பிரபுத்துவ உறவுகளும், மனு சாஸ்திரமும் பெரும் தடையாக இருப்பதை பார்க்க முடி கிறது.
தீண்டாமை - வன்கொடுமைகள்
இந்திய அரசியல் சாசனத்தின் 17வது பிரிவு, சட்டப்படி தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என பிரகடனம் செய்கிறது. ஆனால், நடப்பில் உள்ள நிலைமைஎன்ன?. ஆயிரக்கணக்கான கிராமங்களில் பல்வேறுவடிவிலான தீண்டாமைக் கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன. டீக்கடைகளில் இரட்டை குவளை முறை, பொதுச்சாலைகளில் தலித்துகள் நடக்க தடை, பொதுக்குழாய்கள் - கிணறுகளில் தண்ணீர் எடுக்கத் தடை, பொது மயானங்களில் தலித்துகள் இறந்தால் புதைக்க, எரிக்க தடை, அவர்களுக்கென தனி மயானம், பல இடங்களில் மயானத்திற்கான பாதை மறுப்பு, பல ஆலயங்களில் நுழையத் தடை என ஏராளமான தீண்டாமை வடிவங்கள் கிராமங்களில் நிலவுகின்றன.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய களஆய்வுகள் 78 வகையான தீண்டாமைக் கொடுமைகளும்,28 வகையான வன்கொடுமைகளும் தமிழகத்தின் பல்வேறுகிராமங்களில் நிலவுவதை அம்பலப்படுத்துகின்றன. தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக தலித்துகள் போராடி தங்கள் உரிமைகளை நிலைநாட்டினால் அவர்களை படுகொலை செய்வது, அடித்து காயப்படுத்துவது, குடிசைகளுக்கு தீயிடுவது, அவர்களது உடமைகளை நாசம் செய்வது, தலித் பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துவது உட்பட ஏராளமான வன்கொடுமைகள் சாதிய சக்திகளால் நிகழ்த்தப்படுகின்றன. அனைத்து வகையிலான வன்கொடுமைகளும் பல காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளால் வழக்குகளாக மாறுவதில்லை. அதிகார வர்க்கத்தின் - ஆளும் வர்க்க பிரதிநிதிகளின் சாதிய சாய்மானம் இதற்கு ஒரு முக்கிய காரணம். இச்சூழலில் ஒரு வரையறைக்குட்பட்டே இத்தகைய வழக்குகள் பதிவாகின்றன. ஆயினும், இவ்வழக்குகள் அடிப்படையில் தேசிய தலித் பழங்குடிகள் ஆணையமும், மனித உரிமை ஆணையமும் தலித்துகளுக்கு எதிராக நடைபெறுகின்ற தாக்குதல்களையும், கொடுமைகளையும் பட்டியலிடும்போது நமது நெஞ்சங்கள் பதறுகின்றன.
சாதி ஆணவக் கொடுமைகள்
இதுமட்டுமல்ல, சாதி மறுப்புத் திருமணங்களுக்கு இன்றளவும் கடும் எதிர்ப்பும், கண்டனங்களும் நிலவுவது மட்டுமல்ல, அவ்வாறு திருமணம் செய்து கொள்வோர்கள் சாதிய ஆணவப் படுகொலைக்கு பலியாவதை நாடு முழுவதும் பரவலாக காண்கிறோம். குறிப்பாக, தலித் இளைஞர்கள் சாதி - இந்து குடும்ப பெண்களை காதலித்துதிருமணம் செய்தால் அவர்கள் பல இடங்களில் சாதியசக்திகளால் படுகொலை செய்யப்படுவதை கண்கூடாககாண்கிறோம். சில சந்தர்ப்பங்களில் சாதி மறுப்புத்திருமணம் செய்யும் இளம் பெண்களும் படுகொலை களுக்கு ஆளாகினர். சாதி மறுப்புத் திருமணம் செய்து படுகொலை செய்யப்பட்டவர்களில் தலித்துகளின் எண்ணிக்கையே மிக அதிகம்.
அரசியல் அதிகாரம் மறுப்பு
தலித்துகளுக்கு ஜனநாயக உரிமைகளும், அரசியல் அதிகாரமும் வழங்கப்படுவதற்கு இன்றளவும் சாதிய சக்திகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றன. பஞ்சாயத்து தலைவர்களாக தேர்வு செய்யப்பட்ட பல தலித்துகள் தமிழகம் உள்பட நாட்டின் பல பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டதை நாம் மறந்து விட முடியாது. பஞ்சாயத்து தலைவர்களாகவும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளாகவும் தேர்வு செய்யப்பட்ட பல தலித் பிரிவினர் நாற்காலியில் உட்கார அனுமதி மறுக்கப்பட்டதும், பலர் தாக்கப்பட்டதும், இழிசொற்களால் அவதூறு செய்யப்பட்டதும் முந்தைய கால நிகழ்வுகள் மட்டுமல்ல தமிழகத்தின் சமீபத்திய நிகழ்வுகளும் கூட.
பிற்படுத்தப்பட்ட மக்களும் பாதிப்பு
வாழ்நிலையிலும், பொருளாதாரத்திலும் பெரும் வேறுபாடுகள் இல்லாவிட்டாலும் தலித்துகளையும், கணிசமான பிற்படுத்தப்பட்ட மக்களையும் மோத வைத்து சாதி வெறியும், உணர்வுகளும் உயிரூட்டப்படுவதை தொடர் நிகழ்வுகளாக காண்கிறோம்.தலித்துகள் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட மக்களும் சாதிய சக்திகளால் சாதி அடிப்படையில் புறக்கணிக்கப்படு வதையும், இழிவுபடுத்தப்படுவதையும் பரவலாக காண்கிறோம். இம்மக்களுக்கான இட ஒதுக்கீடு கூட நியாயமான முறையிலும், முழுமையாகவும் அமல்படுத்தப் படுவதில்லை.
அடிப்படைக் காரணங்கள்
சட்டப்பூர்வமான தடை இருந்தபோதிலும், தலித்துகளுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எதிராக இத்தகைய கொடும் சித்ரவதைகளும், குற்றங்களும் நடந்தேற காரணம் என்ன?. இந்திய சமூகத்தில் ஆழமாக ஊடுருவியுள்ள சாதிய ஒடுக்குமுறைகளும், நீண்ட காலத்திற்கு முன்பே அதற்கு வடிவம் கொடுத்தும், நியாயப்படுத்தியும் எழுதப்பட்ட மனு சாஸ்திரமும் அல்லவா?மனுநீதி குறித்து சமூக வலைத்தளங்களிலும் , அதற்கு வெளியேயும் தற்போது விவாதங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை, திரு.தொல் திருமா வளவன் சிறிது காலத்திற்கு முன்பு பெண்கள் குறித்துமனுநீதி கூறிய அக்கிரமமான அம்சங்களை ஒரு கூட்டத்தில் விமர்சித்து பேசியதை பாஜகவும், சங் பரிவார் அமைப்புகளும் கண்டனம் செய்து சர்ச்சைகளை துவக்கினர். இதையொட்டி பாஜகவைக் கண்டித்தும், ஆதரித்தும் சமூக வலைதளங்களில் பரவலாகவும், அதற்கு வெளியே ஓரளவும் விவாதங்கள் நடந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை பாஜக
வின் நிலைபாட்டை கண்டித்து அறிக்கை வெளியிட்டது. வேறு பல முற்போக்கு மற்றும் ஜனநாயக இயக்கங்களும் பாஜகவின் நிலைபாட்டை கண்டித்தும், விமர்சித்தும் கருத்துகளை வெளியிட்டன.
மனு சாஸ்திரம் - வர்க்க அடிப்படை
இந்நிலையில், மனு சாஸ்திரம் குறித்து மார்க்சிய நிலைபாடு என்ன? அதை முன்னிறுத்தும் பழமைவாத கருத்துக்களுக்கு எதிராக பிரச்சாரம் மற்றும் போராட்டங்கள் நடத்தும் வழிமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து இங்கு சில அம்சங்களை பரிசீலிப்போம்.மனு சாஸ்திரம் என்பது ஏறத்தாழ 2,500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகும். இந்தியாவில் பண்ணையடிமைத்தனம் மற்றும் நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலம் அது. இப்பின்னணியில் வர்க்க-வர்ண ஒடுக்குமுறைகள் கோலோச்சிய காலமாகவும் அக்காலம் இருந்தது. மக்கள் தொகையில் மிகப்பெரும்பான்மையான கோடானுகோடி உழைப்பாளி மக்கள் வர்ண (சாதி) ஒடுக்குமுறையின் பெயரால் கொடூரமான வர்க்க ஒடுக்குமுறைகளுக்கும், பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாகி இருந்தார்கள். இதன் ஒருபகுதியாக, பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறை களும் தலைவிரித்தாடின.
வருணத்தையும், மக்களின் வாழ்நிலை(வர்க்க)யையும் படைத்தவர் கடவுள்; எனவே, அனைத்து மக்களும் கடவுளின் ஆணைக்கு அடங்கி நடக்க வேண்டுமென்றும், இதனை மீறி நடப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும், இதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மன்னர்களுடையது என்றும் மனுசாஸ்திரம் அறுதியிட்டு கூறுகிறது.எண்ணிக்கையில் சொற்பமான நிலபிரபுக்கள் ஆளும் வர்க்கம் என்ற முறையில் இத்தகைய அடக்குமுறைகளை ஏவி விட்டனர். இந்த நிலப்பிரபுத்துவ அமைப்பின் பிரதிநிதியாகவே அக்கால மன்னர்கள் இருந்தார்கள். இந்த சுரண்டும் வர்க்க அமைப்பின் பிரதிநிதியான மனு இத்தகைய அமைப்பை பாதுகாக்கும் கேடயமாக மனு சாஸ்திரத்தை மனு எழுதினார். இந்த மனு சாஸ்திரமே மன்னர்கள் ஆட்சி நடத்துவதற்கான அரசியல் சாசனமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு காலம் காலமாக அமலாகியது. இன்று நடைபெறும் சாதிய - பாலியல் ஒடுக்குமுறைகள் இவற்றின் தாக்கமும் தொடர்ச்சியுமின்றி வேறல்ல.
சாதியும் வர்க்கமும் பின்னிப் பிணைந்த வரலாறு
ஆக, இந்திய சமுதாயத்தில் வர்க்க, வர்ண, பாலியல் ஒடுக்குமுறைகள் வளர்ந்த வரலாறு இது. இந்த வரலாற்றில் இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிரான வீரியமான போராட்டங்களும் நடைபெற்றன என்பதையும், இப்போராட்டங்களின் காரணமாக ஏராளமான மாற்றங்களும், முன்னேற்றங்களும் நிகழ்ந்தன என்பதையும் மறந்து விடக்கூடாது. மனித குல வரலாறு முழுவதும் வர்க்க போராட்டங்களின் வரலாறே என காரல் மார்க்ஸ் அறுதியிட்டுக் கூறினார். (பின்னர் ஏங்கெல்ஸ் “ஆதி கால பொதுவுடமைச் சமுதாயம் தவிர” என இச்சொற்றொடருக்கு திருத்தத்தை முன்மொழிந்தார்).மனிதகுல வரலாற்று விதிகளுக்கு இந்தியா விதிவிலக்கல்ல. ஆயினும், ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் சமூக, பொருளாதாரத் தன்மைகளுக்கேற்ப இந்த வரலாற்று நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. இந்தியாவில்வர்ண(சாதி) அமைப்பு என்பது இதன் பிரத்யேகத்தன்மை யாகும். இந்தியாவில் சாதி அமைப்பு நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பே உருவாக்கப்பட்டு விட்டதையும், சாதி ஒடுக்குமுறையும், வர்க்க ஒடுக்குமுறையும் பின்னிப்பிணைந்து வளர்ந்துள்ளன என்பதையும் சிபிஐ(எம்) திட்டம் தெளிவாக வரையறுத்துள்ளது.
பெண்ணடிமைத்தனத்தின் அடிப்படை
மனிதகுல வரலாற்றில் ஆதி கால பொதுவுடமை சமுதாயத்திற்கு பின், ஆண்டான் அடிமைச்சமுதாயம், நிலபிரபுத்துவ சமுதாயம் என கடந்து தற்போதைய முதலாளித்துவ சமுதாயம் உருவெடுத்துள்ளது என்பதையும் இம்மாற்றங்கள் வர்க்கப் போராட்டங்களின் காரணமாகவே நிகழ்ந்தன என்பதையும் இதன் தொடர்ச்சியாக உழைப்பாளி மக்களின் வர்க்க போராட்டங்களின் மூலம் முதலாளித்துவ அமைப்பும் வீழ்ந்து சோசலிச சமுதாயம்உருவாகும் என்பதையும் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. பெண்களை எடுத்துக் கொண்டால் ஆதிகால பொதுவுடமைச்சமுதாயம் பெண்கள் பிரதான பங்கு வகித்த சமுதாயமாக இருந்தது என்பதையும், பிற்காலத்தில் சுரண்டும் வர்க்கம், சுரண்டப்படும் வர்க்கம் என மனித சமுதாயம் பிளவு பட்டு சொத்துடைமை ஆதிக்கம் ஏற்பட்ட போது, அச்சொத்துடமைக்கு வாரிசு அடையாளம் காணும் நோக்கத்தோடு தான் பெண் ஆணுக்கு அடிமையாக்கப்பட்டாள் என்பது வரலாற்று நிகழ்வு. எனவே,பெண்ணடிமைத்தனம் என்பதும், வர்க்க ஒடுக்குமுறையோடு பின்னிப்பிணைந்து வளர்ந்துள்ளது என்பதை மறந்து விடக்கூடாது. இப்பின்னணியில்தான் இந்திய சமுதாய வரலாற்றுச்சூழலில், நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் உருவெடுத்த மனு சாஸ்திரத்தில் வர்ண, வர்க்க ஒடுக்கு முறைகளையும், கூடவே பெண்ணடிமைத்தனத்தையும் நியாயப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிரத்யேகத்தன்மை
இங்கு இந்திய சமூகச்சூழலின் மற்றொரு பிரத்யேக தன்மையை நாம் கணக்கில் எடுக்க வேண்டும். முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளிலும், இதர பல நாடுகளிலும் நிலப்பிரபுத்துவத்தை முற்றிலுமாக அழித்து அதன் சாம்பலில்தான் முதலாளித்துவம் உருவாக்கப்பட்டது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, இங்கு விடுதலைப் போராட்ட காலத்திலேயே வலுவாக உருவெடுத்த பெருமுதலாளிகள் பிற்காலத்தில் தங்கள் நலனை கருத்தில் கொண்டு நிலப்பிரபுத்துவத்தை முற்றிலும் ஒழிக்காமல் அதனுடன் சமரசம் செய்து கொண்டு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ, சமூக, பொருளதார அமைப்பை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தார்கள். இதன் காரணமாக, நிலப்பிரபுத்துவ சமுதாய உறவுகளும், அது முன்னிறுத்திய கருத்தோட்ட ங்களும் முற்றிலும் ஒழித்துக்கட்டப்படாத நிலை உள்ளது. இத்தகு சூழலில், நிலப்பிரபுத்துவ கால மனு சாஸ்திரமும், அதன் கருத்தோட்டமும் தொடர்ந்து வலுவாக உள்ளதை பார்க்க முடிகிறது.இந்திய பெரு முதலாளித்துவம் தலைமையிலான ஆளும் வர்க்கங்கள் தம் ஆதிக்கத்தை நிலை நாட்டவும், உழைப்பாளி மக்களை பிளவு படுத்தவும், சாதி அமைப்பையும், உணர்வுகளையும் கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி பயன்படுத்திக் கொள்வதை பார்க்கிறோம். முதலாளித்துவக் கட்சிகளின் செயல்பாட்டில் சாதிய கண்ணோட்டமும்,உணர்வுகளும் மேலோங்கி இருப்பதை வெளிப்படையாக காண்கிறோம். இதன் ஒருபகுதியாகவே பெண்கள் சம்பந்தமான பார்வையிலும் பழமைவாதம் மேலோங்கியுள்ளது. பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வெறும் கனவாக மட்டும் நீடிப்பது தற்செயலான நிகழ்வல்ல.
தீர்வு எது?
இந்திய சமுதாயத்தில் பரவலாகவும், கிராமப்புறங்களில் வலுவாகவும் மனு சாஸ்திரம் வலியுறுத்தும் சாதிய ஒடுக்குமுறைகள் தலைவிரித்தாடுவதும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதும் வெளிப்படையான கண்கூடு. பரவலான மக்களிடையே இந்த பழமைவாத கருத்துக்கள் செல்வாக்கு செலுத்துகின்றன என்பதை குறைத்து மதிப்பிடக்கூடாது.இந்தியாவில் இத்தகு சூழலில் மனு சாஸ்திரத்திற்கு எதிரான போராட்டத்தை எவ்வாறு நடத்துவது என்ற கேள்வி எழுகிறது. மனு சாஸ்திரத்திற்கு எதிரான கருத்து பிரச்சாரமும், போராட்டங்களும் உள்ளடங்கிய சமூக சீர்திருத்த இயக்கத்தின் தேவையை நாம் வலுவாக அங்கீகரிக்கிறேம். ஆனால் இதோடு மட்டும் நிறுத்தி விடக் கூடாது. சமூக சீர்திருத்த போராட்டங்களை பழமைவாதத்திற்கு அஸ்திவாரமாக உள்ள நிலப்பிரபுத்துவ அமைப்பு மற்றும் உறவுகளுக்கு எதிரான போராட்டத்தோடும், மற்றும் அதனுடன் சமரசம் செய்துள்ள பெரு முதலாளிகள் தலைமையிலான இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராட்டங்களோடும் இணைக்க வேண்டும். ஆம், சமூக சீர்திருத்த இயக்கங்களும், வர்க்கப் போராட்டங்களும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்து செயல்பட வேண்டும். கடந்த காலத்தில் இத்தகைய அணுகுமுறை பரவலாக கையாளப்படவில்லை. இடதுசாரிகளும், கம்யூனிஸ்டுகளும் எங்கெல்லாம் வலுவாக இருந்தார்களோ அங்கெல்லாம் இத்தகைய அணுகுமுறை கையாளப்பட்டு, முன்னேற்றங்களை சாதிக்க முடிந்தது. கேரளம், மேற்குவங்கம், திரிபுரா, தமிழகத்தில் கீழ்த்தஞ்சை, ஆந்திராவில்தெலுங்கானா போராட்டங்கள் இதற்கான முன்னுதாரணங்களாகும். கேரளா, மேற்குவங்கம், திரிபுரா மாநிலங்களில் சாதிய ஒடுக்குமுறைகளும் , பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் இதர மாநிலங்களுடன் ஒப்புநோக்கினால் மிகவும் குறைவு என்பது தற்செயலான முன்னேற்றமல்ல. மேற்கண்ட அணுகுமுறையை கையாண்டதால் ஏற்பட்ட முன்னேற்றமாகும். அப்பாதையில் பயணிப்போம். சுரண்டலையும் அதனுடன் இணைந்த சாதிய - பாலியல் ஒடுக்குமுறைகளையும முறியடிப்போம்.
====கட்டுரையாளர் : பி.சம்பத், சிபிஐ(எம்) மத்தியக்குழு உறுப்பினர்====