வீடு - ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை
திறமைமிக்க மனித வளம், இயற்கை வளம், செறிவான பல்லுயிர்ப் பெருக்கம், விவசாயத்திற்கு ஏற்ற சூழல் என சிறந்த அடித்தளங்களைக் கொண்ட நாடு இந்தியா. ஆனாலும் சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் வளரும் நாடுகள் பட்டியலிலேயே இந்தியா உள்ளது. வர்க்க முரண்பாடுகளும், சமூக ஏற்றத்தாழ்வுகளுமே இத்தகைய பின்னடைவுக்குக் காரணமாக உள்ளது. ஐந்தாம் இடத்திலிருந்து நான்காம் இடத்திற்கு இந்தியா முன்னேறிவிட்டது என்று ஆட்சியாளர்கள் வாய்ப்பந்தல் போடுகின்றனர். சொந்த வீடு இல்லாமல் கோடிக்கணக்கான குடும்பங்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். அப்படியானால் இது யாருக்கான வளர்ச்சி? நமது முன்னோர்களின் நாகரீக வாழ்க்கைக்கு அடையாளமாக சுட்ட செங்கல்லைக் கொண்ட கட்டுமானத்தை அகழாய்வுகள் உறுதிப்படுத்து கின்றன. அதே நேரத்தில் சுதந்திர இந்தியாவில் சாலை ஓரங்களிலும், சாக்கடை ஓரங்களிலும், ஊருக்கு ஒதுக்குப்புறத்திலும் குடிசைகளிலும், குடிசைகூட இல்லாமலும் வாழும் மக்களைப் பற்றிய கவலை இல்லாமல் கடந்துபோகிறோம்.
குடிமனைப் பட்டா - வாக்குறுதிகளும் நடைமுறைச் சிக்கல்களும்
அரசுப் புறம்போக்குகளில் ஏழைகள் குடிமனைப் பட்டா பெறுவதற்கு ஏராளமான அரசாணைகள் வந்துவிட்டன. பத்து ஆண்டு களுக்கும் மேலாக வீடு கட்டி குடியிருப்போருக்கு மனைப்பட்டா வழங்கும் சிறப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டது. பிறகு ஐந்து ஆண்டுகள் குடி யிருந்தால் போதும் என்று திருத்தம் செய்யப் பட்டது. அரசாணைகள் வருகின்றன. அதிகாரிகள் வந்துபோகின்றனர். ஆனால் குடிமனைப் பட்டா மட்டும் ஏழைகள் பக்கம் நகராமல் நங்கூரமிட்டு நிற்கிறது. நாடு முழுவதும் அனைத்து வகையான புறம்போக்குகளிலும் குடியிருப்பவர்களுக்கு குடிமனைப்பட்டா வழங்கிட சிறப்புத் திட்டத்தை மாநில அரசு அறிவிக்க வேண்டும். பெல்ட் ஏரியா எனப்படும் சென்னை புறநகர்ப் பகுதியில் புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு 80 ஆயிரம் இலவசப் பட்டா வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் விரைந்து குடிமனைப்பட்டா வழங்கிடுவதை உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மனிதனும் சொந்த நாட்டில் வாழும் உரிமை பெற்றவர்கள். குடிமக்கள் எவ்வித பாகுபாடுமின்றி சமமாக நடத்தப்படவேண்டும். வறுமை இல்லாத சமூகத்தை உருவாக்கும் போதுதான் நிலையான வளர்ச்சியை எட்ட முடியும் என்று ஐக்கிய நாடுகள் சபை பிரகடனம் செய்துள்ளது. இதில் அனைவருக்கும் வீடு என்பது அடிப்படை உரிமையாகிறது.
அனைவருக்கும் வீடு திட்டம் - நத்தை வேகத்தில் நகர்தல்
இதனைத் தொடர்ந்துதான் பிரதமர் குடியிருப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டது. 2016-17-இல் தொடங்கி 2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டி முடிக்கப்படும் என ஆட்சியாளர்கள் புகழ்பாடும் விளம்பரங்களால் அறிவித்தனர். 2021-22 ஆவாஸ் பிளஸ் தரவுகள் அடிப்படையில் 9 லட்சம் வீடுகள் கட்டிட அனுமதிக்கப்பட்டது. 2024-25 வரையும் அந்த வீடுகள் கட்டி முடிக்கப்படவில்லை.
தமிழகத்தில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி:
கிராமப்புறத்தில்: 95,28,495 வீடுகள்; நகர்புறத்தில்: 89,96,487 வீடுகள்; - மொத்தம்: 1,85,24,982 வீடுகள்; கட்ட வேண்டிய வீடுகள்: 9.11 லட்சம் ஏரி, வாய்க்கால், நீர்நிலைகள், மேய்ச்சல், அனாதினம், காடுகள், கோவில், நத்தம் என பலவகையான புறம்போக்குகளில் பலப்பல ஆண்டுகளாக நாடு முழுவதும் ஏழை மக்கள் வீடுகட்டி வசித்துவருகின்றனர். இத்தகைய வீடுகள் அரசுக் கணக்கில் சேர்க்கப்படவில்லை. இது மிகப்பெரிய தவறு. அவர்கள் வந்தேறிகள் அல்ல. நாட்டின் பூர்வகுடிகள்.
போராட்டங்களும் பட்டா வழங்கலில் உள்ள சிக்கல்களும்
போராட்டங்களின் நெருக்கடியைத் தொடர்ந்து அரசு அவ்வப்போது சில இடங்களில் மனைப் பட்டாக்களை வழங்கிவருகிறது. அப்படி கொடுக்கப்பட்ட பட்டாக்களை வருவாய்க் கணக்கில் ஏற்றுவதில்லை. இ - பட்டா கிடைப்பதில்லை. சில கிராமங்களில் பட்டா பெற்று கிராமக் கணக்கில் ஏற்றப்பட்டும் அதற்கான இடத்தை அளந்து பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்வதில்லை. வீடுகட்டி வரி செலுத்தி பிறகு மின்சாரம், சாலை, குடிநீர், ஆதார், ரேசன் அட்டை என அடிப்படை வசதிகளை அரசே செய்துகொடுத்துவிட்டு அவர்களுக்குப் பட்டா கொடுக்காமல் இருப்பது நியாயமா? சில சுயநல சக்திகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதைக் காரணம் காட்டி அரசு ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு இடித்துத் தகர்ப்பது சரியா? ஒரு காலத்தில் கண்மாய்களாகவும், ஏரிகளாகவும், குளங்களாகவும் இருந்த இடங்கள் தற்போது முற்றிலுமாக மாற்றமடைந்துவிட்டன. குடியிருப்புகளாக மாறிவிட்ட நீர்நிலைப் புறம்போக்குகளில் ஆயக்கட்டுகள் இல்லை. வரத்து வாய்க்கால்கள் இல்லை. நீர்த்தேக்கமும் இல்லை. இங்கு அத்தக்கூலிகளும், அன்றாடம் காய்ச்சிகளும் குடிசை போட்டு வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். இவர்கள் அப்பகுதி களில் தூய்மைப் பணியாளர்களாக, கட்டடத் தொழிலாளர்களாக, சுமைப்பணித் தொழிலாளர் களாக உள்ளனர். உண்மையில் இவர்கள்தான் அப்பகுதியின் தூய்மைக்கும் வளர்ச்சிக்கும் அச்சாணிகள்.
திட்டங்களின் நிதி ஒதுக்கீடும் அமலாக்கச் சிக்கல்களும்
1975-இல் குடிசை இல்லா தமிழ்நாடு திட்டம் வந்தது. 2010-இல் கலைஞர் வீடு வழங்கும் திட்டம், பிறகு பசுமை வீடுகள் திட்டம், சமத்துவபுரம் குடியிருப்புத் திட்டம், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் நகர்ப்புற விளிம்புநிலை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு என பல்வேறு திட்டங்கள் வந்து குறிப்பிட்ட மக்கள் பயனடைந்துள்ளனர். அதே நேரத்தில் வீடு இல்லாமல் அவதிப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாத அளவுக்குத் தொடர்கிறது என்பது உண்மை.
தமிழ்நாட்டின் அலகுத் தொகை: -
ஒரு வீட்டிற்கு: ரூ.2.83 லட்சம் - மலைவாழ் மக்களுக்கு சமவெளியில்: ரூ.2,68,540 - மலைப் பகுதியில்: ரூ.3,34,540 இது எந்த வகையிலும் போதுமானது அல்ல. மூலப் பொருட்களின் விலை உயர்வுகளைக் கருத்தில் கொண்டு கேரள அரசைப்போல ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் வீடுகளுக்கான பயனாளிகள் தேர்வில் பெரிய குழப்பம் நீடிக்கிறது. கட்டுமானத்திற்கான பணத்தைப் பெற ஊராட்சி ஒன்றிய அலுவகத்திற்கு நடந்து நடந்து நொந்துபோகும் நிலை உள்ளது. 2030-க்குள் அனைவருக்கும் வீடுகள் திட்டம் நத்தை வேகத்தில் நகர்ந்தால் சாத்தியமில்லை. வீடு கட்டும் திட்டத்தில் ஒன்றிய அரசு முழுத்தோல்வி அடைந்துள்ளது.
செங்கொடி இயக்கத்தின் போராட்டமும் வெற்றிகளும்
செங்கொடி இயக்கம் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் நிலப்பிரபுக்களும், பண்ணை யார்களும் ஆதிக்கம் செலுத்திய நிலையில் பண்ணையாரின் நிலத்தில் அடிமைகளாக மிகக் கேவலமான முறையில் சொந்த வீடுகள் இல்லாமல் ஓலை குடிசைகளில் உயிர் பிழைத்த மக்களிடம் மெல்ல மெல்ல ஊடுருவி மிருகங்களைவிடக் கொடுமையாகவும், குடிமனை, வீடு, கல்வி, சுகாதாரம், குடியிருக்கும் பகுதியில் குடிநீர், சாலை, தெருவிளக்கு ஏதுமின்றி மிகவும் வறிய நிலையில் வாழ்ந்த தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களைச் சந்தித்து சங்கமாக அணிதிரட்டிப் போராட்டப் பாதையை உருவாக்கியது. சமூக ஒடுக்குமுறைக்கும், பொருளாதாரச் சுரண்டல் முறைக்கும் எதிராக எரிமலையாகக் குமுறி எழச் செய்தது. நிலம் கேட்டு, குடிமனைப்பட்டா கேட்டு, குடியிருக்கும் வீட்டிற்கு வரி ரசீது கொடு என்று வரலாற்றுச் சிறப்புமிக்கப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்கப் போராட்டத்தின் பலனாகத்தான் விவசாயக் கூலிகளாக அடிமைகளாக வாழ்ந்த மக்களுக்கு ஐந்து லட்சம் ஏக்கர் நிலத்தைச் சொந்தமாக்கித் தந்தது. சட்டப்பூர்வமான அறிவிப்பு செய்யவைத்து 1,80,000 குடிமனைப் பட்டாக்களைப் பெற்றுச் சொந்தமான வீட்டுமனை பெற்றுக் குடியேற்றம் செய்துகொடுத்தது செங்கொடி இயக்கம். குடிமனைப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு எட்ட வேண்டும். விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் தற்போதுவரை எண்ணற்றப் போராட்டங்களை நடத்திக் குடிமனைப் பட்டாக்களையும் புதிய வீடுகளையும் பெற்றுக்கொடுத்துவருகின்றன. ‘குடிமனை எங்கள் உரிமை’ என்ற முழக்கத்தை நாடெங்கிலும் உரக்க முழங்குவோம். வீடு என்பது ஒவ்வொரு மனிதனின் லட்சியக் கனவு. அதை நனவாக்க ஆகஸ்ட் 14-இல் திண்டுக்கல்லில் நில உரிமை, குடிமனை உரிமை மாநாட்டில் சங்கமிப்போம்.