வெறுப்பு
“போங்க... போய் ஆறு பேரையும் மீட்டுட்டு வாங்க..” என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தவர் என்று கூறி இரண்டு குடும்பங்களை அந்த நாட்டிற்கு அனுப்பி விட்டார்கள். வெளிநாட்டவர் என்று குற்றம்சாட்டி, அவர்களை அனுப்பி வைத்த முறை சந்தேகமளிக்கிறது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆறு பேரில் ஒருவர் எட்டு மாத கர்ப்பிணிப் பெண் ஆவார். நான்கு வாரங்களுக்குள் ஆறு பேரும் வந்தாக வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். இதுபோன்று ஏற்கனவே அமீர் ஷேக் என்ற 19 வயது இளைஞர் ஒருவர் வங்கதேசத்தில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறார். இஸ்லாமிய வெறுப்பை உருவாக்கி, அதை அரசியலுக்குப் பயன்படுத்துவதே பாஜகவினரின் உத்தி என்று சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.
உரிமை..?
ஏற்கனவே வேலை நேரத்தைத் தாண்டி உழைப்பைச் செலுத்தி வரும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள், அந்த சுரண்டலை சட்டப் பூர்வமானதாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். திரிபுரா மாநிலத்தின் பாஜக கூட்டணி அரசு ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை நேரமாக மாற்ற முடிவு செய்திருக்கிறது. கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு பெற்ற 8 மணி நேர வேலை என்பது தொழிலாளர்களிடமிருந்து பறிக்கப்பட்டி ருக்கிறது. கூட்டணிக்கட்சியான திப்ரா மோதா மவுனம் சாதிக்கிறது. இடதுசாரிகள் மட்டுமே குரல் எழுப்பியுள்ளனர். “கிட்டத்தட்ட கொத்தடிமை முறைக்கு அழைத்துப் போகிறார்கள்” என்று சிஐடியு கண்டித்துள் ளது. இடது முன்னணியின் ஆட்சிக் காலத்தில் தங்கள் உரிமைகள் 100 விழுக்காடு பாதுகாக்கப் பட்டதை அம்மாநில ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் நினைவு கூருகிறார்கள்.
பொய்
இந்தி பேசாததால் இரண்டு கேரள மாணவர்கள் மீது பொய் வழக்குப் போட்டிருக்கிறார்கள். தலைநகர் புதுதில்லியில் உள்ள ஜாகீர் உசேன் தில்லிக் கல்லூரியில் அஸ்வந்த், சுதின் ஆகிய இரண்டு மாணவர்கள் பயில்கிறார்கள். செங்கோட்டைக்கு அருகில் சில உள்ளூர்வாசிகளிடம் பேசுகையில் ஆங்கி லத்தைப் பயன்படுத்தி யிருக்கிறார்கள். இந்தி யில் பேசுமாறு கட்டாயப் படுத்தியதோடு, அவர் களைத் தாக்கியுள்ளனர். காவல்துறையினரும் உள்ளூர்வாசிகளோடு சேர்ந்து கொண்டு, திருடிவிட்டார்கள் என்று மாணவர்கள் மீது வழக்குப் போட்டு காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்று விட்டார்கள். காவல் நிலைய வளாகத்திற்குள் இந்த மாணவர்களை காவல்துறையினரோடு சேர்ந்து உள்ளூர்வாசிகளும் தாக்கியுள்ளனர். உடனடியாகத் தலையிடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் கோரியுள்ளார்.
நெருக்கடி
மகாராஷ்டிர மாநிலத்தில் வெள்ளப் பெருக்கின் சீற்றத்திற்குப் பெரும் அளவில் பயிர்கள் நாசமாகியுள்ளன. பயிர்கள் நாசமானது மட்டு மல்லாமல், கால்நடைகளை இழந்திருக் கிறார்கள். கடனில் வாங்கிய டிராக்டரே வெள்ளப்பெருக்கில் சென்று விட்டது. கடனோ தலைக்கு மேல் வெள்ளம் போன்ற நெருக்க டியை உருவாக்கிவிட்டது. குறிப்பாக, மராத்வாடா பகுதி கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி யுள்ளது. ஏற்கனவே கடன் தொல்லைகளுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் எந்தவித நிவார ணத்தையும் தருவதில்லை. பெரு வெள்ளம் உரு வாக்கிய நெருக்கடியைத் தாக்குப் பிடிக்க முடி யாமல் நான்கு விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். நால்வருமே சிறு விவசாயிகளாவர். தான் பார்த்துக் கொள்வதாக பிரதமர் மோடி கூறிவிட்டதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சமாளித்துள்ளார். “பழி போடுகிறாரா” என்று அவருக்கு எதிராக இயங்கும் மாநில பாஜகவினர் வினா எழுப்புகிறார்கள்.
