articles

img

விளையாட்டும் படிப்பா சார்.. கணேஷ்

வகுப்பு நிறைவு பெற்று விட்டது.

வெளியேற முயல்கையில் ஒரு மாணவர், “சார்...

செஸ் விளையாடலாமா?” என்றார்.  

ஆசிரியர் திகைத்தார். பள்ளிக்கூடத்திற்குள் இதுவரையில் செஸ் விளையாடலாம் என்று காதில் விழுந்ததேயில்லை.  

நான் பதில் சொல்ல முயல்வதற்குள் மற்றொரு மாணவர், “செஸ் விளையாட உங்க பேண்ட் தாங்க” என்றார்.

அப்போது முதலில் கேட்ட மாணவர் முகத்தில் கிண்டல் வழிந்துகொண்டிருந்தது. “அடடா...

செஸ் போர்டு மாதிரி இருக்குற நம்ம பேன்ட்டல சொல்றாங்க..” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார்.

இருந்தாலும் சமாளிக்க, “அவ்வளவு கட்டம் இதுல கிடைக்காது” என்றார். “துணியப் பிரிச்சா 64 கட்டம் வந்துரும்...”

மாணவர் விடவில்லை. மாணவர்கள் கூடினார்கள். “ரெண்டு பேர்தான விளையாட முடியும்..” “ஆமா சார்.. ஆனா பல போர்டு செஞ்சுக்கலாம் சார்..”  

“காய்கள் வேண்டாமா..”  “பேப்பர்ல எழுதி வெச்செல்லாம் விளையாடிருவோம் சார்..” விடவில்லை.

பேன்ட்டை உருவி விடுவார்களோ என்று கூட தோன்றியது. அதற்குள் ஒரு மாணவர் ஓடிப்போய் இரண்டு போர்டுகளையும், காய்களையும் எடுத்து வந்தார்...  

“ஓ... நம்ம ஸ்கூல்லயே இருக்கா” என்று கேட்பதற்குள், “இன்னும் ரெண்டு கூட இருக்கு சார்” என்றார் அந்த மாணவர்.

“இது நம்ம நாட்டோட விளையாட்டு..” “அப்புடியா சார்.”. சில விழிகள் விரிந்தன. “ஏழாம் நூற்றாண்டுல இந்தியாவுல விளையாடுனது தான் பிற நாடுகளுக்கு பரவுச்சு..

 7ஆம் நூற்றாண்டுனா என்ன?” “சார்... 601லருந்து 700 வரைக்கும்..”  “ஆமா... இந்தியாவுல செல்வாக்கு செலுத்துன மேற்கு ஆசியர்களோ அல்லது ஐரோப்பியர்களோ, உள்ள வராத காலம்..

ஆனா கணிதம், வானியல்ல பெயர் பெற்ற முதலாம் பாஸ்கரா வாழ்ந்த காலம்.”  “அவர் பேர்ல நம்ம செயற்கைக்கோள்கூட அனுப்புனோம்ல.. “ “ஆமா...

நீங்க படிச்சிருப்பீங்களே.. அவர்தான் இடமதிப்பு வெச்சு எண்களை எழுதியவர்... ஜீரோ, அதான் சுழியம், சுழி, பூஜ்யம்,

பூச்சியம்னு பல வகையா சொல்றோம்ல.. அத முதல்ல பயன்படுத்துனவரு.. இந்திய- அரபு எண்முறையின் முன்னோடினு சொல்லலாம்..”

ஆசிரியர் தொடர்ந்தார். “ஆர்யபட்டாவோட கோட்பாடுகளத் தொகுத்து ‘ஆர்யபட்டீய பாஷ்யா’ங்குற புத்தகமா மாத்துனாரு..” “அப்போ இருந்த அரசர்கள் யாரும் உதவி பண்ணுனாங்களா.” “அப்படித் தெரியல..

வடக்கே ஹர்ஷர், மத்திய இந்தியாவுல இரண்டாம் புலிகேசி, தெற்குல நரசிம்மவர்ம பல்லவர்னு கொடிகட்டிப் பறந்தாங்க..”

புலிகேசி என்றவுடன் அருகில் நின்ற இரண்டு மாணவர்கள் சிரித்தார்கள்.  “என்ன வடிவேலு ஞாபகம் வந்துருச்சா..”

என்று மற்றொரு மாணவர் கிண்டலடித்தார். “ஆனா நம்ம புலிகேசி சாளுக்கியர் இல்லை” என்று ஒரு மாணவர் சீரியசானார். “இந்தப் புலிகேசியதான் நரசிம்ம பல்லவர் தோற்கடிச்சாரா..” -

மாணவர். “ஆமா.. பல்லவர்கள்கிட்ட தோத்தாலும், அவரு ரொம்ப பலசாலி.. வடக்குல ஹர்ஷரத் தோக்கடிச்சவரு..” “அவரு செஸ் விளையாடிருப்பாரோ சார்..”

“இருக்கலாம்.. தங்கள் கவனத்தை ஒருங்கிணைக்க பல அரசர்கள் இதை விளையாடியதாகச் சொல்லப்படுது..”

“நாங்க விளையாடுனாலும், கவனத்தை ஒருங்கிணைக்கலாமா சார்..” “நிச்சயமா.. அதே மாதிரி எல்லா விளையாட்டுலயும் நமக்கு உடல் ரீதியா, மன ரீதியா நிறைய பலன்கள் இருக்கு..”

“அதான் ஸ்கூல்ல பி.டி. பீரியட் வெச்சுருக்காங்களா சார்..” “ஆமா...

விளையாட்டும் கல்வில ஒரு அங்கம்தான்.. செஸ் விளையாடுறதுனால கவனம் ஒருங்கிணைக்கப் படுது..

நினைவாற்றல் மேம்படுது... பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன் அதிகரிக்கும். கற்றலின் வேகம் அதிக மாகும்...” “சார்...

மூணு நாளைக்கு முன்னாடி உலக செஸ் தினம் இருந்துச்சு..” “ஆமா.. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 அன்னிக்கு அத அனுசரிக்குறாங்க..”

ஒரு மாணவர் ஓடி வந்து, “டேய்... உங்க அப்பா உன்னக் கூப்புட்டுக்கிட்டே இருக்காரு..”

என்று ஒரு மாண வரைப் பார்த்துச் சொன்னதும், நகர்ந்தார். மற்றொரு மாணவரும் “எங்க அம்மா வந்துட்டாங்க சார்” என்றார்..

ஒவ்வொருவராக நகர்ந்தனர்.

;