articles

img

சேதுக் கால்வாய்த் திட்டத்தை மீண்டும் முடக்குவதா? - கே.பாலகிருஷ்ணன்

தமிழ்நாடு வளர்ச்சிக்கு பாஜக அரசு தடை போடுவதா?

அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதை இந்தியக் குடிமக்களின் கடமையாக இந்திய  அரசியல் சட்டம் வகுத்திருக்கிறது. ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசோ, அறிவியலுக்குப் புறம்பான மதவாத மூடநம்பிக்கைகளை மக்கள் மனதில் விதைத்து அரசியல் செய்கிறது.  அறிவியல் சிந்தனைகள் வளர்ச்சிபெற்ற இந்தக் காலத்திலும் புராண சித்தரிப்பு கள் ஆளும் அரசினாலேயே நிறுவப்படுவது என்பது மனித சமுதாயத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும் செயல்.

ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு மேலாக  விவாதிக்கப்பட்டு, அரசியல் உள்நோக்கங்  களுக்காக சர்ச்சையாக்கப்பட்டு நிறைவேற்றப்படா மல் கிடப்பில் போடப்பட்ட ஒரு வளர்ச்சித் திட்டம் இந்தி யாவில் இருக்குமானால், அது அநேகமாக சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமாகத்தான் இருக்கும். சமீபத்தில் மாநிலங்களவையில் ஹரியானாவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கார்த்திகேய சர்மா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சருக்கு ஒரு கேள்வி எழுப்பினார். அந்தக்  கேள்விக்கு அமைச்சர் ஜித்தேந்தர் சிங் விடையளித்த போது ராமர் பாலம் பற்றிய தகவல்களைக் குறிப்பிட்டார். ‘‘18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு என்பதால் ராமர் பாலம் பற்றிய தகவல்களை கண்டறி வதில் சிக்கல்கள் உள்ளது. வரலாற்றின்படி 56 கி.மீ  நீளத்திற்கு பாலம் இருந்ததாக நம்பப்பட்டு வந்தது. தொடர்ச்சியாக காணப்படும் சுண்ணாம்பு கல்  திட்டுகளை போன்று சில முடிவுகளுக்கு வரக்கூடும். மேலும், ஒரே வாக்கியத்தில் கூறுவதென்றால் இராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி  கட்டுமானம் என்பதை கூறுவது கடினம்’’ என்று அவர்  தெரிவித்தார். அதாவது, இராமேஸ்வரம் கடற்பகுதி யில் ராமர் பாலம் இருந்ததாக உறுதியாக கூற  முடியாது;  இந்திய விண்வெளித்துறை செயற்கை கோள் மூலம் ஆய்வு செய்ததில் ராமர் பாலம் இருந்தது என்று  துல்லிய மாக கூற முடியவில்லை என்றும் ஒன்றிய  பாஜக அமைச்சரே நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தி விட்டார்.

தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்

ஒன்றிய அரசின் இந்தப் பதிலைத் தொடர்ந்து கடந்த 12 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறை வேற்றினார். இராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது  எந்த மாதிரியான கட்டுமானம் என்பதைக் கூறுவது கடினம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ள நிலை யில், சேது சமுத்திரத் திட்டத்தை மேலும் தாமத மின்றி நிறைவேற்றிட ஒன்றிய அரசு உடனடியாக முன் வர வேண்டும் என தீர்மானத்தில் வற்புறுத்தப்பட்டது.

163 ஆண்டுகாலத் திட்டம்

தற்போது மேற்கு கடற்கரைப் பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரைப் பகுதிக்கு கப்பல்கள் செல்ல வேண்டுமானால் இலங்கையைச் சுற்றித்தான் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. மும்பையில் இருந்து சென்னைக்கு கப்பல் வர வேண்டும் என்றால்  கூட இலங்கையைச் சுற்றித்தான் வர வேண்டும். இத னால் கப்பல் போக்குவரத்திற்கான எரிபொருள் செலவு அதிகரிப்பதோடு, பயண நேரமும் கூடுதலாகும் நிலை உள்ளது. எனவேதான் இந்தப் பகுதியில் கால்வாய் வெட்டி கடலை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என ஆங்கிலேயர்கள் காலத்திலேயே பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.  அதாவது, சேதுக் கால்வாய் என்பது பாக் ஜலசந்தி யையும், மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ஆதாம் பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாய் திட்டமாகும். முதன்முதலாக இந்தத் திட்டம் 1860 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கப்பற்படை அதிகாரியாகப் பணியாற்றிய ஏ.டி.டெய்லர் என்பவரால் 50 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்டது. 1860 ஆம் ஆண்டு தொடங்கி 1922 வரை மொத்தம் 9 திட்ட வரைவுகள் முன்வைக்கப்பட்டு சர்வேக்கள் செய்யப்பட்டன.

சுதந்திரத்திற்குப் பின்பு தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் சேதுக் கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து விடாமல் வலியுறுத்தி வரவே, 1955 ஆம் ஆண்டில் அன்றைய காங்கிரஸ் ஒன்றிய அரசாங்கம் டாக்டர் ஏ.ராமசாமி முதலியார் தலைமையில் ஓர் ஆய்வுக்குழுவை நியமித்தது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படக் கூடி யதுதான் என்று உறுதிப்படுத்திய அந்தக் குழு,  இதைச் செயல்படுத்தினால் கிழக்குக் கடற்கரை யோரமாக கப்பல் போக்குவரத்து எளிதாகும் என்றும்,  இந்தியாவிற்கு அந்நியச் செலாவணி கிடைக்கும் என்றும் தெரிவித்தது. அதோடு இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்திலேயே இந்தத் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று பரிந்துரைத்து, ரூ.9.98 கோடி என்ற திட்ட மதிப்பையும் வெளியிட்டது.

அதிமுக - பாஜக அந்தர்பல்டி

நீண்ட வற்புறுத்தலுக்குப் பின்னர், 2004 ஆம்  ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் திமுக அங்கம்  வகித்தபோது, சேது சமுத்திரத் திட்டம் முறையாக அறிவிக்கப்பட்டது. 2005 ஜூலை 2 ஆம் தேதி  இந்தத் திட்டம் வெகுபிரம்மாண்டமாக மதுரையில்  பிரதமர் மன்மோகன் சிங்கால் துவக்கிவைக்கப்பட்டது. இதற்காக ரூ.2,427 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது. 150 ஆண்டுகாலக் கனவுத் திட்டம் தொடங்கப் படுகிறது என்ற மகிழ்ச்சியில் மக்கள் திளைத்திருந்த னர். ஆனால், மதவெறி பாஜகவும் அதிமுகவும் அரசியல் காரணங்களுக்காக இம்மகத்தான திட்டத்தை மண்மூடச் செய்யும் சதித் திட்டத்தில் ஈடுபட்டன. திட்டம் தொடங்கப்பட்ட அன்றைய தினத்தில் தமிழக முதல்வர் என்ற முறையில் துவக்க நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா  அழைக்கப்பட்டும் அவர் நிகழ்ச்சியை புறக்கணித் தார்.  1986 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், தமிழ்நாடு சட்ட மன்றத்தில் சேது சமுத்திர திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டுமென தீர்மானம் நிறை வேற்றினார். 1991 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரசிம்மராவுக்கு இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென கடிதம் எழுதியிருந்தார். 2001 ஆம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டுமென வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை யில் ராமர் பாலம் என்பதற்கு பதிலாக ‘ஆடம்ஸ் பிரிட்ஜ்’ என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வளவுக்கும் பிறகு இத்திட்டம் தொடங்கப்பட்ட நிகழ்வை அரசியல் காரணங்களுக்காக ஜெயலலிதா புறக்கணித்தார். மட்டுமில்லாமல், கடந்த கால வரலாறுகளை மறந்து ‘புனிதமான ராமர் பாலத்தை’ இடிக்க அனுமதிக்க மாட்டோம் என பகிரங்கமாக அறிவித்து சேது சமுத்திர  திட்டத்தை நிரந்தரமாக கிடப்பில் போட ஜெயலலிதா காரணமாக இருந்தார்.

மறுபக்கம், பாஜகவும் இத்திட்டத்தை முடக்கிட சதிகளை மேற்கொண்டது. கடந்த காலங்களில் இத்திட்டத்தை நிறைவேற்ற பல முறை அறிவிப்பு செய்தது பாஜக. 1998 ஆம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சென்னையில் ஏற்பாடு  செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றிய அப்போதைய பாஜக கூட்டணி அரசின் பிரதமர் வாஜ்பாய், சேது சமுத்திரம் திட்டம் நிறைவேற்றப்படும் என ஒன்றிய அரசின் சார்பில் அறிவித்தார். சேது சமுத்திர திட்ட தொடக்க ஆய்வுப் பணிக்காக 5 கோடி ரூபாயை பாஜக அரசின் நிதியமைச்சரான யஷ்வந்த் சின்ஹா 1999 ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்தார். சேது சமுத்திர திட்டம் புத்துயிர் பெற்றிருப்ப தாக அன்றைய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் அருண்ஜெட்லி கூறினார். 2003-ஆம் ஆண்டு கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சத்ருகன் சின்ஹா நாடாளுமன்றத்தில் பாம்பன் தீவிற்கு கிழக்கே ஆதம் பாலம் வழியாக செல்கிற புதிய கடல் வழி பாதை திட்டம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். பாஜக ஆட்சிக் காலத்து அமைச்சர்களாக இருந்த  அருண்ஜெட்லி 09.03.2001 அன்றும், வி.பி.கோயல் 29.10.2022 அன்றும், சு.திருநாவுக்கரசர் 25.10.2022 அன்றும், சத்ருகன் சின்ஹா 23.10.2022 அன்றும், இத்திட்டம் தொடர்பான கோப்புகளில் கையெழுத்து இட்டுள்ளார்கள் (முரசொலி - 27.12.2022).

ஆனால், 2004 ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை இழந்தவுடன் பாஜக தனது நிலையை மாற்றிக் கொண்டு ‘‘நாம் இருக்கும்வரை ராமர் சேதுவை யாரும்  தொட அனுமதிக்க  மாட்டோம்’’ என அத்வானி அதிரடி யாக அறிவித்தார். சேது சமுத்திரத் திட்டத்திற்கு மதச்சாயம் பூசி எப்படியாவது அந்தத் திட்டத்தை தடுத்திட வேண்டும் என பாஜக திட்டமிட்டது. பாஜகவின் சுப்பிரமணியன்சுவாமி, ‘‘மன்னார் வளைகுடா பகுதியில் இலங்கை சென்று சீதையை மீட்பதற்காக ராமர் கட்டிய பாலம் இருப்பதாக இந்துக்கள் நம்புகிறார்கள். அதனால், இந்தப் பகுதி யில் சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறை வேற்றக்கூடாது’’ என்றும், அந்தத் திட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் ராமர் பாலத்தை தேசிய  சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் மத-அடிப்படைவாத நோக்கில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  சுதந்திரத்திற்குப் பின்பு மொத்தம் 6 வழித்தடங்கள் சேதுக் கால்வாய்த் திட்டத்திற்காகப் பரிந்துரை செய்யப்பட்டன. அவற்றில் பாதை எண் 6 என்பது, வாஜ்பாய் தலைமையிலான பாரதிய  ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசினால் பரிசீலிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது. இதைத்தான், சேது சமுத்திரத் திட்டம் ராமர் பாலத்தை சேதப்படுத்திவிடும் என்பதால் இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட தடை விதிப்பதாக 2007-ஆம்  ஆண்டில் உச்சநீதிமன்றம் தடை உத்தரவுகளைப் பிறப்பித்தது.  இந்தத் திட்டத்திற்காக 2005 முதல் ரூ. 800 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டிருந்த நிலை யில், உச்சநீதிமன்றத்தின் தடையால் சேது சமுத்திரத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

உச்சநீதிமன்றத் தடையை தொடர்ந்து சுமார் 15 ஆண்டு காலம் இத்திட்டம் கேட்பாரற்று இருந்த  நிலையில், நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்  ராமர் பாலம் குறித்து விளக்கம் அளித்திருந்த நிலையில் உடனடியாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் திட்டம் நிறைவேற வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்றியவுடன் பதறியடித்து சுப்பிரமணியன்சுவாமி அவசர அவசரமாக உச்சநீதிமன்றத்தில் தனது வழக்கினை உடனடியாக விசாரிக்க வேண்டுமெனவும் ராமர் பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டுமெனவும் வற்புறுத்தியுள்ளார். விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிப்பது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; இந்த விவகாரத்தில்  ஒன்றிய அரசு மிகவும் கவனமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ராமர் பாலம் பற்றி தெளிவான விளக்கத்தை தெரிவித்த ஒன்றிய அரசு,  உச்சநீதிமன்றத்தில் எதிர்நிலை எடுப்பதன் நோக்கம் என்ன என்பதே கேள்வி.

சங்பரிவாரத்தின் சதி

‘ராமர் பாலம்’ / ’ராம் சேது’ என பாஜகவும், சங் பரி வாரங்களும் குறிப்பிடுவது ‘ஆதம் பாலம்’ எனப்படும் சுண்ணாம்புப் பாறைத் தொடர்ச்சியைத்தான்.  இது இயற்கையாக உருவானது தானே ஒழிய, பாஜக சொல்வதுபோல 15,000 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட பாலமாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதுதான் அறிவியல் அறிஞர்களின் கருத்தாக உள்ளது. ஒன்றிய அமைச்சரும் தற்போது, ‘சுண்ணாம்புத் திட்டுகளால் ஆன இந்தப் பாலம் கட்டப்பட்டதுதான் என உறுதியாகச் சொல்ல முடியாது’ என்று கூறிவிட்டார். இருப்பினும், ஒன்றிய அரசு  நீதிமன்றத்தில் பம்மாத்து செய்வது ஏன்? தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுவிடக் கூடாது என்பதன் உள்நோக்கம் தானே. அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதை இந்தியக் குடிமக்களின் கடமையாக இந்திய அரசியல்  சட்டம் வகுத்திருக்கிறது. ஆனால், மத்தியில் ஆளும்  பாஜக அரசோ, அறிவியலுக்குப் புறம்பான மதவாத  மூடநம்பிக்கைகளை மக்கள் மனதில் விதைத்து அரசியல் செய்கிறது.  புராணங்களில் நாயகராக சித்த ரிக்கப்பட்ட ஒரு கடவுள் 15000, 18,000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தார் என்றும், எந்த ஒரு தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத அந்தக் காலத்தி லேயே அவர் வானரப் பட்டாளத்தின் உதவியோடு ஆழ்கடலில் பாலம் கட்டித் தனது மனைவி சீதையை மீட்டார் என்றும், அதுதான் உண்மை வரலாறு  எனவும் அடித்துச் சொல்கிறது. அறிவியல் சிந்தனைகள் வளர்ச்சிபெற்ற இந்தக் காலத்திலும் புராண சித்தரிப்பு கள் ஆளும் அரசினாலேயே நிறுவப்படுவது என்பது  மனித சமுதாயத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும் செயல். 

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது எனப் பொய்யாக நிறுவிட, சங்பரிவாரங்கள் ஏற்கனவே முயன்று அதில் வெற்றியும் பெற்றன என்பதை உலகமே அறியும். இதற்காக அவை நீதிமன்றம், தொல்லியல் துறை எனப் பல துறைகளை பயன்படுத்தி, ராமர் கோவில் கட்டுவதற்கான உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் பெற்று, இப்போது கட்டியும் முடித்துவிட்டன. இதே பாணியைப் பின்பற்றி சேது சமுத்திரத் திட்டத்தை நிரந்தரமாக மூடிவிட திட்டமிடுகிறது பாஜக. மக்கள் வரிப்பணத்தில் நிறைவேற்றப்படத் தொடங்கிய இந்தத் திட்டத்தை தன்னுடைய மலின மான மதவாத அரசியலுக்காக நிறுத்தியது என்பது தமிழ்நாட்டிற்கு பாஜக செய்த துரோகம். 1860 ஆம் ஆண்டு பேசப்படத் தொடங்கி இந்தத் திட்டம் 163 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படாமல் இருப்பது என்பது மிகப் பெரும் மோசடி.


 

;