articles

img

பாரம்பரிய பட்டுத் தொழிலை பாதுகாத்து நெசவாளர் வாழ்வில் ஒளி ஏற்றுக! - எம்.வீரபத்திரன்

தமிழ்நாட்டின் பாரம்பரிய உடைகளில் மிகவும் முக்கியமான உடை என்றால் அது பட்டு தான்.  திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் பட்டு உடைகளை உடுத்துவதை பெருமையாக கருதுகின்றனர். காட்டன், சில்க் என எத்தனையோ சேலை வகைகள் வந்துவிட்டாலும் பட்டுசேலைக்கு என்று தனி இடம் உண்டு. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் பட்டுசேலை அணிவது ஏழைப் பெண்களுக்கு எட்டாக் கனியாக இருந்தது.   இதை பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளிவந்த காஞ்சிவரம் படம் மிக தெளிவாக எடுத்துப் பேசும். அதோடு உழைப்பின் மதிப்பையும் இந்த படம் பேசியது.  உலக அளவில் பட்டின் தாயகமாக சீனாதான் கருதப்படுகிறது.  ஏறக்குறைய மூன்றாயிரம் ஆண்டுகளாகச் சீனர்கள் பட்டு ஆடைகளை நெய்து, உடுத்தி வருகின்றனர். இவர்களுக்கு இணையாக  பழங்காலத்திலேயே தமிழர்கள் பட்டுத்துணிகளை நெய்து வருகின்றனர். 1598ஆம் ஆண்டில் ஈஸ்ட் இந்தியா கம்பெனி துவங்கப்பட்ட பின் ஆங்கிலேயேர்கள்,  அவர்களின் ஆடைகளை இறக்குமதி செய்தனர். ஆனால் அவர்கள் நினைத்து போல் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்தன. இதனால்  உள்ளூர் நெசவாளர்களின் கட்டைவிரலை வெட்டி அவர்களின் வியாபாரத்தை வளர்த்த கொடூரங்களும் இந்தியாவில் நடந்துள்ளது. 

விசைத்தறி வந்த பின்பு...

பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு விசைத் தறிகள் அதிகரித்தவுடன் பட்டு நெசவுத் தொழில் பல நெருக்கடிகளை சந்தித்தது. இதை சமாளிக்கும் விதமாக 1985 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு  கைத்தறி ஒதுக்கீடு என்ற சட்டத்தை நிறைவேற்றியது.  அதில் பட்டுச் சேலை உற்பத்தி உள்ளிட்ட 11 ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடாது; மீறினால், கைத்தறி துறை அமலாக்க பிரிவு விசைத்தறி கூடங்களில் ஆய்வு நடத்தி குற்றவியல்  சட்டத்தின் கீழ் விசைத்தறி உரிமையாளர்களை கைது செய்யலாம் என்ற நடைமுறை இப்போதும் உள்ளது. ஆனால் இந்த சட்டத்தை யாரும் பயன்படுத்துவது கிடையாது. இந்த சட்டம் முறையாக பின்பற்றப்படாததால் தமிழ்நாட்டில் தற்போது பட்டுத்தொழில் படுத்த படுக்கையாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் பட்டுச்சேலையில் வரும் வடிவங்கள் விசைத்தறியில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் கைத்தறியில் செய்யப்படும் பட்டுச்சேலைகளை விட குறைந்த விலையில் விசைத்தறியில் செய்யப்படும் பட்டுச்சேலைகள் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்படுகின்றன.

இதனால் கைத்தறி பட்டுச்சேலைகள் தேங்கிக்கிடக்கின்றன. மேலும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமல் பட்டினி கிடக்க வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. நெசவாளர்கள் வேலை இன்றி பல்வேறு வேலைகளுக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 1953 ஜனவரி 4 ஆம் தேதி நெசவாளர் துயர் துடைத்திட அண்ணா தலைமையில் தமிழகம்முழுவதும், வீதி, வீதியாக கைத்தறி துணிகளை கொண்டு சென்று விற்பனை செய்தனர். அதுபோன்ற சூழ்நிலை நெசவாளர் வாழ்க்கையில் தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு, பட்டு நெசவாளர்களுடைய வாழ்க்கையை மீட்டெடுக்க வேண்டும், பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய இந்த தொழிலை பாதுகாத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985-ன் படி விசைத்தறியில் பட்டு சேலை ரகங்களை உற்பத்தி செய்வதை தடுத்து நிறுத்திட வேண்டும். ஒன்றிய, மாநில கைத்தறி துறை சார்ந்த அலுவலர்கள் பிராந்திய அமலாக்க அலுவலரும் முறையாக கண்காணித்து சட்டத்தை மீறும் விசைத்தறி உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு, விற்பனையாகாமல் தேங்கியுள்ள பட்டு சேலைகளை கோ ஆப் டெக்ஸ் மற்றும் தனியார் விற்பனையாளர்கள் பட்டு சேலைகளை வாங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். நெசவாளர்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்கிட திங்களன்று (ஜுலை10) ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம்  முன்பு நெசவாளர்களின் போராட்டம் நடைபெறுகிறது.