மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் ஓர் எதிர்க்கட்சி உறுப்பினர். அதுவும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். கம்யூனிஸ்ட்டுகள் என்றாலே எப்படியாவது அவதூறுகளைப் பரப்பி, சேறு வாரி இரைப்பது தினமலர் உள்ளிட்ட முதலாளித்துவ ஊடகங்களுக்கும் ஊதுகுழல்களுக்கும் வாடிக்கை. அத்தகைய அவதூறுகள் திடீர் திடீரென முளைத்து சமூக ஊடகங்களிலும் ஆர்எஸ்எஸ் - பாஜக அடியாட்களால் பரப்பப்படுவதும், உண்மை விபரங்கள் தெரியாமல் சமூக ஊடகவாசிகளாக இருக்கும் சிலர் அதைப் பகிர்வதும் தொடர்ந்து நடக்கிறது.
ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவரும் செய்யாத சாதனைச் சிகரங்களை எட்டியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் என்றால் மிகையல்ல.
2024-ல் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் கண்துடைப்பாக அவர் மக்களை சந்திக்கிறார் என்று கூட திட்டமிட்டே சிலர் பரப்புகிறார்கள் என்ற போதிலும், 2019 மே மாதம் மதுரை தொகுதியில் வெற்றி பெற்று பொறுப்பேற்றது முதல் கடந்த 50 மாத காலமாக அயராத பணியில் சு.வெங்கடேசன் எம்.பி., களத்தில் நிற்கிறார் என்பதே எவராலும் மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மை. அதற்கு அடிப்படைக் காரணம், அவர் படித்த, வளர்ந்த, பணியாற்றிக் கொண்டிருக்கிற மார்க்சிய இயக்கம் எனும் மாபெரும் பள்ளியில் கற்பிக்கப்பட்ட பாட்டாளி வர்க்கச் சிந்தனையே ஆகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான சு.வெங்கடேசன் எம்.பி., கடந்த நான்காண்டு காலத்தில், கட்சியின் உதவியோடு, கட்சித் தோழர்களின் அர்ப்பணிப்புமிக்க உழைப்போடு, மதுரை மாவட்ட ஆட்சி நிர்வாகத்தின் - அதிகாரிகளின் துணையோடு; எதிர்க்கட்சி உறுப்பினர் என்ற போதிலும் ஒன்றிய அரசின் பல துறைகளில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளிடம் இடைவிடாமல் தொடர்பு கொண்டும், தாமதமாகும் போதெல்லாம் நளினமாகவும், அரசியலாகவும் கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன் வைத்தும் இரவு - பகல் பாராமல் தொடர்ந்து கண்காணித்தும் மதுரை நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்காக பெற்றுத் தந்த திட்டங்களும் செயல்படுத்திய நடவடிக்கைகளும் பெரும் சாதனைகள் தான்.
அந்தப் பணிகளில் 1. கோவிட் காலப் பணிகள், 2. கோவிட் காலத்தில் அன்னவாசல் திட்டம், 3. மாற்றுத் திறனாளிகளுக்கான மெகா முகாம்கள், 4. நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து செய்யப்பட்ட பணிகள், 5. மெகா கல்விக்கடன் முகாம்கள், 6. தொகுதியின் அனைத்து கிராமங்கள் மற்றும் வார்டுகளிலும் மக்கள் சந்திப்பு, 7. பல நூற்றுக்கணக்கான பட்டாக்கள் பெற்றுக் கொடுத்தது, 8. மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக்குழு தொடர் கூட்டங்கள், 9. தொகுதி மக்களுக்கான தொடர் மருத்துவ உதவி, 10. ரயில்வே திட்டங்களை மதுரைக்கு உறுதி செய்தது, 11. மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்ட வேலைநாட்களை அதிகரித்து பெற்றுத் தந்தது, 12. போட்டித் தேர்வர்களுக்கு மாபெரும் படிப்பு மையம் - ஆகியவற்றை பிரதானமாக பட்டியலிடலாம்.
1. கோவிட் காலப் பணிகள்
2019 - 2020 காலத்தில் உலகமே கோவிட் பிடியில் சிக்கியது. மக்களின் உயிர் காப்பதே அப்போதைய பிரதானப் பணி. தானே கோவிட்டில் சிக்கிய போதிலும் மக்களோடு மக்க ளாக களத்தில் நின்றார் சு.வெங்கடேசன் எம்.பி., அவரது அதிகபட்ச கவனக்குவிப்பு, மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் இருந்தது. நாடாளு மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ஒன்றிய பாஜக அரசு 2020-ல் நிறுத்துவதாக அறிவிப்பதற்கு முன்பு கிடைத்த ரூ.5 கோடியையும் முழுக்க முழுக்க கோவிட்டிலிருந்து மக்களைக் காக்கும் மருத்துவ தேவைகளுக்காகவே ஒதுக்கீடு செய்தார். வெண்டிலேட்டர்கள் முதல் மதுரை அரசு மருத்துவமனைக்கு தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களையும் பெறுவதற்காக 84 விதமான பணிகள் திட்டமிடப்பட்டு முழுமையாக அந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
2. கோவிட் காலத்தில் அன்னவாசல் திட்டம்
கோவிட் நிலைமை மிக மோசமடைந்த சூழலில், மோடி அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தியது. மக்களின் பிரச்சனைகளை, துயரத்தை எப்படித் தீர்ப்பது என கையறு நிலை ஏற்பட்ட போது, உயிரைக் காப்பாற்றுவதும், அவர்களது பசியைப் போக்குவதுமே உடனடிப் பணி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது. அந்த அடிப்படையில் சு.வெங்கடேசன் எம்.பி.யின் முன் முயற்சியில் உருவானதுதான் மதுரை அன்ன வாசல் திட்டம். பல்லாயிரக்கணக்கான மக்களின் பசி தீர்த்தது அன்னவாசல். ஒன்றிய அரசின் நிதி கிடைக்காத போதிலும் மதுரை மக்களின் பட்டினி யைப் போக்க பலரிடமும் நிதி கேட்டு கையேந்தினார் நாடாளுமன்ற உறுப்பினர். பல ஆயிரங்களும் சில லட்சங்களுமாய் குவிந்த அந்தத் தொகை, தினந்தோறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், சிஐடியு உள்ளிட்ட மக்கள் இயக்கங்களின் அர்ப்பணிப்புமிக்க தோழர்களின் உழைப்பால் பல்லாயிரக்கணக்கான உணவுப் பொட்டலங்களாக மாறின. கோவிட் மரணங்களில் பட்டினி மரணங்கள் சேராமல் தடுத்தது மாமதுரையின் அன்னவாசல்.
3. மாற்றுத் திறனாளிகளுக்கான மெகா முகாம்கள்
மாற்றுத் திறனாளிகளுக்காக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் நடத்திய மெகா முகாம்களை யாராலும் எட்டிப்பிடிக்க முடியாது என்பதே உண்மை. இந்தியாவிலேயே பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதிக்கு அடுத்து, சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்வியல் உபகரணங்களை பெற்றுக் கொடுத்த மாபெரும் இயக்கம் இது. எத்த னை குடும்பங்களின் கண்ணீர் துடைக்கப்பட்டிருக் கிறது! மாற்றுத் திறனாளியாக உள்ள தனது மகளை, மகனை, பெற்றோரை, உற்றாரை முகாம்களுக்கு அழைத்து வந்து, சு.வெங்கடேசன் எம்.பி.யையும் அவரது சக தோழர்களையும் கண்ணீர் மல்க கைகூப்பிய கரங்கள் எத்தனை எத்தனை! ‘‘இது உங் களுக்கு இயல்பாகவே கிடைத்திருக்க வேண்டிய உரிமைதான். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறை யில் அதற்கான வழியை தேடிக்கொடுத்த கருவி மட்டுமே நான்’’ என்று, எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தாலும் ஒன்றிய அரசிடமிருந்து எப்படியெல் லாம் திட்டங்களை எளிய மக்களிடம் கொண்டு சேர்க்க உழைப்பைச் செலுத்த முடியும் என்பதற்கு ஒரு புதிய முன்மாதிரியை உருவாக்கினார் அவர்.
4.நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து செய்யப்பட்ட பணிகள்
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2019 - 2020ல் ரூ.5 கோடி, 2021-22ல் ரூ.2 கோடி, 2022-23ல் ரூ.5 கோடி, 2023-24ல் ரூ.5 கோடி கிடைக்கப்பெற்றுள்ளது. 2020-21ல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை மோடி அரசு, கோவிட்டைக் காரணம் காட்டி நிறுத்தியதால் அது கிடைக்கவில்லை. மொத்தம் கிடைக்கப்பெற்ற 17 கோடி ரூபாயில் 2023 ஜூலை வரை கிட்டத்தட்ட மொத்த நிதியும் மிக முறையாக செல வழிக்கப்பட்டுள்ளது. 2019-20ல் 84 பணிகள், 2021-22ல் 27 பணிகள், 2022-23ல் 70 பணிகள், 2023-24ல் 72 பணிகள் என மொத்தம் 253 பணிகள் திட்டமிடப் பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அவற்றில் பெரு வாரியான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றில் பிரதானமாக பள்ளிக் கட்டிடங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பள்ளிக் கட்டிடங்கள் உள்ளிட்ட கல்விச் செலவுக்குத்தான் முதன்மை முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து மருத்துவமனை கட்டிடங்கள், ரேசன் கடைகள், சமுதாயக்கூடங்கள் உள்ளிட்ட பணிகளுக்கு பிரதானமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கான திட்டமிடல், களத்தில் பணியாற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சி ஊழியர்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளை கவனத்திற்கு கொண்டுவந்ததன் அடிப்படையில், ஆய்வு மேற் கொள்ளப்பட்டு பொருத்தமான பணிகளுக்கு நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5. மெகா கல்விக்கடன் முகாம்கள்
அநேகமாக நாட்டிலேயே மதுரை தொகுதியில்தான் மிகப்பெரிய அளவில் கல்விக் கடன் முகாம்கள் நடந்துள்ளன என்று குறிப்பிட லாம். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் பங்கேற்ற கல்விக்கடன் முகாம்களை சு.வெங்கடேசன் எம்.பி., முன் முயற்சி மேற்கொண்டு, அனைத்து வங்கிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி முன்னோடி வங்கியின் தலைமையில் ஏற்பாடு செய்தார். உயர்கல்விக்குச் செல்வது கானல் நீர் என்று கருதியிருந்த ஆயிரக் கணக்கான ஏழை, எளிய, நடுத்தர வர்க்க குடும்பங்களின் பெற்றோர்கள் அந்த முகாம்களில் வெளிப்படுத்திய உணர்ச்சிப் பெருக்கை வார்த்தை களில் வடிக்க முடியாது. 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இதுவரை 500 கோடி ரூபாய் கல்விக்கடன் இந்த முகாம்களில் அளிக்கப்பட்டு அவர்கள் உயர்கல்வி நிலையங்களில் பயின்று வரு கிறார்கள்; தமிழ்நாட்டில் கடந்த ஒரு ஆண்டில் ஒட்டுமொத்தமாக அளிக்கப்பட்ட கல்விக்கடனில், மதுரையில் இந்த முகாம்கள் மூலம் அளிக்கப்பட்டது. 10 சதவீதம் என்பது அவ்வளவு எளிதாக நிகழ்த்தப் பட்ட சாதனை அல்ல.
6.தொகுதியின் அனைத்து கிராமங்கள் மற்றும் வார்டுகளிலும் மக்கள் சந்திப்பு
மதுரை நாடாளுமன்ற உறுப்பினரின் மேற்கண்ட மாபெரும் பணிகளின் மற்று மொரு பிரம்மாண்ட தொடர்ச்சியே, தொகுதியின் அனைத்து கிராமங்கள் மற்றும் வார்டுகளிலும் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கம். இந்த மக்கள் சந்திப்பு இயக்கத்திற்காக சு.வெங்கடேசன் எம்.பி., செலவழித்தது 14 மாதங்கள். மதுரை தொகுதியில் மொத்தம் உள்ள 124 ஊராட்சிகள், ஒரு மாநகராட்சி, ஒரு நகராட்சி, 2 பேரூராட்சிகளில் இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் நடந்து முடிந்துள்ளது. தனது தொகுதியின் அனைத்து ஊராட்சிகளுக்கும், மாநக ராட்சியின் அனைத்து வார்டுகளுக்கும் நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினரான இவர், எந்த வொரு கூட்டத்திலும் இதை தனது தனிப்பட்ட சாதனை என்று ஒரு முறை கூட குறிப்பிடவில்லை. நாடாளு மன்ற உறுப்பினரின் அழைப்பின் பேரில் தேதிகள் தீர்மானித்து, சம்பந்தப்பட்ட ஊராட்சியில், கட்சி வேறுபாடின்றி ஊராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில், மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் அமர்ந்திருக்க; முன்கூட்டியே களத்தில் மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்களும் தோழமைக் கட்சி களின் தோழர்களும் முகாம் பற்றிய தகவல்களை அறிவித்து நேரடியாக மனுக்களை கொண்டுவரச் செய்து, ஒவ்வொரு மனிதரையும் நேரில் சந்தித்து அவரது பிரச்சனைகளை ஆய்வு செய்து, மனுக்கள் மீது அந்த இடத்திலேயே சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்கச் செய்த மாபெரும் பணி அசாத்தியமானது என்று கூறலாம்.
இந்த முகாம்களில் கண்ணீர் துடைக்கப்பட்ட எளிய மனிதர்களின் கதைகள்தான் எத்தனை எத்தனை! விதமான விதமான பிரச்சனைகள். பட்டா இல்லை என்பதில் துவங்கி, ஒட்டுமொத்த அடிப் படை வசதி சார்ந்த பிரச்சனைகள்; கைவிடப்பட்ட முதி யோர்களின் துயரம்; கணவனை இழந்த நூற்றுக் கணக்கான பெண்களின் கண்ணீர்; கல்வி, வேலைக் கான வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் எண்ணற்ற இளைஞர்களின் தேடல்; ஒவ்வொரு ஊரிலும் நிலவும் பொதுவான பிரச்சனைகள்... என ஒன்றிய அரசு சார்ந்த, மாநில அரசு சார்ந்த, மாவட்ட நிர்வாகம் கவனிக்க வேண்டிய, உள்ளூர் மட்டத்தில் உள்ளாட்சி மன்றங்கள் கவனிக்க வேண்டிய ஒவ்வொரு பிரச்சனையையும் ஆய்வு செய்து அதிகபட்ச தீர்வுகளை உறுதி செய்தன இந்த முகாம்கள். மதுரை புறநகர் மாவட்டத்தில் கிராமப்புறங் களில் நடைபெற்ற 27 முகாம்களில் மொத்தம் 2474 மனுக்கள் முதன்மையான மனுக்களாக இறுதி செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டன. இதே எண்ணிக்கையிலான பிற மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்காக அனுப்பப் பட்டன. மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில், மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 87 வார்டுகளை ஒருங்கிணைத்து 6 நாட்களில் 11 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் வந்த 2361 மனுக்கள் உடனடியாக மாநக ராட்சியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
7. நூற்றுக்கணக்கான பட்டாக்கள்
மேற்கண்ட மக்கள் சந்திப்பு இயக்கங்களில் பிரதானப் பிரச்சனைகளில் தாங்கள் வாழும் வீடுகளுக்கு, கையில் வைத்துள்ள துண்டு துக்காணி இடத்திற்கு பட்டா இல்லை என்பது முதன்மையாக இருந்தது. அந்த மனுக்கள் மீது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. அநேகமாக மதுரை தொகுதி முழுவதும் ஆயிரத்திற்கும் மேற் பட்ட பட்டாக்களுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு, அதிகாரிகளால் தொடர்ந்து பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரே நாளில் மேலூரில் 100 பட்டாக்கள் ஒரு முகாமில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
8. மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக்குழு தொடர் கூட்டங்கள்
மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழு என ஒன்று இருப்பதே, மதுரையில் அதன் தலைவர் என்ற முறையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டி செய்திகள் வெளி யானதற்கு பின்புதான் மக்களுக்கு தெரிந்தது என்றால் மிகையல்ல. ஆறு முறை இந்தக் கூட்டம் நடந்துள்ளது. மாவட்டம் முழுவதும் நடக்கும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மக்கள் பிரதிநிதிகளின் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுவது இதன்மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
9. தொகுதி மக்களுக்கான தொடர் மருத்துவ உதவி
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு மாதத்திற்கு தனது தொகுதிக்குட்பட்ட மூன்று நபர்களுக்கு மிகப்பெரிய அறுவை சிகிச்சை போன்ற மருத்துவ சிகிச்சைக்கான உதவிகளுக்கு பரிந்துரை செய்யலாம். அப்படி, கடந்த 50 மாதங்களில் 150 பேருக்கு இதய அறுவை சிகிச்சை உள்பட முக்கிய சிகிச்சைகள் அளிக்க பரிந்துரை செய்து அவர்களது உயிர் பாதுகாக்கப்பட்டுள்ளது.
10. ரயில்வே திட்டங்களை மதுரைக்கு உறுதி செய்தது
ரயில்வே துறைக்கான நிலைக்குழு உறுப்பின ராகவும் இருப்பதை சு.வெங்கடேசன் எம்.பி., லாவகமாக தனது தொகுதி தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டார் எனக் குறிப்பிடலாம். 387 கோடி ரூபாய் செலவில் மதுரை ரயில் நிலையத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஒன்றிய அரசு உறுதி செய்துள்ளது. மதுரை - போடி அகல ரயில் பாதைக்காக போராடியதும் மார்க்சிஸ்ட் கட்சிதான். அந்தப் பாதையில் ரயில் விடப்படுவதை உறுதி செய்ததும் மார்க்சிஸ்ட் கட்சி தான். முதல் போராட்டத்தை நடத்தியது மார்க்சிஸ்ட் கட்சியின் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.லாசர்; இரண்டாவது போராட்டத்தை நடத்தி உறுதி செய்தது மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.
11. மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்ட வேலைநாட்கள் அதிகரிப்பு
நாடாளுமன்ற உறுப்பினரின் மக்கள் சந்திப்பு பயணம் கடந்த ஆண்டு துவங்கிய போது தொகுதியின் கடைக்கோடி கிராமங்களில் நேரில் ஆய்வு செய்தார். குறிப்பாக கொட்டாம்பட்டி ஒன்றியப் பகுதி கிராமங்களில் விவசாயத்தைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லை. தொழிற்சாலைகள் இல்லை. மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டமே அந்த மக்களின் பட்டினியை போக்கிக் கொண்டிருக் கிறது. ஆண்டுக்கு நூறு நாள் வேலை கிடைப்பதை உறுதி செய்யுங்கள் என்ற கோரிக்கை பிரதானமாக வந்தது. அதிகாரிகளிடமும் அரசு நிர்வாகத்திடமும் சு.வெங்கடேசன் எம்.பி., மேற்கொண்ட தொடர்ச்சி யான தலையீடுகளின் விளைவாக நூறு நாட்களும் வேலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் களுக்கான சம்பளமும், கூடுதல் தொழிலாளர்கள் வந்தால் அவர்களுக்கான கூடுதல் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காக புதிய பணிகளை சம்பந்தப் பட்ட ஊராட்சிகள் மேற்கொள்வதும் தற்போது நடக்கிறது. இது மிக முக்கிய மாற்றம் ஆகும்.
12. இளம்தலைமுறை போட்டித் தேர்வர்களுக்கு மாபெரும் படிப்பு மையம்
மதுரை மாநகரின் மையப் பகுதி யில், போட்டித்தேர்வு எழுதும் மாணவர் களுக்காகவே பிரத்யேகமாக ஒரு படிப்பு மையம் சு.வெங்கடேசன் எம்.பி.யின் முன் முயற்சியில், மாநகராட்சி நிர்வாகத்தின் உதவியோடு துவக்கப் பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இது உண்மையிலேயே வேறு எங்கும் இல்லாத மற்று மொரு முன்மாதிரி ஆகும். மேலூர் கல்லூரி யிலும் இதேபோன்ற போட்டித் தேர்வுகள் படிப்பு மையத்தை ரூ.35லட்சம் செலவில் உருவாக்கு வதற்கு திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் எண்ணற்றப் பணிகள் நிறைவேறி யுள்ளன. ஒவ்வொரு பணியும், சம்பந்தப்பட்ட மக்களின் உணர்வில் கலந்திருக் கின்றன. இடைவிடாமல் செயல்படுகிறது மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம். எப்போதும் அங்கே மக்கள் கூட்டம் குவிந்தே இருக்கிறது. அவர் களின் தேவைகளை நிறைவேற்ற; மனுக்களைப் பதிவேற்ற; உரிய துறைகளுக்கு கொண்டு செல்ல... என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் அவரது தோழர்களும் அவர்களை இயக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் களத்தில் சுழல்கிறார்கள், ஓய்வின்றி!