articles

img

பிரதமர் மோடியும் இந்திய பொருளாதாரமும்! - அ.அன்வர் உசேன்

இந்தியா போன்ற பல மாநிலங்களும் அவற்றின் தனித்துவ பிரச்சனைகளும் கொண்ட ஒரு பரந்த தேசத்தின் தலைவர் பொருளாதாரம் மற்றும் சமூகம் குறித்து ஆழமான அறிவாற்றலும் புரிதலும் கொண்டிருக்க வேண்டும் என்பது இன்றிய மையாதது! குறிப்பாக உலகப் பொருளாதாரம் பல்வேறு சித்தாந்தங்கள் மற்றும் கோட்பாடுகளிடையே முரண்பாடுகளை வெளிப்படுத்தும் கால கட்டம் இது! இந்தியாவின் பிரதமர்கள் மட்டுமல்லாது பல  எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் அத்தகைய அறி வாற்றலையும் புரிதலையும் வெளிப்படுத்தினர். ஆனால் பிரதமர் மோடியின் பொருளாதார பிரச்சனை கள் குறித்த புரிதல் இந்தியாவின் தேவைகளுக்கு சற்றும் பொருத்தமற்றதாக உள்ளது.

இந்திய அரசியல் தலைவர்களின்  பொருளாதார புரிதல்

ஜவஹர்லால் நேரு இந்தியாவை நவீன தேசமாக மாற்ற வேண்டும் என வேட்கை கொண்டிருந்தார். தொழில்மயத்துக்கு அடிகோலினார். இதற்காக முதலில் அமெரிக்காவின் உதவி பெற முயன்று அது தோல்வியில் முடிந்ததால் சோவியத் யூனியனின் உதவி பெற்றார். இதன் விளைவாக பல உருக்காலைகள், எண்ணெய் சுத்தகரிப்பு ஆலைகள், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், பாரத மிகு மின் நிலை யம், மும்பை ஐ.ஐ.டி. போன்றவை உருவாகின. விவ சாயமும் நவீனப்படுத்தப்பட்டது. நேரு சோசலிச அம்சங்களும் முதலாளித்துவ அம்சங்களும் கலந்த கலப்பு பொருளாதாரம் எனும் கோட்பாடை அமலாக்க முயன்றார். அதில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக் காட்டிய இ.எம்.எஸ், பி.டி.ரணதிவே, ஜோதிபாசு போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் இந்திய சூழலில் சோசலிச பொருளாதாரம் குறித்த மாற்று விமர்ச னத்தை முன்வைத்தனர். அவர்கள் மிக ஆழமான பொருளாதார கோட்பாடுகளுக்கான புரிதலை வெளிப் படுத்தினர். நிலப்பங்கீடு, ஏக போகங்களை கட்டுப் படுத்தும் தொழிற் கொள்கைகள், பொதுத்துறையின் முக்கியத்துவம் ஆகியவை கம்யூனிஸ்ட் தலைவர்கள் முன் வைத்த கொள்கைகளின் அடிப்படையாக இருந்தன.  நேருவுக்கு பின்னர் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, வங்கிகள் தேசியமயம் போன்ற சில வரவேற் கத்தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். எனினும் பொருளாதாரக் கொள்கைகளின் முரண்பாடு கள் வெளிப்பட்ட பொழுது அவற்றை எதிர்கொள்ள மேலும் பாதகமான முதலாளித்துவ கொள்கைகளை பின்பற்ற தொடங்கினார். எனினும் பொருளாதாரம் குறித்து அவருக்கு இருந்த அறிவாற்றல் கணிச மானது. அவருக்கு பின்னர் பிரதமராக பதவி வகித்த  ராஜீவ் காந்தி இந்தியாவின் பொருளாதார பய ணத்தை முற்றிலும் எதிர்திசையில் கொண்டு செல்ல எத்தனித்தார். தனியார்மயத்தின் விதைகள் தூவப்பட்ட காலம் அது! எனினும் ராஜீவ் காந்தி அரசாங்கத்தில் பல சிறந்த பொருளாதார நிபுணர்கள் இருந்தனர் என்பது மறுக்க இயலாது.  

பின்னர் பதவி வகித்த மன்மோகன் சிங் எத்தகைய பொருளாதார நிபுணர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவர் நிதி அமைச்சராகவும் பின்னர் பிரதமரா கவும் பதவி வகித்த காலத்தில் உலகப் பொருளாதா ரம் நாசகர விளைவுகளை உருவாக்கிய நவீன தாராள மய கொள்கைகள் பக்கம் சாய்ந்தது. அதுவே இந்தி யாவுக்கும் பொருந்தும் என மன்மோகன் சிங் மதிப்பிட்டார். இதன் விளைவாக இடதுசாரிகளுக்கும் அவரது அரசுக்கும் கடும் முரண்பாடுகள் உருவா கின. அதே சமயத்தில் மன்மோகன் சிங் அவர்களின் பொருளாதார அறிவாற்றலை எவரும் குறைத்து மதிப்பிட இயலாது. மாநிலங்களை வழிநடத்திய பல  தலைவர்களும் பொருளாதார அறிவாற்றலையும் புரிதலையும்  வெளிப் படுத்தினர். தமிழ்நாட்டின் தொழில்மயத்தில் கம்யூ னிஸ்டுகளின் உதவியுடன் செயல்பட்ட காமராஜர் (இந்தியாவின் பொருளாதார சூழல்களை உள்வாங்கி கொள்ள முனைவர் பட்டங்கள் தேவை இல்லை என நிரூபித்தவர் காமராஜர்)/ ஏக போக முதலாளிகளுக்கு எதிராக மாநில உரிமைகளை முன்வைத்த அறிஞர் அண்ணா (அவர் எழுதிய பணத்தோட்டம் எனும் நூல் ஏகபோகங்களுக்கு எதிராக மாநிலத்தின் உரி மைக்கான வலுவான குரல்)/ விவசாயத்தை மையமாக வைத்து பொருளாதார கொள்கைகளை முன்வைத்த சரண்சிங்/ பசுமைப்புரட்சிக்கும் பின்னர் பஞ்சாப்பின் தொழில்மயத்துக்கும் அடித்தளமிட்ட  பிரகாஷ் சிங் பாதல்/ மகாராஷ்டிராவின் முன்னேற்றத்துக்கு முக்கிய பங்காற்றிய சரத்பவார்/ கர்நாடகாவின் முன் னேற்றத்துக்கு அடித்தளமிட்ட தேவராஜ் அர்ஸ் போன்ற பலரை குறிப்பிடலாம். இவர்கள் எல்லாம் இடதுசாரி கள் அல்ல. எனினும் இந்திய மக்களின் தேவைகள் குறித்தும் அவர்கள் தாங்கள் சரி என நினைத்த பொரு ளாதார கொள்கைகள் பற்றியும் ஆழமான புரிதலைக் கொண்டிருந்தனர். 

இலவசப் பயணமும்  மெட்ரோ பயணமும்

ஆனால் பிரதமர் மோடியின் பொருளாதார புரிதல் மிகவும் குறைவானது என்பது மட்டுமல்ல; ஒவ்வொரு இந்தியரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கக் கூடியது.  பத்திரிக்கைகளை சந்திப்பது மோடிக்கு வேப்பங்காய் போன்ற கசப்பான ஒன்று. எனவே தன்னை கேள்விக ளால் மடக்க வாய்ப்பில்லாத ‘பெய்டு’ பத்திரிகையா ளர்களை  தற்போது சந்தித்துக் கொண்டிருக்கிறார். அப்படி சமீபத்தில் மூன்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டியில் அவர் அளித்த பதில்கள் இந்தியாவின் பொருளாதாரம் பற்றிய  அவரது புரிதலின் இயலாமையை வெளிப்படுத்து கிறது. பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் குறித்து கீழ்கண்டவாறு மோடி கூறுகிறார்: “நீங்கள் நகரத்தில் மெட்ரோவை உருவாக்குகி றீர்கள். சிலர் தேர்தலில் வெற்றிபெற பெண்களுக்கு இலவச பயணம் என கூறுகின்றனர். பெண்கள் இலவச பேருந்து பயணம் என்பது மெட்ரோ இயங்கு வதை கடுமையாக பாதிக்கும். அதன் லாபகரமான இயக்கம் பாதிக்கும். மெட்ரோ திட்டம் தேசத்தின் முன்னேற்றத்துகாக உருவாக்கப்பட்டது. பெண்கள் இலவசப் பயணம் காரணமாக பாதி பெண்கள் மெட்ரோ வை பயன்படுத்துவதை நிறுத்தி விடுகின்றனர். தேசத்தின் முன்னேற்றம் என்ன ஆவது?”

இதே கருத்தை சில நாட்களுக்கு முன்பு எல்&டியின் தலைவர் கூறியிருந்தார். தெலுங்கானாவில் பெண்கள் இலவச பேருந்து பயணம் காரணமாக எல்&டி உரு வாக்கிய மெட்ரோவில் நட்டம் ஏற்படுவதாகவும் எனவே தங்களது நிறுவனம் அந்த திட்டத்திலிருந்து வில குவதாகவும் அவர் அறிவித்தார். கார்ப்பரேட்டுகளின் குரலை கனக்கச்சிதமாக மோடி பிரதிபலிக்கிறார். ஒரு நவீன முதலாளித்துவ நிறுவனம் எத்தகைய வடிவ போட்டியையும் சமாளிக்கும் வகையில் வணிக கோட்பா டுகளை உருவாக்குவதுதான் அதன் திறமைக்கு அழகு. போட்டியே இல்லாமல் லாபம் சம்பாதிக்க நினைப்பது என்ன போட்டி முதலாளித்துவ அணுகு முறை? இலவசப் பயணம் மேற்கொள்ளும் பெண்கள் யார்? சாதாரண உழைப்பாளி பெண்கள்தான். சிறு/ குறு நிறுவனங்களில் பணியாற்றுவோர்/ வீட்டு வேலைகளுக்கு செல்பவர்கள்/ பெரும் அங்காடிகளில் பணியாற்றும் பெண்கள் இவர்கள்தான் இலவச பய ணத்தால் பலன் பெறுகின்றனர். 

ஆனால் மெட்ரோவில் பயணிக்கும் பெண்கள் யார்? மென்பொருள் நிறுவனங்கள்/ விமான நிலையம்/ பெரும் மருத்துவமனைகள்/கல்லூரிகளில்  ஆசிரியர்க ளாக பணியாற்றுவோர் தான் மெட்ரோவில் அதிக மாக பயணிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் நகர பேருந்துகளில் பயணிப்பது இல்லை. மெட்ரோவுக்கு முன்னால் இவர்கள் பெரும்பாலும் ஆட்டோ அல்லது வாடகை கார்களில் பணியிடங்களுக்கு செல்வர். எனவே மெட்ரோவால் ஆட்டோ மற்றும் வாடகை கார்கள்  வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர் என் றால் மிகையாகாது. ஆனால் இலவச பேருந்து பயணம் மெட்ரோவை பாதித்தது என்பதற்கான அறிவியல் அடிப்படையிலான தரவுகள் இல்லை. மேலும் மெட்ரோ கட்டணங்கள் பேருந்து கட்டணங்களைவிட அதிகம். எனவே சாதாரண உழைப்பாளி பெண்கள் பெரும்பாலும் மெட்ரோவில் பயணிப்பது இல்லை. இந்த அம்சங்களை ஆராயாமல் பிரதமர் மாநில அர சாங்கங்களின் திட்டத்தால் தேச முன்னேற்றம் பாதிக் கப்படுகிறது எனக்கூறுவது எவ்வளவு கேலிக்குரியது! அதே பேட்டியில் பிரதமர் மேலும் கூறுகிறார்: “இலவச பேருந்து பயணத்தால் போக்குவரத்து நெருக்கடிகள் அதிகமாகின்றன. சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது”. கட்டண பேருந்துகள் இயக்குவதாலும் போக்கு வரத்து நெருக்கடியும் சுற்று சூழலும் பாதிக்கப்படு கின்றன. எனவே அதனையும் நிறுத்த வேண்டும் என பிரதமர் சொல்வாரோ? இந்த கூற்றுகளின் பின்னால் உள்ள அறியாமை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. 

சமத்துவம் எனில் அனைவரும் ஏழைகள் என்பதா?

உங்கள் ஆட்சியில் பொருளாதார அசமத்துவம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளதே என்ற கேள்விக்கு பிரதமர், “அப்படியானால் எல்லோரும் ஏழைகளாக இருந்துவிட வேண்டும் என சொல்கி றீர்களா?” என எதிர்க் கேள்வி கேட்கிறார்.  பொருளாதார அசமத்துவம் ஏன் உருவாகிறது; அது எத்தகைய விளைவுகளை உருவாக்குகிறது என்பது குறித்து சிறிதளவு புரிதல் இருக்கும் எவரும் இத்த கைய பதிலை சொல்லமாட்டார்கள். மிக மோசமான பொருளாதார சுரண்டலில் ஈடுபடுபவர்களை “வளங்க ளையும் சொத்துக்களை சிருஷ்டி செய்பவர்கள்” என கூறும் ஒருவரிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க இயலும்?  இந்திய பொருளாதாரம் ஏன் சிதைந்துள்ளது? மக்கள் ஏன் இத்தகைய வாழ்வாதார துன்பங்களில் உள்ளனர்? இந்த கேள்விகளுக்கு பதில் மிகவும் எளிமையானது. பொருளாதாரம் குறித்து எந்த ஒரு புரிதலும் இல்லாத ஒருவர் பிரதமராக இருக்கும் பொழுது இவையெல்லாம் மிகவும் சாத்தியமான ஒன்றே! 

;