“ஒரு நாடு-ஒரு தேர்தல்” என்பதை நடைமுறைப் ்படுத்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு ஆகும் வீண்செலவுகள் தவிர்க்கப்படுவதை பெரும் வெற்றியாக ஒன்றிய அமைச்சர்கள் கூறுகிறார்கள். 1951-52 முதலாவது நாடாளுமன்றத் தேர்தலுக்கு 10 கோடி ரூபாய்தான் செலவானது. 1971 ஐந்தாவது நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசாங்கத்தின் தேர்தல் செலவு சுமாராக இதே அளவில்தான் தொடர்ந்தது. பிறகு 1989-ஆம் ஆண்டு 9-ஆவது நாடாளு மன்றத் தேர்தலில்தான் முதன்முறையாக தேர்தல் செலவு ரூ.100 கோடியைக் கடந்தது. 2004-ஆம் ஆண்டு 14-ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறை யாக ரூ.1000 கோடியைக் கடந்தது. 2014-ஆம் ஆண்டு 16-ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் செலவு ஒரே பாய்ச்சலாகச் சாதனை நிகழ்த்தியது. அர சாங்கத்தின் செலவு ரூ.3870 ஆனது. 2019 நாடாளு மன்றத் தேர்தலில் ஒன்றிய அரசின் தேர்தல் செலவு ரூ.8,966 கோடி ஆனது.
மாநில அரசுகளே செலவு
மேலே குறிப்பிடப்பட்டவை எல்லாம் நாடாளு மன்றத் தேர்தல் நடத்துவதற்காக ஒன்றிய அரசுக்கு ஏற்பட்ட செலவுகளாகும். மாநில சட்டமன்றங்க ளுக்கான தேர்தல் செலவுகளை மாநில அரசுகள் நிர் வகிக்கின்றன. அது எவ்வளவு என்பதற்கு சரியான கணக்குகள் இல்லை. நாடாளுமன்றத்திற்கும் சட்ட மன்றங்களுக்கும் தேர்தல்களை ஒருமித்து நடத்தினால் செலவில் கணிசமான குறைவை உண் டாக்க முடியும் என்று வாதிடுகிறார்கள். இவர்களுடைய அடிப்படையான கருத்து, சட்டமன்றத் தேர்தலுக்கு நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சமமான தொகையை மாநில அரசுகள் செலவழிக்கின்றன என்பதாகும்.
வாக்குப் பதிவு இயந்திரங்கள்
இவ்வாறு இருந்தால் தேர்தலின் மொத்தச் செலவில் 60 சதவீதம் வாக்குப் பதிவு இயந்திரங்க ளுக்கு ஆகும். இதே இயந்திரங்கள்தான் சட்டமன்றத் தேர்தலுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. வாக்குப் பதிவு இயந்திரத்தின் ஆயுள் காலம் 15 வருடங்க ளாகும். 2019-இல் வாங்கியவற்றை 2024 நாடாளு மன்றத் தேர்தலுக்கும் பயன்படுத்தலாம். ஆனால், நாடாளுமன்ற-சட்டமன்றத் தேர்தலை ஒருமித்து நடத்தினாலோ இதே அளவு வாக்குப் பதிவு இயந்தி ரங்கள் புதிதாக வாங்க வேண்டியது வரும். காரணம், சட்டமன்றத் தேர்தல்களுக்கு பிரத்தியேகமாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாங்க வேண்டியது வரும். இந்த வகையில் ரூ.5000 கோடியிலிருந்து 6000 கோடி வரை அதிகச் செலவு உண்டாகும்.
அறிவிலித்தனமான வாதம்
நாடாளுமன்ற-சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து உள்ளாட்சித் தேர்தலையும் ஒருமித்து நடத்துவது என்று தீர்மானித்தால் அதற்கும் சேர்த்து கூடுத லான வாக்குப் பதிவு இயந்திரங்களும், மற்றவற்றுக்கு மாக அதிகச் செலவு ஆகும். சுருக்கமாகச் சொல்வ தென்றால், தேர்தல்களை ஒருமித்து நடத்துவதன் விளைவாகத் தேர்தல் செலவுகள் குறையும் என்ற வாதம் சுத்த அறிவிலித்தனமாகும். தேர்தல் செலவுகள் அதிகரிக்கின்றன. அதே சமயம் வாக்காளர்களின் எண்ணிக்கையும் அதி கரிக்கிறது. முதலாவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் 17 கோடியே 32 இலட்சம் வாக்காளர்கள் இருந்தனர் என்றால் 16-ஆவது தேர்தலில் 83 கோடியே 41 இலட்சம் வாக்காளர்கள். சராசரியாக வாக்காளர் செலவைக் கணக்கிட்டால் முதலாவது பொதுத்தேர்தலில் ஒரு வாக்காள ருக்கான செலவு 60 பைசாவாகும். அது படிப்படி யாக உயர்ந்து 2009-இல் 15 ரூபாய் 54 பைசாவாக ஆனது. விலைவாசி உயர்வைக் கணக்கிட்டால் உண்மையான செலவில் அதிகரிப்பு ஏற்பட்டிருக்க வில்லை. ஆனால், சராசரியாக செலவு 2014-இல் இது 46 ரூபாய் 40 பைசா ஆனது. 2019-இல் 98 ரூபாய் 4 பைசாவாக ஆனது. இதற்குக் காரணம் வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான மாற்றம் ஆகும். ஒருங்கிணைந்த தேர்தல் வந்துவிட்டால் இந்த வகைக்கான செலவு மேலும் செங்குத்தாக உயரும்.
வளர்ச்சிக்குத் தடையாக இருக்குமா?
சிலர் மற்றொரு வாதத்தை முன்வைக்கிறார்கள். நாடாளுமன்ற-சட்டமன்றங்களின் தேர்தல்களை ஒருமித்து நடத்தாமல் இரண்டு சமயங்களில் தனித்தனியே நடத்தினால் வளர்ச்சிப் பணிகளை நிறுத்திவைக்க வேண்டியது வருகிறது. தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால் பிறகு கட்டுப்பாடுகள் நடை முறைக்கு வருமல்லவா? இரண்டு தேர்தல்களையும் ஒருமித்து நடத்தினால் தேர்தல் காலத்தைப் பாதி யாகக் குறைக்கலாம் என்று இவர்கள் கூறுகிறார்கள். புதிய திட்டம் அறிவிப்பதற்கு மட்டுமே தடை உண்டா கும். பழைய திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தடை இல்லை. இதுவொன்றும் வளர்ச்சிக்குத் தடையாக இருக்காது. ஒன்றிய அரசு பின்பற்றுகிற கொள்கை கள்தான் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளன. இதுவல்லாமல் தேர்தல் காலத்துக் கட்டுப்பாடுகள் அல்ல.
தப்பிக்கும் குறுக்கு வழியாக...
உண்மையான பிரச்சனை தேர்தலில் அரசாங்கத்தின் செலவு அல்ல; ஆளும் கட்சிகள் திரட்டிய ஊழல் பணத்தின் தாராளச் செலவுகள்தான். உலகில் மிகவும் செலவுகள் செய்யும் தேர்தல் இன்று இந்தியாவில்தான் நடைபெறுகிறது. இந்தியா வில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் சேர்ந்து ரூ.55,000 கோடி முதல் 60,000 கோடி வரை செலவழித்ததாகக் கணக்கு. அதேசமயம், 2016-இல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு ஆன மொத்தச் செலவு ரூ.45,000 கோடி. தில்லியை மையமாகக் கொண்டு செயல்படுகிற சென்டர் ஃபார் மீடியா ஸ்டடீஸின் ஆய்வில் வெளிப்பட்ட செய்தி இது. 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதிக்கு சராசரியாக செலவு 100 கோடி ரூபாயாகும். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் சென்டர் ஃபார் மீடியா ஸ்டடீஸ் கணக்குப்படி மொத்த பிரச்சா ரச் செலவு ரூ.30,000 கோடி. 2014-இல் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு செலவழித்தது போல் இரண்டு மடங்கு தொகை 2019-இல் மோடி தேர்தலுக்காகச் செலவழிக்கப்பட்டது. 2024-இல் இதைவிடப் பல மடங்கு செலவழிக்கப்போகிறார்கள். சென்டர் ஃபார் மீடியா ஸ்டடீஸ் அறிக்கையின்படி கடந்த 20 ஆண்டுக் காலத்திற்கிடையே 1998-க்கும் 2019-க்குமிடையே தேர்தல் செலவு 9,000 கோடி ரூபாயிலிருந்து 60,000 கோடி ரூபாயாக அதிகரித்தது. அதாவது ஆறு மடங்கு.
பாஜகவின் பாக்கெட்டுக்கு...
தனியார் தேர்தல் செலவின் இந்தப் பிரம்மாண்ட மான அதிகரிப்புக்குப் பின்னால் பல அம்சங்கள் உண்டு. முதலாவது, பாஜக அரசு உருவாக்கிய தேர்தல் பந்திரங்களாகும். ஏகபோக முதலாளிகள் தங்கள் விருப்பம் போல் அரசியல் கட்சிகளுக்கு ரகசியமாகப் பணம் வழங்குவதற்கான ‘வழியாக’ இது மாறியது. ரகசியமாக என்றாலும் ஆளும் கட்சியினர்க்கு யார் யாருக்குத் தந்தது என்பதைச் சரியாக அறிந்து கொள்ளலாம். அதனால், தேர்தல் பத்திரங்கள் படி வசூலித்த பணத்தின் பெரும் பகுதியும் பாஜகவின் பாக்கெட்டுக்குப் போய்விட்டது. இரண்டாவது, கோடீஸ்வரர்கள் பெரும் எண்ணிக்கையில் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிடுகிறார்கள். பணக்காரர்கள்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்கிற நிலைமை வந்துவிட்டது. மூன்றாவது, தேர்தல் பிரச்சாரத்தில் விளம் பரத்திற்கு ஏற்பட்டிருக்கிற முக்கியத்துவம். இப்போது டிஜிட்டல் மீடியாவிலும் பெருமளவில் பணம் முடக்கப்படுகிறது. சென்டர் ஃபார் மீடியா ஸ்டடீஸ் அறிக்கையின்படி விளம்பரத்திற்காக ரூ.20,000 கோடி முதல் ரூ.25,000 கோடி வரை செலவழிக்கப்பட்டது. வாக்காளர்க ளுக்குப் பணமும், உதவிகளும் ரூ.12,000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரை ஆகும். லாஜிஸ்டிக்குக்கு ரூ.3000 கோடி முதல், ரூ.6000 கோடி வரை ஆகும். தேர்தல் கமிஷனின் அதிகாரப்பூர்வச் செலவுகள் ரூ.10,000 கோடியிலிருந்து ரூ.12,000 கோடி வரை ஆகும். அனாமத்துச் செலவுகள் ரூ.5000 கோடி முதல் ரூ.6000 கோடி ரூபாய்.
பாஜகவின் தேர்தல் ஊழல்கள்
2019 நாடாளுமன்றத் தேர்தல் செலவில் பாதி அளவு பாஜகவினுடையது. 1998-இல் பாஜகவின் மொத்த தேர்தல் செலவு 1800 கோடி ரூபாய். இது மொத்த தேர்தல் செலவில் 20 சதவீதம் வரும். 2019 தேர்தலில் சுமார் 25,000 கோடி ரூபாய் பாஜக செலவழித்தது. இது மொத்த தேர்தல் செலவில் 40 முதல் 45 சதவீதம் வரும். 2009-இல் மொத்த தேர்தல் செலவில் 40 சதவீதம் காங்கிரஸ் தேர்தல் செலவாக இருந்தது (ரூ.8000 கோடி). 2019-இல் காங்கிரஸின் தேர்தல் செலவு ரூ.8250 கோடி வரும். 2009-இல் செலவு செய்த அவ்வள வும் மொத்தம் தேர்தல் பிரச்சாரத்திற்குத் தேவைப் படும் தொகையில் 20 முதல் 25 சதவீதமே வரும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பணத்தில் குளித்து ஒரு சர்வகால சாதனை நிகழ்த்துவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. மேற்குறிப்பிட்ட செய்தி 2019 தேர்தலை ஒரு முக்கிய மான திருப்பமாக மதிப்பிடுகிறது. மக்களிடமிருந்து பணம் வசூலித்து தேர்தலை எதிர்கொள்வதற்குப் பதிலாக கார்ப்பரேட் நிதியின் அடிப்படையிலான தேர்த லுக்கு இந்திய ஜனநாயகம் மாறிவிட்டது. தேர்தலில் கருப்புப் பணத்தின் பெரும் முக்கியத் துவமானது, வேட்பாளர்களின் பணச்செலவுக் கட்டுப்பாடு சம்பந்தமான தேர்தல் ஆணையத்தின் சட்டங்களையெல்லாம் கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கிறது. இதுதான் அடிப்படையிலேயே திருத்தப்பட வேண்டிய விஷயம்.
நன்றி: “சிந்தா” மலையாள வார இதழ் (16.9.2023),
தமிழில்: தி.வரதராசன்