பாசிசம்: நிதி மூலதனத்தின் கடைசி அடைக்கலம் - ஹர்கிஷன் சிங் சுர்ஜித்
பாசிசத்தின் மீதான வெற்றியின் 50 ஆண்டுகளை முன்னிட்டு பீப்பிள்ஸ் டெமாக்ரசி பத்திரிகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச்செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் அவர்கள் எழுதிய கட்டுரையை இங்கே மீண்டும் வெளியிடுகிறோம். இக்கட்டுரை மே 7, 1995 இதழில் வெளியானது.
“பாசிசம் என்பது உழைக்கும் மக்கள் மீதான மூலதனத்தின் மிகக் கொடூரமான தாக்குதலாகும்; “பாசிசம் என்பது கட்டுப்படுத்த முடியாத தேசியவாதமும் கொள்ளைப் போரும் ஆகும்; “பாசிசம் என்பது வெறித்தனமான எதிர்ப்பும் எதிர்ப்புரட்சியும் ஆகும்; “பாசிசம் என்பது தொழிலாளி வர்க்கத்திற்கும் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் மிகக் கொடிய எதிரியாகும்.” - கம்யூனிஸ்ட் அகிலத்தின் 7ஆவது மாநாட்டில் ஜார்ஜி டிமிட்ரோவின் உரை
இன்னும் நினைவில் பசுமையாக இருக்கும் ஒரு காட்சி, மே 9, 1945 அன்று பெர்லினில் உள்ள ரீச்ஸ்டாக் கட்டடம் மீது செஞ்சேனையின் இரண்டு வீரர்கள் ஏறிய புகைப்படம். இந்த மூன்றாம் ரைக்கின் கோட்டையின் மீது அரிவாள் சுத்தியல் கொடியை ஏற்றியதன் மூலம், உலகில் இதுவரை இருந்த மிகக் கொடூரமான மற்றும் வெறுக்கப்பட்ட அமைப்பை குறிக்கும் நாஜி போர் இயந்தி ரத்தின் தோல்வியை அறிவித்தனர். பெர்லினை நோக்கிய அணிவகுப்பை வழிநடத்திய சோவியத் செஞ்சேனையின் பிரிவுடன் இணைந்து, முழு உலகமும் ஹிட்லரின் போர் வீரர்களை வெற்றி கொண்டதை மகிழ்ச்சியுடன் கொண்டாடியது. போரில் 2.3 கோடி வீரர்கள் இறந்தனர், 3.5 கோடி பேர் காயமடைந்தனர். நாஜி படை யெடுப்பின் பெரும் தாக்கத்தை ஏற்ற சோவியத் யூனியன் மட்டும் 2 கோடியே 3 லட்சம் மக்களை இழந்தது. போலந்து 60 லட்சம் மக்களையும், யுகோஸ்லாவியா 17 லட்சம் மக்களையும் இழந்தது. பிரான்ஸ் 6,00,000 பேரையும், அமெரிக்கா 4,05,000 பேரையும், பிரிட்டன் 3,75,000 பேரையும் இழந்தன. ஜெர்மானியர்கள் 60லட்சம் மக்களை இழந்தனர். இறுதியாக, இக்காலத்தில் பல்வேறு தேசியங்களைச் சேர்ந்த 80 லட்சம் மக்கள் சிறை முகாம்களில் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். ஹிட்லரின் ஆட்சியின் இந்த அநீதியும் மிரு கத்தனமும் பாசிசத்தின் உண்மையான தன்மையை வெளிப்படுத்துகிறது. எனவே, ஹிட்லர் வீழ்ந்த போது உலகம் மகிழ்ச்சியைக் கொண்டாட போதுமான காரணங்கள் இருந்தன.
பாசிசத்தின் வரலாற்றுச் சூழல்
அடிக்கடி கேட்கப்படும் கேள்வி என்ன வெனில், பாசிசம் மிகவும் பிற்போக்கான ஏக போக மூலதனத்தின் பிரிவுகளின் ஆட்சியைக் குறிக்கிறது என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, உலகம் இத்தகைய பேரழிவைத் தவிர்த்திருக்க முடியுமா? பாசிசம் ஆட்சிக்கு வருவது அவசியமான வரலாற்று விளைவா? என்பது தான். இந்த கேள்விகளுக்கான பதில் ஜெர்மனி மற்றும் இத்தாலியில் பாசிசம் எழுச்சி பெற்ற வரலாற்றுச் சூழலில் உள்ளது. ஏகாதிபத்தியம் சோசலிச சோவியத் யூனியனின் இருப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. நேரடித் தலையீடு மற்றும் உள்நாட்டுப் போரைத் தூண்டும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், தொழிலாளி வர்க்கத்தின் புதிய அரசை அழிக்க புதிய சூழ்ச்சிகளை அரங்கேற்ற வேண்டியிருந்தது. சோவியத் யூனியன் மற்றும் சோசலிச அமைப்பின் தோற்றம் உலகில் தீவிர மாற்றத்தை ஏற்படுத்தியது. தேசிய விடுதலைப் போராட்டங்கள், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்கள், சுரண்டல் அமைப்பை முடி வுக்குக் கொண்டுவர தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்கள் ஆகியவை சோவியத் யூனியனை நம்பகமான நட்பு நாடாகவும் ஊக்கமூட்டும் ஆதாரமாகவும் கண்டன. மறுபுறம், ‘கம்யூனிச எதிர்ப்பு’ என்பது பாசிச சித்தாந்த அடிப்படையின் இன்றியமை யாத கூறாக இருப்பதால், ஏகாதிபத்திய, சக்தி கள் சோவியத் யூனியனை ஒழிப்பதற்கான ஒரு வலுவான ஆயுதமாக பாசிசத்தைக் கண்டன. எனவே ஏகாதிபத்தியம், எழுச்சி பெற்று வரும் பாசிச அச்சுறுத்தலை எதிர் கொள்வதைத் தவிர்த்தது. 1928ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆறா வது மாநாட்டில், கம்யூனிஸ்ட் அகிலம், முத லில் அதன் ஆபத்தை சுட்டிக்காட்டியது. “ஓர ளவு வளர்ச்சியடைந்த வடிவத்தில், பாசிசப் போக்குகள் மற்றும் பாசிச இயக்கத்தின் விதை கள் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் காணப் படுகின்றன” என்பதை அது குறிப்பிட்டது.
புரட்சிகரமாக மாறிக் கொண்டிருந்த உழைக்கும் மக்களை எதிர்கொள்ள
1930களில் முதலாளித்துவ உலகம் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உழைக்கும் மக்கள் புரட்சிகர மாக மாறிக்கொண்டிருந்த நிலையில், முதலாளித்துவ வர்க்கம் இதை எதிர்கொள்ள பாசிசத்தை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தது. கம்யூனிஸ்ட் அகிலத்தின் 7ஆவது மாநாடு குறிப்பிட்டபடி: “ஏகாதிபத்திய வட்டாரங்கள் நெருக்கடி யின் முழுச் சுமையையும் உழைக்கும் மக்களின் தோள்களில் சுமத்த முயற்சிக் கின்றன. அதனால்தான் அவர்களுக்கு பாசிசம் தேவைப்படுகிறது.” “பலவீனமான நாடுகளை அடிமைப் படுத்துவதன் மூலமும், காலனித்துவ ஒடுக்கு முறையை தீவிரப்படுத்துவதன் மூலமும், போரின் மூலம் உலகை மீண்டும் பிரித் தெடுப்பதன் மூலமும் சந்தைப் பிரச்சனை யைத் தீர்க்க அவர்கள் முயற்சிக்கின்றனர்.”
பயங்கரவாத சர்வாதிகாரம்
மாநாடு மேலும் குறிப்பிட்டது: “பல நாடுகளில், குறிப்பாக ஜெர்மனியில், இந்த ஏகாதிபத்திய வட்டாரங்கள், தொழி லாளி வர்க்கம் தீர்மானமாக புரட்சியை நோக்கித் திரும்பும் முன், தொழிலாளி வர்க்கத்திற்கு தோல்வியை ஏற்படுத்தி, பாசிச சர்வாதி காரத்தை நிறுவுவதில் வெற்றி பெற்றன.” கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழுவின் பதின்மூன்றாவது அமர்வு ஏற்கனவே பாசிசத்தை இவ்வாறு வர்ணித்திருந்தது: “மிகவும் பிற்போக்கான, மிகவும் தேசிய வெறி மற்றும் மிகவும் ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் கூறுகளின் திறந்த பயங்கர வாத சர்வாதிகாரம்.”
மிருகத் தனமான வெறுப்பைத் தூண்டும் தீவிர தேசியவாதம்
7ஆவது மாநாட்டிற்கு தனது அறிக்கை யில், பாசிசம், அதன் வளர்ச்சி மற்றும் அவசியத்தை பகுப்பாய்வு செய்து, தோழர் ஜார்ஜி டிமிட்ரோவ் கூறினார்: “பாசிசம் என்பது நிதி மூலதனத்தின் சக்தியே ஆகும். இது தொழிலாளி வர்க்கத் திற்கும், விவசாயிகள் மற்றும் அறிவுஜீவி களின் புரட்சிகரப் பிரிவுகளுக்கும் எதிரான பயங்கரவாத பழிவாங்கும் அமைப்பாகும். வெளியுறவுக் கொள்கையில், பாசிசம் என்பது மிகவும் கொடூரமான வடிவத்தில் பிற நாடுகளுக்கு எதிரான மிருகத்தனமான வெறுப்பைத் தூண்டிவிடும் தீவிர தேசியவாத மாகும்.” மேலும் அவர் பாசிசத்திற்கு எதிராக தொழி லாளி வர்க்கத்தின் ஐக்கிய முன்னணியின் முழக்கத்தையும், பாசிசத்திற்கு எதிரான ஐக்கிய முன்னணியின் உருவாக்கத்தையும் வலியுறுத்தினார். மக்கள் மீது பாசிசத்தின் செல்வாக்கிற் கான காரணங்களை கண்டறியும் டிமிட்ரோவ், “பாசிசம் - மக்களின் மிக அவசர மான தேவைகள் மற்றும் கோரிக்கைகளை மிகைப்படுத்தி அழைப்பதன் மூலம் மக்களை ஈர்க்க முடிகிறது” என்று சுட்டிக்காட்டி னார். அதே நேரத்தில் பாசிசத்தை புரட்சிகர மானதாகச் சித்தரித்து, “புரட்சி மீது மக்கள் கொண்ட நம்பிக்கையையும், சோச லிசத்திற்கான அவர்களது விருப்பத்தையும் சுரண்டிக்கொள்கிறது” என விவரிக்கிறார். “பாசிசம் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தை, அமைதியின்றி இருக்கும் மக்கள் திரளை தாக்கும் கட்சி யாக ஆட்சிக்கு வருகிறது; இருப்பினும் முத லாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக, முழு தேசிய இனங்களின் சார்பாக ஒரு ‘புரட்சிகர’ இயக்கம் போல காட்டிக் கொண்டு அது ஆட்சியைக் கைப்பற்றுகிறது. நியாயமான ஊதியம் வழங்குவதாக உறுதியளித்ததால் அது தொழிலாளர்களை ஈர்த்தது; கடன் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வர, வாடகையை ரத்து செய்ய போன்ற உறுதிமொழிகளால் விவசாயிகளை ஈர்த்தது” எனவும் டிமிட்ரோவ் விளக்குகிறார்.
பாசிச வெற்றிக்கான காரணங்கள்
பாசிசத்தின் வெற்றி தவிர்க்க முடியாததா? ஜெர்மனியைப் பொறுத்தவரை, டிமிட்ரோவ் தெளிவாக “இல்லை” என்று பதிலளிக் கிறார். ஆனால் பாசிசத்திற்கு எதிரான ஒன்றுபட்ட (ஐக்கிய) நடவடிக்கை தேவை என்று, கம்யூனிஸ்டுகள் திரும்பத் திரும்ப முன்வைத்த முன்மொழிவுகளை ஜெர்மா னிய சமூக ஜனநாயகவாதிகள் ஏற்றுக் கொண்டிருந்தால் மட்டுமே இது நடந்திருக்கும். “தொழிலாளி வர்க்கம் தனது இயல்பான நட்பு நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப் பட்டதாலும் பாசிசம் ஆட்சிக்கு வந்தது. சமூக ஜனநாயகவாதிகள் தொழிலாளி வர்க்கத்தின் பெயரால் உண்மையில் விவசாயிகளுக்கு எதிரான கொள்கையைப் பின்பற்றியதால், பாசிசம் விவசாயிகளின் பெரும் திரளை வென்றெடுக்க முடிந்ததால் அது ஆட்சியைப் பிடித்தது” என்றும் விவரிக்கிறார் டிமிட்ரோவ். பாசிச ஆபத்துக்கு எதிராகப் போராடுவது, தேசிய விடுதலைப் போராட்டங்களின் ஒரு பகுதியாக மாறுவது, விவசாயிகள் மற்றும் காலனி நாடுகளில் முதலாளித்துவ வர்க்கத்தின் பங்கை குறைத்து மதிப்பிடும் பிரிவினைவாத அணுகுமுறையிலிருந்து விடுபடுவது போன்றவற்றில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வழிகாட்டுவதில், கம்யூனிஸ்ட் அகிலத்தின் 7ஆவது மாநாடு புதிய திசையை வழங்கியது. உண்மையில், 7ஆவது மாநாட்டிற்குப் பிறகு, இந்திய கம்யூனிச இயக்கம் பிற ஏகாதி பத்திய எதிர்ப்பு சக்திகளுடன் இணைந்து தேசிய இயக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கியதால் பெரும் உத்வேகம் பெற்றது.
பாசிச சக்திகளை பயன்படுத்த நினைத்த ஏகாதிபத்திய நாடுகள்
7ஆவது மாநாட்டிற்குப் பிறகு, உலகெங்கி லும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் பாசி சத்தை அம்பலப்படுத்துவதில் தொடர்ந்து போராட்ட த்தை நடத்தின. சோவியத் யூனியன், பாசிச ஆபத்தை எதிர்த்துப் போராட முன்வந்து, ஏகாதிபத்திய நாடுகளை ஒன்றிணைய கோரிக்கை விடுத்தது. ஆனால் அவர்களது வர்க்க இயல்பு மற்றும் சோவியத் யூனியன் மீதான வெறுப்பைக் கருத்தில் கொண்டு, சோசலிச நாட்டின் வீழ்ச்சியைக் காண அவர்கள் அதிக ஆர்வம் காட்டினர்; மேலும் இந்த நோக்கத்திற்காக பாசிச சக்திகளைப் பயன்படுத்தலாம் என்று நினைத்தனர். இதற்கிடையில், ஹிட்லரின் கீழ் ஜெர்மனி பெரும் படையைத் திரட்டி, போருக்குத் தயா ராகி, இறுதியில் உலக ஆதிக்கத்தைப் பெற முயன்றது. ஹிட்லர் முதலில் தனது படையை தனது பலவீனமான அண்டை நாடுகளுக்கு எதிராக சோதித்தார். பாசிசத்திற்கு எதிராக தங்கள் மக்களை எழுப்பத் தவறிய இந்த நாடு களின் அரசாங்கங்கள், நாஜிப் படைகளின் அணிவகுப்பை தாங்க முடியவில்லை. அவ ரது போர் இயந்திரம் தனது செயல்திறனைக் காட்டிய பிறகும், ஹிட்லர் வெற்றி பெற்ற பிறகும் மட்டுமே அவர் தனது படையை சோவி யத் யூனியனுக்கு எதிராகத் திருப்பினார்.
கடும் எதிர்ப்பு
அவரது படைகள் மாஸ்கோ வரை அணிவகுத்துச் செல்ல முடிந்தது, அதற்கு மேல் இல்லை. போரின் போக்கையும் முடிவையும் ஸ்டாலின்கிராடு மாற்றியது. ஸ்டாலின்கிராடில்தான் ஹிட்லரின் படைகள் மிகக் கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டி யிருந்தது. சோவியத் யூனியன் மக்கள் தங்கள் நாட்டைக் காப்பாற்றுவதற்காக மட்டுமல்லாமல், மனித குலத்தை பாசிச ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காகவும் வாழ்வா - சாவா போராட்டத்தில் ஈடுபட்ட னர். எனவே அவர்கள் ஒவ்வொரு தெரு வுக்காகவும், ஒவ்வொரு கட்டிடத்திற்காகவும், உண்மையில் ஒவ்வொரு அங்குல நிலத்திற்காகவும் கடுமையாகப் போராடினர். செஞ்சேனை வீரர்கள் காட்டிய இந்த அரிய துணிச்சலும் தைரியமும் ஊக்கமின்றி வர முடியாது. ஒரு காரணத்திற்கான உறுதிப் பாடு இல்லாமல் இந்த ஊக்கம் வெளிப் பட்டிருக்காது - அந்த காரணம் சோசலிசம். சீருடையில் மற்றும் சீருடையின்றி மக்களை தியாகம் செய்ய மற்றும் வெற்றிக்காகப் போராட ஊக்கமளித்தது சோசலிசம்தான். ஸ்டாலின், சோவியத் மக்களையும் செஞ்சேனையையும் வழிநடத்துவதில் வகித்த முக்கியப் பங்கு மறுக்க முடியாதது. வெற்றி 1945 மே 9 அன்று வந்தது. மாஸ்கோவிலிருந்து ஹிட்லரின் படையை விரட்டிய செஞ்சேனை, அவர்களைப் பின்தொடர்ந்து பெர்லினுக்குச் சென்று நாஜி போர் இயந்திரத்தை நசுக்கியது. பெர்லினுக்குச் செல்லும் வழியில், நாஜிப் படையால் கைப்பற்றப்பட்ட அனைத்து பகுதிகளையும் செஞ்சேனை விடுவித்தது.
மிகப்பெரிய மாற்றம்
பாசிசத்தின் மீதான இந்த வெற்றி, தேசிய விடுதலை இயக்கங்களுக்கும் கிழக்கு ஐரோப்பாவில் சோசலிச நாடுகள் நிறுவப்படுவதற்கும் பெரும் உத்வேகம் அளித்ததால் அது மிகவும் முக்கியத்துவம் பெற்றது. பாசிசத்தின் தோல்வி தேசிய விடுதலை இயக்கங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளி வர்க்க இயக்கத்தில் அலை போல தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கனவே உணர்ந்திருந்தன. போருக்குப் பிந்தைய காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் இதற்குச் சான்றாக உள்ளன. போரில் சோவியத் யூனியன் வெற்றி பெற்றது சீன, வியட்நாமிய மற்றும் கொரிய புரட்சிகளின் வெற்றிக்குப் பங்களித்தது. இந்த வளர்ச்சிகள் வர்க்க சக்திகளின் உலகச் சமநிலையை அடிப்படையில் மாற்றி யது. ஏகாதிபத்திய உலக மேலாதிக்க முயற்சி களுக்கு சோசலிச அமைப்பு எதிர் சக்தியாக மாறியது. கம்யூனிச இயக்கமும் பாசிசத்தின் தோல்விக்குப் பிறகு விரைவாக வளர்ந்தது; சிறிய நாடுகளையும் தன் மடியில் சேர்த்துக் கொண்டது. ஒழுங்கமைக்கப்பட்ட கம்யூனிச இயக்கம் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியது.
தற்போது...
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு (தற்போது, 80 ஆண்டுகளுக்கு முன்பு) பாசிசம் நசுக்கப்பட்ட போதிலும், நாம் நமது காவலை தளர்த்த முடியாது. பல்வேறு நாடுகளில், பாசிசம் மீண்டும் தலை யெடுக்கத் தொடங்கியுள்ளது, நவீன-பாசிசக் கட்சிகள் மற்றும் பாசிச போக்குகளைக் கொண்ட கட்சிகள் அரசியல் களத்தில் முனைப்புப் பெறத் தொடங்கியுள்ளன. சோவியத் யூனியனின் சிதைவு மற்றும் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகும், முதலாளித்துவ நெருக்கடி ஆழ மடைந்து, முரண்பாடுகள் தீவிரமடைந்த பின்னணியிலும் இது குறிப்பாக உண்மையாகிறது. பல்வேறு நாடுகளில் ஆளும் வர்க்கங்கள் தேசியவெறி உணர்வு களை தூண்டுவதற்கு துணிகின்றன. ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் நவீன-பாசிசக் கட்சிகளும் குழுக்களும் மீண்டும் தோன்றியுள்ளன. மத்திய கிழக்கு, இந்தியா மற்றும் பிற இடங்களில் மத அடிப்படைவாத சக்திகள் வலுப்பெற்று வருகின்றன. இந்த சக்திகளிடமிருந்து வரும் அச்சுறுத்தலை நாம் புறக்கணிக்க முடியாது. பாசிசத்தின் மீதான வெற்றியின் 50ஆவது ஆண்டு (தற்போது 80ஆம் ஆண்டு) நினைவு தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், மனித நாகரிகம் பல ஆண்டுகளாக அடைந்துள்ள சாதனைகளை அழிக்க முயலும் இந்த சக்திகளுக்கு எதிராக ஒரு சமரசமற்ற போராட்டத்தை நடத்த நம் ஆற்றல்களைத் திரட்ட நாம் நம்மை மீண்டும் அர்ப்பணிக்க வேண்டும். (பீப்பிள்ஸ் டெமாக்ரசி) தமிழில் : எஸ்.பி.ஆர்.