articles

img

முற்றுகையிடப்பட்டு கிடக்கும் நாட்டு மக்கள் - கே.அபிமன்னன்

முற்றுகையிடப்பட்டு  கிடக்கும் நாட்டு மக்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு, கிளர்ச்சிப் பிரச்சா ரம் ஜூன் 10 முதல் 20 வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றப் படிக்கட்டில் விழுந்து விழுந்து வணங்கி, வலது காலை முன்வைத்து நுழைந்தவர் மோடி. 11ஆண்டு காலமாக ஆட்சியில் உள்ள அவர் உழைப்பாளிகளுக்கு எதிராக வும், கார்ப்பரேட் கூட்டத்திற்கு உண்மையான சேவக னாகவும் நடந்துகொண்டு வருகிறார். மோடியின் மக்கள் விரோத ஆட்சியின் அலங்கோ லத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதற்காக கிளர்ச்சிப் பிரச்சாரப் பயணம் நடத்தப்பட்டது. இந்தப் பிரச்சாரம் நகரங்கள், கிராமங்கள் தோறும் நடைபயணமாகவும், வாகனங்கள் மூலம் மக்களைச் சந்தித்து உரையாடலாகவும் நடைபெற்றது.

கிராமங்களில் கண்ட கொடுமைகள்

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பம்ப் செட் மூலம் நடவுப் பணிகள் நடைபெற்றுக்கொண்டி ருந்தன. நடவுப் பணியில் கொஞ்சம் பெண்கள் தான் வேலை செய்துகொண்டிருந்தார்கள். அவர்களே ஆடு மாடுகளையும் மேய்த்துக்கொண்டிருந்தார்கள்.  நடவு வேலையில் மிசினே நடுவதும், நடவு பெண்கள் வேறு வழியின்றி அதைப் பார்த்துக் கொண்டு  இருப்பதுமான நிலை பரவலாக கிராமங்களில் நிலவி வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும்  பெண்களிடம் கேட் டோம்: “அம்மா, உங்களுக்கு வேலை கிடைக்குதா?”  

அதற்கு அவர்கள் பதில் சொன்னார்கள்: “ஆமா,  எங்களுக்கு வேலை கிடைக்குது. அந்தாப் பாருங்க, பொம்பளைங்க ஆடுமாடு மேய்க்குறோம், மிசின் நடவு நடுது. ஆளுங்களுக்குச் சுத்தமாய் நடவு, நாத்து பறி, வரப்பு வெட்டுறது, களைபறி, கருதறுக்கிறது போன்ற எல்லா வேலையும் ஒழிஞ்சுபோச்சுங்க. எல்லா வேலைக்கும் மாத்து வந்திருச்சு

.” நூறு நாள் வேலை திட்டத்தின் அவலம்

அவர்கள் தொடர்ந்து குமுறினார்கள்: “நூறு நாள் வேலையும் ஆறு மாசமாக இல்லை. செஞ்ச வேலைக் கும் பணம் கொடுக்காமல் போட்டுட்டாங்க” என்றனர். “சிவப்புக்கொடிக்காரங்க ஊருக்கு ஊரு போராட் டம் செஞ்சாங்க. அதனால நான் வேலை செஞ்ச பண மும் வங்கியில் ஏறியிருக்கு. நீங்கதானே போராடி னீங்க?”  என்ற அவர்கள், அதோடு நில்லாமல் மேலும் சொன்னார்கள்: “விவசாய வேலை சுத்தமாகவே இல்லாமல் போச்சு. ஏழை மக்கள் எப்படி வாழ்வது என்று தெரியவில்லை. நூறு நாள் வேலையைத் தொடர்ந்து கொடுத்தாலும் அதைக் கொண்டு வேலை செய்து உயிர்வாழலாம். ஆனால் அதில் ஒரு நாளாவது முழுக் கூலியான 200 ரூபாயை வாங்கியதே இல்லை” என உருக்கமாகத் தெரிவித்தனர்.

 மோடியின் வேலை வாக்குறுதி மோசடி

பிரச்சாரத்தின் போது ஒரு கிராமத்து மைதானத்தில் மக்கள் கூடியிருந்தபோது நாங்கள் சொன்னோம்: “மோடி ஆட்சிக்கு வந்தபோது ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுப்பேன் என்று சொன்னார். பதினொரு ஆண்டு காலத்தில் வேலை  கொடுத்திருந்தால் நாட்டில் 22 கோடி இளைஞர்க ளுக்கு வேலை கிடைத்திருக்கும். ஆனால் மோடி வேலை கொடுக்கவே இல்லை.”

இதை மைக்கில் சொன்னபோது அந்த ஊரில் ஒரு பட்டதாரி இளைஞர் வந்து சொன்னார்: “சார், நிறுத்துங்க. மோடியிடம் வேலை கேட்டால் ‘பக்கோடா  போட்டு வியாபாரம் செய்யுங்க’ என்று சொல்கிறார். படித்தவன் சாதாரண பக்கோடா போட்டால் அவ்வ ளவையும் யார் வாங்கப்போகிறார்கள்? ஒன்றும் புரியலை சார். என்னவோ நடக்கிறது. போங்க, வேலையே இல்லை” என்று குமுறினார்.

விலைவாசி உயர்வின் கொடுமை

தற்போது கேஸ் உருளை முதல் உப்பு வரை எல்லா வற்றின் விலையும் உயர்ந்துகொண்டே போகிறது. விலைவாசியைக் கட்டுப்படுத்த வழியே இல்லை. கட்டுமானம், மரச்சாமான் போன்ற துறைகளின் மூலப் பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து விட்டது.  இந்த விலை உயர்வு உழைக்கும் மக்களைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கி வருவதைப் பார்க்க முடிகிறது.

வீட்டுமனைக்கான தவிப்பு

பிரச்சாரக் குழுக்கள் சென்ற கிராமங்களில் மக்கள் மனு கொடுத்தார்கள். அந்த மனுக்களை வாங்கிப் பார்த்தால் இலவச வீட்டுமனை கேட்கும் மனுக்களா கத்தான் இருக்கின்றன.  பல ஆண்டுகளாக மக்கள் குடியிருக்கச் சொந்த மான இடம் இல்லாமல் தலைமுறை தலைமுறையாக இலவச வீட்டுமனை கேட்டு மனுக் கொடுக்கும் கொடுமை இருந்துகொண்டே இருக்கிறது. நாட்டில் ஏழை எளிய மக்கள் ஏரிப்புறம்போக்கு, வாரிப்புறம்போக்கு, மேய்ச்சல் புறம்போக்கு, நீர்நிலை புறம்போக்கு போன்ற இடங்களில் குடிசை போட்டு குடியிருக்கிறார்கள். இவர்களை “குளத்துப் புறம் போக்கில் அமர்ந்துகொண்டு, புறம்போக்கில் கட்டி யுள்ள குடியிருப்புக் குடிசைகளை இடிக்கவேண்டும்” என்று நீதிமன்றங்கள் ஆணை இடுகின்றன.  இது வேடிக்கையா? வேதனையா? கோவில் பெய ரில் உள்ள இடங்களில் மக்கள் வீடு கட்டி குடியி ருந்தால் அதை ஆட்சியாளர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆயிரம் ரூபாய் மதிப்பு கூட இல்லாத குடிசையை இடிக்க ஐந்தாயிரம் ரூபாய் செலவு செய்து  புல்டோசரைக் கொண்டுவந்து குடிசையைக் குப்புறத் தள்ளுகிறார்கள். இப்படிக் கொடுமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

மக்களின் கோபத்தை  எழுச்சியாக மாற்றுவோம்

இந்த பிரச்சார இயக்கத்தில் ஒன்று தெளிவாகத் தெரிய வந்தது. கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் வாழும் மக்கள் மிக கடுமையான பொருளாதார தாக்குதல்களால் முற்றுகையிடப்பட்டு உள்ளனர். இதற்கு அடிப்படைக் காரணம் ஆட்சியாளர்களின் நவீன தாராளமய  கொள்கைகளே ஆகும். இதை மேலும் மேலும் மக்களிடம் எடுத்துச் செல்வோம். மக்களை அணி திரட்டுவோம்! கட்டுரையாளர் : சிபிஎம் தஞ்சாவூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்