articles

img

இந்திய பொதுவுடமை இயக்கத்தின் ஆதி விதை தோழர் சிங்காரவேலர் - மதுக்கூர் இராமலிங்கம்

சிங்கார வேலனைப் போல் சிந்தனைச் சிற்பி 
எங்கேனும் கண்டதுண்டா?
பொங்கிய சீர்திருத்தம் பொலிந்ததும் அவனால் 
பொய் புரட்டறியாமை பொசிந்ததும் அவனால்
சங்கம் தொழிலாளர்க் கமைந்ததும் அவனால்
தமிழர்க்குப் புத்தெண்ணம் புகுந்ததும் அவனால்
செங்கதிர் ஒளிபோல் அறிவில் தெளிந்தவன்
திங்களின் ஒளிபோல் அன்பில் குளிர்ந்தவன்

தோழர் சிங்கார வேலரை பாவேந்தர் பாரதிதாசன் இவ்வாறு செந்தமிழால் சிறப்பித்துள்ளார். நூறாண்டு கடந்து வாழும் வரலாறாக வழிகாட்டிக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா சென்னையில் நடந்த மாநாடு ஒன்றில் “சிங்காரச் சென்னையை சிங்கார வேலரின் சென்னையாக மாற்றுவோம்” என்று சங்கநாதம் செய்தார். இது அலங்காரத்திற்காக சொல்லப்பட்ட வார்த்தை அன்று. சென்னை ஊதாரி களின் உல்லாசபுரி அல்ல, உழைப்பவர்களின் தலைநகரம் என்ற பொருள் பொதிந்த வார்த்தைகள் இவை.

இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் ஆதி விதை களென கருதத்தக்கவர்கள் முசாபர் அகமது, சிங்கார வேலர், எஸ்.ஏ.டாங்கே ஆகியோர். சிங்காரவேலர் ஒரு தனித்துவமான சிந்தனையாளர். உலகத் தத்து வங்களை உள்வாங்கி மார்க்சியமே மனிதகுலத்தின் வழிகாட்டி என்பதை தனது எழுத்தாலும் பேச்சாலும் ஓங்கி உரைத்தவர். பகுத்தறிவு, சமூக நீதி, பொதுவு டமை எனும் விழுமியங்களின் சங்கமச் சாரத்தை தமிழகத்தில் முதன் முறையாக முன்மொழிந்த தலைவர்களில் ஒருவர். 

உழைப்பவர்க்கே உலகம்

வள்ளலாரால் தருமமிகு சென்னை என்று பாடப்பட்ட சென்னை மாநகரில் 1860ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் நாள் பிறந்தார். 1946ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் தன்னுடைய 85ஆவது வயதில் காலமா னார் என்பது அவருடைய காலக் கணக்கு கூறும்  வரலாறு. ஆனால் அவர் வாழ்ந்த காலம் முழுவதும் உழைப்பவர்க்கே உலகம் உரியது என்ற பொது வுடமை புது உலகம் படைக்க உழைத்தார் என்பதே அவரது பெருமைமிகு வரலாறு.  இந்திய வரலாற்றில் பல முதலுக்கு முதல் அவரே. முதன்முறையாக மேதினத்தை கொண்டா டிய பெருமை அவரைச் சேரும். 14.7.1889ல் பாரிஸ் நகரில் நடந்த இரண்டாவது தொழிலாளர் அகிலத்தின் முதல் மாநாட்டில் பங்கேற்றவர்கள் சிக்காகோவில் நடந்த மேதின போராட்டத்தின் நினைவாக 1.5.1890 முதல் மே தினத்தை ஒரு உலக பெருவிழாவாக தொழிலாளர்கள் கொண்டாட வேண்டும் என்று அறை கூவல் விடுத்தனர். 1.5.1927ல் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் மே தினத்தை கொண்டாடியது. 1926ல் என்.எம்.ஜோஷி, எஸ்.வி.காட்டே, என்.எஸ். மிராஜ்கர் ஆகியோரால் மேதினம் கொண்டா டப்பட்டது. 

ஆனால் இதற்கு முன்பே 1.5.1923ல் சிங்கார வேலரால் சென்னையில் மே தினம் கொண்டாடப் பட்டது. அந்நாளில் வடசென்னையிலும் தென் சென்னையிலும் தொழிலாளர் பேரணிகள் நடை பெற்றன. அன்று காலை தன்னுடைய இல்லத்தில் தொழி லாளர்களுக்கு சிற்றுண்டி வழங்கி மேதினத்தை கொண்டாடினார் சிங்காரவேலர். உயர்நீதிமன்றத்தின் எதிரில் அமைந்திருந்த கடற்கரையில் சிங்காரவேலர் தலைமையில் ஒரு பொதுக்கூட்டமும், திருவல்லிக் கேணி கடற்கரையில் அவரது நண்பரான எம்.பி.எஸ்.வேலாயுதம் தலைமையில் ஒரு பொதுக் கூட்டம் நடந்துள்ளன. இந்த கூட்டங்களில் சுப்பிர மணிய சிவா, கிருஷ்ணசாமி சர்மா உள்ளிட்டோர் உரையாற்றியுள்ளனர்.  இதே நாளில் சிங்காரவேலர் லேபர் அன்டு கிசான் கெசட் என்ற ஏட்டை ஆங்கிலத்திலும், தொழிலாளி என்ற ஏட்டை தமிழிலும் தொடங்கியுள்ளார். அதுமட்டுமின்றி அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் தலைவர்க ளில் ஒருவரான தீனானந்த் அவர்களுக்கு தந்தி ஒன்றினை அனுப்பி இந்தியா முழுவதும் மே தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் சிங்காரவேலர். மே தினத்தை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது வியக்கத்தக்க  செய்திகளாக அமைந்துள்ளன.

ஆதிக்கவாதிகளின்  வாயடைத்தார்

திண்ணைப் பள்ளிக்கூடத்திலும், இந்து உயர் நிலைப்பள்ளியிலும், பின்னர் கிறிஸ்தவக் கல்லூரி யிலும் அவர் படித்துள்ளார். அவரது குடும்ப வணிகத்தில் ஈடுபட்டதால் படிப்பு தடைபட்டது. பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்து சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்றார். 1907 நவம்பரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறி ஞராக பதிவு செய்து கொண்டார்.  நீதிமன்றங்களில் சாதிய ஆதிக்கம் கோலோச்சிக் கொண்டிருந்த காலமது. ஒருநாள் இவர் வழக்காடச் சென்ற போது மேல்சாதி என்று தங்களை கருதிக் கொண்ட சில வழக்கறிஞர்கள் “நீயெல்லாம் மீன் பறியோடு இருக்க வேண்டியவன், சட்டப்புத்தகங்களை பையில் வைத்துக் கொண்டு வருகிறாயே, உன் போன்றவர்களுக்கு பழக்கமானது பறிதானே” என்று நக்கல் செய்துள்ளனர். அடுத்தநாள் நீதிமன்றத்திற்கு மீன் பறியிலேயே சட்டப் புத்தகங்களையும், அறிவி யல் புத்தகங்களையும் நிரப்பி எடுத்து வந்திருக்கிறார் சிங்காரவேலர். ஆதிக்கவாதிகள் வாயடைத்துப் போனார்கள். 

விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஒத்துழையாமை இயக்கம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த போது தன்னுடைய வழக்கறிஞர் அங்கியை கழற்றிப் போட்டுவிட்டு இனி ஒருபோதும் நீதிமன்ற படிக்கட்டுகளை மிதிக்க மாட்டேன் என சபதம் செய்தார். அதன்பின் கான்பூர் சதிவழக்கு உள்ளிட்ட பொய் வழக்குகளில் பிணைக்கப்பட்டு ஒரு போராளியாகவே நீதிமன்றம் சென்றார்.  அவர்களது முன்னோர் சைவ சமயத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாகவே அவருக்கு சிங்கார வேலர் என்று பெயரிட்டனர். பல்வேறு ஊர்களில் அவரது குடும்பத்தார் அன்னச்சத்திரங்களை அமைத்தி ருந்தனர். ஆனால் சிங்காரவேலர் பௌத்த மதத்தின் பால் பற்றுக் கொண்டார். தமது இல்லத்திலேயே மகாபோதி சங்கம் நடத்தி வந்தார். அயோத்திதாச பண்டிதர் நடத்தி வந்த கூட்டங்களிலும் சிங்காரவேலர் பௌத்தக் கொள்கைகளையும், அறிவியல் கொள்கை களையும் விளக்கி உரையாற்றினார். சைவ சமயப் பற்று கொண்டிருந்த திரு.வி.க. சென்னை கோமளீஸ்வரன் பேட்டை புதுப்பேட்டையில் நடை பெற்ற பௌத்த சங்க கூட்டத்தில் கலகம் செய்வ தற்காக சென்றிருக்கிறார். அங்கு சிங்காரவேலர் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை பந்தி வைக்க “கலகம் செய்யச் சென்ற நான் சிங்காரவேலரின் சிந்தனைகளால் கவரப்பட்டு அவரது சீடராகிப் போனேன்” என்று எழுதுகிறார் தமிழ்த் தென்றல். 1902ஆம் ஆண்டில் லண்டனில் நடந்த உலக பௌத்த மாநாட்டிலும் சிங்காரவேலர் பங்கேற்றார். 

கருவாட்டுக் கூடைக்குள் கம்யூனிஸ்ட் நூல்கள்

இளமையிலிருந்தே வாசிப்பிலும், அறிவுத் தேடலிலும் பெரும் காதல் கொண்டிருந்தவர் சிங்கார வேலர். 1900ஆவது ஆண்டிலிருந்தே மார்க்சிய நூல்கள் அவருக்கு அறிமுகமாகியிருந்தன. 1917ஆம் ஆண்டில் ரஷ்ய மண்ணில் மாமேதை லெனின் தலைமையில் நடந்த சோசலிசப் புரட்சி மூளையுள்ள பலரையும் ஈர்த்தது. ஆனால் கம்யூனிஸ்ட் நூல்கள் எளிதாக கிடைக்காத காலமது.  பொதுவுடைமைச் சிந்தனை நூல்களை புதுச்சேரிக்கு வரவழைத்து அங்கிருந்து கருவாட்டுக் கூடைக்குள் மறைத்து வைத்து சென்னைக்கு கொண்டு வந்து படித்தி ருக்கிறார் சிங்காரவேலர். ஆம். செத்த மீன் கூடைக் குள் வைத்து சாகாத தத்துவத்தின் நூல்களை கொண்டு வந்து பயின்றிருக்கிறார்.  அவர் தன்னுடைய வீட்டில் பல்வேறு துறைச் சார்ந்த  20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை சேர்த்து வைத்திருந்தார். இதுகுறித்து அமீர் ஹைதர்கான் கூறும் போது தென்னிந்தியாவிலேயே தனி ஒருவரின் மிகப் பெரிய நூலகம் இது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நூல் நிலையத்தை ஜீவா, எஸ்.வி.காட்டே, ஏ.எஸ்.கே.அய்யங்கார், புதுச்சேரி வ.சுப்பையா, அறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி உள்ளிட்ட பல அறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். 

இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை யில்தான் தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது. திரு.வி.க. செல்வபதி செட்டியார், ராமாஞ்சலு நாயுடு ஆகி யோரால் சென்னை மாகாணத் தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. இதிலும் தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கம், நாகப்பட்டினம் ரயில்வே  தொழிலாளர் சங்கம், சென்னை மண்ணெண்ணெய் தொழிலாளர் சங்கம், டிராம்வே தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் போராட்டங்களில் சிங்காரவேலர் பங்கேற்றுள்ளார்.

எண்ணெய்யை விட  விரைவாகப் பற்றும்

20.6.1921ல் ‘பி அண்டு சி’ மில்லில் நடைபெற்ற வேலை நிறுத்தத்தின்போது துப்பாக்கிச் சூடு நடத்தி ஏழு பேரை கொன்றது அந்நியர் ஆட்சி. இதைக் கண்டித்து சென்னையில் மாபெரும் ஊர்வலத்தை சிங்கார வேலர் உள்ளிட்ட தலைவர்கள் நடத்தினர். 19.9.1921 ல் மீண்டும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 தொழி லாளர்கள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து நவசக்தி ஏட்டில் சிங்காரவேலர் எழுதிய உருக்கமிகு கட்டுரை சரித்திர உலகிற்கு உரியது என்கிறார் திரு.வி.க. 1927ல் பர்மாசெல் எண்ணெய் கம்பெனியில் வேலைநிறுத்தம் நடைபெற்றது. அதற்கு தலைமை தாங்கிய சிங்காரவேலரை நோக்கி வெள்ளைக்கார அதிகாரி ஒருவர் இது எண்ணெய் கம்பெனி. இதனுடன் விளையாடினால் எண்ணெய் உடனே உங்களை பற்றிக்கொள்ளும் என மிரட்டியுள்ளார். அதற்கு சிங்காரவேலர் எண்ணெய்யைக் காட்டிலும் தொழி லாளர் உணர்ச்சி வலுமிக்கது. அது எண்ணெய்யை விட விரைவாகப் பற்றிக்கொள்ளும் என பதிலடி கொடுத்துள்ளார்.

ரயில்வே தொழிலாளர் போராட்டத்தை தொடர்ந்து சிங்காரவேலர் மீது சதிவழக்கு தொடரப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்காடியவர்களில் ஒருவர் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப். சிங்கார வேலரை விடுவிக்கக்கோரி நாடு முழுவதும் பெருமளவில் கூட்டங்கள் நடந்துள்ளன. தந்தை பெரியாரும் பல கூட்டங்களை நடத்தியுள்ளார். இதனால் 18 மாதங்களுக்கு பிறகு சிங்காரவேலர் விடுதலை செய்யப்பட்டார்.  1922ஆம் ஆண்டு கயா நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டு கூட்டத்தில் பேசிய பலரும் கன வான்களே, தனவான்களே என விளித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, சிங்காரவேலர் ‘தோழர்களே’ என அழைத்து தனது உரையை துவக்கினார். மாநாடு அலை கடலென ஆர்ப்பரித்தது. அந்த கம்யூனிஸ்ட் உச்சரித்த ‘தோழர்’ என்ற சொல் இன்றளவும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது.  1925ஆம் ஆண்டில் கான்பூரில் இந்திய மண்ணில் முதன்முறையாக  நடைபெற்ற கம்யூனிஸ்ட் இயக்க மாநாட்டிற்கு தலைமையேற்று உரையாற்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த உரையில் “நமது அரசியல் ஒற்றுமையை விழுங்கும் பேய்களாக சாதி - மதங்கள் இருந்து வருகின்றன. இந்த சாதி- மத வேற்றுமைகள் இன்று நாட்டை சின்னாபின்னப் படுத்துகின்றன. இந்து சபைகள் சங்காதனங்கள் ஆகியவை சோம்பேறி வர்க்கத்தின் பூர்ஷ்வா உத்தி களாகும். நமது வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோள் சாதி சமயங்களுக்கு முற்றிலும் தொடர்பில்லாதவை” என்று முழங்கியுள்ளார். இன்றைய ஆபத்தை அன்றைக்கே கணித்த தீர்க்கதரிசி அவர்.

மதிய உணவுத்  திட்டத்தின் முன்னோடி

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் காலமிது. உள்ளாட்சிப் பணி எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கும் சிங்கார வேலர் வழிகாட்டியுள்ளார். 1924ஆம் ஆண்டு நடந்த சென்னை நகராட்சித் தேர்தலில் யானைக் கவுனி வட்டத்தில் நின்று வென்றார் அவர். அவரது பதவிக் காலத்தில் நகராட்சி பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். ஆம், மதிய உணவுத்திட்டத்தின் முன்னோடியும் அவரே.  சென்னை நகரத்தில் பாதாளச் சாக்கடைகளை விரிவுபடுத்தியதோடு பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளார். மின்சாரத்துறை, டிராம்வே போக்குவரத்தை அரசு ஏற்று நடத்த வேண்டுமென்றும் நகராட்சிப் பள்ளிகளில் மதப் பிரச்சாரம் கூடாது என்றும், தனியார் பள்ளிகளை நகராட்சியே ஏற்று நடத்த வேண்டுமென்றும் தீர்மானங்கள் இயற்றியவர். 1927ல் லண்டன் நாடாளுமன்ற கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான சக்லத்வாலாவை வரவேற்று நகராட்சி யில் தீர்மானம் நிறைவேற்றியவர்.

பதவியேற்பின்போது கடவுளின் பெயரால் என்பதற்கு பதிலாக உளச்சான்றின்படி என உறுதி மொழியேற்றதோடு தமிழில் பதவியேற்று, தமிழில் கையெழுத்திட்டு தமிழில் பேசினார். அதன்பிறகு தான் ஆங்கிலம் சற்று அகன்று நகர்மன்றத்தில் தமிழ் ஒலிக்கத் துவங்கியது.  மனித குல மாமேதைகள்  மார்க்சும், எங்கெல்சும் இயற்றி தந்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் ஒரு பகுதியை தமிழாக்கி தந்தை பெரியார் நடத்தி வந்த குடியரசு ஏட்டில் வெளியிட்டுள்ளார். பெரியார் உரு வாக்கிய ஈரோட்டு திட்டத்தின் மைய அச்சை உருவாக்கியவர்களில் ஒருவர். குடியரசு, புரட்சி, பகுத்தறிவு, புதுமை முரசு, புது உலகம், தி இந்து, சுதர்மா, அப்சர்வர், சண்டே அட்வகேட் உள்ளிட்ட பல ஏடுகளில் சமதர்மி, தோழர், அப்சர்வர், எமி னென்ட் லாயர், சோசலிஸ்ட், சயின்டிஸ்ட், முகமூடி என பல்வேறு பெயர்களில் எழுதிக் குவித்துள்ளார். அவரது வாழ்நாள் முழுவதும் எழுதிக்கொண்டும், பேசிக் கொண்டும் இருந்ததோடு, நேரடியான போராட்டங்களுக்கும் தலைமையேற்றவர். 

1945ல் சென்னை அச்சுத் தொழிலாளர் மாநாட்டில் தன்னுடைய 84ஆவது வயதில் சிங்காரவேலர் ஆற்றிய கடைசி உரையில் “உங்களுடன் ஓருயிராக, உங்க ளில் ஒருவனாக இருப்பதைக் காட்டிலும் மற்றெதை நான் விரும்ப முடியும்?” என்று கேட்டார் சிங்கார வேலர். அதனால் தான் தொழிலாளர் வர்க்கத்தின் விருப்பத்திற்குரிய தலைவராக அவர் இன்றும் தொடர்கிறார்.

துணை நின்ற நூல்கள் : 1. சிங்காரவேலரின் பன்னோக்குப் பார்வை - பா.வீரமணி, 
2. சிந்தனைச்சிற்பி சிங்காரவேலரை பயில்வோம் - 
சு.பொ.அகத்தியலிங்கம், 
3. ம.சிங்காரவேலர் இந்தியாவின் முதல் மார்க்சிய அறிஞர்- 
என்.ராமகிருஷ்ணன்

 

;