ஜமீன்தார், ஜாகிர்தார், இனாம்தார், நிலச் சுவான்தார் என்றும், கோவில் மடங்கள், அறக்கட்டளைகள் என்றும் தமிழகத்தில் பல வடிவங்களில் நிலக்குவியல் இருந்திருக்கிறது. நிலக்குவியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் இப்போதும் பல பகுதிகளில் அது போன்ற நிலைமை நீடிக் கிறது. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி வட்டம், பென்னாகரம் வட்டம் போன்ற பகுதிகளில் ஜாகிர் தார்களிடம் நிலங்கள் குவியலாக இருந்தன. இவ்வகை நில உடைமையை எதிர்த்தும், நிலமற்ற விவசாயிகளுக்கான நில விநியோகத் திற்காகவும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வீரமிக்க போராட்டங்கள் நடந்துள்ளன. கீழத்தஞ்சையில் கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்திய போராட்டத்தினால் 3 லட்சம் ஏக்கர் உபரி நிலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 1950களில் தொடங்கி தொடர்ந்து பல ஆண்டுகள் நில விநியோகத்திற்கான போரா ட்டத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்தியது. அன்றைய காங்கிரஸ் அரசு நில உடைமைக்கு 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் என உச்சவரம்பு தீர்மானித்தது. கேரளத்தில் தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு தலைமையிலான அரசு கொண்டு வந்த நில உச்சவரம்பு சட்டத்தைப்போல் தமிழ கத்திலும் கொண்டுவர வலியுறுத்தி மாநில அளவில் விவசாயிகளின் மறியல் போராட்டம் நடைபெற்றது. தர்மபுரியில் இப்போராட்ட த்தில் ஆயிரக்கணக்கில் விவசாயிகள் கலந்து கொண்டனர். மறியலில் கலந்து கொண்டவர் கள் 3 முதல் 6 மாதங்கள் வரையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நிலச்சுவான்தார்களை எதிர்த்த போராட்டம்
1965 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் சேலம் மாவட்டக்குழு தர்மபுரி - சேலம் என இரண்டு மாவட்டக்குழுக்களாக பிரிக்கப் பட்டது. சேலம் மாவட்டக்குழு செயலாளராக தோழர் என்.முத்து தேர்வானார். தர்மபுரி மாவட்டத்தில் ஜாகிர்தார் - நிலச்சுவான்தார் களை எதிர்த்து நில விநியோகத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்தார் முத்து. ஜாகிர்தாரிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் ஒரு பகுதி குத்தகை விவசாயி களுக்கும், நிலமற்ற விவசாய தொழிலாளர் களுக்கும் பிரித்தளிக்கப்பட்டன. இவ்வாறு போராட்டம் நடந்த கிராமங்களில் ஒன்று தர்மபுரி வட்டத்தில் உள்ள ஏலகிரியான் கொட்டாய். அதியமான் கோட்டை என்ற ஊராட்சிக்கு உட்பட்ட இந்தக் கிராமத்தில் ஜாகிர்தாருக்கு சொந்தமாக 400 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த ஜாகிர்தார் தர்மபுரி நகரத்தில் வசித்து வந்தார். ஏலகிரியான்கொட்டாய் கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சி பலமான அமைப்பாக இயங்கி வந்தது. ஜாகிர்தாரின் நிலங்களை குத்தகை விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் விநியோகம் செய்திட வேண்டுமென்று மாவட்ட அளவில் நடந்த இயக்கம் இந்த கிராமத்திலும் நடந் தது. குத்தகை விவசாயிகளை நிலத்தை விட்டு வெளியேற்றுவதற்கு ஜாகிர்தார் முயன்ற போது, நிலத்தில் விளைந்திருந்த நெல், கம்யூ னிஸ்ட் கட்சியின் ஆதரவோடு இரவோடு இர வாக அறுவடை செய்யப்பட்டுக் குத்தகை விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. போராட்டத்தில் இ.பி. பெருமாள், நந்தன் போன் றோர் முன்னணிப் பாத்திரம் வகித்தனர். தனது இளம் வயதிலேயே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர் தோழர் இளம்பரிதி.
இளமைத் துடிப்புமிக்க இளம்பரிதி
தோழர் இளம்பரிதி ஏலகிரியான்கொட்டாய் என்ற கிராமத்தில் 1949ல் ஒரு நடுத்தர விவ சாய குடும்பத்தில் பிறந்தவர். எஸ்.எஸ்.எல்.சி. வரை அந்த ஊரிலேயே கல்வி பயின்றார். பின்னர் தர்மபுரி நகரத்தில் பி.யூ.சி. அதன் பிறகு 1969ல் தர்மபுரி அரசுக் கலைக் கல்லூரி யில் பி.எஸ்.சி. படிப்பில் சேர்ந்தார். கல்லூரி யில் மாணவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட இளம்பரிதி அங்கு அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தை துவக்கினார். மாண வர்களிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளையையும் உருவாக்கி அதனுடைய செயலாளராக செயல்பட்டார். இளம் வயதிலேயே இளம்பரிதி கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் ப. ஜீவானந்தம் பங்கேற்ற கட்சிப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். கட்சி நடத்தும் எல்லா இயக்கங்களி லும் கலந்து கொண்டிருக்கிறார். இதனால் கல்லூரி மாணவராக இருந்தபோதே கட்சியின் வட்டக்குழுவிற்குத் தேர்வு செய்யப்பட்டார். 1972ல் தர்மபுரி வட்டச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் முழுநேரஊழியரானார். மாணவப் பருவத்திலேயே கட்சியின் முழுநேர ஊழியரான இவர் முழுக்க முழுக்கக் கட்சிப் பணிகள், போராட்டங்கள் என ஈடுபட்ட காரணத்தால், 3 ஆண்டுகள் கல்லூரிக்குச் சென்றாலும் அவரால் தேர்வு எழுதிட இயலவில்லை.
1976 அவசர நிலை ஆட்சிக் காலத்தில் போச் சம்பள்ளி கட்சி தோழர்கள் கைது செய்யப் பட்டதைக் கண்டித்து காவல்நிலையத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றபோது, இளம்பரிதி உள்ளிட்டு பலர் கைது செய்யப் பட்டு 10 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார் கள். 1978 ஆம் ஆண்டு சென்னையில் நடை பெற்றுவந்த டிஐ சைக்கிள் கம்பெனி தொழி லாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக தொழிற் சங்கங்கள் மாநில அளவிலான முழு அடைப்பு போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்த னர். முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய களத்தில் இறங்கிய இளம்பரிதி உள்ளிட்ட பல தோழர்கள் கைது செய்யப் பட்டு 15 நாட்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 1980ஆம் ஆண்டு ஒரு வழக்கில் மோசடியாக இளம்பரிதியும் மற்றும் பலரும் சேர்க்கப்பட்டனர். இளம்பரிதி மூன்று மாதம் தலைமறைவாக இருந்தார். பின்னர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். 1982ஆம் ஆண்டு தேன்கனிக்கோட்டை வட்டத்தில் ஒரு கிராமத்தில் குத்தகை விவசாயி கள் அறுவடை செய்து வைத்திருந்த நெல்லை அடாவடியாக காவல்துறையினர் கைப்பற்றி நிலச்சுவான்தார்களிடம் ஒப்படைத்தனர். குத்தகை விவசாயிகளுக்கு எதிராக காவல்துறை எடுத்த நடவடிக்கை பற்றி புகார் செய்திட தோழர்கள் என்.முத்து, இளம்பரிதி, வெங்கட்ராமன், பழனிவேல் ஆகிய நால்வரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்கள். அலு வலகத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவல் துறை கண்காணிப்பாளர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தோழர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டு 5 நாட்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்ட னர். 1993ஆம் ஆண்டு பென்னாகரம் பேருந்துத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த இளம்பரிதி உள்ளிட்ட தோழர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
6000 ஏக்கர் நிலவிநியோகம்
தர்மபுரி, கிருஷ்ணகிரி இரண்டும் ஒரே மாவட்டமாக இருந்தபோதும், கிருஷ்ணகிரி பகுதியிலும் கட்சி கட்டும் பணியைச் செய்தார் இளம்பரிதி. “கிராமப்புறங்களில் நிலப்பிரபுக் கள், நாட்டாண்மைகள் போன்ற ஆதிக்க சக்தி களை எதிர்த்து நடத்தப்பட்ட பல போராட்டங் களில் பத்துக்கும் மேற்பட்ட தோழர்களின் இன்னுயிரை இழந்திருக்கிறோம்” என உணர்ச்சிப் பெருக்குடன் கூறும் தோழர் இளம் பரிதி, “பென்னாகரம் பகுதியில் விவசாயி களைத் திரட்டி போராட்டம் நடத்தி சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்து வந்த குத்தகை விவசாயிகளை நில சொந்தக்காரர் களாக மாற்றினோம்” என்றும் குறிப்பிடுகிறார். தர்மபுரி மாவட்டத்தில் ஜாகிர்தார்களின் பிடியில் இருந்த 6,000 ஏக்கர் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டு, அந்நிலங்களில் சாகுபடி செய்து வந்த குத்தகை விவசாயிகளுக் கும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக் கும் விநியோகம் செய்யப்பட்டன. மாவட்டச் செயலாளராக இருந்த தோழர் முத்து அந்தப் போராட்டத்தில் பிரதான பாத்திரம் வகித்தார். நிலத்திற்கான போராட்டங்களில் முக்கியப் பங்காற்றியவர்களில் இளம்பரிதியும் ஒருவர். இத்தகைய பின்னணியில்தான் தோழர் இளம்பரிதி 1987ல் கட்சியின் மாவட்டச் செய லாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இப்பொறுப் பில் அவர் 25 ஆண்டுகள் செயல்பட்டிருக்கிறார். 2012ஆம் ஆண்டு தோழர்கள் இளம்பரிதி, ஜி. வெங்கட்ராமன், வி. மாதன், சிசுபாலன் மற்றும் மறைந்த தோழர்கள் தேவ பேரின்பன், எம். ஆறுமுகம் உள்ளிட்ட பெரும்பான்மை யான கட்சி உறுப்பினர்கள் அமைப்பு சார்ந்த பிரச்சனைகளிலும், தத்துவார்த்தப் பிரச்சனை களிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.
அதையொட்டி நடந்த இணைப்பு விழாவில் தோழர் தேவ. பேரின்பன் நிகழ்த்திய உரை குறிப்பிடத்தக்கது. “கோழிக்கோடு நகரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில், தோழர் சீத்தாராம் யெச்சூரி முன்மொழிந்து ஏற்கப்பட்ட தத்து வார்த்தப் பிரச்சனைகள் குறித்த விரிவான தீர்மானத்தை முழுமையாகப் படித்தேன். எனக்குள் ஏற்பட்டிருந்த தத்துவார்த்த நிலைப் பாடுகள் சம்பந்தமான பல கேள்விகளுக்கான விடைகளை அந்தத் தீர்மானத்தில் கண்டேன்,” என்று தமது உரையில் குறிப்பிட்டார் அவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தொடர்ந்து மாவட்டச் செயற்குழு உறுப்பின ராக தோழர் இளம்பரிதி முனைப்புடன் செயல் பட்டு வந்தார். கடந்த மாவட்ட மாநாட்டில் வயது வரம்பின் காரணமாக மாவட்டக்குழு விலிருந்து விடுவிக்கப்பட்டாலும் அவர் இப் போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைவர்களில் ஒருவராக ஈடுபாட் டோடு கட்சி உறுப்பினராக இயங்கிவருகிறார். இவருடைய இணையர் மற்றும் பிள்ளை கள் அனைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக உள்ளனர்.மாணவப் பருவத்திலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, அதன் கிளைச் செயலாளராகத் தொடங்கி மாவட்டச் செயலாளராக, பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்டச் செயற்குழு உறுப்பினராக என அர்ப்பணிப் போடு செயல்பட்டவர். மக்களுக்கான போரா ட்டங்களில் முன்நின்று காவல்துறையின் அடக்குமுறையை எதிர்கொண்டு பலமுறை சிறை சென்றவர். போர்க்குணமிக்க போராளி யாகச் செயல்பட்ட தோழர் இளம்பரிதியின் கள ப்பணி பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.