articles

img

மார்க்சியத் தத்துவத்தை உயர்த்திப் பிடித்து தொழிலாளர் வர்க்கத்தை உயர்த்துவோம் -சுதிப் தத்தா, அகில இந்தியச் செயலாளர், சிஐடியு ,சுனந்த், தில்லி மாநிலச் செயலாளர், சிஐடியு

54 ஆண்டுகளுக்கு முன்பு, 1970இல் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) உதயமான போது அதன் முதல் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்ட தோழர் பி.டி.ரணதிவே, மாநாட்டில் நிறைவுரையாற்றுகையில் இவ்வாறு பிரகடனம் செய்தார். “உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் ஓர் அங்க மாகிய நாம், உலகத்தில் பாடுபடும் பாட்டாளிகளின் ஓர் அங்கமாகிய நாம், உலகத்தின் சாமானிய மக்க ளாகிய நாம், முன்னேறத் தொடங்கி இருக்கிறோம், வெற்றிப் பாதையில் முன்னேறத் தொடங்கி இருக்கி றோம். இந்தக் காலம் நம்முடையதாகும், இந்தக் காலம் சாமானிய மக்களின், உழைக்கும் வர்க்கத்தின் காலமாகும். ஏகாதிபத்தியம் தொடர்பாகவும், முத லாளித்துவம் தொடர்பாகவும் தீர்ப்பு ஏற்கனவே எழு தப்பட்டுவிட்டது. முதலாளித்துவ சக்திகளே, நீங்கள்  இறந்து கொண்டிருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், எதிர்வரும் காலத்தில் இறக்கக் கூடியவர்கள். உழைக்கும் வர்க்கம் உங்களைக் குழிதோண்டிப் புதைத்துவிடும்.”

2024 மே 30 அன்று சிஐடியுவின் 55ஆவது அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. ஒளிமயமான பயண வரலாறு கொண்டது சிஐடியு. கடந்த 54 ஆண்டுகளில் புற நிலைமை என்பது குறிப்பிடத்தக்க அளவிற்கு மாறி யிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியால் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவும், அதன் காரணமாக அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் கட்டளைக்கிணங்க மேற்கொள்ளப்பட்டு வரும் நவீன தாராளமய மேலாதிக்கக் கொள்கைகளும் இன்றைய நிலைமைகளை வரையறுத்திருக்கின்றன.

அகநிலை மாற்றங்கள்

ஆயினும், புறநிலை மாற்றங்களைக் காட்டிலும் அகநிலை மட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்தான் இப்போது அடிக்கோடிட்டு ஆராயப்பட வேண்டிய தாகும். 

முதலாளித்துவம் என்னும் சூறைக்காற்றுக்கு மாற்று இல்லை என்று கூறிவந்தபோதிலும் அதனை நாம் கடுமையாக எதிர்த்து சமர்புரிந்து வருகிறோம். எனினும், இந்தியத் தொழிலாளி வர்க்கம் தன் வர்க்கத்தை முழுமையாக சுரண்டலின் அனைத்து வடிவங்களிலிருந்தும் விடுவித்திட, இன்னும் செல்ல வேண்டிய தூரம் மிகவும் அதிகம்.

முதலாளித்துவ சித்தாந்தத்தின் பல்வேறு சாயல்களால் அச்சுறுத்தப்பட்டுள்ள தொழிலாளர் வர்க்கத்தை மீண்டும் உயிர்ப்பித்திட முடியும்.  சோச லிசத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றிட சுரண் டப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட அனைத்துப் பிரிவின ரையும் மேலும் வீறுகொண்டு எழச் செய்திட முடியும். இதற்கு நம் சித்தாந்தத்தின் அடிப்படையில் தொழிலா ளர் வர்க்கத்தை வீறுகொண்டு எழச் செய்திட வேண்டும்.

தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் மிகப்பெரிய அளவில் அவநம்பிக்கை, ஊக்கமின்மை, அதிருப்தி மற்றும் விரக்தியை உருவாக்குவது என்பது ஆளும் வர்க்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள சித்தாந்த தாக்குதலின் ஒரு முக்கிய பகுதியாகும். மிகவும் முன் னேறிய மற்றும் புரட்சிகர வர்க்கமான தொழிலாளி வர்க்கம், தனது சொந்த இருப்பையும் வலிமையையும் மதிப்பிட முடியாத விதத்தில் முதலாளித்துவம்  அதனை நிராயுதபாணியாக்குகிறது. எனவே, தொழி லாளி வர்க்கத்தின் அகநிலையில் முதலாளித்துவ சிந்த னைகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள சவால்களை எதிர் கொள்ளும்போது மட்டுமே புறநிலை சவால்களை எதிர்த்து முறியடித்திட முடியும். தொழிலாளர் வர்க்கத் தின் மத்தியில் காணப்படும் நம்பிக்கையின்மையை, தற்போதுள்ள சமூகக் கட்டுமானத்தைத் தூக்கி எறிந்தி டக் கூடிய விதத்தில், புதிய விடியலை நோக்கி முன்னேறிச் செல்லக்கூடிய விதத்தில், சித்தாந்த உறுதியை உயர்த்திப்பிடித்திட வேண்டும்.a

வர்க்கம் மற்றும்  அதன் பங்களிப்பு

நாம் அனைவரும் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரே சேனை; தொழிலாளர்கள்-விவசாயிகள்-மத்தியதர வர்க்கத்தினர் என கரத்தாலும் கருத்தாலும் உழைக் கும் அனைவரும் ஒரே “வர்க்கத்தினர்” தான். நம்மைப் பிணைத்திருக்கும் இந்த சிந்தனையோட்டத்தை- மழுங்கடிப்பதற்காகவே, ஆளும் வர்க்கமானது அறிவு சால் தரகர்கள், மஞ்சள் வண்ணத் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அரசியல் தரகர்கள் மூலமாக நமக்கெதிராக சித்தாந்தத் தாக்குதலைத் தொடுத்தி ருப்பது பிரதானமான ஒன்றாகும்.

உற்பத்திச் சாதனங்கள் மீதான தங்கள் கட்டுப் பாட்டின் காரணமாகவும், உற்பத்தி உறவுகளில் நாம்  தனித்தனியாக இருத்தப்பட்டிருப்பதன் காரணமாக வும், நாம் அனைவரும் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்த வர்கள் என்பதை அவர்கள் மறுக்கின்றனர். 

ஒரு வர்க்கம், மற்றொரு வர்க்கத்திற்கு எதிராக நிற்கிறது என்பதை நாம் அறிவோம். அதாவது, தொழி லாளர் வர்க்கம் முதலாளி வர்க்கத்திற்கு எதிராக நிற்கிறது; நிலப்பிரபுத்துவ வர்க்கம் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக நிற்கி றது. இவ்வாறு வர்க்கங்கள் ஒன்றையொன்று எதிர்த்துப் போராடுகிறது என்று கூறுவதற்குப் பதிலாக அவர்கள், வர்க்கங்கள் என்பது செயல்திறன், ஒதுக்கீடு, விநியோ கம் மற்றும் உபரி உழைப்பின் பலன் என்கிற நான்கு  செயல்முறைகளின் கலவையே தவிர வேறில்லை என்று முன்மொழிகின்றனர். இவர்கள் கூறுவதை வேறு  வார்த்தைகளில் கூறுவதென்றால், வர்க்கம் என்பது ஒரு தனித்துவமான மக்கள் சமூகம் அல்ல, மாறாக உற்பத்தி செயல்முறையின் தற்காலிக வகைப்பாடு என்பதாகும்.

இப்படி வரையறை செய்வதன் மூலம் ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை சுரண்டுவதை மூடி மறைத்திட வழிவகுக்கிறது. இது, உபரி ஒதுக்கீடு செயல்முறையி லிருந்து நேரடி உற்பத்தியாளர்களை ஒதுக்கி வைக்கி றது அல்லது சேர்த்து வைக்கிறது. அதாவது, ஓர் ஆண் தொழிலாளி தொழிற்சாலையில் சுரண்டப்படலாம்; ஆனால் அவரே வீட்டிலிருக்கும் போது அவருடைய மனைவியையோ அல்லது குழந்தைகளையோ அடிமைப்படுத்தவோ அல்லது உழைப்பைச் சுரண்ட வோ செய்யலாம். ஒரு ஆலை உரிமையாளர், ஒரு சூழ் நிலையில் சுரண்டுபவராக இருக்கலாம், மற்றொரு சூழ்நிலையில் சுரண்டப்படுபவராக இருக்கலாம். இவ்விதம் வகைப்படுத்துவதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், வர்க்கம் என்பது இடைநிலை மற்றும் தற்காலிகமானது என்பதும், எனவே அதனால் எப்படி ஒரு வர்க்கப் போராட்டத்தை நடத்த முடியும் என்ப தும், அது எப்படி வரலாற்றின் இயக்கு சக்தியாக இருக்க முடியும் என்பதுமேயாகும். சமூகப் பொரு ளாதார முரண்பாடுகளுக்கு இடையே உள்ள அளவு களை வேறுபடுத்தத் தவறியதிலிருந்து இந்தப் பிரச்சனை உருவாகி இருக்கிறது. இது, அனைத்து விதமான முரண்பாடுகளையும் ஒரே விதம் என்ற தர நிலைக்குக் குறைக்கிறது.

இத்தகைய சிந்தனை ஏற்படுத்துகிற தாக்கம் என்ன தெரியுமா? வர்க்கங்கள் என்ற திட்டவட்டமான அமைப்பை மறுப்பதும், அவற்றுக்கிடையே உள்ளீ டாக உள்ள முரண்பாட்டை மறுப்பதும், வர்க்கப் போராட்டத்தின் குறிப்பிட்ட பங்கை மறுப்பதும், குறிப்பாக சமூக மாற்றத்தில் தொழிலாளர் வர்க் கத்தின் பங்கை மறுப்பதும் ஆகும். 

இத்தகு சிந்தனையோட்டம் வர்க்க ஸ்தாபனத்தை ஒழித்துக்கட்ட இட்டுச் செல்கிறது. ஒரு புரட்சிகரமான தொழிற்சங்க மையத்தின் அடிப்படைப்பணி,  தொழி லாளர்களின் உடனடிக் கோரிக்கைகளுக்காக, உடமை வர்க்கத்திற்கு எதிராக தொழிலாளர்களை ஒரு வர்க்கமாக அணி திரட்டுவதேயாகும்.  இத்தகு தொழிற்சங்கங்கள்தான், சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரி வினரை வழி நடத்துவதற்கான அரசியல் முதிர்ச்சியை  தொழிலாளர் வர்க்கம் பெறுகிற இடமாகும். இவ்வாறு தொழிலாளர் வர்க்கம், ஒரு வர்க்கமாக உருவாகி, தன் வரலாற்றுப் பணிகளை முடிக்க வேண்டும்.

அடையாள  அரசியல்

இப்போது முன்னுக்கு வந்துள்ள இரண்டாவது முக்கிய அம்சம், தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் - அவர்களை வர்க்க ரீதியாக ஒன்றுபடுத்தும் முயற்சி யை மழுங்கடிப்பதற்காக - அவர்களை சாதி ரீதியாக, இன ரீதியாக பிரித்திடும் அடையாள அரசியலை அவர்கள் மத்தியில் புகுத்துவதாகும். இது அவர்க ளை சாதி ரீதியாக பிரிப்பதோடு மட்டுமல்லாமல், இறுதியில் தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபட்டு நின்று நிறைவேற்ற வேண்டிய அரசியல் பங்களிப்பினைப் பாதிக்கக்கூடிய ஒன்றுமாகும்.

ஆணாதிக்க சமூகத்திலிருந்து சாதி அடிப்படையி லான சமுதாயம் வரை, அனைத்துப் பிற்போக்கான சமூக நடைமுறைகளும், உண்மையில் சுரண்டல் ஆட்சிக்குத் துணை புரிபவைகளேயாகும். இத்தகைய சக்திகள் தங்களின் மேலாதிக்க சமூக அரசு எந்தி ரங்கள் மூலம், ஆட்சி புரிவோருக்கு ஊதியம் பெறாத அல்லது மலிவான உழைப்பையே அளிக்கின்றன.

இத்தகைய சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக தீவிரப் போராட்டத்தின் மூலம்தான், தொழிலாளி வர்க்கம் அதன் தலைமையை செயல்படுத்த முடியும், நிலப்பிர புத்துவ-முதலாளித்துவ அடக்குமுறைக்கு எதிராக,  ஒரு சக்தி வாய்ந்த முன்னணியை உருவாக்க முடியும். தொழிற்சங்கங்களின் பங்கு முக்கியமானதாக மாறுவது இதில்தான் இருக்கிறது.

சிறு உற்பத்தியாளர்களைப் பற்றி...

இந்தியாவில் சிறு உற்பத்தியாளர்களின் ஒரு பெரும் படை உருவாகி இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி உறவுகளின் தொடர்ச்சியேயாகும். இருப்பினும் விவ சாயத்தில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி விரிவடைந்து கொண்டிருக்கிறது. நிலப்பிரபுக்கள் முதலாளித்துவ நிலப்பிரபுக்களாக மாறிக் கொண்டிருப்பதும் அதிக ரித்துக் கொண்டிருக்கிறது.

வரலாறு படைத்த விவசாயிகள் இயக்கம் சிறிய உற்பத்தியாளர்களுக்கும் ஏகபோக முதலாளித்துவத் திற்கும் இடையேயான முரண்பாடுகளை முன்னுக்குக் கொண்டுவந்திருக்கிறது. சிறிய உற்பத்தியாளர்கள் ஏராளமாக உருவெடுத்திருப்பது என்பது முதலாளித்து வத்திற்கு எதிரான “உலகளாவிய முறையில் தெற்கு நாடுகளில்” ஏற்பட்டுள்ள வளர்ச்சிப் போக்கு ஆகும். இது, சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியாக தொழி லாளர் வர்க்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் இருந்து வருகின்றன என்பதைக் குறைக்கிறது.

சிறிய உற்பத்தி வடிவங்களின் பெரும் பகுதியானது, ஏகபோகங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள உலகளா விய மதிப்புச் சங்கிலிகளின் ஒரு பகுதிதான் என்கிற உண்மையை கவனிக்க வேண்டியுள்ளது. சிறிய உற் பத்தியாளர்கள் உற்பத்தி செய்திடும் பொருள்களின் விலைகளும்கூட ஏகபோகங்களால் கட்டுப்படுத் தப்பட்டு வடிவமைக்கப்படுகின்றன. மேலும் அவற்றின் உபரிகளும் பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கே வழங்கப்படுகின்றன. எனவே சிறிய அளவிலான உற் பத்தி வடிவங்கள் என்பவை ஏகபோக முதலாளித்து வத்தின் ஓர் ஒருங்கிணைந்த இணைப்பேயாகும்.

இரண்டாவதாக, சிறிய உற்பத்தியாளர்கள் பூகோள ரீதியாக சிதறடிக்கப்படுகிறார்கள். அவர்களை ஸ்தா பனரீதியாகத் திரட்டுவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. எனவே சிறிய உற்பத்தியாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது என்பதும், நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களை நிறைவு செய்வது என்ப தும் ஒரு நீண்ட நெடிய போராட்டமாகும். இதற்கு தொழி லாளர் வர்க்கத்தின் அணிதிரட்டலும், ஒற்றுமையும் தலைமையும் அவசியமாகும். இதன்மூலம்தான், சிறு உற்பத்தியாளர்களைத் திரட்டினால், அதுவே புரட்சிகர சக்தியாகிவிடும் என்ற தவறான புரிதலை நீக்க முடியும்.

தொடரும்

 



 

;