மதுரை
புதிய மாவட்டமாக உதயமாகியுள்ள மயிலாடுதுறைக்கு அருகே உள்ள கடலங்குடி கிராம பகுதியில் நேற்று (புதன்) ஆனந்த குமார் (42), தனது மகள் இன்ஷிகாவுடன் (3) அப்பகுதியில் உள்ள வயல்வெளி பாதையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது கூட்டமாக வந்த கதண்டு வண்டுகள் ஆனந்த குமார் மற்றும் அவரது மகள் மீது தாக்குதல் நடத்தின. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த வண்டுகள் அதிக விஷத்தன்மையுடையது கதண்டு ஆகும். இது அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ள உயரமான மரங்களில் கூடுகட்டி வாழக்கூடியது. குலாப்ஜாமூன் சைசில் இருக்கும். நாம் எந்த தொந்தரவு தரவில்லை நம்மை கண்டால் எதிரியைக் கண்டது போல ஆக்ரோஷ வேகத்துடன் கூட்டமாக தாக்கும். 2 மேற்பட்ட வண்டுகள் ஒருமனிதரை தாக்கினால் மரணம் நிச்சயம். கை, கால் போன்ற உடல்பகுதியில் கடித்தால் பிழைப்பது ஓரளவு சாத்தியம். ஆனால் தலையில் கடித்தால் மூளை மற்றும் கிட்னி செயலிழந்து விடும். 90% மரணம் உறுதி தான். இந்த வண்டு உயிருள்ள மரத்தை விட உயிரற்ற மரத்தில் தான் அதிகம் வாழும்.
காவிரி டெல்டா, தூத்துக்குடி, ராமநாதபுரம் பகுதிகளில் அதிகம் உள்ளன. அவற்றின் கூட்டை கண்டால் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் அழித்து சென்றுவிடுவார்கள். கதண்டுகள் பெரும்பாலும் காட்டுப்பகுதியில் தான் அதிகம் வாழும். அதாவது மனிதன் அதிகம் தொடர்பில்லாத பகுதியில் தான். தற்பொழுது காடுகள் அளிக்கப்பட்டு வருவதால் கிராமப்பகுதியில் உள்ள தென்னை மற்றும் பண மரங்களில் வாழ்ந்து வருகின்றன. காட்டுப்பகுதியில் இருசக்கர வாகனத்தை இயக்குபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அப்பொழுதுதான் படுகாயத்துடனாவது தப்பிக்கலாம்.