around-world

img

பூமியைக் காக்க உதவும் தூசுகள்

சிதம்பரம் இரவிச்சந்திரன்  

பூமியின் வறண்ட நிலப்பகுதிகள் மற்றும் பாலைவனங்களில் இருந்து வீசும் தூசுப்புயல்களில் இருந்து வெளியேறும் தூசுக்களின் அளவு 1800 முதல் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இவை பல பத்தாண்டுகளாக பூமி குளிர்ச்சியடைய உதவுகின்றன. புதைபடிவ எரிபொருட்கள் மூலம் உருவாகும் புவி வெப்ப உயர்வை கட்டுப்படுத்துவதில் இவற்றின் முக்கியப்பங்கு பற்றி போதிய அளவில் இன்னும் ஆராயப்படவில்லை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  யுஎஸ் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த வளிமண்டல நிபுணர்கள் மற்றும் கால நிலை ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தூசுகள் உலகளவில் காலநிலையின் போக்கைத் தீர்மானிப்பதில் இன்றியமை யாத பங்கை வகிக்கின்றன என்று கண்டறிந்துள்ளனர். தூசுகள் கார்பன் உமிழ்வினால் உண்டாகும் புவி வெப் பத்தை 8 சதவீதம் கட்டுப்படுத்த உதவு கின்றன என்று நேச்சர் புவி மற்றும் சூழல் ஆய்வுகள் (Nature reviews Earth& Environment) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. பசுமைக் குடில் வாயுக்களின் உமிழ்வு பூமியை வாழத் தகுதியற்ற இடமாக மாற்றிக் கொண்டிருப்பதையே இது எடுத்துக்காட்டுகிறது என்று ஆய்வுக்கட்டு ரையின் தலைமை ஆசிரியர் மற்றும் வளிமண்டல இயற்பியலாளர் ஜேஸ்ப்பர் காக் (Jasper Kok) கூறுகிறார். பூமி சூடா வதை வாகனத்தின் ஒரு எமர்ஜென்சி பிரேக் போல தூசுகள் தடுத்து நிறுத்தி வருகின்றன என்று ஆய்வாளர்கள் கருது கின்றனர்.

கண்ணுக்குப் புலப்படாத இந்த நுண் துகள்களின் செயல்பாடுகள் சிக்க லானவை. காலநிலையின் போக்கைத் தீர்மானிப்பதில் இவற்றின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆண்டுதோறும் 26 மில்லியன் டன் தூசுகள் வளிமண்டலத்தில் தள்ளப்படு கின்றன. இத்துகள்கள் பல வழிகளில் பூமியின் வெப்பநிலையைக் குறைக்கின்றன.  பூமியில் விழும் சூரிய ஒளியை பிரதிபலிக் கின்றன. பூமி வெப்பமடையக் காரணமாக இருக்கும் சிரஸ் (cirrus) மேகங்களை தூசுகள் சிதறடிக்கின்றன.  வளி மண்டலத் தில் இருந்து கடல்நீரில் சென்று கரையும் தூசுகள் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்சிஜனாக மாற்றும் தாவர மிதவை மற்றும் கடல் வாழ் நுண் தாவ ரங்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. வெப்பம் உருவாகவும் இவை சில நிகழ்வுகளில் காரணமாகின்றன. பனி மற்றும் பனிக்கட்டிகளின் மீது படிந்து அவற்றில் ஒளி ஊடுருவ முடியாமல் செய் கின்றன. இதனால் இருண்டு போகும் பனிக்கட்டிகள் அதிக வெப்பத்தை உறிஞ்சுகின்றன. என்றாலும் ஒட்டுமொத்த புள்ளிவிவரங்கள்படி தூசுகள் பூமி குளிர்ச்சியடையவே உதவுகின்றன. தாதுக்கள் கலந்துள்ள தூசுகள் பல வழி களிலும் உதவுகின்றன என்று கொலம் பியா பல்கலைக்கழகத்தின் லேமாண்ட்-டோஹர்ட்டி (Lamont-Doherty) புவி ஆய்வுமைய காலநிலை விஞ்ஞானி ஜிசெலா விங்க்லர் (Gisela Winckler) கூறுகிறார். இதுவே தூசுகள் பற்றி விரிவாக நடத்தப் பட்ட முதல் ஆய்வு. காலநிலை கணிப்பு  கள் வருங்கால பூமியின் நிலை பற்றி துல்லியமான மாதிரிகளை உருவாக்கினா லும் இவற்றில் தூசுகளின் பங்கு பற்றி ஆழமாக ஆராயப்பட்டது இதுவே முதல்முறை. பனிக்கட்டிகளின் கருப் பகுதிகள், கடலடி ஆழ்பகுதி மண் படிவு கள், அவற்றில் படிந்துள்ள தூசுகள் பற்றி இன்னும் தீவிரமாக ஆராயப்படவேண் டும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். 1800கள் முதல் வேளாண்மை, கட்டிட கட்டுமானம், நிலப்பரப்பில் மனிதன் மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகள் காரண மாக தூசுகளின் அளவு அதிகரித்தது. ஆனால் 1980கள் முதல் இந்த அளவு குறைகிறது. புவி வெப்ப உயர்வு, கால நிலை மாற்றத்தின் தாக்கத்தினால் தூசுகளின் உருவாக்கம், அதன் பரவலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி உடன் ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். வளிமண்டலத்தில் தூசுகளின் அளவு குறைந்தால் பசுமைக் குடில் வாயுக்களின் உமிழ்வினால் ஏற்கனவே சூடாகும் பூமி யின் வெப்பம் இன்னும் அதிகரிக்கும். இதனால் காலநிலை பாதிப்புகள் மனிதகுலத்தை இன்னும் மோசமாக பாதிக் கும் ஆபத்து உள்ளது. இந்நிலையை உணர்ந்து புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை உடனடியாக குறைக்கா விட்டால் எந்த அறிவியல் தொழில்நுட்பத் தினாலும் பூமியை, இங்கு வாழும் மனிதகுலத்தை காப்பாற்றமுடியாது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.