♦ வேற்று கிரக உயிர்த் தேடலில் செயற்கை நுண்ணறிவு
பூமியைத் தவிர பிற துணைக்கோள்களில் உயிரினங்களை தேடுவதில் செயற்கை நுண்ணறிவு புரட்சிகரமான பங்காற்றக்கூடும். செவ்வாய் போன்ற தொலை தூரக் கோள்களை ஆராய்வதற்கு முன், பூமியில் அந்த தொழில்நுட்பம் கொண்டு பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும். அத்தகைய சோதனை ஒன்றை சிலி நாட்டிலுள்ள அடகாமா பாலைவனத்தில் கலிபோர்னியா SETI கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் கிம்பெர்லி வாரன் ரோட்ஸ் நடத்தியுள்ளார்.
செவ்வாய் துணைக்கோளில் ஆய்வு செய்யும் ரோவர் போன்ற விண்கலங்கள் குறைவான தூரமே பயணிக்க முடியும்; மேலும் சில மாதிரிகளையே சேகரிக்க முடியும். ஆகவே உயிரினங்கள் காணப்படும் வாய்ப்புள்ள இடங்களை தேர்வு செய்வது கடினமாக இருந்தது. பூமியில் செவ்வாயை ஒத்த புவியியல் பகுதிகளில் உயிரினங்கள் எங்கே எப்படி வாழ்கின்றன என்பதைக் கண்டால் அந்த தரவுகளை செயற்கை நுண்ணறிவுக்கு செலுத்தி துணைக்கோள்களில் தேடுவது எளிதாக இருக்கும். அடகாமா பாலைவனம் உயரத்தில் உள்ள வறண்ட பீட பூமியாகும். இது செவ்வாய் துணைக்கோளை ஒத்திருப்பதால் வாரன் ரோட்ஸ் குழுவினர் அங்கு பாறைகளில் வாழும் ஒளிச்சேர்க்கை செய்யும் எண்டோலித் எனப்படும் உயிரினங்களை தேடினர். அந்த சுற்று சூழலை முழுமையாக வரையறை செய்ய டுரோன் புகைப்படங்கள், புவி வேதியியல் ஆய்வுகள், டிஎன்ஏ வரிசைப்படுத்துதல் என பல தரவுகளை சேகரித்தனர். (இவற்றையே செவ்வாய் துணைக்கோளிலும் ஆய்வாளர்கள் சேகரிக்கின்றனர்.) இதன் மூலம் அடகாமா பாலைவனத்தில் மூன்று சதுர கிலோமீட்டர் பகுதியில் கடந்த கால மற்றும் தற்போது வாழும் உயிரினங்களின் தடயங்களை அடையாளம் காணும் செயற்கை நுண்ணறிவு ஒன்றை உருவாக்கி சோதனை செய்தார்கள். இந்த தரவுகளை செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட சிஎன்என் (convolutional neural network (CNN) எனப்படும் வலைப்பின்னல் மற்றும் மெஷின் கற்றல் அல்கோரிதம் ஆகியவற்றை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது அடகாமா பாலைவனத்தில் உயிரினங்கள் காணப்படும் சாத்தியக்கூறு எங்கே அதிகம் உள்ளது என்பது தெரிந்தது. இதனால் அவர்கள் தேட வேண்டிய பகுதி 97% குறைந்தாது; உயிரினங்கள் காணப்படும் வாய்ப்புகள் 88% அதிகரித்தது. குறிப்பாக எண்டோலித்ஸ் உயிரினம் அலாபாஸ்ட்டர் எனும் தாது உப்பில் அதிகம் காணப்படுகிறது என்பதைக் கண்டார்கள்.
இந்த புதிய முறையை பல்வேறு உயிர் சூழல்களில் சோதித்துப் பார்க்க வேண்டும் என்கிறார்கள் பிற ஆய்வாளர்கள். உயிரினங்களின் வாழ்விடங்கள், வகை மாதிரிகள் ஆகியவற்றில் அடகாமா பாலைவனம் எளிமையானது. சிக்கலான புவியியல் மற்றும் அதிக பல்லுயிர் சூழலில் இந்த சோதனைகள் நடத்தப்பட வேண்டும். மேலும் செவ்வாய் துணைக் கோளில் அதிக அளவு புற ஊதாக் கதிர்கள் அதன் மேற்பரப்பை தாக்குவதால் பரப்பிற்கடியில் உயிர்கள் உள்ளனவா என்பதற்கான தடயங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க வேண்டியதிருக்கும்.
♦ கொங்கு தேர் வாழ்க்கை v அஞ்சிறைத் தும்பி
தேனீக்களில் ஒரு வகையான பம்பிள் பீ (Bumble bee) எனப்படும் வண்டுகள் மற்ற வண்டுகளை கவனித்து தங்களுடைய நடத்தைகளில் புதிய போக்குகளை கற்றுக் கொள்கின்றனவாம். இது குறித்து லண்டனிலுள்ள குயீன் மேரி பல்கலைக்கழகம் ஒரு ஆய்வு நடத்தியது. அதில் வண்டுகளின் நடத்தைகள் அவற்றினிடையே பரவுவதற்குக் காரணம் சமூக ரீதியான கற்றலே என வலுவான ஆதாரங்களைக் காட்டுகிறது. குறிப்பாக அவை உணவு தேடும் முறைகளில் இது காணப்படுகிறது. சிவப்பு நிற பட்டனும் ஊதா நிற பட்டனும் கொண்ட ஒரு புதிர் பெட்டியை தயாரித்து அதனுள்ளே சர்க்கரைக் கரைசலை வைத்தனர். ஏதாவது ஒரு பட்டனை அழுத்தி பெட்டியை திறக்க ஒரு செய்முறை விளக்க வண்டிற்கு பயிற்சி அளித்தனர். இதை மற்ற வண்டுகள் கவனித்துக் கொண்டிருந்தன. அவற்றின் முறை வந்தவுடன் பயிற்சி வண்டு எதை அழுத்தியதோ அதையே மற்ற வண்டுகளும் பெரும்பானமையாகவும் திரும்பத் திரும்பவும் கையாண்டன. இன்னொரு முறை இருக்கிறது என்று தெரிந்தும் மொத்த வண்டு கூட்டமும் 98.6% இவ்வாறு செய்தன. பயிற்சி வண்டு இல்லாமல் புதிர் பெட்டியை திறக்கும் இன்னொரு சோதனை செய்யப்பட்டது. இதில் சில வண்டுகள் மட்டுமே அதுவும் மிகக் குறைவான முறையே பெட்டியை திறக்க முடிந்தது. பயிற்சி வண்டுடன் செய்யப்பட சோதனையில் ஒரு நாளில் 28 பெட்டிகள் திறக்கப்பட்டன. மற்றதில் ஒரே ஒரு பெட்டிதான் திறக்கப்பட்டது. உணவு சேகரிப்பதிலும் இது போன்ற பயிற்சியை கற்றுக்கொண்ட வண்டுகள் ஓய்வெடுக்கும் போதும் புதிய வண்டுகள் சேர்ந்துகொண்ட போதும் கற்றுக்கொண்டதை மாற்றாமல் அதே நடத்தை முறையே பின்பற்றப்பட்டன; பிரிமேட்ஸ் எனப்படும் குரங்கு இனங்களிலும் பறவைகளிலும் நடத்தப்பட்ட இத்தகைய சோதனைகளில் இதே முடிவுகளே கிடைத்தன. ஆகவே மனிதர்களைப் போலவே அவைகளும் பண்பாட்டைக் கற்றுக்கொள்கின்றன என்று தெரிகிறது. வண்டுகளும் இத்தகைய ஆற்றலைக் கொண்டிருந்தால் சமூகமாக வாழும் பூச்சிகளின் சிக்கலான நடத்தைகளின் படிமுறை வளர்ச்சியின் தொடக்கத்தை விளக்கலாம். தன்னுணர்வான செயல்கள் என்று கருதப்படுபவை தொடக்கத்தில் சமூக கற்றலிலிருந்தே வந்திருக்கலாம்.
♦ கையை படம் பிடிக்கும் அதி வேக கேமிரா
ஹைட்ரோகார்பனின் தீச்சுடர் எவ்வாறு கரி அல்லது புகையை உண்டாக்குகிறது என்பதை படம் பிடிக்கும் லேசர் கேமிரா ஒன்றினை ஜெர்மனி மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் உண்டாக்கியுள்ளார்கள். இதன் மூலம் சமயலறை அடுப்பு, வாகன எஞ்சின்கள், காட்டு தீ போன்றவை எவ்வாறு சுற்றுசூழல் மாசை உண்டாக்குகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். இது மிக மிகக் குறைவான நேரத்தில் நடைபெறும் வினையாகும். ஆகவே இதற்கு முன் உண்டாக்கப்பட்ட கேமிராக்களை விட ஆயிரம் மடங்கு வேகமாக படமெடுக்கும் கருவியாக இதை செய்துள்ளார்கள். அழுத்தப்பட்ட அதி வேக லேசர் புகைப்படம் (laser-sheet compressed ultrafast photography (LS-CUP) என அழைக்கப்படும் இந்தக் கருவி தீச்சுடர், நுரை அல்லது கலங்கலான ஊடகம் போன்ற முப்பரிமாண பொருட்களின் ஒரு தளத்தை பிரித்துக் காட்ட முடியும்; கால வெளியில் ஒரு இயற்பியல் அல்லது வேதியியல் செயல்களையும் பிரித்துக்காட்ட இயலும் என்கிறார் இந்த ஆய்வின் இணை ஆசிரியரும் ஸ்வீடன் பல்கலைக்கழகம், கலிபோர்னியாவிலுள்ள நாசா ஜெட் சோதனை சாலை மற்றும் கால்டெக் ஒளிபிம்ப சோதனை சாலை ஆகியவற்றில் ஆய்வாளராக இருக்கும் யோகேஷ்வர் நாத் மிஸ்ரா. இவர் இந்தியாவிலுள்ள அசாம்கார் பகுதியை சேர்ந்தவர். இந்தக் கருவி ஒரு நொடிக்கு 12.5 பில்லியன் சட்டக பிம்பங்களை(frames per second (fps)) படம் பிடிக்கும். திரைப்படங்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் எடுக்கப்படுவது 24 fps என்றால் இதன் வேகத்தைப் புரிந்து கொள்ளலாம்.