around-world

img

அறிவியல் கதிர்

♦ கை ரேகை என்ன  சொல்கிறது?
விரல் ரேகைகள் ஒவ் வொரு மனிதருக்கும் தனித்துவமானவை; வாழ்நாள் முழுவதும் நீடிக்கின்றன. குழந்தை கருவிலிருக்கும் போதே விரல்களில் இவை தோன்றத் தொடங்கிவிடு கின்றன. முதலில் தோலுக்குள் கீழ்நோக்கி வளரும் ரேகைகள், பின்னர் செல் பெருக்கத்தால் மேல் நோக்கி வளரத் தொடங்குகின்றன. இவ்வாறு தோலானது விரல்களில் மேடு பள்ளங்களை கொண்டதாக மாறுகிறது. இந்த விசயங்களெல்லாம் ஏற்கனவே விஞ்ஞானிகள் அறிந்ததே. இப்போது இதற்கு பின்னாலுள்ள வேதியியல் மாற்றங்கள் ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.  தொடக்க நிலையில் உள்ள விரல்ரேகைகளின் மடிப்புகளிலுள்ள செல்களை ஆய்வு செய்ததில் அவற்றிற்கிடையே தகவல்களை பரிமாறும் WNT, EDAR, BMP எனும் மூன்று வேதிப் பொருட்களை கண்டறிந்தனர். முதல் இரண்டும் செல்களைப் பெருக்க வைத்து மடிப்புகளை உண்டாக்குகின்றன.மூன்றாவது இந்த வளர்ச்சியை தடுக்கிறது. இந்த மூலக்கூறு களை மாற்றுவதன் மூலம் ரேகை வகைப்பாடு(pattern) எவ்வாறு மாறுகின்றன என்பதை எலிகளில் சோதித்துப் பார்த்தனர். எலிகளுக்கு ரேகைகள் கிடையாது. ஆனால் அவற்றின் கட்டை விரலில் மனித ரேகை போன்ற தடித்த கோடுகள் உள்ளன என்கிறார் எடின்பர்க் பல்கலைக் கழகத்தை சேர்ந்த வளர்ச்சி உயிரியியலாளர் டெனிஸ் ஹீடன். EDAR வேதிப்பொருளை அதிகரித்தபோது இடைவெளி அதிகம் உள்ள கோடுகளும் அதைக் குறைத்தபோது கோடுகள் இல்லாமல் புள்ளிகளும் தோன்றின.  வேதிப்பொருட்கள் ஒன்றுக்கொன்று வினை புரிந்து இயற்கையான பொருட்களில் வகைப்பாடுகள் தோற்றுவிப்பதை டுரிங் வினை என்று கூறப்படுகிறது. 1950களில் பிரிட்டிஷ் கணிதவியலாளர் ஆலன் டுரிங் இந்த கருதுகோளை முன்மொழிந்தார். இந்தக் கருதுகோள் வரிக்குதிரை மீனில் காணப்படும் கோடுகள் போன்ற சிலவற்றை மட்டுமே விளக்க முடிந்தது. மேலும் மனித விரல் ரேகை போன்று விளக்கமானவற்றை எலிகளின் சிறிய கால்களில் பார்க்க முடியாது என்பதால் கணினி மூலம் ஒப்புமை செய்து முடிவுகள் எட்டப்பட்டன. வளைவு, வளையம்,சுழல் என மூன்றுவிதமான ரேகைகள் எவ்வாறு தோன்றுகின்றன என்பது விளக்கப்பட்டுள்ளது.  இதைப்போன்றே மூலக்கூறுகளுக்கு இடையேயான திட்டமிட்ட போட்டி மயிர்க் கால்களின் பரப்பை நிர்ணயிக்கின்றன என்கிறார் நியூயார்க் நகர் மருத்துவக் கழகத்தை சேர்ந்த உயிரியலாளர் சாரா மில்லர். ஏற்கனவே ஆய்வு செய்து நிறுவப்பட்ட தோல்களில் காணப்படும் பிற வகைப்பாடுகளின் அடிப்படை முறையே கை ரேகை அமைவதிலும் உள்ளது என்கிறார் அவர்.

♦ இருட்டில் வாழும் பார்வையற்ற மீன்கள் 
நிலத்தடியில் மிக ஆழத்தில் இருண்ட சுற்றுச் சூழலில் வாழும் கேட் பிஷ் வகையை சேர்ந்த மீன் ஒன்று கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது. இரத்த சிவப்பு நிறத்தில் 3 செமீ நீளமே உள்ள இவை நிலத்தடி நீரூற்றுகளில்(aqufiers) வாழ்கின்றன. அங்கு ஆக்சிஜனும் மற்ற ஊட்ட சத்துகளும் மிகக் குறைவாகவே உள்ளன. வீடுகளில் கிணற்றை சுத்தம் செய்யும்போதோ அல்லது தோண்டும்போதோ மட்டுமே இவை வெளிவருகின்றன என்கின்றனர் கேரளா மீன்வளத் துறை மற்றும் கடல் ஆய்வுப் பல்கலைக் கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள். இவை பார்வைத் திறன் அற்றவை; பல்லாயிரக்கணக் கான ஆண்டுகளாக படி முறை மாற்றத்தினால் மிகப் பெரும் மரபணு பன்மைத் தன்மை கொண்டுள்ளன. வயல்களி லுள்ள கிணறு, குளம் குட்டைகள், குகைகள் ஆகிய இடங்களில் வசிக்கும் அரிய வகை மீன்கள் குறித்த ஆறு ஆண்டு ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாலக்காட்டுக் கணவாய்க்கு தெற்கே உள்ள கேரளப் பகுதிகளில் மட்டுமே இவை காணப்படுகின்றன. நிலத்தடி யில் வாழும் உயிரினங்களுக்கும் இந்தக் கணவாய் ஒரு தடுப்பாக உள்ளன என்கிறார் இந்த ஆய்வின் இணை ஆசிரி யரும் ஜெர்மனி நாட்டு இயற்கை வரலாற்று தொகுப்புக் கழகத்தை சேர்ந்தவருமான ரால்ஃப் பிரிட்ஸ். அவர் மேலும் கூறுகிறார், உள்ளூர் சமூகத்தினரின் துணை இல்லாமல் இந்த ஆய்வு சாதியமாகியிருக்காது. இப்படிப்பட்ட மறைந்து வாழும் உயிரினங்களை உள்ளூர் மக்கள் மட்டுமே காண முடியும்.அசாதாரணமான விலங்குகள் குறித்து நமது அறிவியல் அறிவை வளர்க்க அவர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள். அதனால் மக்கள் என்று பொருள்படும் ‘பாப்புலி’(populi) என்று இந்த மீனுக்கு பெயர் சூட்டியுள்ளோம்.’  ஆறு ஆண்டுகள் பல இடங்களில் உள்ளூர் சமூகத்தின ரோடு பயிற்சிப் பட்டறைகள்,குழு விவாதங்கள்,முறை சாரா விவாதங்கள் நடத்தியுள்ளனர். நிலத்தடி மீன்களின்  முக்கியத்துவம்,அவற்றை பாதுகாக்க தேவையான விஷயங்கள் ஆகியவற்றை விளக்கி அவற்றின் புகைப்படங் கள் அல்லது காணொளி ஆகியவற்றை தங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அவற்றை சேகரிக்குமாறும் கூறினோம். நிலத்தடி நீர் அதிக அளவில் எடுக்கப்படுவதாலும் பாறைகள் உடைக்கப்படுவதாலும் இப்படிப்பட்ட மீன்கள் அழியும் நிலைக்கு வந்துள்ளன. நெருக்கமாக மக்கள் வாழும் பகுதிகளில் இவை புதைந்திருப்பதால் இவற்றை பாதுகாக்க சட்டங்கள் ஏதும் இல்லை.

♦  விளையாட்டா விரோதமா?
வளர்ப்புப் பூனைகள் ஒன்றோடொன்று பாய்ந்து பிறாண்டி விளையாடுவதைப் பார்த்திருப்போம். இது விளையாட்டா அல்லது சண்டையா, இரண்டும் கலந்ததா என்பதை ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை நாம் கவனிக்க தவறுகிறோம் என்கிறார் ஸ்லோவகியாவை சேர்ந்த கால்நடை மருத்துவர் நோயிமா கஜ்டாஸ். இதை தவறாக புரிந்துகொண்டால் அவைகள் மன அழுத்தத்திற்கும் நோய்க்கும் ஆளாகலாம். இந்த ஊடாட்டங்களை வரையறை செய்ய, அவரும் அவரது சகாக்களும் ஜோடிப் பூனைகளுக்கிடையேயான 105 காணொளி களை பார்வையிட்டனர். அதிலிருந்து ஆறுவகை நடத்தைகளை கண்டறிந்தனர். ஒவ்வொரு நடத்தையும் எத்தனை முறை நடைபெறுகிறது, எவ்வளவு நேரம் நீடிக்கிறது என்பதையும் பதிவு செய்தனர்.  புள்ளியியல் ஆய்வின் மூலம் இந்த நடத்தைகளை விளையாட்டு, தாக்குதல் அல்லது இரண்டும் கலந்தது என்று வகைப்படுத்த முடிந்தது. இருந்த இடத்திலேயே இருந்து கட்டிப் புரள்வது விளையாட்டை குறிக்கிறது;துரத்துவது, உறுமுவது, சீறுவது போன்றவை தாக்குதல் வகை. இந்த இரண்டு நடத்தைகளும் கலந்தது இடைப்பட்ட வகை.இதில் ஒரு பூனை மற்றொன்றின் மீது தொடர்ந்து நீண்ட நேரம் பாய்வது, வருடுவது போன்றவை நிகழும். ஒரே ஒரு முறை நடக்கும் தாக்குதல்களை வைத்து இரண்டிற்கும் இடையில் பகை உறவு என்று முடிவு செய்யக்கூடாது. பல முறை கவனித்துபின்னரே பூனைகளுக்கிடையேயான உறவைப் புரிந்து கொள்ள முடியும் என்கிறார் கஜ்டாஸ்.