♦ சிறுநீரகக் கற்களுக்கு எலுமிச்சைச் சாறு
சிறுநீரகக் கல் என்பது பலருக்கும் கடுமையான வலியை கொடுக்கக் கூடியது. சிறுநீரகத்திற்குள் தாது உப்புகள் படிகங்களாக மாறுவதே கல் உண்டா வதற்குக் காரணம். அவை நம் உடலிலிருந்து வெளிவரும்போது சிறுநீர்ப் பாதையில் முட்டி மோதி திசுக்களை கிழிக்கின்றன. மருந்துகள் மூலம் சிலருக்கு இதைக் குணப்படுத்தலாம். மற்றவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலமே இதை நீக்க முடியும். ஆகவே கற்கள் உண்டாவதை தடுப்பதே சிறந்த வழி. எலிகளில் நடத்தப்பட்ட ஒரு சோதனையில் எலுமிச்சம் பழம் இதற்கு உதவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எலுமிச்சையிலுள்ள சிட்ரிக் அமிலம் ஒரு முக்கிய தாது உப்பின் மீது படிந்து அது படிகமாக மாறுவதை தடுக்கிறது. இது மனிதர்களிடத்திலும் இதே விளைவை உண்டாக்கினால் சிறுநீர்க் கற்கள் உண்டாவதை தடுக்கலாம் என்கிறார் சீன மருத்துவப் பல்கலைக்கழகமான நான்ஜிங்கை சேர்ந்த மருந்தியல் அறிவியலாளர் ஹோங்சி கியோ. புளிப்பான எலுமிச்சையை குடிப்பது அசவுகரியமான ஒன்று. அது பற்களுக்கும் கெடுதலை ஏற்படுத்தலாம். எனவே எலுமிச்சை சாறில் உள்ள சிறிய பைகளுடன் கொழுப்பு, புரதம் மற்றும் டிஎன்ஏ ஆகியவற்றை பொதிந்து எலிகளுக்கு கொடுக்கப்பட்டது. சிறுநீரகக் கற்கள் வளர்வதற்கு காரணமான ஒரு முக்கிய பொருளான கால்சியம் ஆக்ஸலேட் படிகமாக மாறுவதை இந்தப் பைகள் தடுத்தன. மேலும் கற்களை மென்மையாக்கி அதிகம் ஒட்டாததாக மாற்றின.
♦ கிட்டப்பார்வையை தடுக்க முடியுமா?
மயோப்பியா (mypoia) என்றழைக்கப்படும் கிட்டப்பார்வைக்கு அட்ரோபைன் எனும் மருந்து தீர்வாகுமா என்பது குறித்து ஹாங்காங் கிலுள்ள சீனப் பல்கலைக்கழக கண் மருத்துவர் ஜாசன் யாம் ஆய்வு நடத்தி யுள்ளார். குழந்தைப் பருவத்தில் தொடங்கும் இந்தக் குறைபாட்டில் விழிக்கோளம் முன்பின்னாக நீண்டு தூரத்திலுள்ள பொருட்கள் மங்கலாகத் தெரியும். இது கேட்ராக்ட் எனும் கண் புரை, குளுக்கோமா, தசை சிதைவு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. கடந்த சில பத்தாண்டுகளாக இது பரவலாக காணப்படுவது விரைவாக அதிகரித்துள்ளது. இப்போது மக்கள் தொகையில் கால்பங்கினருக்கு இந்தக் குறைபாடு உள்ளது. 2050களில் உலகில் பாதிபேரை பாதிக்கும். இதில் மரபு ரீதியான காரணங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால் குறைவான நேரம் வெளியிலிருப்பது, மிகக் கடுமையான கல்வி முறை ஆகியவையும் காரணங்களாக இருக்கலாம். ஏற்கனவே ஆசியாவின் பல நாடுகளில் கிட்டப்பார்வை அதிகமாகாமலிருக்க குறைந்த அளவிலான அட்ரோ பைன் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தின் மூலம் கிட்டப்பார்வை தொடங்கு வதை தாமதப் படுத்த முடியுமா என்று யாமின் குழுவினர் பரிசோதித்துள்ளனர். ஹாங்காங்கில் வசிக்கும் 4 வயது முதல் 9 வயது வரை உள்ள 353 குழந்தைகள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அட்ரோபைன் சொட்டு ஒரு பிரிவிற்கு 0.05%உம் , இன்னொரு பிரிவிற்கு 0.01%உம் மூன்றாவதிற்கு மருந்தற்ற சொட்டும் விடப்பட்டன. இரண்டு வருடங்களுக்குப் பிறகு சோதித்ததில் 0.05% மருந்து கொடுக்கப்பட்ட வர்களில் 25% பேருக்கு மட்டுமே மயோப்பியா ஏற்பட்டது. 0.01% அல்லது மருந்தற்ற சொட்டு கொடுக்கப்பட்டவர்களில் 50%க்கு கிட்டப்பார்வை ஏற்பட்டது. இது ஹாங்காங்கில் மட்டுமே நடத்தப்பட்டதால் பிற பகுதிகளிலும் நடத்தப் பட்டால் மட்டுமே முடிவுகளை பொதுமைப்படுத்த முடியும். மேலும் குறுகிய காலத்திற்கே நடத்தப்பட்டுள்ளது. விழிக்கோளத்தின் நீளம் நிலைப்படும் பதின்பருவம் வரை இந்த மருந்து கொடுக்கப்பட்டால் அட்ரோபைன் இந்தக் குறைபாட்டை முற்றிலும் தீர்க்குமா என்பது தெளிவாகும்.
♦ உயிரின் தோற்றத்தில் புரதத்தின் பங்கு
ரட்கர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உயிரின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ததில் ஒரு குறிப்பிட்ட புரதத்தின் பகுதி அதற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளார்கள். புரதம் எவ்வாறு பூமியில் உயிரின் பிராதன கிரியா ஊக்கியாக படிநிலை மாறுதலடைந்தது என்பதை கண்டறிதலில் இவ்வாராய்ச்சியாளர்கள் ஈடுபட்டிருந்தார்கள். இவர்களது ஆய்வில் இரண்டு நிக்கல் அணுக்களைக் கொண்ட எளிமையான பெப்டைடு எனும் வேதிப் பொருளே உயிரின் தொடக்கத்தை தூண்டியிருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. இதற்கு நிக்கல்பேக் என்று பெயரிட்டுள்ளார்கள். பெப்டைடு என்பது புரதத்தின் பகுதியாகும். ‘3.5-3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு திருப்பு முனை தருணத்தில் உயிர்த் தன்மையற்ற வேதிப்பொருட் கள் அல்லது மூலக்கூறுகள், வாழும் உயிர் மண்டலங் களாக மாறுதலடைந்தது. இம்மாறுதலை தூண்டியது சில சிறிய முன்னோடி புரதங்கள்’ என அறிவியலாளர் கள் கருதினர். இப்போது அந்த முன்னோடி புரதத்தை கண்டுபிடித்துவிட்டதாகத் தெரிகிறது’ என்கிறார் ரட்கர் பல்கலைக் கழகத்திலுள்ள முன்னேறிய உயிர் தொழில் நுட்பம் மற்றும் மருத்துவ மையத்தை சேர்ந்த ஆய்வாளர் விகாஸ் நந்தா. இந்த ஆய்வு பிற கோள்களில் உயிர்கள் குறித்த நாசாவின் ஆய்வின் பகுதியாகும். விண்மண்டலத்தில் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால உயிர்களின் தடயங்களை தொலை நோக்கி மற்றும் தேடு கருவிகள் மூலம் ஆய்வு செய்யும்போது உயிர் வாழ்க்கையை அறிவிக்கும் சில குறிப்பிட்ட உயிர் ரேகைகளை தேடுகிறார்கள். இப்போது கண்டுபிடிக்கப்பட்ட நிக்கல்பேக் அப்படிப்பட்ட உயிர் ரேகையாக இருக்கலாம். இவற்றைக் கொண்டு உயிர்கள் தோன்றும் தருவாயிலிருக்கும் கோள்களை கண்டறியலாம். புரதங்கள் சிக்கலான கட்டமைப்பு கொண்டவை. எனவே அவை முதலில் தோன்றியிருக்க முடியாது. புரதத்தின் அடிப்படைக் கூறுகளை ஆராய்ந்ததில் நிக்கல்பேக் எனப் பெயரிடப்பட்ட இந்த பெப்டைடு உயிரை தோற்றுவிக்க சிறந்த வேதிப்பொருளாக இருக்கலாம் என முடிவு செய்தார்கள். தொடக்க கால கடல்பகுதிகளில் நிக்கல் ஏராளமாக இருந்த உலோகமாகும். இது பெப்டைடுடன் இணைந்து கிரியா ஊக்கியாக வேலை செய்து மேலும் கூடுதல் புரதங்களையும் எலெக்ட்ரான்களையும் ஈர்த்திருக்கலாம். இதன் மூலம் ஹைடிரஜன் வாயு உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்.தொடக்க கால பூமியில் ஹைடிரஜனும் ஏராளமாக இருந்தது. வளர்சிதை மாற்றத்திற்கான ஆற்றலைக் கொடுப்பதில் அது கேந்திரமான சக்தியாக இருந்திருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ‘இது முக்கியமான ஆய்வு.ஏனெனில் உயிரின் தோற்றம் குறித்து பல்வேறு கருதுகோள்கள் உள்ளன. ஆனால் அவற்றிற்கான சோதனை சாலை ஆய்வுகள் மிகக் குறைவாகவே உள்ளன. இந்த சோதனையானது வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் எளிமையான புரத நொதிப்பொருட்கள் சாத்தியம் மட்டுமல்ல அவை நிலைத்தன்மை கொண்டவை; தீவிரமாக செயல்படுபவை; ஆகவே உயிரின் தொடக்கப் புள்ளிக்கு அவை சாத்தியமான பொருட்கள் என்று காட்டியுள்ளது.