tamilnadu

img

கல்வியைக் காப்போம்! தேசத்தின் எதிர்காலத்தைக் காப்போம்!

கல்வியைக் காப்போம்! தேசத்தின் எதிர்காலத்தைக் காப்போம்!

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 7வது மாநில மாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்க திண்டுக்கல் மாநகரில் 2025 மே 1, 2, 3 தேதிகளில் நடைபெறுகிறது. ஆசிரியர் இயக்க வரலாற்றில் மாநாடுகள் மகத்தான சாதனைகளைப் படைத்திருக்கின்றன. அதேபோல் இம்மாநாடும் சாதனை மாநாடாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த மாநாட்டில் ஆசிரியர் நலன், மாணவர் நலன், கல்வி நலன், சமூக நலன் சார்ந்த பிரச்சனைகள் விவாதிக்கப்படவுள்ளன.

மாநாட்டின் கொள்கை முழக்கங்கள்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழு ஆழமாக விவாதித்து கீழ்க்கண்ட நான்கு முக்கிய முழக்கங்களை அறிவித்துள்ளது: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைப் பாதுகாப்போம்!

தேசியக் கல்விக் கொள்கை 2020

ஐ நிராகரிப்போம்! இந்தித் திணிப்பை எதிர்ப்போம்! பறிக்கப்பட்ட வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுப்போம்!

பொதுக் கல்வியை பாதுகாத்தல்

இன்று இந்தியா முழுவதும் கல்வி வணிகமயமாகிவிட்ட சூழலில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்கு போதிமரமாகவும், கலங்கரை விளக்கமாகவும் விளங்குகின்றன. இவை மட்டுமே பணம் கொடுத்துப் படிக்க முடியாத ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்கி வருகின்றன. ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக தொடக்கக்கல்வித்துறையில் நிரந்தர ஆசிரியர் நியமனம் இல்லாத நிலையில், பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக மாறியுள்ளன. பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்குப் பதிலாக நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காமல், குறைந்த ஊதியத்தில் தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்களே நியமிக்கப்படுகின்றனர். ஒரு ஆரம்பப்பள்ளியில் 5 வகுப்புகள், 23 பாடங்கள் இருக்கும் நிலையில் ஒரே ஆசிரியர் அனைத்தையும் கையாள்வது மாணவர்களின் கல்வி தரத்தைப் பெருமளவில் பாதிக்கும். இதனால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க தயங்குகின்றனர். இலவசக் கல்வியுடன் தமிழ் மொழி வழிக் கல்வியும் வழங்கும் அரசுப் பள்ளிகளை கட்டாயம் பாதுகாக்க வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை 2020 தேசிய கல்விக் கொள்கை 2020 என்பது ஒருதலைப்பட்சமான, சமச்சீரற்ற, நியாயமற்ற, அறிவியல் பூர்வமற்ற கொள்கையாகும். மேலோட்டமாகப் பார்த்தால் தேன் தடவியதாக தோன்றினாலும், உள்ளே விஷம் இருக்கிறது. இது கல்வியை 100 சதவீதம் வியாபாரமயமாக்கி, ஏழை குழந்தைகளின் கல்வி நலனைப் பாதிக்கும். “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே கலாச்சாரம்” என்ற கருத்தியலின் அடிப்படையில் “ஒரே கல்விக் கொள்கை” கொண்டு வரப்பட்டுள்ளது. பன்முகத்தன்மை, பல்வேறு பண்பாடுகள், கலாச்சாரங்கள், மொழிகள் கொண்ட இந்தியாவிற்கு இக்கொள்கை பொருத்தமற்றது.

இந்தி திணிப்பு எதிர்ப்பு

எந்த மொழிக்கும் நாம் எதிரியல்ல. அனைத்து மொழிகளையும் படிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் ஒன்றிய அரசின் சமீபகால செயல்பாடுகள் இந்தி மொழியை எவ்வகையிலேனும் திணிக்கும் நோக்கத்துடன் உள்ளன. தமிழ்நாட்டில் காலங்காலமாக இருமொழிக் கொள்கை (தமிழ், ஆங்கிலம்) நடைமுறையில் உள்ளது. மூன்றாவது மொழியைக் கட்டாயப்படுத்துவது உள்நோக்கம் கொண்டது, தேவையற்றது.

பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்தல்

ஒன்றிய, மாநில அரசுகள் ஆசிரியர்களின் உரிமைகளைப் பறிப்பதில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. காலங்காலமாகப் பெற்று வந்த ஓய்வூதியத்தை பறித்தனர். ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்பது நமது பணத்தை வைத்தே நமக்கு ஓய்வூதியம் கொடுக்கும் மோசடித் திட்டமாகும். தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர்கள் ஊதியப் பிரச்சனை, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு போன்ற பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க கூட்டமைப்புகள் மூலம் பெரும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. மாநாடு என்பது வெறும் சம்பிரதாயமல்ல; இயக்கத்தின் பெருவலிமையை உணர்த்தி, கோரிக்கைகளை அரசுகளுக்கு வலிமையாக எடுத்துரைக்கும் தளம். மாநாட்டுக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனில் அடுத்தடுத்த களநிகழ்வுகளைத் தீர்மானிக்கும் போர்ப்பாசறையாகவும் மாநாடு அமையும். மக்கள் நல அரசு என்பது ஊழியர், தொழிலாளர், விவசாயிகள், கல்வி மற்றும் சமூக நலன் சார்ந்த கோரிக்கைகளை அக்கறையுடன் கவனிக்க வேண்டும். 7வது மாநில மாநாடு அதற்கான சங்கநாதமாக அமையும்.