வியாழன், ஜனவரி 21, 2021

tamilnadu

img

கொரோனா அச்சம் நீங்காமல் எப்படி தேர்வு நடத்துவீர்கள்?

சென்னை:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை கொரோனா நோய் அச்சம் போக்கி கால அவகாசத்தோடு தேர்வு நடத்தக்கோரி இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு வரும் ஜூன் 11ம் தேதி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட​ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் திடீரென அறிவித்தார். நோய்த்தொற்றின் தீவிரம் குறையாததால் பொதுத்தேர்வை ஒத்திவைக்க கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஜனநாயக அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் கோரிக்கைகள் வைத்தனர். இந்நிலையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதிலுமுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கடந்த மே 18ம் தேதியன்று போராட்டம் நடத்தி மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மறுநாளே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தேர்வு தேதியை ஜூன்-15 க்கு மாற்றி அறிவித்தார்.

இந்நிலையில் கொரோனா நோய் தொற்று கடந்த காலங்களை விட தற்போது அதிகமாகி வருகிறது. பலபகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து இயக்கப்படவில்லை. பல கல்விநிலையங்கள் மீட்புப் பணிக்காக இன்னும் நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடமே உள்ளன. ஆகவே தேதி மாற்றினால் மட்டும் போதாது; நோய் அச்சம் போக்கி, மாணவர்கள் தேர்வு எழுதும் மனநிலையை உருவாக்கி, போதுமான அடிப்படைத் தேவைகளை சரிசெய்து தேர்வு நடத்த வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச்செயலாளர் வீ. மாரியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அம்மனு மே 21 வியாழனன்று விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராகி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் காரல்மார்க்ஸ் “கொரோனா நோய்தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகே, போதிய கால அவகாசத்துடன், அடிப்படைவசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், மாணவர்களையும் தேர்வு எழுதும் மனநிலைக்கு கொண்டு வந்த பிறகே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தவேண்டும்” என வாதிட்டார். வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘‘எப்படி நோய் தொற்று உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு நடத்த முடியும்’’ என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியதோடு, ஜூன் 11ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

;