நாம் எல்லோரும் இங்கே கூடியுள்ளோம், எதற்காக? நம்மிடையே மொழி, இனம், மாநிலம், பண்பாடு, மத நம்பிக்கைகள், உட லமைப்பு என பல அம்சங்களில் வேறுபாடுகள் நிலவுகிறது, ஆனால் நமக்கிடையே முக்கிய மான ஒற்றுமை ஒன்று உண்டு. நாம் எல்லோரும் இந்தியர்கள், இந்த நாட்டின் குடிமக்கள், இன்று நாம் எல்லோரும் ஒரே பொதுவான சவாலை எதிர்கொண்டிருக்கிறோம். எல்லா வேற்றுமை களையும் கடந்து ஓர் இணக்கமான சமூகமாக மக்கள் வாழ்வதை விரும்பாமல் பிரிவினையை, வெறுப்புணர்வை ஊட்டும் சக்திகளை முறி யடித்தாக வேண்டிய சவால் அது. இந்தப் பின்னணி யில்தான் பாலஸ்தீனம் மற்றும் காஷ்மீரில் நடப்பது என்ன என்ற பொருளில் உங்களிடையே பேச விரும்புகிறேன்.
பாலஸ்தீனத்தில் என்ன நடக்கிறது... மிக அண்மையில், அல் ஜஸீரா பத்திரிகையின் தலைமைப் பொறுப்பில் உள்ள வேல் அல்-தஹ்தூ, பத்திரிகையாளரான தன்னுடைய மகனை இஸ்ரேல் தாக்குதலில் பறிகொடுத்தார். இறந்த மகனின் கையை அவர் பற்றியிருக்கும் புகைப்படம் பதற வைக்கிறது. இது அந்தக் குடும்பத்தின் முதல் இழப்பு அல்ல, அக்டோபர் 7இல் தொடங்கிய தாக்குதலில் ஏற்கெனவே அவருடைய மனைவி, மற்றுமோர் மகன், பேரக் குழந்தை எல்லோருமே மரித்துப் போய்விட்டனர். இருந்த ஒற்றை மகனை யும் பறிகொடுத்த அடுத்த நாளே, தனது ஊடகப் பணிக்குத் துணிவாக வந்து நின்றுவிட்டார் அல்-தஹ்தூ! அவரைப் போன்றே துணிவுமிக்க இதயங்கள் அங்கே ஈடு கொடுத்து நிற்கின்றனர். இந்தப் போரில் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இது போர் அல்ல, இனப்படுகொலை
ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலை நாம் ஏற்கவில்லை, ஆனால் அதைச் சாக்கிட்டு அதன் பிறகு இஸ்ரேல் தொடுத்துவரும் தாக்குதல்கள் கொடூரமானவை. ஆனால் இதை ஒரு போர் என்று வருணிப்பதையே நான் ஏற்றுக் கொள்ள மறுக்கிறேன், சம வலுவுள்ள சக்தி களுக்கு இடையே தான் போர் நடக்க முடியும். பாலஸ்தீனத்தில் நடந்து கொண்டிருப்பது இனப்படுகொலை. ஒரு குழந்தைக்கும், மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டிருக்கும் நோயாளிக்கும் இதில் என்ன தொடர்பு, அவர்கள் கொல்லப்படுவது எப்படி ஒரு போராகும்? ஆயிரக்கணக்கில் குழந்தை களும், மற்றவர்களும் கொன்று குவிக்கப்படு வதை எப்படி ஒரு போர் என்று அழைக்க முடியும். இறந்து போனவர்களை அடக்கம் செய்யக் கல்லறைகளே இல்லாத அளவுக்கு அன்றாடம் நடைபெறும் இந்தத் துயரமிக்க நிகழ்வுகள் நெஞ்சைப் பிளப்பவை, வேதனையும் வலியும் கூட்டும் இந்த விஷயத்தை எப்படிப் பேசுவது என்று பரிதவிக்கிறேன்.
ஆனால், இது 21ம் நூற்றாண்டு, ஜனநாயக சிந்தனை வளர்ந்த உலகம் என்று பேசு கிறோம். உலகின் பெரிய ஜனநாயக நாடுகள் எந்தவித பதைபதைப்பும் இல்லாது போய்க்கொண்டிருக்கின்றன. பெரிய பெரிய மனிதர்கள் உண்டு, உறங்கி, சிரித்துத் தங்கள் அன்றாட வாழ்க்கையை இயல்பாகக் கடந்து போய்க் கொண்டிருக்கின்றனர். இரண்டு மதங் களுக்கு இடையேயான போர் அல்ல இது. ஆதிக்க சக்திகளின் வெறிச் செயல். அமெரிக்கா வின் போர் வெறியை ஏற்கெனவே வியத்நாமில், கம்போடியா லாவோஸில், ஆப்கானிஸ்தா னத்தில், இராக்கில், லிபியாவில் பார்த்தவர்கள் தான் நாம், இப்போது பாலஸ்தீனத்தில் பார்க் கிறோம். ஐ நா சபையில் போர் நிறுத்தம் கோரும் தீர்மானத்தை அமெரிக்கா எதிர்க்கிறது. ஆனால், ஆறுதலான செய்தி, அமெரிக்க மண் ணில் ஏராளமானோர் உடனடி போர் நிறுத்தம் வேண்டி வீதிகளில் இறங்கி ஆர்ப்பரிக்கின்றனர்.
பாலஸ்தீனத்துப் பிரச்சனை நூற்றாண்டுக்கு முந்தையது. இந்தியாவை அடிமைப்படுத்திய அதே சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ் யம் தான் அந்தப் பகுதியைக் கைக்குள் வைத்தி ருந்தது. அங்கே அரேபியர்கள், கிறித்துவர்கள், யூதர்கள் என்று பல்வேறு தரப்பு மக்கள் வசித்து வந்தனர். அதிகாரங்கள் கைமாற்றப்பட்டு இஸ்ரேல் உதயமானதில் இருந்து மெல்ல மெல்ல பாலஸ்தீனர்கள் அப்புறப்படுத்தப்படுவது தொடங்கி, பேரழிவும் தொடங்கியது.
பாரம்பரியத்தைத் தகர்க்கும் பாஜக ஆட்சி
இந்தியாவைப் பொறுத்தவரை நமக்கு பாலஸ்தீனர்கள் பக்கம் நின்ற பாரம்பரியம் உண்டு. தேசப் பிதா அண்ணல் மகாத்மா காந்தி அவர்கள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை நிராகரித்தவர், பாலஸ்தீனர்களது உரிமையை வலியுறுத்தியவர். ஆனால் இன்று என்ன பார்க்கிறோம், நமது இன்றைய ஆட்சியாளர்கள் இஸ்ரேல் பக்கம் நிற்கும் அராஜகம். நடக்கும் படு கொலைகள் பற்றி வாய் திறவாத பேரமைதி! உள் நாட்டிலும் மதத்தின் பேரால் ஒடுக்கு முறைகளைத் தூண்டிவிடும் இந்திய ஆட்சி யாளர்கள், இஸ்ரேல் பக்கம் நிற்பதில் என்ன வியப்பு இருக்க முடியும். ஆனால், இதே பாஜக வின் பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் இஸ்ரேல் பக்கம் நிற்கவில்லை. ஆனால், இப்போ தைய ஆட்சியாளர்கள் நெடிய பாரம்பரியத்தை உடைத்துவிட்டனர். ஐ நா சபையிலும் முதலில் இஸ்ரேல் ஆதரவு நிலை எடுத்தனர்.
ஆனால், போர் நிறுத்தத்தை நாம் வலுவாகக் கோர வேண்டும். வாழ்வுரிமை கேட்கின்றனர் பாலஸ்தீனர்கள். எல்லோரையும் போல் வாழ்ந்து மறையும் உரிமை. இப்படி கொத்துக் கொத்தாகக் கொல்லப்படும் அவலத்தை நாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நாம் மனிதர்களாக இருக்க முடியாது.
மறைந்த பிரபல உருது மொழி கவிஞர் ஃபெய்ஸ் அகமது ஃபெய்ஸ் எழுதி (பாலஸ்தீனத்தின் புகழ்பெற்ற தலைவர் யாசர் அராபத் அவர்களுக்கு காணிக்கை ஆக்கிய) பாலஸ்தீனக் குழந்தைக்கு ஒரு தாலாட்டு என்ற கவிதையைத் தான் உங்கள் முன் வாசித்து இந்தப் பகுதியை நிறைவு செய்ய விரும்புகிறேன், என்ன நேர்ந்தாலும் நம்பிக்கையோடு போராடு என்பதே அதன் பொருள்.