world

img

தீக்கதிர் உலக செய்திகள்

அமைதியை விரும்பவில்லை: நேதன்யாகு மீது ஹமாஸ் குற்றச்சாட்டு

கத்தார் மூலமாக நடைபெறும் இஸ்ரேல்-பாலஸ்தீன போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் அமைதிக்கான ஒப்பந்தத்தை உருவாக்க நேதன்யாகு விரும்பவில்லை என ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. சமீபத்தில் இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நேதன்யாகுவின் ஆதரவாளர்கள் 60 சதவீதமானவர்கள் உள்ளிட்ட சுமார் 72 சதவீதமான இஸ்ரேல் மக்கள் ஹமாஸ் வசம் உள்ள பணயக்கைதிகளை மீட்கவும், பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த ஆய்வை நேதன்யாகு சாடியுள்ளார். 

உக்ரைன் பிரதமர் ராஜினாமா

உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். தான் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக அவரே செய்திகளையும் வெளியிட்டார். உக்ரைன் துணை பிரதமராக உள்ள யூலியா ஸ்வைரிடென்கோவை அந்நாட்டின் பிரதமராக பரிந்துரைக்க ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முடிவு செய்ததை தொடர்ந்து அவர் ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொழிலாளர் பற்றாக்குறை : இந்தியர்களை பணியமர்த்தும் ரஷ்யா 

ரஷ்ய தொழிலாளர் அமைச்சகம், 2030ஆம் ஆண்டுக்குள் அந்நாடு 31 லட்சம் தொழி லாளர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்ளக் கூடும் என்று எச்சரித்துள்ளது. எனவே ரஷ்யா  அதிகளவு வெளிநாட்டுத் தொழிலாளர்களை வர வழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா, வடகொரியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து திறன்சார் தொழிலாளர்களை அழைக்க ரஷ்யா திட்டமிட்டு வருகிறது. இந்தியாவில் இருந்து மட்டும் 10 லட்சம் தொழிலாளர்கள் ரஷ்யா செல்ல வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1.4 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை 

2024 இல் 1.4 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி கூட போடப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 2023 ஆண்டிலும் இதேபோன்ற நிலைமை இருந்தது என ஐ.நா. சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பற்ற குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒன்பது நாடுகளில் உள்ளனர். அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகியதும் நிதிகளை கொடுக்க மறுத்ததுமே இந்த பெரும் நெருக்கடிக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களில் வெள்ளம்

அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் பெய்த கனமழையால் நியூ ஜெர்சி, பென்சில்வேனியா மற்றும் நியூயார்க்கின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நியூ ஜெர்சியில் திடீர் வெள்ளம் மற்றும் கனமழை காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்; தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது.

தென்கொரியா : 17 மாத போராட்டத்திற்கு பிறகு வகுப்புகளுக்கு செல்லும் மருத்துவ மாணவர்கள்

சியோல், ஜூலை 15 –  தென்கொரியாவில் சுமார் 17 மாதங்களாக நடந்து வந்த மருத்துவ மாணவர்களின் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.  இதன்படி சுமார் 8,300 மாணவர்கள் மீண்டும் வகுப்புகளுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  கொரிய மருத்துவ சங்கம் அந்நாட்டின் சுகாதார மற்றும் கல்வி குழுத் தலைவர்களுடன் இணைந்து வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் அனைத்து மாணவர் களும் வகுப்பறைகளுக்கு மீண்டும் திரும்புவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தை இன்னும் கைவிடவில்லை. சுமார் 12,000 பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பலரும் மீண்டும் பணிக்கு திரும்பும் முடிவை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   2024 துவக்கத்தில் தென் கொரியா முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோல் மருத்துவ மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் இடங்களை அதிகரித்து உத்தரவிட்டார்.  அந்நாட்டின் சுகாதாரத் துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருந்தன. சுகாதார கட்டமைப்பு, உபகரணங்கள் பற்றாக்குறை மிக அதிகமாக இருந்தது. மிக அதிக வேலை நேரம், வேலை மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் பாதிக்கப்பட்ட மருத்துவர்க ளுக்கு போதிய பாதுகாப்பு நிவாரணம் மறுக்கப்படுவது என பல பிரச்சனைகள் உள்ளன.   இவற்றை சரிசெய்வதற்கு மாறாக மருத்துவ இடங்களை மட்டும் அதிகரிப்பது கடும் விமர்சனங்களை எழுப்பியது. தென் கொரியாவில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களை பராமரிக்க போதிய சுகாதாரப் பணியாளர்கள் வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டது. ஆனால் இந்த முடிவுக்கு மருத்துவ மாணவர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த அறிவிப்பு எதிர்மறையான தாக்கத்தையே உருவாக்கும் என அவர்கள் குற்றம் சாட்டினர். இளநிலை மருத்துவர்கள் பலர் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலையை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதி லீ ஜே-மியுங் மாணவர்களின் போராட்டத்தை அமைதியான முறையில் முடிவுக்கு கொண்டுவர ஏற்கனவே வாக்குறுதி கொடுத்திருந்தார். இதன் பின்னணியில் தான் 17 மாத காலப் போராட்டத்திற்கு பிறகு மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர் என கூறப்படுகிறது.  மாணவர் சங்கத்தின் செயல் தலைவர் லீ சன்-வூ  பேசிய போது கூட, “நாங்கள் அரசாங்கத்தை நம்புகிறோம்,  அனைத்து மாணவர்களும் வகுப்பறைக்கு திரும்புவதன் மூலம், மருத்துவக் கல்வியையும் பரந்த சுகாதாரப் பரா மரிப்பையும் இயல்புக்குகொண்டு வருவதற்கு நாங்கள் உறுதியளிப்போம்” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது. மாணவர்களின் முடிவை மருத்துவக்கல்லூரி டீன்கள், அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.