டோக்கியோ, ஜூலை 18- அமெரிக்கா தலைமையிலான ராணுவக் கூட்டணி நேட்டோவில் சேருவதற்கு ஜப்பான் துடிக்கிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஜூலை 11, 12 ஆகிய தேதிகளில் நேட்டோவின் உச்சிமாநாடு, லிதுவேனியாவின் தலைநகர் வில்னியசில் நடைபெற்றது. இதில் உறுப்பினரல்லாத நாடுகளில் ஒன்றாக அழைப்பின் பேரில் ஜப்பான் பங்கேற்றது. இதே போன்று தென் கொரியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் கலந்து கொண்டன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் முதன்முறையாக நேட்டோவுக்கு சவாலான நாடு என்று குறிப்பிட்டார்கள். அதை எதிர்கொள்ள ஜப்பான், தென் கொரியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை உறுப்பினரல்லாத நாடுகளுக்கான அழைப்பிதழ் பட்டியலில் சேர்த்தனர். இதனடிப்படையில் ஜப்பான் தற்போதைய மாநாட்டில் பங்கேற்றது. ஆசிய-பசிபிக் பகுதிகளில் படைகளை நிறுத்த வேண்டும் என்று நேட்டோ கூறி வருகிறது. சீனாவை எதிர்கொள்ள அதுதான் வழியாக இருக்க முடியும் என்கிறார்கள். ஜப்பானில் நேட்டோவின் தொடர்பு அலுவலகத்தைத் திறப்பது பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். ஐரோப்பாவில் இருந்து இந்தோ-பசிபிக் பகுதியைப் பிரிக்க முடியாது என்று ஜப்பானின் பிரதமர் கிஷிடோ கூறியிருக்கிறார். நேட்டோ இணைப்பில் கிஷிடோ பெரும் முனைப்புடன் இருக்கிறார்.