ஏமன் நாட்டில் சிறை கைதிகளை குறித்து வைத்து நடத்திய வான்வழித் தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டு போர் காரணமாக ஏமனில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) சவுதி அரேபியா போர் விமானங்கள் ஏமன் நாட்டின் சாடா மற்றும் ஹேடெய்டா நகரங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தின. சாடா நகரில் சிறை மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் சிறைக்கட்டடம் இடிந்து விழுந்ததால் இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் உயிரிழந்தனர். 200 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் எனவும் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்நாட்டின் ஹொடிடா என்ற நகரில் உள்ள தொலைதொடர்பு மையத்தை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தொலைதொடர்பு மையம் அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தொலைதொடர்பு வசதிகளை தாக்கியதால், நாடெங்கிலும் இணைய சேவைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால் ஏமனில் தொலைதொடர்பு சேவை துண்டிக்கப்பட்டது.