world

img

உக்ரைன் - என்ன சொல்கின்றன உலக நாடுகள்?

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் பிடியில் சிக்கவிருந்த உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்தியது பற்றி, அமெரிக்காவின் நிலைபாட்டை அப்படியே பின்பற்றும் நாடுகள் வழக்கம் போலவே கருத்து தெரிவித்துள்ளன.

ரஷ்யப் படையெடுப்பை ஆதரிக்காவிட்டாலும், போருக்கான காரணம் யார் என்பதில் பல உலக நாடுகள் தெளிவாக உள்ளன.

சீனா

ரஷ்யாவின் பாதுகாப்பு குறித்த கவலைகள் நியாயமானது என்று தொடர்ந்து சொல்லி வந்தாலும், நாடுகளின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ள சீனா, இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது,

துருக்கி

இருநாடுகளையும் எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறியுள்ள துருக்கியின் ஜனாதிபதி ரிசெப் தய்யிப் எர்டோகன், "அரசியல் , பொருளாதார மற்றும் ராணுவ உறவுகள் ரஷ்யாவோடு மட்டுமல்லாமல், உக்ரைனுடனும் இருக்கிறது" என்று சுட்டிக்காட்டுகிறார். உக்ரைனுடனான ரஷ்யாவின் அணுகுமுறையை துருக்கி ஏற்காவிட்டாலும், படையெடுப்பு அல்லது கண்டனம் போன்ற வார்த்தைகள் பயன்படுத்தவில்லை.

மத்திய ஆசிய அண்டை (ரஷ்யாவின்) நாடுகள்

மத்திய ஆசியாவில் ரஷ்யாவின் அண்டை நாடுகளாக இருக்கும் கஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிரிகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் ரஷ்யா மீது விமர்சனம் எதையும் வைக்கவில்லை. மேற்கத்திய நாடுகள் போட்டுள்ள தடைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்று கஜகிஸ்தானின் ஜனாதிபதியும், ரஷ்ய பிரதமரும் சந்தித்து உரையாடியிருக்கிறார்கள். இந்த நான்கு நாடுகளும் பொருளாதார ரீதியாக ரஷ்யாவைப் பெரிதும் சார்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வெனிசுலா

உக்ரைனில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு அமெரிக்காவையும், அதன் ராணுவக் கூட்டணியான நேட்டோவையும் வெனிசுலா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யாவைச் சுற்றி வளைக்கும் திட்டங்களைத் தொடர்ந்து எதிர்த்து வரும் தங்கள் நிலைபாட்டைச் சட்டிக்காட்டும் வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ, இந்தப் போராட்டத்தில் ரஷ்யா வெற்றி பெறும் என்று கூறியிருக்கிறார்.

கியூபா

நேட்டோவை ரஷ்யாவின் எல்லை வரை எடுத்துச் சென்ற அமெரிக்காவின் நடவடிக்கைகளை கியூபா கடுமையாகக் கண்டித்துள்ளது. சர்வதேச அமைதியைப் பாதுகாக்க பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரியுள்ள கியூபாவின் வெளியுறவுத்துறை, "கடந்த பல வாரங்களாகவே ரஷ்யாவை அமெரிக்கா மிரட்டி வந்தது" என்று சுட்டிக்காட்டியிருக்கிறது.

நிகரகுவா

தனது பாதுகாப்பைக் கோரி வந்த ரஷ்யாவை, உக்ரைனைப் பயன்படுத்தி அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் மிரட்டி வந்தன என்று கருத்து தெரிவித்துள்ள நிகரகுவாவின் ஜனாதிபதி டேனியல் ஓர்டேகா, "கிரீமியாவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பைப் போன்று குடியரசுகளாக அறிவித்துக் கொண்டுள்ள இரண்டு பகுதிகளிலும நடத்தப்பட்டால், ரஷ்யாவுக்கு ஆதரவாகவே அந்த மக்கள் இருப்பார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

;