ஒன்றிய அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் எங்களுக்கு பூங்கொத்து கொடுக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது என நாடு திரும்பிய இந்திய மாணவர் ஆவேசமடைந்துள்ளார்.
உக்ரைன் ரஷ்ய போர் இன்று 8வது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய பீஹார் மாநில மோத்திஹரி பகுதியைச் சேர்ந்த மருத்துவ மாணவர் திவ்யன்ஷு சிங் என்ற மருத்துவ மாணவர் கூறியதாவது, , "நாங்கள் உக்ரைன் எல்லையைக் கடந்து ஹங்கேரி வந்த பின்னர்தான் எங்களுக்கு இந்திய தூதரகத்தின் உதவி கிடைத்தது. அதுவரை எங்களால் தூதரகத்தைச் சேர்ந்த யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
நாளுக்கு நாள் நிலைமை மோசமாகவே நானும் எனது நண்பர்கள் 10 பேரும் சேர்ந்து ஒரு குழுவாகக் கிளம்பினோம். நாங்கள் ரயிலில் ஏறியபோது அந்த ரயில் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ரயிலில் இருந்த உள்ளூர்வாசிகள் எங்களுக்கு உதவினார்கள். எங்கோ சில இடங்களில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், எங்களைப் பொறுத்தவரை உள்ளூர் மக்கள் உதவியாகவே இருந்தனர்.
ஒரு வழியாக நாங்கள் ஹங்கேரியை எல்லையை அடைந்தோம். இது எல்லாமே எங்களின் சொந்த முயற்சி. ஹங்கேரிக்குள் சென்ற பிறகே தூதரகம் எங்களுக்கு உதவியது. இங்கு வந்திறங்கியவுடன் எங்களுக்கு ரோஜா மலர் கொடுக்கப்பட்டது. இதை வைத்து நாங்கள் என்ன செய்யப்போகிறோம். அமெரிக்காவை போல் எங்களையும் மிக முன்கூட்டியே எச்சரித்திருக்கலாம். ஒருவேளை எங்களுக்கு அங்கு ஏதாவது ஆகியிருந்தால் எங்கள் பெற்றோரின் நிலை என்னவாயிருக்கும்.
நாங்களாகவே உரிய நேரத்தில் செயல்பட்டு எங்கள் சொந்த முயற்சியில் எல்லையை அடைந்ததால் தப்பித்திருக்கிறோம். சரியான நேரத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தால் இங்கு பூங்கொத்து கொடுக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது” என்றார்.