world

img

தமிழக மீனவர்கள் 19 பேர் விடுவிப்பு – 3 பேருக்கு 6 மாதம் சிறை தண்டனை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி  கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேரை நிபந்தனைகளுடன் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில், 3 படகு ஓட்டிகளுக்கு தலா 6 மாதம் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் அவர்களைக் கைது செய்வது தொடர்கதையாக உள்ளது. கடந்த 2 மாதங்களில், 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 10 ஆம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக் கூறி  இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மீனவர்களின் மூன்று விசை படகுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை காங்கேசன் துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தினர். இதையடுத்து மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இதைத் தொடர்ந்து  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த பதினொன்றாம் தேதி கடிதம் எழுதி இருந்தார்

இந்நிலையில் மீனவர்களின் மீதான வழக்கு இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதி பாலன், 22 மீனவர்களில் 19 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் 3 படகு ஓட்டிகளுக்கு தலா 6 மாதம் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தனர்.

மூன்று மீனவர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.

;