world

img

“மக்களின் பெரும் ஆதரவுக்கு நன்றி”

லண்டன், டிச.26- தங்களின் வேலை நிறுத்தத்திற்கு நாடு முழுவதும் மக்கள் பெரும் ஆதரவைத் தந்ததற்கு நன்றி தெரிவித்து, இரண்டாவது வேலை நிறுத்தத்தை ரத்து செய்வதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பிரிட்டனில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பிலிருந்து மீளுவதற்கு அரசின் உதவி கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களைப் போன்றே ஆம்புலன்ஸ் ஊழியர்களும் ஒருநாள் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர்.

ஆனால், மற்ற வேலை நிறுத்தங்கள் மீது அலட்சியம் காட்டியதைப் போன்று இதிலும் பிரிட்டன் அரசு அலட்சியமே காட்டியது. அரசின் அலட்சியம் காட்டினால், மீண்டும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தை டிசம்பர் 28 ஆம் தேதியன்று நடத்தப் போவதாக ஆம்புலன்ஸ் ஊழியர்களின் தொழிற்சங்கம் அறிவித்திருந்தது. முதல் ஒருநாள் வேலை நிறுத்தத்தின்போது, நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஆதரவு காட்டினர். இந்த ஆதரவைக் கண்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள், தங்கள் கோரிக்கைகள் மிக முக்கியமானவைதான் என்றாலும், மக்கள் காட்டிய ஆதரவால் இரண்டாவது வேலை நிறுத்தத்தை ஒத்தி வைக்கிறோம் என்று அறிவித்துள்ளார்கள். இது குறித்துக் கருத்து தெரிவித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் தேசிய செயலாளர் ரஷேல் ஹாரிசன், “மக்கள் எங்களுக்குப் பெரும் ஆதரவு காட்டியதால், டிசம்பர் 28 அன்று நடத்தவிருந்த எங்கள் இரண்டாவது ஒருநாள் வேலை  நிறுத்தத்தைத் தள்ளி வைக்கிறோம். அரசின் அலட்சியம் தொடர்ந்தால் ஜனவரி 11, 2023 அன்று வேலை நிறுத்தம் நடைபெறும். பிரிட்டனின் சுகாதாரத்துறையில் பெரும் அளவில் ஊழியர் பற்றாக்குறை இருப்பதை நாங்கள் அறிவோம். அதேவேளையில், ஊழியர்களின் நெருக்கடியைத் தீர்க்க வேண்டிய கடமையும் எங்களுக்கு உள்ளது” என்றார்.

மேலும் பேசிய அவர், “பிரிட்டன் மக்கள் அற்புதமானவர்கள். அவர்களின் ஆதரவு எங்களுக்கு உற்சாகமூட்டுகிறது. கிறிஸ்துமஸ் காலம் என்பதால் எங்கள் சேவை மிகவும் அவசியம் என்று மக்கள் கருதுகிறார்கள். அதனால் நாங்கள் மீண்டும் 24 மணிநேரமும் மக்கள் சேவையில் இருக்கிறோம். அரசும் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ளலாம். எங்களை அழைத்து ஊதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகள் பற்றிப் பேசி முடிவு எடுக்கலாம் “ என்றார். பிரிட்டனின் சுகாதாரத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள செய்தியில், “மக்களின் ஆதரவால் நாங்கள் பணியில் இருக்கிறோம். இனி உங்களுக்கான வாய்ப்பு இது, ஸ்டீவ் பார்கக்லே. அனைவரும் காத்திருக்கிறார்கள்” என்று ஹாரிசன் கூறியுள்ளார்.

ஒன்று திரளும் தொழிலாளர்கள்

தற்போது ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களும் தனித்தனியாக போராட்டங்களை அறிவித்து அவற்றை பெரும் ஆதரவுடன் மேற்கொண்டு வருகிறார்கள். 2023 ஆம் ஆண்டில் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் ஒன்று திரண்டு போராட்டங்களை நடத்தும் சூழல் உருவாகும் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கூறுகிறார்கள். வலதுசாரித் தலைமையின் கீழ் உள்ள  பிரிட்டன் அரசோ, தொழிலாளர்களை அழைத்துப் பேச மறுக்கிறது. போராட்டங்கள் தானாக வலுவிழந்துவிடும் என்று அரசும், முதலாளிகளும் நினைக்கிறார்கள். ரயில்வே மற்றும் தபால் துறை தொழிலாளர்கள் கூடுதல் போராட்டங்களை 2023 ஆம் ஆண்டில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் காலத்தில் போராட வேண்டாம் என்று தொழிலாளர்கள் நினைத்தாலும், போராட்ட சூழலை நிர்வாகங்கள் உருவாக்கி வருகின்றன என்று தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. ஆம்புலன்ஸ் ஊழியர்களைப் போன்றே வேறு சில துறைகளிலும் போராட்டங்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளன. ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு தொழிலாளர்களுடன் கலந்து பேசி அடுத்த கட்டப் போராட்டங்களை நடத்துவோம் என்று சங்கங்கள் தெரிவித்துள்ளன.