world

img

ஈரான் ஜனாதிபதி தேர்தல் : பெரும்பான்மை இன்றி முடிந்த முதல் கட்டம்

டெஹ்ரான், ஜூன் 30 - ஜூன் 28 வெள்ளியன்று நடைபெற்ற ஈரான்  ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டு தேர்தல் வரலாற்றில் இல்லாத வகையில் வெறும் 39.93 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது. ஜுன் 29 சனியன்று அறிவிக்கப்பட்ட தேர்தல்  முடிவுகளில் மொத்தமாக 2.45 கோடி வாக்குகள் பதிவாகி இருந்தன. சுயேட்சையாக போட்டி யிட்ட சீர்திருத்தவாதியான மசூத் பெஜேஷ்கியன் 1.04 கோடி வாக்குகளுடன் (44.40  சதவீதம்) முதல் இடத்திலும், தீவிர மதவாதி யான சயீத் ஜலிலி 94 லட்சம் வாக்குகளுடன் ( 40.38 சதவீதம் ) இரண்டாம் இடமும்பெற்றனர். அந்நாட்டின் நாடாளுமன்ற தலைவராக இருந்த முகமது பகெர் கலீபா 33 லட்சம் வாக்குகளும், ஷியா பிரிவு மத குரு முஸ்தபா 2.06 லட்சம் வாக்குகளும் பெற்றனர். ஈரான் சட்டப்படி 50 சதவீத வாக்குகள் பெற்ற வேட்பாளரே வெற்றியாளராவர். இந்த தேர்தல் முடிவுகளில் யாரும் 50 சதவீத வாக்குகளை பெறாத காரணத்தால் முதல் இரு இடத்தை பிடித்த சீர்திருத்தவாதி  மசூத் பெஜேஷ்கியன், தீவிர மதவாதி சயீத் ஜலிலி ஆகியோருக்கு இடையே இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஜூலை 5 அன்று நடைபெறும் என  அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதி வில் 50 சதவீதத்துக்கு மேல்  வாக்குகளை பெறு பவர் அந்நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார். கடந்த மாதம் ஈரான் ஜனாதிபதி இப்ராகிம்  ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளாகி அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட 8 பேர் பலியாகினர். இதனை  தொடர்ந்து  50 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தல்  நடத்தப்பட வேண்டும் என்ற சட்ட விதிகளின் படி தேர்தல் நடைபெற்றுள்ளது.  பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைபோர் மிகத் தீவிரமாகி மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் ஈரான், பாலஸ்தீனர்களுக்கு முழு ஆதரவு தருவதுடன், பல ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஏகாதிபத்திய இனப்படுகொலைகளுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் இருந்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளிலேயே ஈரான் அரசு தான் அமெரிக்க ஏகாதிபத்திய அரசி யலுக்கு சிம்ம சொப்பனமாக இருகிறது. எனினும்  அந்நாட்டின் ஆட்சி, அரசு நிர்வாகம் அனைத்தும் மதவாதிகளின் பிடியில் உள்ளது. இதன் காரண மாக பெண்களின் உரிமைகள்  பறிக்கப்பட்ட நாடாக ஈரான் உள்ளது. அதனுடன் வேலை யின்மை உள்ளிட்ட பொருளாதாரப் பிரச்சனை களும் தீவிரமாக உள்ளது. இவை அனைத்தும் வாக்காளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

;