இடதுசாரிக் கூட்டணியில் பங்கீடு
அடிபணியா பிரான்ஸ் - 326
பசுமைக்கட்சி - 100
சோசலிஸ்ட் கட்சி - 70
பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி - 50
பிற கூட்டணி கட்சிகள் - 31
பாரிஸ், ஜூன் 9- பிரான்ஸ் நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் முதல் சுற்று ஜூன் 12 ஆம் தேதியும், இரண்டாவது சுற்று ஜூன் 19 ஆம் தேதியும் நடைபெறவிருக்கிறது. பிரான்சின் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தலின் முதல் சுற்று ஏப்ரல் 10, 2022 அன்றும், இரண்டாவது சுற்று ஏப்ரல் 24, 2022 அன்றும் நடைபெற்றன. முதல் சுற்றுத் தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் 50 விழுக்காடு வாக்குகள் கிடைக்கவில்லை. ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு முதலிடமும், அதிதீவிர வலதுசாரி வேட்பாளரான லி பென் இரண்டாவது இடமும் பிடித்தனர். ஒரு விழுக்காடு வாக்குகள் வித்தியாசத்தில் இடதுசாரி வேட்பாளர் ஜீன்-லுக் மெலன்சோன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். இடதுசாரி வேட்பாளர் இரண்டாவது இடத்தைப் பிடிக்க முடியாமல் போனதற்கு சரியான கூட்டணி அமையாததும் காரணமாக இருந்தது. இதனால், நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக இடதுசாரிக் கட்சிகளும், பசுமைக் கட்சியும் ஒரே அணியில் இணைந்துள்ளன. இந்த அணிக்கு லா பிரான்ஸ் இன்சோமைஸ் என்ற இடதுசாரிக்கட்சி தலைமை தாங்குகிறது. அடிபணியா பிரான்ஸ் என்ற அர்த்தத்தைத் தரும் பெயர் கொண்ட இந்தக் கட்சியுடன் பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக்கட்சி, சோசலிஸ்ட் கட்சி உள்ளிட்டவை சேர்ந்துள்ளன.
மொத்தம் 577 உறுப்பினர்களைக் கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 289 இடங்களைப் பெற வேண்டும். கருத்துக் கணிப்புகளின்படி, யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். முதலிடத்தைப் பிடிப்பதில் ஆளும் கூட்டணிக்கும், இடதுசாரிக் கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் தேசியக்கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அக்கட்சியும் கணிசமான இடங்களைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தல் நிறைவு பெற்றவுடன் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாட்கள் குறைவாக இருந்தாலும், உடனடியாக செயல்பட்ட இடதுசாரிக் கட்சிகள் மே 10 ஆம் தேதியன்று கூட்டணியாகப் போட்டியிடுவதாக அறிவித்தன. இந்தக் கூட்டணி ஜனாதிபதித் தேர்தலில் இருந்திருந்தால் இடதுசாரி வேட்பாளர் இரண்டாவது சுற்றிற்குத் தகுதி பெற்றிருப்பார். தற்போது வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகளின்படி, ஆளுங்கட்சி 28 விழுக்காடு வாக்குகளும், இடதுசாரிக் கூட்டணிக்கு 27.5 விழுக்காடு வாக்குகளும், தீவிர வலதுசாரிக்கட்சியான தேசியக்கட்சிக்கு 20 விழுக்காடு வாக்குகளும் கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது.
முதல் முன்மொழிவு - முதல் எதிர்ப்பு
அடி பணியா பிரான்ஸ்(லா பிரான்ஸ் இன்சோமைஸ்) கட்சிக்கு 17 இடங்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்தன. தொடக்கத்தில் இந்த உறுப்பினர்கள் கடும் கேலிக்கு உள்ளாகினர். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல நாடாளுமன்றத்தில் அவர்களின் செயல்பாடுகள் புருவங்களை உயர்த்த வைத்தன. நல்லதாக இருந்தால் முதலில் முன்மொழிபவர்களாகவும், கெட்டதாக இருந்தால் முதல் எதிர்ப்பு தெரிவிப்பவர்களாகவும் இந்த உறுப்பினர்கள் இருந்தனர். இந்த உத்தி மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது. தங்களின் வித்தியாசமான நடவடிக்கைகள் மூலமாகவும் கவனத்தை ஈர்த்தனர். தனிநபர் படிக்கான நிதியைக் குறைக்க முயன்றபோது, உணவுப்பொருட்கள் அடங்கிய கூடை ஒன்றை நாடாளுமன்றத்தின் முன் வைத்தனர். அவர்களுக்கு தரப்படும் படியை வைத்து எவ்வளவு வாங்க முடியும் என்று நையாண்டி செய்தார்கள். இந்தக் காட்சி அடங்கிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொழில் ரீதியல்லாத விளையாட்டுகளுக்கு நிதி தரக்கோரும் விவாதத்தில் சாதாரண அணியொன்றின் உடையைப் போட்டுக் கொண்டு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உரையாற்றினார். இத்தகைய உத்திகள் இளைஞர்களைப் பெரிய அளவில் கவர்ந்தது. தங்கள் அணி வெற்றி பெற்றால் மாதத்திற்கு குறைந்தபட்ச ஊதியமாக 1,400 பிராங்க், இளைஞர்களுக்கு மாதப்படி, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயராமல் நிறுத்தி வைப்பது, செல்வ வரியை மீண்டும் கொண்டு வருவது, சுற்றுச்சூழல் திட்டமிடல் உள்ளிட்டவற்றை நிறைவேற்றுவோம் என்று இடதுசாரிக் கூட்டணி உறுதியளித்திருக்கிறது. இளைஞர்கள் கூடுதலாக வாக்குச் சாவடிகளுக்கு வந்தால் இடதுசாரிக் கூட்டணி முதலித்தைப் பிடிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.