world

img

‘‘பிராந்திய ஒற்றுமை முன்னேற்றத்திற்கு வழி’’

பிரேசிலியா, ஜுன் 3- பிரேசிலின் தலைநகரில் 12 தென் அமெரிக்க நாடுகள் பங்கேற்கும் கூட்டத்தில் பிராந்திய ஒற்றுமை முன்னேற்றத்திற்கு வழி என்று அனை த்து நாடுகளின் ஜனாதிபதிகளும் கருத்து தெரிவித்துள்ளனர். பிரேசிலில் இடதுசாரி அமைப்புகளின் சார்பில் போட்டியிட்ட லூலா டி சில்வா வெற்றி பெற்று ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதில் இருந்தே அப்பகுதியில் உள்ள நாடுகளுடனான ஒற்றுமையைக் கட்டுவதில் கவனம் செலுத்தி வருகிறார். பெரிய நாடுகளின் கட்டுப்பாடுகளில் இருந்து வெளியில் வருவதும், பிராந்திய அள விலான ஒற்றுமையும் முன்னேற்றத்திற்கு வழி  வகுக்கும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறார். இந்நிலையில் 12 நாடுகள் பங்கேற்கும் கூட்டத்திற்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் கூட்டத்தில் அர்ஜெண்டினாவின் ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸ், பொலிவியா வின் லூயிஸ் அர்ஸ், சிலியின் காப்ரியல் போரிக் கொலம்பியாவின் குஸ்தவோ பெட்ரோ, ஈக்கு வடாரின் கில்லர்மோ லஸ்ஸோ, கயானாவின் இர்பான் அலி, பராகுவேயின் மரியோ அப்டோ, சூரினாமின் சான் சன்டோக்கி, உருகுவேயின் லூயிஸ் லக்கல்லே மற்றும் வெனிசுலாவின் நிகோ லஸ் மதுரோ ஆகியோர் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த நாடுகளின் சார்பில் ஜனாதிபதிகள் பங்கேற்றுள்ள நிலையில், பெரு நாட்டின் சார்பில்  அமைச்சரவைக்குழுத் தலைவர் ஆல்பெர்ட்டோ ஓடரோலா கலந்து கொண்டிருக்கிறார்.

துவக்க நாளன்று பேசிய வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ, “எங்கள் மக்களுக்கு இத்தகைய தென் அமெரிக்க நாடு கள் பங்கேற்கும் கூட்டம் என்பது மிகவும் முக்கிய மானதாகும். இன்று உலகம் சந்தித்து வரும் புவிசார் அரசியலை ஒன்றுபட்டு எதிர்கொள்ள இத்தகைய மேடை பெரிய அளவில் உதவும்” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள உறவு களை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு வருகிறது. 12 நாடுகள் கலந்து கொண்டுள்ள கூட்டத்தில் 11 நாடுகளை அந்தந்த நாடுகளின் ஜனாதிபதிகளே பிரதிநிதித்துவப்படுத்துவதால் சில உறுதியான முடிவுகள் கூட்டத்திலேயே எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கூட்டத்தை நடத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரேசில் ஜனாதிபதி லூலா, “12 நாடுகள்  இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளன. இது போன்ற தொரு கூட்டம் கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்றதில்லை. உலகின் பல பகுதிகளில் பிராந்திய ரீதியிலான அமைப்புகள் உள்ளன. நமக்குள் இருக்கும் வேறுபாடுகள் மற்றும் நமது இறையாண்மை ஆகியவற்றை பரஸ்பரம் மதித்து முன்னேறலாம்” என்று அனைத்து தென் அமெரிக்க நாடுகளுக்கும் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார். “நமது வருங்காலத்தை உருவாக்கு பவர்களாக நாமே இருப்போம்” என்று தென் அமெரிக்க நாடுகளுக்கு அர்ஜெண்டினாவின் ஜனாதிபதி ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் பேசிய அவர், “தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியத்தில் செயல்பாடுகளை மேலும் சுறுசுறுப்பானதாக மாற்றுவோம். பிராந்திய ஒற்றுமை என்பது ஒவ்வொரு தென் அமெரிக்க நாட்டின் அரசுக் கொள்கையாக இருக்க வேண்டும். நமது தவறு களில் இருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டும்” என்று குறிப்பிட்டார்.

பிரிக்சில் வெனிசுலா?

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பு சர்வதேச அமைப்புகளில் வலுவான அமைப்பாக உருவெடுத்துள்ளது. இதில் ஈரான், அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகள் சேர்ந்து கொள்ள ஆர்வம் காட்டியுள்ளன. இந்நிலையில் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றும், பெட்ரோலிய இருப்பில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஒன்றுமான வெனிசுலா பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கு பிரேசில் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆர்வம் காட்டி வரும் நாடுகள் இந்த அமைப்பில் இணைவதால் உலக அரங்கில் மிக முக்கியமான அமைப்பாக பிரிக்ஸ் உருவாகும்.
 

;