world

img

அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு ஆயுள் காலம் குறைகிறதா? ஆய்வில் தகவல்!  

தவறாமல் உடற்பயிற்சி செய்பவர்கள் கூட, ஒருநாளில் சில மணி நேரங்கள் உட்கார்ந்தே இருந்தால் ஆயுள்காலம் குறையும் என்கிறது இந்த ஆய்வு.  

அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தே இருப்பதால் உங்களின் ஆயுள்காலம் குறையும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?  இதுகுறித்து, சைமன் ஃப்ரேசர் யூனிவர்சிட்டி நடத்திய சமீபத்திய ஆய்வில், நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பதால் ஏற்படக்கூடிய உடல்நல கோளாறுகள் மற்றும் தீவிரமான பாதிப்புகளை பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.  

உலகம் முழுவதிலும் 21 நாடுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர். 11 ஆண்டுகளுக்கு மேல் மக்களின் ஆரோக்கியம் கண்காணிக்கப்பட்டு வந்தது. ஆயவில், ஒரு நாளைக்கு 8 மணிநேரத்திற்கு மேல் அமர்ந்து வேலை செய்பவர்களில் 20 சதவிகிதத்தினர் இறப்பு மற்றும் தீவிரமான நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, ஜாமா கார்டியாலஜி எந்த என்ற ஜர்னலில் இந்த ஆய்வு விவரங்கள் முழுவதுமாக பகிரப்பட்டுள்ளது. மேலும் பிரேசில் நாட்டு ஆய்வாளர்களும் இதுகுறித்து மேற்கொண்ட ஓர் ஆய்வில், நாள் ஒன்றுக்கு 3 மணி நேரத்திற்கு மேல் அமர்ந்திருந்தால் இறப்பின் அபாயம் அதிகரிப்பதாகவும் 58 நாடுகளில் 3.8 சதவீதம் இறப்பு இதனால் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.  

நாள் ஒன்றுக்கு 3 மணி நேரத்திற்கு மேல் உட்கார்ந்தே இருந்தால், ஒருவர் தன் ஆயுளில் ஒட்டுமொத்தமாக 2 ஆண்டுகளை இழப்பதாகவும் நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் தொடர்ந்து அமர்ந்து டிவி பார்ப்பதால் 1.4 ஆண்டுகள் ஆயுள் காலத்தில் இழப்பதாகவும் ’பிஎம்ஜே ஓப்பன்’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.  

நாள் முழுவதும் அமர்ந்து கொண்டே உடல் உழைப்பு இல்லாதவர்கள் உலகம் முழுவதிலும் ஏற்படும் மரணங்களில் 8.8 சதவிகிதம் அளவுக்கு இருக்கிறார்கள் என்று இந்த ஆய்வில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மணிநேரம் அமர்ந்தே இருப்பது ஒரு சிகரெட்டை புகைப்பதற்கு சமம் என்றும் இது உங்கள் ஆயுளில் 2.18 நிமிடங்களை குறைப்பதாகவும் மற்றொரு ஆய்வு கூறுகிறது.  

8 மணி நேரத்திற்கும் மேலாக ஒரு நாளைக்கு உட்கார்ந்து வேலை செய்பவர்கள் உடல் பருமன் மற்றும் புகைப்பழக்கத்தால் இறப்பவர்களுக்கு இணையான பாதிப்பை எதிர்கொள்வதால் இரண்டிற்கும் பெரிய அளவில் வித்தியாசமில்லை என்பது தெரிகிறது.  

அதனால், பல மணிநேரம் ஒரே இடத்தில் உட்காராமல், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையாவது எழுந்து நடப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.